கொளத்தூர் மணி, சீமான் கைது - சட்டத்துக்கே எதிரானது என்பதை ஆணித்தரமாக விளக்கி, சென்னை தியாகராயர் நகர் கூட்டத்தில் தியாகு (தமிழ் தேசிய விடுதலை இயக்கம்) உரையாற்றினார். காடு வெட்டி குருவை விடுதலை செய்தது போல் - இருவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் பால் கனகராஜ் வலியுறுத்தினார்.

தியாகு உரை

தோழர்களே, மீண்டும் இயக்குனர் சீமானை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழும், தோழர் கொளத்தூர் மணியை இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் சட்டப்புறம்பான தடைச் சட்டத்தின் சில பிரிவுகளின் கீழும் சிறைப்படுத்தி இருக்கிறார்கள். தோழர்களே, நான் மிகவும் சுருக்கமாக சில செய்திகளை தெரிவிக்க விரும்பு கிறேன். முதலில், சிறைப்படுத்துவதற்கான உரிமை சட்டத்தில் யாருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. சீமானைக் கைது செய்வதற்கு உத்தரவிட்டிருப்பவர் நெல்லை காவல்துறை அதிகாரி மஞ்சுநாதன் அய்.பி.எஸ். என்பவர். தேசியப் பாதுகாப்பு சட்டப் படியோ, அல்லது வேறு தடுப்புக் காவல் சட்டப் படியோ, ஒருவரைக் கைது செய்ய வேண்டுமானால், அந்த அதிகாரி தன் விருப்பப்படி, மூளையைப் பயன்படுத்தித்தான் ((Application of Mind) அதைச் செய்ய வேண்டும். இதுதான் சட்டம். முதலமைச்சருக்கோ, அமைச்சரவைக்கோ அல்லது மின்வெட்டுத் துறை அமைச்சர் ஆற்காட்டுக்கோ கைது செய்யும் ஆணை வழங்க சட்டப்படி அதிகாரம் கிடையாது.

ஆனால் என்ன நடந்தது? சட்டப் பேரவையில் ஒரு காங்கிரஸ் உறுப்பினர், சீமானை எப்போது கைது செய்யப் போகிறீர்கள் என்று கேட்கும்போது, அமைச்சர் ஆற்காடு வீராசாமி, இன்றைக்கே தேசிய பாதுகாப்பு சட்டப்படியோ அல்லது வேறு ஏதோ ஒரு தடுப்புக் காவல் சட்டப்படியோ கைது செய்யப்படுவார் என்று விடையளிக்கிறார். இது சட்டப் பேரவைக் குறிப்பில் பதிவாகி இருக்கிறது. திருநெல்வேலி காவல்துறை அதிகாரி தன் விருப்பப்படி இந்தக் கைதை செய்ய வில்லை. ஆற்காடு வீராசாமி சட்டப் பேரவையில் அறிவித்த பிறகே கைது செய்துள்ளார் என்பதற்கு கைது செய்யப்பட்ட தேதி சான்றாகும். அமைச்சர் ஆற்காடு வீராசாமி சட்டசபையில் இப்படி அறிவித்த பிறகுதான் காவல்துறை அதிகாரிக்கு தேசிய பாதுகாப்பு சட்டப்படி கைது செய்யப்பட வேண்டும் என்று தோன்றியிருக்கிறது. எனவே, தன் விருப்பப்படி மூளையைப் பயன்படுத்தி, காவல்துறை அதிகாரி இதைச் செய்யவில்லை என்பதால், இந்தக் கைது சட்ட விரோதம்.

