சேதுக் கால்வாய்த் திட்டம் என்பது தமிழர்களின் 150 ஆண்டு காலக் கனவு என்றார் பேரறிஞர் அண்ணா! அந்தக் கனவை நினைவாக்கும் விதத்தில் 2005 ஜூலை மாதம் தமிழ்நாட்டில் அதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. அப்போது இந்திய ஒன்றிய அரசின் கப்பல் துறை அமைச்சராக இருந்தார் டி ஆர் பாலு. அவருடைய முயற்சியில்தான் அந்தப் பணி அன்று தொடங்கியது. தமிழ்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த தலைவர் கலைஞர், இந்தியாவின் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் அந்தத் தொடக்க விழாவில் கலந்து கொண்டார்கள்!
மிக விரைவாக நடந்து கொண்டிருந்த அந்தத் திட்டத்தை நிறுத்த வேண்டும் என்று சுப்பிரமணியன் சாமி போன்றவர்கள் குரல் கொடுத்தார்கள். 17.5 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னால் ராமர் கட்டிய பாலம் அங்கே இருக்கிறது என்றும், அதனால் அங்கு சேதுக் கால்வாய்த் திட்டத்தை நிறைவேற்றக்கூடாது என்றும் அன்று முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். அதனை ஏற்றுக்கொண்டு 2007 ஆகஸ்ட் மாதம் உச்ச நீதிமன்றம் அந்தத் திட்டத்திற்கு தடை விதித்து விட்டது!ஏறத்தாழ முக்கால் பங்கு வேலை முடிந்த நிலையில் அத்திட்டம் நிறுத்தப்பட்டது. பிறகு பலமுறை முயன்றும் அதனைத் தொடர முடியவில்லை. 2014 ஆம் ஆண்டில் பாஜக அரசு ஏற்பட்ட பிறகு அது தொடர்பான வேலைகள் எதுவும் நடக்கவில்லை. 2020 இல் நாடாளுமன்றத்தில் திமுக அணியின் தலைவர் டி ஆர் பாலு இது குறித்துக் கேள்வி எழுப்பினார். ஆனால் 2021 இல் அந்தத் திட்டம் கைவிடப்பட்டதாக மோடி அரசு அறிவித்துவிட்டது.
தமிழ்நாட்டின் மூலமாக இந்தியாவிற்கு வரவிருந்த மிகப்பெரிய பொருளாதார நன்மை, வேலை வாய்ப்பு ஆகியன தடைப்பட்டு விட்டன!
இந்தியாவின் கிழக்கே உள்ள வங்கக் கடலில் இருந்து, மேற்கில் இருக்கும் அரபிக் கடலுக்குச் செல்வதற்கு ஒவ்வொரு முறையும் கப்பல்கள் 434 கடல் மைல்களைக் கடக்க வேண்டி இருக்கிறது. இலங்கையை முழுவதுமாகச் சுற்றி, மேற்கில் அரபிக் கடலுக்கு வர வேண்டிய நிலைதான் இன்றும் இருக்கிறது. ஆனால் சேதுக்கால்வாய்த் திட்டம் நிறைவேற்றப்படுமானால், 167 கிலோ மீட்டர் தொலைவில் நாம் மேற்குக் கரையை அடைந்து விட முடியும்!
பயண நேரம் மற்றும் பயணத் தூரம் ஆகியன பாதிக்கும் கீழாக குறையும். அதன் காரணமாக எரிபொருள் செலவு குறையும். எரிபொருள் செலவு குறையும் போது சரக்குகளின் விலையும் குறையும். அதனால் பொருளாதார நன்மைகள் ஏற்படும். ஏராளமான மக்களுக்குப் புதிய வேலை வாய்ப்புகளும் கிடைக்கும். இத்தனை நன்மைகளையும் இராமரின் பெயரால் சீரழித்து விட்டார்கள் என்பது வேதனையான உண்மை.
ஆனால் இன்றைக்கு என்ன நடந்திருக்கிறது? அன்று நாம் என்ன கூறினோமோ, அதை இன்றைக்கு இஸ்ரோ எடுத்துச் சொல்லி இருக்கிறது. ராமர் பாலம் என்று அங்கு எதுவும் இருப்பதற்கான ஆதாரம் இல்லை என்று இஸ்ரோ சொல்லி இருப்பதை, நாடாளுமன்றத்தில் ஒன்றிய அமைச்சர் ஜிதேந்திரசிங் கூறி உள்ளார்.
“17 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னால் மனிதர்கள் எங்கே இருந்தார்கள்? எதற்காகப் பாலம் தேவைப்பட்டது? ராமர் எந்தப் பொறியியல் கல்லூரியில் படித்தார்?” என்று தலைவர் கலைஞர் அன்று அடுக்கடுக்கான கேள்விகளை வைத்த போது, அதற்கு விடை சொல்ல முடியாதவர்கள் - குறிப்பாக வடநாட்டுச் சாமியார்கள் - கலைஞரின் தலையை சீவிக் கொண்டு வருவோம் என்று கூச்சலிட்டார்கள். இன்றைக்கு நாம் சொன்னது தான் உண்மை என்பதை அறிவியல் உலகம் வழிமொழிந்திருக்கிறது
இப்போதாவது சேதுக்கால்வாய்த் திட்டத்தை மீண்டும் நாம் தொடக்க வேண்டும். டி. ஆர். பாலு அவர்களின் “பாதை மாறா பயணம்” என்னும் நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றிய தமிழ்நாட்டின் மாண்புமிகு முதலமைச்சர் இந்தக் கருத்தை அழுத்தமாகச் சொல்லி இருக்கிறார்!
அவருடைய கருத்தை திமுக மட்டும் இல்லை, மக்கள் எதிர்காலத்தில் அக்கறை உள்ள ஒவ்வொருவரும் நாடாளுமன்றத்தில் எதிரொலிக்க வேண்டும்.
வெளிநாடுகளில் பனாமா கால்வாய், சூயஸ் கால்வாய் போன்றவைகள் உருவாக்கப்பட்ட பிறகு எவ்வளவு பெரிய பொருளியல் வளங்கள் கூடியிருக்கின்றன என்பதை நேராகப் பார்க்கும் வாய்ப்பை பெற்றிருக்கிறோம். அந்த நன்மைகள் எல்லாம் தமிழ்நாட்டிற்கும் வர வேண்டாமா? வளம் பெற வேண்டாமா? எனவே சேதுக்கால்வாய்த் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்துவதற்கான அழுத்தத்தை தமிழ்நாடு அரசும், தமிழ்நாடு மக்களும் ஒன்றிய அரசுக்குக் கொடுக்க வேண்டும்.
நம் முதல்வர் அதில் உறுதியாக இருக்கிறார் என்பது நமக்கான பெரும் மகிழ்ச்சி! ஆம் அறிஞர் அண்ணாவின் கூற்றுப்படி, தமிழ்நாட்டு மக்களின் 150 ஆண்டு காலக் கனவை நம் தலைமுறையிலாவது நிறைவேற்றியாக வேண்டும். தலைவர் தளபதியின் பின்னால் அனைவரும் அணிவகுப்போம்!
- சுப.வீரபாண்டியன்