Arvind Kejriwal

லோக்பால், உண்ணா விரதம் என்று மக்களைத் திரட்டி, அரசியல் விவசாயம் செய்த அன்னா அசாரேயின் விளை பொருள்களை, அருகில் இருந்த அரவிந்த் கேஜ்ரிவால் அறுவடை செய்துகொண்டு போய்விட்டார். கேஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்தார் அசாரே. பயனில்லை - இன்று அரவிந்த் கேஜ்ரிவால் டில்லியின் முதல்வர்.

டில்லி சட்டப்பேரவைக்கு 2013 டிசம்பர் 4ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது, 8ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப் பட்டன. 70 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பா.ஜ.க., 31, ஆம் ஆத்மி 28, காங்கிரஸ் 8, ஐக்கிய ஜனதாதளம் 1, சுயேச்சை எஞ்சிய தொகுதிகளைப் பிடித்துக் கொண்டன.

15 ஆண்டுகள் ஷீலா தீட்சித் தலைமையில் டில்லியை ஆண்ட காங்கிரஸ் மூன்றாம் இடத்திற்குப் போய்விட்டது. ஆம் ஆத்மி உருவான ஒரே ஆண்டில் காங்கிரசைப் பின்னுக்குத் தள்ளிவிட்டது.

பேரவைத் தேர்தல் முடிவில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. 31 தொகுதிகள் கொண்ட பா.ஜ.க., ஆட்சி அமைக்கப் போவதில்லை என்று ஒதுங்கிக் கொண்டது. காங்கிரசுக்கு ஆட்சி அமைக்க பலம் இல்லை. இரண்டுக்கும் இடைப்பட்ட கேஜ்ரிவால் ஆட்சி அமைக்க யார் ஆதரவையும் கேட்க மாட்டோம் என்றார். இன்று காங்கிரஸ் ஆதரவுடன் அவர் ஆட்சி அமைத்திருக்கிறார்.

வேடிக்கை என்னவென்றால், எந்த காங்கிரசை ஊழல் கட்சி என்று கடுமையாக எதிர்த்துத் தேர்தலில் களம் இறங்கினாரோ, அதே ஊழல் கட்சியுடன், அதன் ஆதரவுடன்தான் முதல்வர் ஆகியிருக்கிறார். அப்படியானால் ஊழல் காங்கிரசைத் தோற்கடிக்க ஆம் ஆத்மிக்கு வாக்களித்த மக்களுக்கு என்ன சொல்லப்போகிறார் இவர்?

முதலில், ஆட்சி அமைக்கக் காங்கிரசுக்கு 18 நிபந்தனைகளைப் போட்டார் கேஜ்ரிவால். ஷீலா தீட்சித்  நிபந்தனையற்ற ஆதரவு இல்லை என்றார். அதாவது தேவைப்பட்டால் ஆட்சியைக் கவிழ்ப்போம் என்பதன் வேறுவடிவம் இது.

கொட்டை போட்ட காங்கிரசும், பழுத்துப்போன பா.ஜ.க.,வும் விரித்த வலையில் சிக்கியுள்ள ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நாடாளுமன்றத் தேர்தல் வரை தாங்குமா? பொறுத்திருந்து பார்ப்போம்.

Pin It