அடுத்து, தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் எந்தப் பிரிவின் கீழ் இந்தக் கைது நடைபெற்றிருக்கிறது என்பதாகும். தடை செய்யப்பட்ட இயக்கத்தைப் பற்றிப் பேசினாலோ, இந்திய அரசை குறை கூறினாலோ, இந்திய இறையான்மையைப் பற்றிப் பேசினாலோ, தேசியப் பாதுகாப்பு சட்டம் பாயும் என்று பரவலாக ஒரு அச்சம் உருவாக்கப்பட் டிருக்கிறது. கைது செய்யப்பட்ட சீமானோ, கொளத்தூர் மணியோ இதற்காக அஞ்சவில்லை. அண்மையில் இயக்குனர் சீமானை சிறையில் சந்தித்து வந்த ஒடுக்குமுறைக்கு எதிரான பத்திரிகையாளர்கள், சீமான் எங்களுக்கு ஆறுதல் கூறி, அச்சமின்றி போராடுங்கள் என்று கூறியதாகக் கூறினார்கள். எனவே, கைதானவர்களுக்கு அச்சமில்லை. ஆனால், அவர்களைக் கைது செய்ததன் மூலம் மற்றவர்களை அச்சுறுத்துகிறார்கள்.

தேசிய பாதுகாப்பு சட்டம் எப்போது வந்தது? 1980 ஆம் ஆண்டு ‘மிசா’வுக்கு வாரிசாக இந்த சட்டம் கொண்டு வரப்பட்டது. ‘மிசா’வுக்கு முன்பு - ‘டி.அய்.ஆர்.’ டிபன்ஸ் ஆப் இந்தியா என்ற சட்டம் இருந்தது. அந்த சட்டத்தின் கீழ் தான் முன்னாள் முதல்வர் பக்தவத்சலம் - கருணாநிதியைக் கைது செய்தார். அந்த சட்டத்துக்கு எல்லாம் மூலம் பிரிட்டானியா அரசு கொண்டு வந்த ரவுலட் சட்டம். எனவே இந்த சட்டங்களுக்கு எல்லாம் மூலம் ரவுலட் சட்டம்தான். ஜாலியன் வாலாபாக்கில், கண்மூடித் தனமாக மக்களை சுட்டுக் கொன்ற ஜெனரல் டயர், நீதிமன்றத்தில் கூறும் போது, “நான் ஏன் தோட் டாக்கள் தீரும் வரை சுட்டுக் கொல்ல உத்தரவிட்டேன், தெரியுமா? அந்த மக்களின் உள்ளத்தில் பாதிப்பை ஏற்படுத்த வேண்டும் என்பதால் தான்” என்று சொன்னான். அதே டயரின் நோக்கத்தோடுதான் இப்போது உயர்நீதிமன்றத்தில் தாக்குதல்களும் இந்தக் கைதுகளும் நடந்துள்ளன.

இப்போது - தேசிய பாதுகாப்பு சட்டத்தின் பிரிவு 3 இல் அடங்கியுள்ள 2வது உட்பிரிவுப்படி சீமான் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தப் பிரிவு என்ன கூறுகிறது? மய்ய மாநில அரசுகளின் பாதுகாப்புக்கு மாறாக, பொது ஒழுங்குக்கு மாறாக அல்லது உணவுப் பண்டங்கள் வினியோகிப்பைக் குலைக்க எந்த வகையிலாவது செயல்பட்டால் (ஹஉவiபே in யலே அயnநேச) இந்தப் பிரிவை பயன்படுத்தலாம் என்று கூறுகிறது. செயல்படுதல் என்றால் என்ன? இந்த மேடையில் நான் பேசிக் கொண்டிருக்கிறேன்; சொல்லிக் கொண்டிருக் கிறேன். பேசுவதும், செயல்படுவதும் ஒன்று அல்ல. சொல் வேறு; செயல் வேறு என்பது - அதிகாரி மஞ்சுநாதனுக்கு தெரியுமா? அமைச்சர் ஆற்காடு வீராசாமிக்கு தெரியுமா? பேசுவது என்பது செயல்படுவது அல்ல என்று உச்சநீதிமன்றம் பல தீர்ப்புகளில் தெளிவுபடுத்திவிட்டது.

