07.10.2013 அன்று, நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் வடக்கு மாகாண முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டுள்ளார். அமைச்சர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் 11ஆம் தேதி பதவியேற்றனர். சிங்கள இனவெறியை வென்று, தங்களுக்கான ஒரு மாகாண அரசைத் தமிழ்மக்கள் அமைத்திருக்கிறார்கள். அவர்களுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையில் அமைந்திருக்கும் மாகாண அரசுக்கும் முதலில் நம்முடைய மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்த வெற்றியானது, ஈழத்தமிழர் களைப் பற்றி இரண்டு வெவ்வேறு விதமான எண்ணங்களை, உலகநாடுகளுக் கும், சிங்கள அரசியல்வாதிகளுக்கும் தோற்றுவித்துள்ளது. இந்த வெற்றி, சுயஉரிமையே தமிழ்மக்கள் விரும்பும் அரசியல் தீர்வு என்பதை உலக நாடு களுக்கு உணர்த்தியிருக்கிறது. மற்றொரு புறம், சிங்கள ஆட்சியாளர்களுக்கு ஒருவிதமான அச்சத்தை உருவாக்கி யிருக்கிறது.

இப்போது அமைந்துள்ள வடக்கு மாகாண அரசு, மத்திய சிங்கள ஆட்சிக்குக் கீழ் அமைந்துள்ள அரசு. ஒரு மாநில அரசுக்குரிய முகாமையான அதிகாரங்களான நிலம்சார்ந்த அதிகாரமும், காவல்துறை அதிகாரமும் மாகாண அரசுக்குக் கிடையாது. இனிமேலும் வழங்கப்படக்கூடாது என்று, ஜாதிக ஹெல உருமய (இலங்கையின் பி.ஜே.பி.,) உள்ளிட்ட இனவாதக் கட்சிகள் தொடர்ந்து வற்புறுத்திக் கொண்டிருக்கின்றன. எந்த ஒரு வளர்ச்சி நடவடிக்கையையும், சிங்கள ஆளுநரின் ஒப்புதலுடன்தான் மேற்கொள்ள முடியும். சுருக்கமாகச் சொன்னால், ஆட்சியில் இருந்தாலும், அதிகாரமற்ற அரசாகத்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசு இருக்கும்.

பிறகு ஏன் சிங்கள அதிகார வர்க்கத்தினர் அச்சப்படவேண்டும்?

“விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவுதான் தேர்தலில் நின்று வெற்றி பெற்று, ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. அரசியல் தந்திரத்தின் மூலம், தமிழர்கள் தங்களுடைய உரிமைகளைப் பெற்றுவிடு வார்களேயானால், அதனைச் சிங்களர் களால் திரும்பப் பெற முடியாது. தமிழ் இன வாதம் புதிய வடிவில் ஆரம்பித் துள்ளது என்று” ஜாதிக ஹெல உருமய கட்சியைச் சேர்ந்த அமைச்சர் உதய கம்மன்பில சொல்கிறார்.

‘மீண்டும் நந்திக்கடல் நோக்கிப் போக வேண்டாம் என்று விக்னேஸ்வரன் ஐயாவைக் கேட்டுக்கொள்கிறோம்’ என்றும் எச்சரிக்கிறார்.

இப்படிப் பேசி, சிங்கள மக்களிடம் அச்சத்தையும், இனவெறியையும் தூண்டி விடுகின்ற வேலைகளில் சிங்கள அமைப்புகள் இறங்கியிருக்கின்றன.

உலக நாடுகளின் கண்துடைப் புக்காக நடத்தப்பட்ட தேர்தல்தானே அன்றி, தமிழர்களுக்கு உண்மையான அரசியல் அதிகாரத்தை வழங்கும் நோக்கில் நடத்தப்பட்ட தேர்தல் அன்று என்பதை இதுபோன்ற பேச்சுகள் காட்டுகின்றன.

வடக்குப் பகுதியில் வளர்ச்சிப் பணிகள் பாதிக்கப்படாது, இலங்கை மத்திய அரசு தமிழ் மாகாண அரசுக்குத் தேவையான ஒத்துழைப்பு வழங்கும் என்றெல்லாம் ஒரு பக்கம் சொல்லப் பட்டாலும், நிலவுகின்ற சூழல் அதற்கு மாறாகவே உள்ளது. ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்ட நினைவுகளை அந்த மண்ணில் இருந்து சுவடே இல்லாமல் அழித்துவிட நினைக்கின்றனர் சிங்கள ஆட்சியாளர்கள்.

