2006 ஆம் ஆண்டின் இறுதியில், சென்னை, தியாகராய நகர் பள்ளி ஒன்றில் பலரும் கூடி நடத்திய கலந்துரையாடலின் இறுதியில், “திராவிட இயக்கத் தமிழர் பேரவை” என்னும் ஓர் அமைப்பினை ஏற்படுத்துவது என்று முடிவானது. தமிழ் இன, மொழி மேம்பாடு, சமூக நீதி, பகுத்தறிவு ஆகியனவற்றை அடிப்படை நோக்கங்களாகக் கொண்டு கொள்கையறிக்கையை உருவாக்குவது என்றும், ஜனவரியில் அந்த அமைப்பை முறைப்படி தொடங்குவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

subhavee anbazhagan sathyarajஅவைத்தலைவராக அய்யா கயல் தினகரனும், துணைத் தலைவராக சாவல்பூண்டி சுந்தரேசனும், பொதுச் செயலாளராக நானும் (சுப. வீரபாண்டியன்), பொருளாளராகத் திரைப்பட இயக்குனர் செல்வபாரதியும் தேர்ந்தெடுக்கப்பட்டோம். திமுகவில் உள்ளவர்களும் இவ்வமைப்பில் இணையலாம் என்னும் இரட்டை உறுப்பினர் முறை ஏற்றுக் கொள்ளப்பட்டது.

அத்தீர்மானத்தின் அடிப்படையில், திமுக தலைவர் கலைஞர் அவர்களின் வாழ்த்துகளோடு, 22.01.2007 அன்று, சென்னை, கலைவாணர் அரங்கில், இனமானப் பேராசிரியர் அவர்களால் பேரவை தொடக்கி வைக்கப்பட்டது.

15 ஆண்டுகளை நிறைவு செய்து, இன்று 16ஆவது ஆண்டில் பேரவை அடியெடுத்து வைக்கிறது.

பேரவைக்கென்று ஓர் இதழ் வேண்டும் என்ற முடிவில், 26.07.2007 அன்று “கருஞ்சட்டைத் தமிழர்” என்னும் மாத இதழ் தொடங்கப்பட்டது. முதல் இதழை, சென்னை, ராஜா அண்ணாமலை மன்றத்தில், அன்றைய உள்ளாட்சித் துறை அமைச்சர், இன்றைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டார். இப்போது அவ்விதழ் மின்னிதழாக வெளிவந்து கொண்டுள்ளது.

கடந்த 15 ஆண்டுகளாகத் தொடர்ந்து பேரவை செயல்பட்டு வருகின்றது. 2017ஆம் ஆண்டுக்குப் பிறகு, பேரவையின் வளர்ச்சி அடுத்தடுத்தக் கட்டங்களுக்கு நகர்ந்தது. குறிப்பாக, கருஞ்சட்டைப் பதிப்பகம், திராவிடப் பள்ளி, ஒடுக்கப்பட்ட சமூக மாணவர் கல்வி உதவித் திட்டம் ஆகியன சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன.

அண்மையில் கோவையில் நடைபெற்ற இணைப்பு மாநாட்டில், தமிழ்நாடு திராவிடர் கழகம் தன்னைப் பேரவையுடன் இணைத்துக் கொண்டது. தமிழ்நாட்டில் உள்ள மேலும் பல தமிழ், திராவிட அமைப்புகள் பேரவையுடன் இணைவது குறித்துப் பேசி வருகின்றன.

திராவிடக் கருத்தியலைத் தமிழ்நாடு முழுவதும் பரப்புவதில் நம் பேரவை தன்னாலியன்ற அனைத்துப் பணிகளையும் செய்து வருகின்றது.

இயன்றதைச் செய்வோம், இடைவிடாது செய்வோம் என்ற நோக்கில், தொடர்ந்து பயணிக்கும் நம் பேரவை, மென்மேலும் வளரும், திராவிடத்தின் கொடி உயரும்!

- சுப.வீரபாண்டியன்

Pin It