தமிழ்நாட்டில் மாபெரும் வெற்றி, இந்தியாவில் படுதோல்வி என்று தேர்தல் முடிவுகள் வந்துள்ளன. 'சிலர் சிரிப்பார், சிலர் அழுவார், நாம் அழுதுகொண்டே சிரிக்கின்றோம்' என்பதாக நம் நிலை அமைந்துவிட்டது.

தோழர் உமாவின், "கோட்சேயின் துப்பாக்கி பத்திரமாயிருக்கிறது" என்னும் நூல் குறித்து இங்கு நண்பர் ரவி உரையாற்றினார். துப்பாக்கியில் இப்போது தோட்டாக்களும் நிரப்பப்பட்டுவிட்டன. ஐந்து ஆண்டுகளுக்குப் போதுமான தோட்டாக்கள் அதில் இப்போது உள்ளன. இப்படி நான் சொல்வது அச்சுறுத்துவதற்காக இல்லை, எச்சரிப்பதற்காக! எதனையும் எதிர்கொள்ளத் தயாராக வேண்டும் என்பதை உணர்த்துவதற்காக.

தேர்தல் முடிவுகளில் தெற்கும் வடக்கும் பிரிந்து நிற்கின்றன. வடக்கே மாபெரும் வெற்றி பெற்றிருப்பினும், தமிழகம், கேரளம், ஆந்திரம் ஆகிய மூன்று மாநிலங்களிலும் பாஜக ஓர் இடத்தைக் கூடப் பெறவில்லை. மறுபடியும் பழைய திராவிட நாடு எழுந்துள்ளது போல் இருக்கிறது.

எனினும், இந்தியா, ஒரு மதவாதக் கட்சியின் பிடிக்குள் போய்விட்டது என்பதை நாம் மறுப்பதற்கில்லை. இந்த நிலையை நாம் எப்படி எதிர்கொள்ளப் போகிறோம் என்பது ஒரு பெரிய வினா. ஒத்த கருத்துள்ளவர்கள் ஒற்றுமையால்தான் அதனை நாம் சந்திக்க இயலும். நமக்குள்ளான சின்னஞ் சிறிய வேறுபாடுகளை நாம் பெரிதுபடுத்திடாமல் இருக்க வேண்டும் என்பது முதல் நிபந்தனை.

வெளிப்படையாகவே ஒன்றைச் சொல்கிறேன். நண்பர் பா.ரஞ்சித், எழுச்சித் தமிழர் திருமாவளவன் வெற்றி குறித்து ஒரு செய்தி வெளியிட்டுள்ளார். தலித்துகளின் வெற்றி அவ்வளவு எளிதில்லை என்கிறார். இப்படியெல்லாம் பிரித்துப் பிரித்துப் பார்க்காதீர்கள். அப்படியானால் ரவிக்குமாரின் வெற்றி எப்படி எளிதானதாக இருந்தது? நண்பர் திருமாவளவனைத் தலித் தலைவராக மட்டுமே காட்டாதீர்கள். என் போன்றவர்கள் அவரைத் தமிழர் தலைவர்களில் ஒருவராகவே பார்க்கிறோம்.

23ஆம் தேதி இரவு 12 மணி வரை நான் உறங்காமல், தொலைக்காட்சி எதிரே அமர்ந்திருந்தேன். திருமா முன்னிலைக்கு வந்துவிட மாட்டாரா என்ற ஏக்கத்துடன் அமர்ந்திருந்தேன்.

புலனத்தில் (வாட்ஸ் அப்) "திருமாவளவன் வெல்ல வேண்டும், வெல்வார். அன்புமணி தோற்க வேண்டும், தோற்பார்" என்று பதிவிட்டேன். இப்படி, பா.ம.கவை வம்பிழுக்க வேண்டும் என்ற தேவையில்லை. அவர்களுக்கு வாக்களித்த வன்னிய மக்கள் உழைப்பாளிகள். அவர்கள் மீது என்றும் எனக்கு மதிப்புண்டு. ஆனால் அவர்களின் பெயரைச் சொல்லி, தைலாபுரம் தோட்டம் மட்டுமே வளர்ந்துள்ளதே அல்லாமல், அந்த மக்கள் வாழ்வில் முன்னேறியுள்ளனரா? அதனையும் மனத்தில் வைத்துக்கொண்டுதான், அந்தப் பதிவை நான் இட்டேன்.

எனவே, கருப்பு, சிவப்பு, நீலம் என்னும் மூன்று வண்ணங்களும் ஒருங்கிணைந்து நிற்க வேண்டும். அதுவே நம் வலிமை. அது வெறும் தேர்தல் கூட்டணி அன்று. கொள்கைக் கூட்டணி. அதற்கும் முன்பாக, எல்லாக் கறுப்புச் சட்டைகளும் ஒன்றிணைய வேண்டும்.

இது பெரியார் மண் என்பதைத் தமிழ்நாட்டு மக்கள் மீண்டும் ஒருமுறை மெய்ப்பித்து  விட்டனர்.  அதனை நாம் உறுதி செய்ய வேண்டும். சிகரத்தில் ஏறுவதுக் கூடக் கடினமில்லை. ஏறிய சிகரத்தில் நிலைத்து நிற்பதே கடினம். அதனைச் செய்து காட்ட வேண்டிய அறைகூவலைக் காலம் நம்முன் வைத்துள்ளது. அரசியல் என்பது ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை ஆற்றும் பணியன்று. அது நம் அன்றாடப் பணி!

ஆம் தேர்தலைத் தாண்டியும் நம் பயணத்தின் பாதை நீண்டு கிடக்கிறது!!!

Pin It