ஏற்கனவே மாவீரர் துயிலும் இடமும், தேசியத் தலைவரின் வீடும் சிதைக்கப் பட்டுவிட்டன. சில தினங்களுக்கு முன், புதுக்குடியி ருப்புப் பகுதியில் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் பயன்படுத்தியது என்று சொல்லி, ஒரு பதுங்கு குழியை இராணுவம் குண்டு வைத்துத் தகர்த்துள்ளது.

“நாம் பிரபாகரனின் பதுங்கு குழியை அழித்துள்ளோம். தீவிரவாதியின் ஆவியை உயிரோடு விட்டுவைத்திருக்க வேண்டிய அவசியம் எமக்கு இல்லை. விடுதலைப் புலிகளின் தடயங்களை இனியும் வைத்திருக்க வேண்டிய தேவையில்லை” என்று விளக்கமளித்திருக்கிறார், இராணுவப் பேச்சாளர் ருவான் வணிகசூரிய.

தமிழர் பகுதிகளில் இருந்து இராணுவத்தைத் திரும்பப் பெற வேண்டும், சிங்களக் குடியேற் றங்களை நீக்க வேண்டும், 13ஆவது சட்டத்திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பனவற்றைத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புத் தொடர்ந்து முன்வைத்து வருகிறது.

பொறுப்பேற்றுள்ள மாகாண அரசும் இவற்றை, அதிபர் ராஜபக்சே, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் ஆகியோரிடம் வலியுறுத்தி இருக்கிறது. 13ஆவது சட்டத்திருத்தம் தொடர்பாக இலங்கைக்கு இந்தியா அழுத்தம் கொடுக்கும் என்று இலங்கையில் சொன்ன குர்ஷித், இந்தியா திரும்பியதும் அதைப்பற்றி எதுவுமே பேசாமல், பாகிஸ்தான் பற்றிப் பத்திரி கையாளர்களிடம் பேசிவிட்டுப் போய்விட்டார்.

13ஆவது திருத்தம் பற்றிய இந்திய வெளியுறவுத் தறை அமைச்சரின் கருத்துக்கு, ‘அது குறித்து முடிவு செய்ய வேண்டிய இடம் இலங்கை நாடாளு மன்றம்தான்’ என்று ராஜபக்சே விடை சொல்லி இருக்கிறார். ஆனால் சிங்கள அரசியல்வாதிகளோ, வடக்குக் கிழக்கு இணைப்பு என்பது என்றைக்கும் சாத்திய மில்லை. தமிழர்களுக்கு நிலம் மற்றும் காவல்துறை அதிகாரங்கள் வழங்கக் கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருக்கிறார்கள்.

இப்படி இந்தியாவும், இலங்கையும் இரட்டை வேடம் போடுகின்ற நிலையில், நம்முடைய அணுகுமுறையிலும் மாற்றம் வர வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது. அதன் வெளிப்பாடுதான் ஈழமக்களின் தேர்தல் வெற்றி.

முகாம்களிலிருந்த இராணுவத்தினர், தேர்தலுக்குப் பின், மீண்டும் தெருக்களில் ஆயுதங்களோடும், வாக்கி டாக்கிக ளோடும் வாகனங்களில் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டுவருகின்றனர். கெடுபிடிகளும், காவல் சோதனைகளும் மீதமிருக்கின்ற வாழ்க்கையின் இயல்பு நிலையைப் பாதிக்கின்ற மோசமான சூழல் அங்கே நிலவுகிறது. ‘இலங்கையைச் சிங்கள நாடாக்க எங்களால் முடியும்’ என்று சிங்கள வெறியர்கள் கொக்கரிக் கின்றனர். இப்படிப்பட்ட சூழலில்தான், சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான வட மாகாண அரசு அமைந்திருக்கிறது.