இப்போது - இறையாண்மை என்று ஏதோ ஒரு அதிசயப் பொருளைப் பற்றிப் பேசுகிறார்களே; அந்த இறையாண்மையைத் திணிக்கப் பார்க்கிறார்களே; அந்த இறையாண்மைக்கு எதிராகப் பேசுவது நாட்டின் எந்தச் சட்டப்படியும் குற்றமல்ல. இது உங்களுக்குத் தெரியுமா? நான் வெளிப்படையாகச் சொல்கிறேன். இந்த இறையாண்மையை நான் ஏற்க மறுக்கிறேன். ஏனென்றால், இந்திய இறை யாண்மையை ஏற்பது என்பது, தமிழக இறை யாண்மையை மறுப்பது. நான் தமிழக இறை யாண்மையை ஏற்கிறேன்; இதுவும் ஒரு கருத்து தான். குற்றமல்ல. நான் ஒரு கேள்வி கேட்கிறேன், இந்திய அரசமைப்புச் சட்டத்தில் ராணுவ ஆட்சி நடத்துவதற்கு வழி இருக்கிறதா? ஏதாவது ஒரு விதி இருக்கிறதா? இல்லை.

ஆனால், யாரோ ஒருவன் உரத்த சிந்தனையில் இந்த நாட்டில் ராணுவ ஆட்சி நடக்க வேண்டும் என்று எழுதினால், அது குற்றமா? இல்லை. அது ஒரு கருத்து. அவ்வளவுதான். அந்தக் கருத்தைச் சொல்லுகிற உரிமை ஒவ்வொருவருக்கும் உண்டு. அதனால் தேசியப் பாதுகாப்பு ஒரு போதும் குலைந்து விடாது. இப்போது சீமான் பேச்சில் - இவர்கள் குற்றம் கண்டுபிடித்த பகுதி என்ன? தமிழகத்தில் 5000 இளைஞர்களைத் திரட்ட முடியுமா என்று, பிரபாகரன், தம்மிடம் கேட்டார் என்றும் - இதோ, அதைவிடப் பல மடங்கு கூட்டம் இங்கே திரண்டிருக் கிறது என்று சீமான் பேசியதை குற்றம் என்கிறார்கள். இதைவிடப் பல மடங்கு அளவில் பேசியவர்கள் எல்லாம், இந்த நாட்டில், முன்னாள், இன்னாள் முதலமைச்சர்களாக இல்லையா?

இப்படிப் பேசிவிட்டு, சீமான் கூறுகிறார், “என் தலைவன் பிரபாகரன் பின்னால் அன்பான இளைஞர்களே, எழுச்சியுடனும் புரட்சியுடனும் எழுந்து நில்லுங்கள். இந்த மண்ணிலே புரட்சி நிகழ்ந்தாக வேண்டும். புரட்சி எப்போது வெல்லும்? அதை நாளை தமிழ் ஈழம் சொல்லும்” ‘புரட்சி’ என்ற சொல் இந்திய இறையாண்மைக்கு ஆபத்து என்றால், எப்படி, புரட்சித் தலைவர்களையும், புரட்சித் தலைவிகளையும் நாடாள அனுமதித்தீர்கள்? (கைதட்டல்)

குற்றச்சாட்டில் மேலும் என்ன கூறுகிறார்கள்? சீமான் தன்னுடைய உணர்ச்சி மயமான பேச்சால் பொது மக்களிடையே வன்முறையைத் தூண்டினார் என்கிறார்கள். உணர்ச்சி மயமாகப் பேசுவது தவறா? குற்றச்சாட்டில் கூறியுள்ள இவைகூட தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வராது. இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்பதற்காக இதற்கு மேல் ஒரு குற்றச்சாட்டை இணைக்கிறார்கள்.

