ஒரு துறையில் வல்லுனர்களாக இருப்பவர்கள் பிற துறைகளைப் பற்றிப் பேசக்கூடாது என்பதில்லை. ஆனால் அப்படிப் பேசும்போது கூடுதல் கவனத்தோடு இருப்பது நல்லது. பாரதிராஜா, இளையராஜா போன்றவர்களிடம் அந்த நிதானம் தவறிப் போவதைப் பலமுறை பார்த்திருக்கிறோம். இப்போது மீண்டும் ஒருமுறை அது நிகழ்ந்துள்ளது.

Bharathiraja 261கடந்த வாரம், ஆனந்த விகடனுக்கு அளித்துள்ள நேர்காணலில் பாரதிராஜா அரசியல் குறித்தும், தேசிய இனப் பிரச்சினை குறித்தும் பேசியுள்ளார். “ரஜினியின் பாதம் நல்ல பாதம். புல்வெளியில் நடக்க, பூக்களின் தோட்டத்தில் இருந்திருக்க, மக்கள் வெள்ளத்தில் மிதந்து வந்திருக்க அவற்றைப் பயன்படுத்த வேண்டும்.” அதை விட்டுவிட்டு, இந்த சாக்கடைக்குள் (அரசியலுக்குள்) ஏன் காலை விட வேண்டும் என்று கேட்கிறார். அது மட்டுமல்லாமல், அரசியலில் நுழைந்து விட்டாலே, எந்த ஒரு நல்ல மனிதனும் கெட்டுப் போய்விடுவான் என்கிறார்.

இவ்வாறெல்லாம் அரசியல் குறித்துச் சொல்வதற்கு அவருக்கு உரிமை உள்ளது. ஆனாலும் சில செய்திகளை அவர் எண்ணிப் பார்த்திருக்க வேண்டும். அரசியலைத் தவிர நாட்டில் மற்ற துறைகள் எல்லாமே சரியாக இருக்கின்றனவா? திரைப்படத் துறையில் கெட்டவர்களே இல்லையா? ஒழுக்கக் குறைபாடு, கறுப்புப்பணம் பற்றியெல்லாம் திரைப்படத் துறையிலோ, வேறு துறையிலோ உள்ளவர்களுக்குத் தெரியவே தெரியாதா?

புல்வெளியில் மட்டுமே நடக்கக்கூடிய பாதங்கள் கரடு முரடான பாதையில் நடக்க வேண்டுமா என்று கேட்பது வேறு, சாக்கடையில் நடக்க வேண்டுமா என்று கேட்பது வேறு.

பெரியார், கருணாநிதி, வைகோ - இவர்கள் எல்லாம் தமிழர்கள் இல்லை என்று சீமான் கூறுகின்றாரே, அது பற்றி உங்கள் கருத்து என்ன என்று இன்னொரு வினா கேட்டுள்ளனர். சுற்றி வளைத்து விடை சொல்லும் அவர், இறுதியில், “சீமான் சொல்வதில் தவறே கிடையாது” என்று முடிக்கிறார்.

தன் கூற்றுக்கு அவர் ஒரு எடுத்துக்காட்டையும் சொல்கின்றார். ‘நான் 18 ஆண்டுகள்தான் தேனி அல்லிநகரத்தில் இருந்தேன். 60 ஆண்டுகளாகச் சென்னையில் இருக்கிறேன். அதனால் நான் சென்னைக்காரன் ஆகி விடுவேனா? நான் அல்லிநகரத்துக்காரன்தானே!’ என்கிறார். தேசிய இனச் சிக்கலை இவ்வளவு மலினமாக எடை போட்டால் நாம் என்ன சொல்வது? முன்பு, பெரியார் தமிழர் இல்லை என்றார்கள். இப்போது அண்ணா, கலைஞர் யாருமே தமிழர் இல்லை என்கின்றனர். போகட்டும், ரத்தப் பரிசோதனை நிலையங்களைத் தொடர்ந்து அவர்கள் நடத்தட்டும். மரபு இனம், தேசிய இனம் குறித்த நீண்ட விவாதங்கள் ஒருபக்கம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இவை போன்ற மிக ‘எளிய’ விளக்கங்கள் இன்னொரு பக்கம் தரப்படுகின்றன.

இனப் பற்று, இன உரிமை என்பன வேறு, இனவாதம் என்பது வேறு என்பதையெல்லாம் சீமானிடமிருந்து பாரதிராஜா கற்றுக்கொள்ள முடியாது.

Pin It