ராஜபக்சே முன்னிலையில், பதவி யேற்றுக் கொண்ட பின்பும் விக்னேஸ் வரன் மீது விமர்சனங்கள் அதிகமாகி யிருக்கின்றன. அவருடைய அணுகுமுறை, குற்றவாளிக் கூண்டிலிருந்து ராஜபக்சே வைக் காப்பாற்றவே உதவும் என்றும், தண்டிக்க உதவாது என்றும் குற்றம் சாட்டப்படுகிறது.

இலங்கை அரசமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டு நடந்த தேர்தலின் மூலம்தான் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் என்னும்போது, அந்நாட்டு அதிபரின் முன்பாகப் பதவியேற்றது ஒன்றும் பிழையானதாகிவிடாது.

போர்க்குற்றங்களை முன்னெ டுத்துள்ள உலக நாடுகளிடம், தமிழர் பகுதிகளில் ஜனநாயகமான முறையில் தேர்தல் நடத்துகின்ற அளவுக்கு இங்கே அமைதியான சூழல் உருவாக்கப்பட்டி ருக்கிறது என்பதைக் காட்டுவதற்காக இந்தத் தேர்தல் பயன்படும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. எனினும் சிறுகச் சிறுகச் செத்துக்கொண்டிருக்கும் மக்களைக் காக்க வேண்டிய தேவை நமக்கு இருக்கிறது.

இந்தத் தேர்தலை ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட உலக நாடுகள் வரவேற்றுள்ள நிலையில், அந்நாடுகளின் கவனம் தமிழர் பகுதிகளின் மீது இருக்கும்படிச் செய்ய வேண்டியது அவசியம். காரணம், ஈழத்தமிழர்கள் இந்தத் தேர்தலில் இப்படிப்பட்ட ஒருமித்த வெற்றியைப் பெறுவார்கள் என்பதை இந்தியாவே எதிர்பார்த்திருக்கவில்லை என்பதை, வெளிவிவகாரத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்தின் பேச்சு காட்டுகிறது.

சம்பூரில் அனல் மின்நிலையம் அமைக்க ஒப்பந்தம் போட்டுவிட்டு வந்திருக்கிறார் சல்மான் குர்ஷித். அந்தப் பகுதி மக்களின் எதிர்ப்பினால், சிங்கள அரசு செய்யத் தயங்கிக் கொண்டிருந்த ஒன்றை, இந்திய அரசு போய் முடித்து வைத்திருக்கிறது. இதுதான் உண்மைநிலை என்னும்போது, பாறாங்கல்லில் மோதி மண்டையை உடைத்துக் கொள்வது புத்திசாலித்தனமாகுமா?

இவ்வளவு சிக்கல்களுக்கு நடுவில், பொறுப் பேற்றிருக்கும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள், மக்களின் நம்பிக்கைக்கு உரியவர்களாக நடந்துகொள்ள வேண்டியது மிக முக்கியம். ஆனால், அவர்களுக்குள்ளும் பதவிச் சண்டைகள் வந்துபோகின்றன என்னும் செய்தி வேதனையைத் தரக்கூடியதாக இருக்கிறது. திக்கு திசை புரியாமல் இருந்த நிலையில், தேர்தலின் மூலம் ஒரு பிடிமானத்தைப் பெற்றிருக்கிறார்கள் ஈழத்தில் உள்ள மக்கள். வாழ்க்கையைப் பணயம் வைத்துத் தேர்தலில் வாக்களித்த, ஈழத்தில் வாழும் மக்களுக்கும், அவர்களின் விருப்பங்களுக்குமே மாகாண அரசு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

நெருப்புக்கு அருகில் இருப்பவனுக்குத்தான் அதன் கொடுமை தெரியும். ஏர்லங்கா விமானம் ஏறி கலை இலக்கிய சங்கமத்துக்கு மட்டும் ஈழம் வந்து போகின்றவர்களும், இந்தியாவின் ராஜபக்சே மோடியோடு கூட்டணி வைத்து, பத்ம வியூகம் அமைப்பதில் முன்னணியில் நிற்பவர்களும், ‘விக்னேஸ்வரன் ராஜபக்சே முன்னிலையில் பதவியேற்றதில் எனக்குத் துளியும் மகிழ்ச்சியில்லை’ என்று சொல்வதும், விமர்சனம் செய்வதும் எந்தவிதத்திலும் நியாயமில்லை.

சொல்லுதல் யார்க்கும் எளிது அரியவாம்
சொல்லி வண்ணம் செயல்.

Pin It