அத்துடன் இறையாண்மைக்கும் பொது ஒழுங்குக்கும் எதிராக கேடு பயக்கும் வகையில் செயல்படவும் செய்தார்” என்று இந்த ஆணையில் சொல்லப்பட்டிருக்கிறது. நான் கேட்கிறேன், சீமான் - கேடு பயக்கும் வகையில் செயல்பட்டது என்ன? இதைவிட கொடுமை என்ன தெரியுமா? இந்த சமூக விரோத காக்கிச்சட்டைக்காரன் எழுதுகிறான், சீமான், சமூக விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டார் என்று. நாட்டில் சமூக விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதில் முதல் இடம், இந்தக் காக்கிச் சட்டைக்காரர்களுக்குத்தான். சீமான் செய்த சமூக விரோத நடவடிக்கை என்ன? எதையாவது ஒன்றை சொல், பார்ப்போம்?

‘ஆக்டிங்’, ‘ஆக்டிங்’ என்கிறீர்களே! அவர் என்ன செயல்பட்டார்? அவருக்குத் தெரிந்த ‘ஆக்டிங்’ திரைப்படத்தில் நடிப்பு மட்டும் தான். இந்த வழக்கு - நீதிமன்றத்தில் நேர்மையான நீதிபதி முன் நிற்குமா? ஒருவன் என்ன பேசுகிறான் என்பதை வைத்து யாரையும் தண்டிக்க முடியாது என்று ‘பொடா’ வழக்கில் மட்டுமல்ல, எத்தனையோ வழக்குகளில் உச்சநீதிமன்றம் கூறிவிட்டது. செயல்பட்டால்தான் தண்டிக்க முடியும். அல்லது அந்தப் பேச்சைக் கேட்டு மற்றவர்கள் செயல்பட்டால் தண்டிக்கலாம். சீமான் பேச்சைக் கேட்டு நாட்டில் பொது ஒழுங்கைக் குலைக்குமள வுக்கு யார் செயல்பட்டார்கள்; சொல் பார்க்கலாம்!

அப்படி - ஒரு பேச்சினால் படுகொலைகள் நடந்தது என்றால், இந்தியாவில், குஜராத் முதல்வர் மோடி, விசுவ இந்து பரிஷத் தலைவர் தொகாடியா பேச்சுகளால்தான் நடந்தது. கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்துக்குப் பிறகு நரேந்திர மோடியும், தொக்காடியாவும், முஸ்லீம்களைக் கொன்று குவியுங்கள் என்று பேசியதால், மூன்று நாட்களில் மூவாயிரம் முஸ்லீம்கள், குஜராத்தில் படுகொலை செய்யப்பட்டார்கள். அந்த நரேந்திர மோடி - ஒரு நாள் சிறை வைக்கப்பட்டானா? பொது ஒழுங்கைக் குலைத்ததற்காக தொக்காடியாவை சிறையில் வைக்கும் துணிச்சல், இந்த அரசுகளுக்கு இருந்தது உண்டா? சீமான், எந்தப் பொது ஒழுங்கையும் குலைக்கவில்லை. இந்த சட்டப் பிரிவு தவறாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அரசியல் உள்நோக்கத்தோடு, கூட்டணி நலனுக்காக இந்த சட்டப் பிரிவு தவறாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்று குற்றம்சாட்டுகிறோம். அதற்காக நாங்கள் அஞ்சவும் மாட்டோம். அரசிடம் சென்று கெஞ்சவும் மாட்டோம். இவற்றையெல்லாம் மிஞ்சி வெற்றி பெறுவோம்;

இன்னும் ஒரே ஒரு செய்தி. சட்டப்புறம்பான நடவடிக்கைகள் சட்டம். சட்டப் புறம்பான நடவடிக்கைகள் என்று எதைக் கூறுகிறது? நாட்டின் ஒரு பகுதியைப் பிரித்து, அயல்நாட்டுடன் இணைப்பது. ஒரு பகுதியைப் பிரிந்து தனி நாடு அமைக்க போராடுவது. இந்த நடவடிக்கைகளுக்கு உதவி செய்வது. இவைதான் சட்டப்புறம்பான நடவடிக்கைகள் இந்தச் சட்டத்தின் கீழ் தான் விடுதலைப் புலிகள் இயக்கம், தடை செய்யப்பட்டுள்ளது. ‘பயங்கர வாதம்’ என்ற அடிப்படையில் அல்ல.

