சென்ற வாரம் தேர்தல் பத்திர விவரங்களைத் தாக்கல் செய்ய 3 மாதகால அவகாசம் கேட்ட பாரத ஸ்டேட் வங்கி, உச்சநீதிமன்றத்தின் கடுமையான ஆணையால், ‘இல்லையில்லை உடனடியாகக் கொடுத்து விடுகிறோம்’ எனப் பணிந்தது. உச்சநீதிமன்றத்தில் இரண்டு கோப்புகள் அடங்கிய ஒரு பேனாச் சேமிப்பைக் கொடுத்துவிட்டது. அதைத் தேர்தல் ஆணையம் நேற்று தன் வலை தளத்தில் ஏற்றியது.

337 பக்கங்கள் கொண்ட ஒரு கோப்பில் தேர்தல் பத்திரங்களை வாங்கிய நிறுவனங்களின் பெயர், எவ்வளவு தொகைக்கு வாங்கினார்கள் என்ற விவரமும், 426 பக்கங்கள் கொண்ட மற்ற கோப்பில் கட்சிகளின் பெயர்களும், அவர்களுக்குக் கிடைத்த தொகையும் என ஒன்றுடன் ஒன்று தொடர்பு படுத்த முடியாத விவரங்கள் இருப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. தேர்தல் பத்திர எண்களை இரு கோப்புகளிலும் வழங்காததால், எந்தக் கட்சிக்கு எந்த நிறுவனம் எவ்வளவு கொடுத்தது என விளக்கம் பெற முடியவில்லை.

modi electoral bondஆனால், கொடுத்த குறைந்த விவரங்களில் இருந்தே பல மோசடிகள் அம்பலத்துக்கு வந்துள்ளன. பல போலி நிறுவனங்கள் அந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளது இப்போது அம்பலமாகி உள்ளது. அரசியல் நன்கொடைகளை வங்கிகளின் மூலம் வெளிப்படைத் தன்மையுடன் பெறுவதாக அறிவித்தவர்களின் மோசடி நோக்கம் இப்போது தெளிவாகத் தெரிகிறது.

இவர்கள் பாகிஸ்தான் புல்வாமா தாக்குதல் நடத்துகிறது என்று சொல்லிக் கொண்டே, பாகிஸ்தானின் ஒரே மின்சார நிறுவனமான “ஹப் பவர்” நிறுவனத்திடம் கூட தேர்தல் பத்திரங்களை ரூ.1 கோடிக்கு வாங்கி இருப்பது தெரிய வந்துள்ளது.

அது மட்டுமல்ல பத்திரங்களை வாங்கியுள்ள பல நிறுவனங்கள், அதற்கு முன்னதாக அமலாக்கத் துறை, வருமான வரித் துறை, CBI உள்ளிட்ட அரசு நிறுவனங்களால் சோதனைக்கு உட்படுத்தப் பட்டிருப்பதும் தெரிய வந்துள்ளது. அச்சுறுத்தலால் பல நிறுவனங்கள் தேர்தல் பத்திரங்களை வாங்கிக் கொடுத்திருப்பதும் இதன் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. 2019 முதல் 2024 வரை அதிகப்படியாக பத்திரங்களை வாங்கிய முதல் 5 நிறுவனங்களில், லாட்டரி நிறுவனமான ஃயூச்சர் கேமிங் அன் ஹோட்டல் சர்வீசஸ் (ரூ.1368 கோடி), மேகா எஞ்சினீரிங் அன் இன்ஃப்ராஸ்ட்ரக்சர்ஸ் (ரூ.966 கோடி) மற்றும் வேதாந்தா (ரூ.400 கோடி) ஆகிய 3 நிறுவனங்கள், அமலாக்கத்துறை மற்றும் வருமானவரித் துறை சோதனகள் நடந்து அவர்களுடைய சொத்துகள் பறிமுதல் செய்யப்படவிருக்கும் மிரட்டலுக்கு நடுவிலே தான் இந்த தேர்தல் பத்திரங்களை வாங்கி உள்ளனர்.

மேகா எஞ்சினீரிங் நிறுவனம், ஏப்ரல் 2023இல் ரூ.100 கோடி நன்கொடையை, தேர்தல் பத்திரம் மூலம் கொடுத்த அடுத்த மாதமே ரூ.14,400 கோடி மதிப்பிலான சுரங்க சாலை கட்டுமானப் பணிக்கான ஒப்பந்தத்தைப் பெற்றிருக்கிறது. இப்படிப் பல சிறிய, அப்போதுதான் உருவாக்கப்பட்ட நிறுவனங்களுக்கும் வணிக ஒப்பந்தங்கள் லஞ்சமாகக் கொடுக்கப் பட்டிருப்பதும் இந்த விவரங்களைக் கொஞ்சம் ஆய்வு செய்தால் தெரிவதாக மூத்த வழக்கறிஞர் பிரசாந்த பூஷண் தன் எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளார். இந்த மேகா நிறுவனம் இன்னும் பல மாநிலங்களில் பல ஒப்பந்தங்களைப் பெற்றிருப்பதும், தலைமைக் கணக்காயரால் அந்த ஒப்பந்தங்களில் முறைகேடுகள் நடந்திருப்பதும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

இது மட்டுமல்ல, 22,217 பத்திரங்களில் அம்பானி, அதானி வகையறாக்களின் ஒரு பெயர் கூட இடம்பெறவில்லை. எனில், அந்தப் போக்குவரத்து வேறு வகைகளில் தனியே நடைபெற்று வருகிறது என்பது தானே பொருள்?

இதில், பா.ஜ.க. வின் சமூக வலைத்தள அணியினர் இன்னும் முட்டு கொடுக்க, இப்படிச் சொல்கின்றனராம், “18 மாநிலங்களில் ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க. கூட்டணி ரூ.11,500 கோடி தான். சராசரியாக ஒரு மாநிலத்துக்கு ரூ.638 கோடி தான்; ஒரே மாநிலத்தில் ஆட்சியில் இருக்கும் திரிணாமூல் காங்கிரசு போன்ற கட்சிகள் வாங்கியதை விட இது குறைவுதான்”! இது எப்படி இருக்கிறது? நன்கொடைகளை முறைப்படுத்துவதாகச் சொல்லித் தொடங்கப்பட்ட தேர்தல் பத்திர முறையின் முறைகேடுகளே இவ்வளவு என்றால், இன்னும் கணக்கு கோரப்படாத பி.எம்.கேர் நிதி ஆகியவற்றைத் தோண்டினால் என்ன ஆகும்?

இன்று மீண்டும் உச்ச நீதிமன்றம் தேர்தல் பத்திரங்களின் சிறப்பு வரிசை எண்களுடனான கோப்புகளைக் கேட்டிருக்கிறது. பாஜகவின் அடுத்த நகர்வு என்ன பார்ப்போம்.

- சாரதா தேவி

Pin It