திருநர் மக்களின் சுயமரியாதையைக் கேள்விக் குறியாக்கும் Transgender Persons (Protection of Rights) Amendment Bill, 2026 மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. 2014 இல் இந்திய உயர் நீதிமன்றம் வழங்கிய National legal service authority v. Union of India (NALSA) தீர்ப்பு தெளிவாகக் கூறியது:
ஒரு மனிதர் தனது பாலினத்தை தானே தீர்மானிக்க உரிமை உடையவர்கள். அதுவே மனித உரிமை. மேலும், திருநங்கைகள் சமூக மற்றும் கல்வி ரீதியாக பின்தங்கியவர்கள் என்பதால் ஒதுக்கீடு (reservation) வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியது.
ஆனால் இந்தச் சட்டம் “self-identification” உரிமையைப் பறிக்கிறது. மருத்துவக்குழு சான்று இல்லாமல் ஒரு மனிதன் தனது அடையாளத்தை நிரூபிக்க முடியாது என்று கட்டுப்படுத்துகிறது. இதில் மேலும் மோசமானது “self-perceived identity” மற்றும் பல பாலின அடையாளங்களைச் சட்டம் வெளியில் தள்ளுகிறது. இது திருநர் சமூக மக்களிடம் கலந்தாலோசிக்காமல் கொண்டு வரப்பட்ட சட்டமாகும். அவர்களின் பாதுகாப்புக்கான சட்டத்தை அவர்களிடமே ஆலோசிக்காமல் நடைமுறைப்படுத்துவது எந்த விதத்தில் நியாயம் என்று தெரியவில்லை.
திருநர் மக்கள் என்று குறிக்கும் பொழுது அதில் திருநங்கைகளும், திருநம்பிகளும் உள்ளடங்குவார்கள். இந்த மசோதாவைப் பொருத்தவரை திருநங்கைகளுக்கு. அபாயகரமான திருப்பம். ஒரு மனிதரை அவரது பெயர், உடல் அல்லது ஆவணங்களின் அடிப்படையில் மட்டும் அளந்து பார்க்க முடியாது.
வேலை, கல்வி, சுகாதாரம், அடையாள ஆவணங்கள் என வாழ்க்கையின் பல துறைகளில் ஏற்கனவே புறக்கணிக்கப்படும் திருநங்கை மக்களுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டிய சட்டம், அவர்களின் வாழ்வையே அதிகாரத்தின் மேசையில் வைத்து சோதனை செய்யும் கருவியாக மாறக்கூடாது.
ஒருவரின் அடையாளத்தை நிரூபிக்க அவர்களின் உடலை ஆராய வேண்டிய நிலை உருவாகினால், அது ஒரு நாகரிகமான சமூகத்தின் அடையாளம் அல்ல, அடக்குமுறையின் அடையாளம். ஒரு மனிதர் தனது உடலையும், மனதையும் பற்றிச் சொல்லும் உண்மையை அரசு சந்தேகிக்கிறது. அடையாளம் ஒரு சான்றிதழாக மாறுகிறது. மனிதர் ஒரு கோப்பாக குறைக்கப்படுகிறார். இது ஆபத்தானது. ஏனெனில் இது மனித உரிமையின் மையத்தையே தாக்குகிறது.
தன்னாட்சி (autonomy)
LGBTQIA+ சமூகங்கள் ஏற்கனவே ஒதுக்கப்பட்டவர்கள். இந்த சட்டம் அவர்களை மேலும் “சான்று காட்ட வேண்டியவர்கள்” ஆக மாற்றுகிறது.
இந்தச் சட்டம் NALSA தீர்ப்பின் அடிப்படையை முற்றிலும் தகர்க்கிறது என்று சமூக அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. முக்கியமாக NALSA தீர்ப்பு ஒதுக்கீட்டை பரிந்துரைத்தது. ஆனால் இந்த அரசு, அந்த உரிமையை செயல்படுத்தவில்லை. அதற்கு பதிலாக அடையாளத்தை கட்டுப்படுத்தும் சட்டம் கொண்டு வந்துள்ளது. இது சமூக நீதி அல்ல இது அடக்குமுறை.