இப்போது மீண்டும் மீண்டும் ராஜீவ் கொலை பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்களே; அந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள். இது ஒரு பயங்கரவாத நடவடிக்கை அல்ல. தடா சட்டத்தின் கீழ் குற்றம்சாட்டப்பட்ட 26 பேரும் குற்றவாளிகளும் அல்ல என்று தெளிவாகத் தீர்ப்பளித்துவிட்டார்கள். இந்திய அமைதிப்படை ஈழத்தில் குற்றங்களை இழைத்தது உண்மை. இதற்கு அரசு அளித்த ஆதாரங்களே சான்று என்று உறுதிப்படுத்திய உச்சநீதிமன்றம் - அப்படி அமைதிப்படை இழைத்த குற்றங்களுக்கு பழி வாங்கும் நடவடிக்கையே ராஜீவ் கொலை என்று கூறியுள்ளது.

இங்கே எங்கே பயங்கரவாதம் வந்தது. தமிழ் ஈழத்தின் நிலப்பரப்பு என்ன என்பதை தெளிவாக விடுதலைப்புலிகள் வரையறுத்து வைத்திருக்கிறார்கள். அதற்கு மேல் ஒரு அங்குல மண்ணுக்குக்கூட அவர்கள் உரிமைகோருவது கிடையாது. ஆனால், இந்திய அரசியல் சட்டம் தனது நிலப்பகுதியை எவ்வாறு வரையறுத்துள்ளது? அரசு மாநிலங்கள் என்றும், ஒன்றிய ஆட்சி பரப்புகள் என்றும், அவ்வப்போது சம்பாதித்து சேர்த்துக் கொள்ளும் பகுதிகள் என்றும் எழுதி வைத்திருக்கிறது. நாட்டு எல்லையை விரிவாக்குவதே சட்டத்தில் எழுதி வைத்துள்ள ஒரு அரசு, தன் மண்ணின் விடுதலைக்காகப் போராடுகிறவனைப் பார்த்து, தமிழ்நாட்டைப் பிரித்து இணைக்கப் பார்க்கிறான் என்று புளுகுவதும் இந்தப் புளுகை, இங்கே இருக்கிற மாநில அரசு திருப்பிக் சொல்வதும், இதற்காக நீங்கள் ஒருவரை கைது செய்து சிறையிலடைப்பதும் நியாயத்திற்கோ, அவர்கள் நடத்தும் போராட்டத்தின் உண்மைத் தன்மைக்கோ புறம்பானது. நாம் ஒன்றைத் தெளிவாகக் கூறுவோம்.

தமிழ் ஈழ மக்களைப் பாதுகாக்க வேண்டு மென்றால், முல்லைத் தீவிலே முற்றுகைக்கு உள்ளாகியிருக்கும் மக்களை, உயிரோடு பாதுகாக்க வேண்டும் என்றால், சிங்கள அரசு, இந்திய அரசோடு சேர்ந்து நிறைவேற்றி வரும், சதித் திட்டத்தை முறியடிக்க வேண்டும் என்றால், எந்த அரசையும் நம்பி, அதைச் செய்து முடிக்க முடியாது. நாளொரு பேச்சு பேசும் அரசியல்வாதிகளை நம்பி செய்து முடிக்க முடியாது. அதை செய்து முடிப்பதற்கு ஒரே ஒரு வழி, தமிழக மக்கள் கிளர்ந்து எழுந்து போராட வேண்டியது மட்டும் தான். அப்படி, தமிழக மக்களைக் கிளர்ந்தெழுந்து போராடுவதற்கான உரிமையை எங்களுக்குக் கொடு; நாங்கள் தமிழ் ஈழ மக்களைக் காபாற்றுகிறோம். ஆனால், அந்த உரிமையை, பேச்சுரிமையை, கருத்துரிமையை மறுத்து, எங்கள் தலைவர்களை சிறைப்படுத்துவாய் என்றால், இந்தப் போராட்டம் தமிழ் ஈழ மக்களை மீட்பதற்கான போராட்டமாக அல்லாமல், தமிழக மக்களை உங்கள் பிடியிலிருந்து மீட்கும் போராட்டமாக மாறும்.

உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் பால். கனகராஜ் உரையில் குறிப்பிட்டதாவது:

அடிப்படை உரிமைகளே மறுக்கப்பட்ட வழக்கறிஞர் சமூகத்தின் தலைவராக நின்று உங்கள் முன் பேசுகிறேன். காவல்துறையினரின் தாக்குதலினால் 500க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளனர். 81 பேர் படுகாயமடைந்துள்ளனர். 16 பேர் இன்னும் மருத்துவமனையிலிருந்து வெளிவரவில்லை. 150 பேர் உடலில் பலத்த அடிபட்டு வெளியே கூற கூச்சப்பட்டு மறைத்துக் கொண்டிருக்கிறார்கள். 300 வழக்கறிஞர்கள் ஓட ஓட விரட்டப்பட்டு, மானபங்கப்படுத்தப்பட்டுள்ளனர். இவ்வளவுக்குப் பிறகு வழக்கறிஞர்கள் புகார் தந்தால், வழக்குப் பதிவு செய்ய காவல்துறை மறுக்கிறது. காவல்துறையின் இந்த நடவடிக்கை ஏதோ அதிகார முறைகேடு; அத்து மீறல்கள் என்ற எல்லைக்குள் குறுக்கிட முடியாது; அப்படி இருந்தால், நாமும் அதை மன்னித்து விட்டு விடலாம். ஆனால், நடந்து முடிந்திருப்பது குற்றம்.

வழக்கறிஞர்கள், பெண் வழக்கறிஞர்கள் அலுவலகம் உடைக்கப்பட்டு, நீதிபதிகளே தாக்கப்பட்டு, பல நூறு கார்கள் உடைக்கப்பட்டு, பொது சொத்துகளுக்கு நாசம் விளைவிக்கப்பட்டுள்ளது. பொது சொத்துக்களை சேதப்படுத்துவோரை கண்டவுடன் சுடும் ஆணை காவல்துறைக்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதை காவல்துறையினர் ஒலி பெருக்கியில் அறிவித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், பொது சொத்துகளுக்கு சேதம் விளைவித்தது. இவர்கள் மீது புகார் தந்தாலே புகாரை ஏற்க மறுக்கிறார்கள். கடந்த மாதம் 19 ஆம் தேதி நடந்த சம்பவத்துக்கு குற்றம் இழைத்தவர் மீது இதுவரை நடவடிக்கை இல்லை. எனவே தமிழகத்தில அடிப்படை உரிமைகளே மறுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கருத்துரிமைப் பறிப்பு என்று கூறுவதுகூட மிக மிக சாதாரணமாகவே எனக்கு தோன்றுகிறது.

இப்போது இயக்குனர் சீமான், கொளத்தூர் மணி ஆகியோரை கூட்டத்தில் கருத்துகளைத் தெரிவித்ததற்காக கைது செய்திருக்கிறார்கள். அவர்கள் மீது தொடரப்பட்டுள்ள சட்டப் பிரிவுகள் 13(1), 13(2) மற்றும் சட்டப்பிரிவுகளின் கீழ் அவர்களை கைது செய்திருப்பதே தவறு என்று வழக்கறிஞர் என்ற முறையில் நான் கூறுகிறேன். மேற்குறிப்பிட்ட பிரிவுகளில் கூறப்படும் குற்றங்களுக்கு ஆதரவு காட்டி செயல்பட்டால்தான் அந்த சட்டப்படியே அவர்களை கைது செய்ய முடியும். பேசுவதை மட்டும் வைத்து கைது செய்யக் கூடாது என்று உச்சநீதிமன்றம் தெளிவாக கூறியிருக்கிறது.

