கோயிலின் சுவரில் சாய்ந்து கொண்டு சில ஆண்டிகள், அவர்களுக்காக ஒரு மிகப்பெரிய மடம் கட்டுவதற்காக விடிய விடிய பேசிக்கொண்டு இருந்தார்கள். பொழுது விடிந்தது. ஆளுக்கொரு பிச்சைப்பாத்திரத்தைத் தூக்கிக் கொண்டு ஓடிவிட்டார்கள். பாவம் அவர்கள் வயிற்றுப் பிழைப்பு அது.

23-01-2026, மதுராந்தகத்தில் திமுக அரசை விரட்டிவிட்டு ஆட்சி அமைக்கப் போவதாக என்டிஏ கூட்டணி கூட்டம் நடைபெற்றது.

திமுக தயவால் ஒன்றிய அமைச்சரான அன்புமணி, தன்னால் 'துரோகி' என்று தூற்றப்பட்ட எடப்பாடியிடம் சரணடைந்த டி.டி.வி.தினகரன், உள்ளிட்ட அரசியல் மேதாவிகள் திமுகவை ஊழல் கட்சி-குடும்ப வாரிசு கட்சி, எனவே திமுகவை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று, எடப்பாடியைப் போலவே பேசித் தள்ளி விட்டார்கள், போங்கள்.

ஆனால் மக்கள் நலன், திமுக அரசு செய்யத் தவறிய திட்டங்கள், ஆட்சியைப் பிடித்து அவர்கள் என்ன செய்யப் போகிறார்கள், என்னென்ன திட்டங்கள் வைத்திருக்கிறார்கள் என்பதைப் பற்றி யாரும் ஒன்றும் பேசவில்லை, பார்த்தீர்களா!

மோடி மட்டும் ஓர் உண்மையை, அவர் அறியாமலேயே பேசிவிட்டார், பாவம். அதாவது 'தமிழ்நாடு கோயில், அறிவியல் இன்னபிற துறைகளில் எல்லாம் முன்னேறி, வளர்ந்து விட்டது. அது போல இந்தியாவும் தமிழ்நாட்டைப் பின்பற்றி இனி முன்னேறி விடும்' என்று மதுராந்தகக் கூட்டத்தில் பேசி தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினைப் பாராட்டிப் புகழ்ந்து தள்ளி விட்டார்.

அதேநேரம் தமிழ்நாட்டில் 'அதிமுக தலைமையில் ஆட்சி அமையும்' என்றார் எடப்பாடி. மோடியோ 'என்டிஏ கூட்டணி ஆட்சிதான் அமையும்' என்று எடப்பாடி மூஞ்சில் பவுடர் பூசிவிட்டார், பாருங்கள்.

பொத்தாம் பொதுவாக தமிழ்நாட்டிற்கு இத்தனை கோடி தந்தோம், அத்தனை கோடி தந்தோம் என்று தமிழ் மக்களின் காதில் 'பூ'சுற்றிய மோடி, கல்வி நிதி, பேரிடர் நிதி, எய்ம்ஸ் மருத்துவமனை, கோவை - மதுரை மெட்ரோ ரயில் போன்ற, மோடியால் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்ட எந்த ஒன்றைப் பற்றியும் பேசாமல் நழுவியோடி விட்டார், அவர்.

எப்படியோ, ஆண்டிகள் கூடுவார்கள், மடம் கட்டமாட்டார்கள். உதிக்கப் போகும் உதயசூரியனைத் தடுக்க இயலாதவர்கள் அவர்கள்!

- கருஞ்சட்டைத் தமிழர்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.