தந்தை பெரியார் இடம் பயின்றதாலோ என்னவோ தமிழ்நாடு என்றுமே சமூக நீதியின் மையமாகவே திகழ்ந்துள்ளது. அது இச்சமூகத்தின் வளர்ச்சியையும் கருத்தில் கொண்டு செயல்பட்டதை வைத்து நம்மால் கூற முடியும்.
சமூகத்தால் ஒட்டு மொத்தமாக புறக்கணிக்கப்பட்ட இவர்களின் வளர்ச்சிக்காக தமிழ்நாட்டில் திராவிட அரசாங்கம் பலவற்றை முன்னெடுத்துள்ளது.
தமிழ்நாடுதான் இந்தியாவிலேயே முதல்முறையாக 2008 ஏப்ரல் 15 அன்று திருநங்கைகளுக்காக அரவாணி நலவாரியம் என அமைக்கப்பட்டது. 2011இல் அது திருநங்கை நலவாரியம் என பெயர் மாற்றப்பட்டது.
தமிழ்நாட்டில் கல்வி, வேலை, அடையாள அட்டை, மருத்துவ உதவி போன்ற பல முன்னேற்றங்களை செய்தது. திட்டங்கள் ஒருபுறம் இருந்தாலும் அவர்களை சமூகத்தில் பல வார்த்தைகளால் இழிவுபடுத்தும் பொழுது அவர்களுக்கு திருநங்கை என்ற அடையாளத்தைக் கொடுத்தது கலைஞர் அரசு.
அதுபோல திருநர் மக்களை பாதுகாக்கும் விதமாக தமிழ்நாட்டில் பல திட்டங்களை திராவிட அரசு உருவாக்கியது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக இதை எதிர்த்து போராட்டம் நடந்து வருகிறது குறிப்பாக சமீபத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கமும் , மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் மாபெரும் போராட்டத்தை முன்னெடுத்தது.
சமூக விழிப்புணர்வு, சட்டப் போராட்டம், மற்றும் ஒற்றுமை தான் வழி. அடையாளம் அரசு கொடுப்பது அல்ல அது பிறப்புரிமை. நீங்கள் யார், எதை செய்ய வேண்டும் என்பதை எல்லாம் தீர்மானிக்கும் சக்தியாக மாறுவதுதான் இந்துத்துவா, பார்ப்பனிய கொள்கை. இந்தியா அதை நோக்கி நகர்ந்து வருகிறது. இந்த ஆபத்தை முறியடிக்க ஒட்டுமொத்த பொதுச் சமூகமும் ஒன்றுபட்டு இத்தகைய சட்டத்தை கொள்கை ரீதியாகவும், போராட்ட வடிவத்திலும் வலிமையாக எதிர்க்க வேண்டும்.
பல வருடங்களின் போராட்டங்களுக்குப் பிறகு இச்சமூகத்தின் இழிச் சொற்களையும் அவர்கள் மீது நடத்தப்படும் வன்முறைகளையும் தாங்கிக் கொண்டு சமூகத்தில் வேலை வாய்ப்பு எதுவும் கிடைக்காமல் தங்களின் உடலை விற்றும் பிச்சை எடுத்தும் வாழ்நாளை கடத்தும் இவர்களை அரசு புறக்கணித்து அவர்களின் மீது மேலும் வன்முறையை ஏவி விடுவது எந்த விதத்திலும் நியாயம் இல்லை. அரசு என்பது மக்களுக்கானது. அனைத்து மக்களும் அதில் உள்ளடங்குவார்கள். அவர்களின் வளர்ச்சியும், பாதுகாப்பும் அரசின் கடமையாகும். இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு மசோதாவை மறுபரிசீலனை செய்து அழுத்தமாக ஆழமாக ஆய்வு செய்து மக்களின் உண்மையான பாதுகாப்பு மசோதாவாக இதை மாற்றுவார்கள் என்று நம்புவோம்.
- நிகில் தேவ்