இதே சட்டப் பிரிவுகளின் கீழ் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் கைது செய்யப் பட்டு, 15 நாள் காவலில் வைக்கப்பட்டார். 15 நாள் கழித்து, மீண்டும் காவல் நீட்டிப்புக்கு நீதிமன்றம் கொண்டு வரப்பட்டபோது உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி காவலை நீட்டிக்க முகாந்திரம் இல்லை என்ற காரணத்தினால், காவல்துறையே நீட்டிப்பைக் கோரவில்லை. எனவே பிணை மனு தாக்கல் செய்யப்படாத நிலையிலேயே அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். மீண்டும் அதே போல் அதே சட்டப் பிரிவுகளைப் பயன்படுத்தி, இப்போது கொளத்தூர் மணியை கைது செய்துள்ளனர்.

காவல்துறை தவறு என்று தெரிந்து செய்தாலும்கூட காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது. காரணம் நல்ல எண்ணத் தின்அடிப்படையில் அவர்கள் செய்ததாகவே சட்டம் கூறுகிறது. ஒரு குற்றமும் செய்யாத ஒருவரை - விசாரணைக்கு அழைத்து, பல மணி நேரம் காத்திருக்க வைத்து, பிறகு அவர்களால் வெளியே அனுப்ப முடியும். அப்பாவி ஒருவரை இப்படி நடத்தலாமா என்று கேட்க முடியாது. காரணம், நல்ல எண்ணத்தின் அடிப்படையிலேயே காவல்துறை அதிகாரி விசாரணை நடத்தினார் என்ற பாதுகாப்பு அவர்களுக்கு இருக்கிறது. இப்போது, கொளத்தூர் மணி, சீமான் ஆகியோர் மீது தொடரப்பட்ட வழக்குகள் தவறானவை என்று தெரிந்திருந்தும்கூட - அவர்கள் வழக்கு போட்டு கைது செய்கிறார்கள். நாம் அவர்களை விடுதலை செய்ய வேண்டுமானால் நீதிமன்றம் தான் போக வேண்டும்.

தேசியப் பாதுகாப்புச் சட்டத்தைப் போட்டுவிட்டால் 6 மாதம் வரை - உள்ளே வைத்து விடலாம். முதலில் ரிட் மனு தாக்கல் செய்து நோட்டீஸ் கொடுத்து விசாரணைக்கு வரவே எட்டு வாரங்கள் ஆக வேண்டும். பதில் மனு தாக்கல் செய்ய அரசு தரப்பில் அவகாசம் கேட்டு நான்கு வாரம் எடுத்துக் கொள்வார்கள். வழக்கு நீதிமன்றத்தில் முன்னுரிமை வரிசை அடிப்படையில்தான் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுவதால், அதற்கு காலதாமதம் ஆகும். ஆக, 6 மாதம் வரை காவலில் - எந்தத் தவறும் இல்லாமலே ஒருவரை வைத்துவிட முடியும். நீதிமன்றம் கைது செய்தது தவறு என்று கூறினாலும், 6 மாதம் வரை சிறையில்தான் இருக்க வேண்டும். எனவே கைது செய்யப்பட்டதன் நோக்கம் நிறைவேறிவிடும். குற்றம் செய்யாமல் சிறையில் இருந்தவர்கள். அதற்காக இழப்பீடு கேட்கவும் முடியாது.

இத்தகைய நீதிமன்ற நடவடிக்கைகள் எதுவும் இல்லாமலே, இப்போதே, அரசு இவர்களை விடுதலை செய்யவும் வாய்ப்பு உண்டு. காடுவெட்டிகுருவின் கதை உங்களுக்கு தெரியும். அவர் தேசியப் பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு, பல வாரங்கள் சிறையில் இருந்தார். உயர்நீதிமன்றத்தில் அவர் தொடர்ந்த வழக்கில் தேசியப் பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்தது சரிதான் என்று, உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பிறகு, அரசு அவரை விடுதலை செய்தது உங்களுக்கு தெரியும்.

