செப்டம்பர் 12ஆம் தேதி நீட் தேர்வு நடைபெற்று முடிந்தது. தேர்வு பயத்தால் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த தனுஷ் என்ற மாணவரும், தேர்வைச் சரியாக எழுதாததால் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கனிமொழி என்று மாணவரும், வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சௌந்தர்யா என்ற மாணவரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அதேபோல் செங்கல்பட்டு அருகே அனுசியா என்ற மாணவரும் நீட் தேர்வைச் சரியாக எழுதாததால் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுத் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளார்.

anitha 1176கடந்த ஆண்டு இதே செப்டம்பர் மாதத்தில் அன்றைய தமிழக முதல்வர் தெரிவித்த கணக்கின்படி நீட் தேர்வினால் 13 மாணவர்கள் உயிர் இழந்திருக்கிறார்கள். இந்த ஆண்டு மேலும் 3 மாணவர்கள் உயிரிழந்திருக்கிறார்கள். உயிர்க்கொல்லியாக நீட் தேர்வு ஒவ்வொரு ஆண்டும் வந்து போகிறது.

தேர்வு நடப்பதற்கு முன்பும் தேர்வு நடந்த பின்னும் இப்படி மாணவர்களின் உயிர்கள் பலியாகி இருக்கின்றன.

தேர்வின் முடிவுகள் வெளியானதற்குப் பின்பு இதுபோன்ற உயிரிழப்புகள் நம் சமூகத்தில் ஏற்பட்டுவிடக்கூடாது. உடனடியாக இதுபோன்ற துயர நிகழ்வுகளைத் தடுத்து நிறுத்த அரசு மனநல ஆலோசகர்கள் மூலம் ஆலோசனை வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது.

மாணவர்களின் உயிர்கள் பறிக்கப்படும் துயரம் ஒருபுறத்தில் என்றால் நீட் தேர்வு எழுதுவதில் நடைபெறும் மோசடிகள் இன்னொருபுறம். இந்தியா முழுவதும் மிகப் பெரும் ஊழல் சந்தையாக நீட் தேர்வு உருவெடுத்திருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் மோசடியில் ஈடுபடுகிறவர்கள் கைது செய்யப்படும் காட்சிகளையும் நாம் பார்க்கிறோம். இதற்குப் பின்னால் இருக்கும் பண பேரம் கல்வியின் அவலநிலையையும், நீட் தேர்வின் போலித் தன்மையையும் காட்டுகிறது. இந்த ஆண்டும் வடமாநிலங்களில் பலர் இப்படி மோசடிகளில் ஈடுபட்டிருக்கிறார்கள். ஜெய்ப்பூரில் மட்டும் இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இந்தத் தேர்வு மோசடிக்கு ரூபாய் 30 லட்சம் பேரம் பேசப்பட்டிருக்கிறது. அதேபோல் வாரணாசியில் ஒரு மாணவர் ஆள்மாறாட்ட மோசடியில் ஈடுபட்டுக் கைது செய்யப்பட்டிருக்கிறார். விசாரணையில் மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டு இதே போல் செயல்படும் மற்றவர்களையும் கைது செய்ய பாட்னா, லக்னோ போன்ற நகரங்களிலும் காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இப்படிப்பட்டத் தேர்வு உலகில் வேறு எந்த நாட்டிலாவது நடப்பதையும் அதையொட்டி இத்தனை மரணங்களும் கைதுகளும் அரங்கேறும் காட்சிகளைப் பார்க்க முடியுமா? இந்தப் பெருமை எல்லாம் நீட் தேர்வை மட்டுமே சேரும்.

இத்தேர்வின் மூலம் சாதிய, பாலின, வர்க்க ஏற்றத்தாழ்வுகள் பெருகிக் கொண்டே வருகின்றன என்பதையும் கல்வியாளர்களின் ஆய்வின் மூலம் அறிய முடிகிறது. இவ்வளவு செலவு செய்து பயிற்சி எடுக்க வைத்து, அதில் வெற்றி பெறுவது என்பதும் கேள்விக்குறியாகிய நிலையில், பெற்றோர்கள் பெண் குழந்தைகளை மருத்துவராக்கும் நினைப்பையே விட்டுவிடும் போக்கு அண்மைக் காலங்களில் அதிகரித்து வருகிறது.

இதுபோன்ற மரணங்களும் சமூக அநீதிகளும் மற்ற மாநிலங்களில் நடைபெறவில்லையா என்று பார்த்தால், இதைவிட மோசமான நிலையில் நடைபெறுகின்றன. ஆனால் சமூக நீதிக்கானச் சமரசமற்றக் குரலை எழுப்ப அந்த மாநிலங்களில் திராவிட இயக்கம் இல்லை. தமிழ்நாடு மட்டும்தான் இதற்கு எதிராக வினையாற்றி வருகிறது.

 நீட் தேர்வைத் தமிழ்நாட்டில் ஒழிப்பதற்காகத் திமுக அரசு அதற்கென நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையில் உயர்மட்டக் குழுவை அமைத்து, அந்தக் குழுவின் பரிந்துரைகளை ஏற்றுச் சட்டமன்றத்தில் நீட் விலக்கு பெறுவதற்கான மசோதாவை நிறைவேற்றி இருக்கிறது.

தந்தை பெரியாரின் பிறந்த நாளை சமூகநீதி நாளாக நாம் கொண்டாடி, ஏற்ற உறுதிமொழி சமத்துவ சமூகத்தைப் படைப்பதற்காகத்தான்.

அந்த உறுதி மொழியின்படி நாம் அனைவரும் உடனடியாக நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற்று சமூகநீதியை நிலைநாட்டத் தொடர்ந்து போராட வேண்டும். தமிழ்நாடு அரசால் நிறைவேற்றப்பட்டிருக்கும் நீட் விலக்கு மசோதா குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றால்தான், நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற முடியும்.

அரசு சட்டப்பூர்வமான வழியில் விரைந்து நடவடிக்கை எடுத்து வந்தாலும், மக்களின் ஆதரவு பெருமளவில் ஏற்படும்போதுதான் அரசின் சட்டப்பூர்வச் செயல்பாட்டிற்கும் வெற்றி கிடைக்கும். எனவே நீட் விலக்கு பெறும் மசோதாவிற்குக் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்கும் வரை அதை வலியுறுத்தித் தொடர்ந்து குரலெழுப்ப வேண்டியதும் மக்களிடத்தில் பரப்புரை செய்ய வேண்டியதும் நம் அனைவரின் கடமையும் ஆகும். நீட் தொற்றிலிருந்து மாணவர்களைக் காப்போம்!

- மா. உதயகுமார்

Pin It