இன்றைய திமுக அரசின் மீது ஏதேனும் குறை சொல்லிவிட வேண்டும் என்ற அவசரத்தில், சரியாக எழுத்துக் கூட்டிப் படிக்கவும் பொறுமை இல்லாத நண்பர்கள் சிலர், சங்க இலக்கியத்திற்கு எப்படித் திராவிடக் களஞ்சியம் என்று பெயர் வைக்கலாம் எனக் கேட்டு எகிறிக் குதித்தார்கள். அமைச்சர் தங்கம் தென்னரசு, அறிவிப்பைச் சரியாகப் படித்திடுக என்று சுட்டிக் காட்டியபின், எங்களைக் கண்டு பயந்து விட்டார்கள் என்று கூறி அந்த மன நோயாளிகள் சற்று ஓய்ந்தனர்.

stalin 371அடுத்ததாக, தந்தை பெரியார் பிறந்த நாளான செப்.17 ஆம் நாளை சமூக நீதி நாள் என்று முதல்வர் அறிவித்தார். அதனை வெளிப்படையாக எதிர்க்க முடியாதவர்கள், “உள்ளே அழுகிறேன், வெளியே சிரிக்கிறேன்” என்னும் கதையாக அதனை வரவேற்றுப் பேசினார்கள். இருப்பினும், பாஜக தமிழ் மாநிலத் தலைவர், “வ.உ.சி., பாரதியார் போன்றவர்களை எல்லாம் விட்டு விட்டீர்களே” என்று நீலிக் கண்ணீர் வடித்தார்.

சில நாள்களுக்கு முன்புதான், கடந்த 5 ஆம் தேதி, செக்கிழுத்த செம்மலின் 150 ஆவது பிறந்தநாள் தொடக்கத்தை ஒட்டிச் சட்டமன்றத்தில் பல்வேறு அறிவிப்புகளை முதல்வர் வெளியிட்டிருந்தார் அதனைப் பார்க்க அண்ணாமலை அவர்களுக்கு நேரமில்லை போலும். அவர்கள் கட்சி ‘ராகவன்கள்’ வழக்கு ஏதேனும் புதிதாக வந்திருக்குமோ என்னவோ!

இப்போது பாரதியார் பிறந்த நாளையும் மகாகவி நாள் என்று அறிவித்துள்ளதோடு, அவருக்குச் சிறப்புச் சேர்க்கும் வகையில் பல்வேறு அறிவிப்புகளையும் சட்டமன்றத்தில் முதல்வர் வெளியிட்டுள்ளார். இனிமேல் அவரால் அது குறித்தும் பேச முடியாது.

நம்மைப் போன்றவர்களுக்குப் பாரதியாரின் கருத்துகளில் நிறைய கருத்து வேறுபாடு உண்டு. அதிலும் அவருடைய உரைநடையில் உள்ள செய்திகள் பல எதிர்க்கப்பட வேண்டியனவாகவே உள்ளன. இருப்பினும் அவர் ஒரு மகாகவி என்பதை யார்தான் மறுக்க முடியும்? அரண்மனைப் புலவர்களின் மொழியாக இருந்த தமிழை, அனைத்து மக்களின் மொழியாகவும் மாற்றியவர் பாரதிதானே! 20ஆம் நூற்றாண்டின் தமிழ்க்கவிதை நவீனத்திற்கு வித்திட்டவரும் அவர்தானே! எனவே அவருக்குரிய இடத்தையும் நம் முதல்வர் தளபதி கொடுக்கத் தவறவில்லை.

இன்றைய திமுக ஆட்சி பொறுப்பு ஏற்றதிலிருந்து நாமும் ஒன்றைக் கவனித்துக் கொண்டேதான் வருகிறோம். எதிர்க்கட்சியினரோ, எதிர்க்கருத்து உடையவர்களோ எந்த ஒரு குறையை எடுத்து வைத்தாலும், உடனே அதற்குச் சரியான மறுப்பு சொல்லப்படுகிறது அல்லது அந்தக் கோரிக்கை உடனடியாக நிறைவேற்றப்படுகிறது.

இப்படித் தமக்கு வாக்களித்தவர்கள், வாக்களிக்காதவர்கள் என வேறுபாடு இல்லாமல் எல்லோருக்கும் நன்மை செய்கின்ற ஓர் ஆட்சியாக இது இருக்குமானால், பிறகு எதிர்க்கட்சிகள் என்னதான் செய்வார்கள்? அவர்கள் பேசுவதற்கு ஒரு சிறிய இடமாவது கொடுக்க வேண்டாமா?

அரசு ஊழியர்களுக்கு அடுத்த ஏப்ரல் மாதம்தான் அகவிலைப்படி உயர்வு என்று நிதி அமைச்சர் சொன்னார். அதனை வைத்து, ஊழியர்களைத் தூண்டி ஒரு போராட்டத்திற்கு வழி வகுக்கலாம் என்று எதிர்க்கட்சியினர் திட்டமிட்டு முடிப்பதற்குள், வரும் ஜனவரி மாதமே அகவிலைப்படி உயர்வு தரப்படும், அதுவரையில் பொறுத்துக் கொள்ளுங்கள் என்று முதல்வர் கூறிவிட்டார். அவர்களும் அரசுக்கு நன்றி தெரிவித்து விட்டனர்.

பிள்ளையார் அரசியலைக் கையிலெடுக்கப் பார்த்தனர். அதற்கு மக்களிடம் எந்த ஆதரவும் இல்லை. “நாங்கள் எந்த மதத்திற்கும் எதிரானவர்கள் இல்லை. ஒன்றிய அரசின் வழிகாட்டலின்படி, கொரானா காலம் என்பதால்தான் இந்த அறிவிப்பு’’ என்று முதல்வர் சொன்னது சரிதான் என்று மக்களுக்குப் பட்டது.

ஆந்திராவில் குப்பை வண்டியில் ஏற்றப்பட்ட பிள்ளையார் சிலைகளைப் படம் பிடித்துப் போட்டு, “இதோ பாருங்கள் திமுக அரசின் இந்து விரோதப் போக்கை” என்றனர். அடுத்த அரை மணி நேரத்தில் உண்மை வெளிவந்துவிட்டது. மீண்டும் அதே பொய்யைச் சொன்னால் மக்கள் காறித் துப்பி விடுவார்கள் என்பதால், பொய் பேசிய நண்பர்கள் வாயை மூடிக் கொண்டார்கள்.

இப்படி எல்லாக் கதவுகளையும் மூடுவது என்ன நியாயம்? தாமரை இங்கு மலராது என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் அதற்காக, தலைகாட்டவே முடியாத நிலையை ஏற்படுத்துவதை எப்படிச் சரி என்று சொல்ல முடியும்? வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு கொடுத்து, மாம்பழம் நிலையையும் நம் முதல்வர் மோசமாக்கி விட்டார்.

இப்படியாக, பூ, இலை, பழம் என எல்லாவற்றையும் ஒன்றுமில்லாமல் ஆக்குவதை எப்படி ஏற்க முடியும்? ஆம், தமிழ்நாடு அரசின் செயல்பாடுகள் ஒன்றுகூடச் சரியில்லை!

சுப.வீரபாண்டியன்

Pin It