இப்போது - சீமான், கொளத்தூர் மணி ஆகியோர் மீது தொடர்ந்துள்ள வழக்குகள், நீதிமன்றத்தில் நிற்கப் போவதில்லை என்பது அரசுக்கு தெரியும். நீதிமன்றத்தில் நாம் எந்த அடிப்படையில் வாதாடப் போகிறோம் என்பதும் - இக்கூட்டத்தின் வழியாகப் பேசியிருக்கிறோம். எனவே நெடுநாள் கழித்து விடுதலை செய்வதைவிட, தமிழக அரசு இப்போதே அவர்களை விடுதலை செய்தால், அது தமிழினத்துக்கு பெருமை சேர்க்கும். தமிழக முதல்வர் இப்படி ஒரு நல்ல முடிவை எடுக்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். இந்தக் கூட்டத்தின் நோக்கமும் நிறைவேறும்.

அரசியல் சட்டத்தின் 19வது பிரிவு கருத்துரிமையை, பேச்சுரிமையை அடிப்படை உரிமையாக்கியுள்ளது. மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்துவதுதான் குற்றமே தவிர (294-பி) நல்ல வார்த்தைகளால் கருத்துகளை வெளியிடுவது அடிப்படை உரிமை. நல்ல வார்த்தைகளில் கூறப்படுகிற கருத்துகளை மதிக்க வேண்டும். அதுவே சுதந்திரமான பேச்சுரிமையை மதிப்பதாகும்.

தியாகராயர் நகர் கூட்ட எழுச்சி

பெரியார் திராவிடர் கழகம், தமிழ் தேச பொதுவுடைமை கட்சி, தமிழ் தேசிய விடுதலை இயக்கம் ஆகிய அமைப்புகள் கூட்டாக உருவாக்கியுள்ள ‘தமிழர் ஒருங்கிணைப்பு’ என்ற அமைப்பின் சார்பில், கொளத்தூர் மணி, இயக்குனர் சீமானை விடுதலை செய்யக் கோரி கருத்துரிமை முழக்கம், சென்னை தியாகராயர் சாலையில் உள்ள முத்துரங்கம் சாலையில் 9.3.2009 மாலை எழுச்சியுடன் நடந்தது.

தென்சென்னை மாவட்ட பெரியார் திராவிடர் கழகத் தலைவர் தபசி குமரன் தலைமை தாங்கினார். சிவ காளிதாசன் (த.தே.வி.இ.) வரவேற்புரையாற்றினார். வழக்கறிஞர் பாண்டிமா தேவி, சட்டக் கல்லூரி மாணவி தி.ல.சுதா காந்தி, இயக்குனர் ஆர்.கே. செல்வமணி, தியாகு (த.தே.வி.இ.), மும்பை உயர்நீதி மன்ற முன்னாள் நீதிபதி எச். சுரேஷ், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தலைவர் பால். கனகராஜ், விடுதலை இராசேந்திரன் (பெ.தி.க.), பெ. மணியரசன் (த.தே.பொ.க.) ஆகியோர் உரையாற்றினர்.

கவி பாஸ்கர் நன்றி கூறினார். பெரும் திரளாக மக்கள் கூடியிருந்தனர். கொளத்தூர் மணி - சீமான் கைது சட்ட விரோதமானது என்பதற்கான அடுக்கடுக்கான வாதங்கள் முன் வைக்கப்பட்ட தோடு, காங்கிரஸ் - தி.மு.க. துரோகங்களும், பார்ப்பன ஜெயலலிதாவின் நாடகங்களும் கூட்த்தில் விளக்கி பேசப்பட்டன. பொதுக் கூட்டமாக இருந்தாலும், அரங்கில் நடந்த கத்தரங்கு போல் மக்கள் அமைதியாக இறுதி வரை இருந்து உரைகளைக் கேட்டனர். தோழர் தியாகு கூட்டச் செலவுக்காக துண்டேந்தி நிதி திரட்டியபோது கூட்டத்தினர் வழங்கிய தொகை ரூ.5200.

Pin It