மக்களால் மக்களுக்காக நடத்தப்படும் அமைப்புகளில் முதன்மையானது கூட்டுறவுகள். பழங்காலங்களில் பணப்புழக்கம் மிகுந்தவர்களின் அநியாய வட்டியிலிருந்து சாமானியனைக் காப்பாற்றுவதற்காக உருவாக்கப்பட்டது கூட்டுறவு இயக்கம். நூறாண்டுக்கும் மேலாகத் தழைத்து வந்த இயக்கம் தற்போதைய ஆட்சியாளர்களின் பேராசையால் நலிந்து வருகின்றது.

கூட்டுறவுகளை அதிகார வர்க்கம் நிர்வகிக்காமல் அதன் உறுப்பினர்களே நிர்வகிக்கும்போது மட்டுமே உண்மையான ஜனநாயகம் மலரும் என்ற எண்ணத்திலேயே கூட்டுறவுத் தேர்தல்கள் நடத்தப்படுகின்றன.

தமிழ்நாட்டில் 18,435 கூட்டுறவு சங்கங்களுக்குத் தற்போது தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. ஒரு சங்கத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர்களை (11 பேர்) மட்டுமே சங்க உறுப்பினர்கள் தேர்ந்தெடுப்பார்கள். தலைவரையும் துணைத் தலைவரையும் நிர்வாகக் குழு உறுப்பினர்கள்  தேர்வு செய்வார்கள்.

ஆனால் இந்நடைமுறைகள் அனைத்தையும் கேலிக் கூத்தாக்கியிருக்கிறது தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் தேர்தல். தேர்தலையே நடத்தாமல் ஒவ்வொரு சங்கத்திற்கும் 11 பேர் கொண்ட பட்டியலை தேர்தல் அலுவலரிடம் கொடுத்து அறிவிக்குமாறு ஆளுங்கட்சியினர் வற்புறுத்துவது, எதிர்க்கட்சி வேட்பாளர்களின் வேட்பு மனுவை நிராகரிக்கச் சொல்லி மிரட்டுவது போன்ற பல தகிடு தத்தங்கள் நடந்து வருகின்றன. தேர்தல் அலுவலர்கள் கடத்தப்படுவது போன்ற அவலங்களும் நடந்தேறியுள்ளன.

தேர்தல் முறைகேடுகளுக்குப் பல உயர் அதிகாரிகளே உடந்தையாகவும் உள்ளனர் என்பது வெட்கக்கேடு. முறையாகத் தேர்தல் நடத்தப்படும் சூழலில் ஆளுங்கட்சி ஜெயிக்க இயலாது என்பதால் இத்தகைய குறுக்கு வழியில் அதிகாரத்தைக் கைப்பற்ற முயல்கிறது அடிமை அ.தி.மு.க. அரசு. இதில் பலிகடா  ஆகப்போவது தேர்தல் அலுவலர்கள் மட்டுமே.

இரு கட்டத் தேர்தல்கள் ஏற்கனவே முடிவடைந்த நிலையில், தேர்தல் நடைமுறைகளில் பாரபட்சம் காட்டப்படுவதாக தி.மு.க. எம்.எல்.ஏ. சக்கரபாணி தொடர்ந்த வழக்கை விசாரித்த மதுரை ஐகோர்ட்டு கிளை, தேர்தல் பணிகளை நிறுத்தி வைக்கவும், 3, 4 மற்றும் 5-வது கட்டத் தேர்தல்களை நடத்தத் தடை விதித்தும் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து, கூட்டுறவுச் சங்கத் தேர்தல் ஆணையம் சார்பில் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம், மதுரை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்குத் தடை விதித்து, கூட்டுறவுச் சங்கத் தேர்தல்களை நடத்த உத்தரவிட்டது. ஆனால், தேர்தல் முடிவுகளை வெளியிட இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கூட்டுறவு என்னும் ஜனநாயக நிறுவனத்தின் மாண்புகளைக் குலைக்கும் வண்ணம் ஆளும் அ.தி.மு.க. அரசு செயல்பட்டு வருவது வெட்ககரமானது. கண்டனத்திற்குரியது.         

Pin It