இரண்டும் வேறு வேறுதான். என்றாலும், இரண்டிற்குள்ளும், பதவி பற்றிக் கவலைப்படாத ஓர் ஒற்றுமையும். உறுதியும் உள்ளன.

தேர்தலில் ஒரு கட்சி பெரிய தோல்வியைச் சந்திக்கும்போது, அதற்குப் பொறுப்பேற்று அக்கட்சியின் தலைவர் பதவி விலகுவதும், பிறகு கட்சித் தலைவர்கள், தொண்டர்கள் வேண்டுகோளை ஏற்று அதனைத் திரும்பப் பெற்றுக்கொள்வதும், இயல்பாக நடக்கக் கூடியவைகளே. கட்சியின் நலன் கருதி, அப்படித் திரும்பப் பெறுவதும் தவறன்று.

vaiko and rahul gandhiஆனால், ராகுல் காந்தி இறுதி வரையில் தன் முடிவை மாற்றிக் கொள்ளவில்லை. அது வெறும் பிடிவாதம் இல்லை என்பதை, அவருடைய திறந்த மடல் எடுத்துக் காட்டுகிறது. பொதுவாழ்வில் வெளியிடப்படும் கடிதங்கள், அறிக்கைகள் கூடச் சில வேளைகளில் ஓர் ஆவணம் போல் ஆகிவிடும். அப்படிப்பட்ட வராலாற்று ஆவணங்களில் ஒன்றாக ராகுலின் கடிதம் விளங்குகிறது.

பாஜக வின் மீதோ, அக்கட்சியின் தலைவர்கள் மீதோ, தனக்கு எவ்வித வெறுப்பும் இல்லை என்று கூறும் ராகுல், அக்கட்சியின் சித்தாந்தங்களை என் உடலின் ஒவ்வொரு அணுவும் எதிர்க்கிறது என்கிறார். மிக அழுத்தமான இவ்வரி, அவரின் உயர்வை உலகுக்குக் காட்டியுள்ளது. தனிமனித வெறுப்புகளுக்கு இடமில்லை என்பதையும், தேர்தல் தோல்வியால் துவண்டு போகவில்லை என்பதையும் இவ்வரி பளிச்சென்று சொல்கிறது.

அந்தச் சித்தாந்தம் என்ன? கடிதத்தின் இறுதிப் பகுதியில், அதுவும் தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளது. "இந்தியா எப்போதும் ஒரு குரலில் பேசியதில்லை" என்கிறார் ராகுல். அப்படிப் பேசவும் வேண்டியதில்லை என்பதே அவர் கருத்து. அந்தப் பன்மைத்துவத்தை ஒடுக்கி, ஒரே நாடு, ஒரே பண்பாடு என்று ஆக்க முயலும் பாஜகவின் சித்தாந்தமே தன் எதிரி என்பதை அவர் விளக்கியுள்ளார்.

சுருக்கமாகச் சொன்னால், பன்மைத்துவம் என்பது ஜனநாயகம். ஒரே குரல் என்பது சர்வாதிகாரம். தான் எந்தப் பக்கம் என்பதை ராகுல் சொல்லிவிட்டார். நாளை அதனை நாடு சொல்லும். கட்சித் தலைவர் பதவியை விட, நாட்டின் ஜனநாயகப் போரே பெரியது என்று முடிவெடுத்துள்ள ராகுலைப் பாராட்டியே தீரவேண்டும்.

அதே போல, விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசியதற்காக, ஓராண்டு சிறைத் தண்டனை பெற்றுள்ள, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, "குறைந்தபட்சத் தண்டனை வேண்டுமென்று எப்போது கேட்டேன்? ஆயுள் தண்டனை வேண்டுமானாலும் கொடுங்கள்" என்று நீதிமன்றத்திலேயே முழங்கியுள்ளார்.

இதனால் அவர், மாநிலங்களவைக்குச் செல்வது தடைப்படுமோ என்ற கவலை உள்ளது. அதற்கு வாய்ப்பில்லை, அவர் தேர்வு பெற்றுவிடுவார் என்று சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர். எனினும் பதவி குறித்துக் கவலைப்படாமலும், சிறைக்கஞ்சாமலும் வைகோ தன் உறுதியை வெளிப்படுத்தியுள்ளார்.

ராகுல், காங்கிரஸ் கட்சியின் தலைவராக நீடிக்க வேண்டும் என்பதும், வைகோவின் குரல் மாநிலங்களவையில் ஒலிக்க வேண்டும் என்பதும்தான் நம் விருப்பம்.

ஆனாலும் என்ன, பதவிகளை விட, நாட்டு நலனே முதன்மையானது என்று இருவரும் ஒரே குரலில் ஒலித்துள்ளனர். அவர்களின் உறுதியை நாடு உணர்ந்து போற்றட்டும்!

Pin It