கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டம் (அமெரிக்கா) அமைப்பு, அமெரிக்க மண்ணில் ஆதிக்கத்திற்கு எதிராகப் பேசுவதற்கும் குரல் கொடுப்பதற்கும் ஓர் அமைப்பு வேண்டுமென்ற நோக்கத்தில் தொடங்கப்பட்டதாகும்.

 அமெரிக்கத் தமிழ் விழா நிகழ்ச்சி ஒன்றில், எழுத்தாளர் பெருமாள்முருகனை அழைக்கக் கூடாது என்று, குறிப்பிட்ட சாதியினர் போர்க்கொடி தூக்க, அதற்கு அடிபணிந்து அவர் அழைக்கப்படவில்லை. இந்த நிகழ்வு பல ஒத்த கருத்துடையோர் இடையில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. 

சலசலப்பை நீர்த்துப் போகச் செய்யாமல் பெரும் ஒலியாக எழுப்ப வேண்டிய தேவை ஏற்பட்டது. அந்த ஒலி சாதிய மனப்பான்மையைக் கடல் தாண்டிக் கொண்டு வந்திருக்கும் சிலருக்கு அறிவொளியை ஏற்படுத்துவதாக இருக்க வேண்டும் என்ற காரணத்திற்காக 2017, ஏப்ரல் 14 அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளில் தொடங்கப்பட்டதுதான் பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டம் .      தொடங்கிய நாளில் இருந்து பல்வழி அழைப்பின் மூலம் மாதம் ஒரு முறை தமிழ்நாட்டில் இருந்து திராவிடர் இயக்கக் கருத்துரையாளர்கள், தலித் இயக்கக் கருத்துரையாளர்கள், பெண்ணியக் கருத்துரையாளர்களைக் கொண்டு கருத்துகள் பரிமாறப்பட்டு, கேள்வி பதில்களோடு உரையாடி இங்கிருக்கும் தோழர்களுக்குச் சமூக நீதிக் கருத்துக்களைக் கொண்டு செல்வதில் ஓர் அடித்தளமிட்டிருக்கிறது இந்தப் படிப்பு வட்டம்.

திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, முதல் பல்வழி அழைப்பைத் தொடங்கி வைத்துக் கருத்துரையாற்றினார். தொடர்ந்து தோழர் ஓவியா, திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர். கி. வீரமணி, திராவிட இயக்கத் தமிழர் பேரவைப் பொதுச் செயலாளர் சுப. வீரபாண்டியன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் , எழுத்தாளர் ராஜாத்தி சல்மா, ஆதித்தமிழர் பேரவையின் தோழர் அதியமான், மனநல மருத்துவர் ஷாலினி, வழக்கறிஞர் அருள்மொழி, மருத்துவர் எழிலன், நாகநாதன் எனப் பலர் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டிருக்கின்றனர்; அறிவூட்டியிருக்கின்றனர் .

தமிழ்நாட்டில் இருந்து கருத்துரையாளர்களை அழைப்பதோடு, வடஅமெரிக்கத் தோழர்களும் பேசுவதற்கு ஒரு தளத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற காரணத்திற்காகப் ‘புத்தகம் பேசலாம்’ என்ற ஒரு நிகழ்ச்சியை, பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டம் மாதம் ஒரு முறை நடத்தி வருகின்றது. இந்த நிகழ்வில், தாங்கள் படித்த நூல்களைப் பற்றித் தோழர்கள் தங்கள் கருத்துகளைப் படிப்பு வட்டத் தோழர்களோடு பகிர்ந்து கொள்கின்றனர்.

 அதே போல கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஜனவரியில் ‘The Common Sense’ என்ற மின்னிதழைத் தொடங்கி, தொடர்ந்து நடத்தி வருகிறது படிப்பு வட்டம். அறிவார்ந்த பகுத்தறிவுக் கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள் எனப் பல்வேறு தளங்களில் வடஅமெரிக்கத் தோழர்கள் மின்னிதழில் எழுதி வருகின்றனர்.

இவற்றிற்கெல்லாம் முத்தாய்ப்பாக, 2019 நவம்பர் மாதம் பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டத்தின் சார்பாக, ‘The Common Sense ரேடியோ’ தொடங்கப்பட்டது. தொடர்ந்து தலைவர்களின் சொற்பொழிவுகள், திரையிசைப் பாடல்களோடு தமிழ்நாட்டின் திராவிடர் இயக்க வரலாறு, கவிதைத் துளிகளோடு திரையிசை, நேயர் விருப்பப் பாடல்களோடு தந்தை பெரியார் பற்றிய கேள்விகளுக்கு பதில்கள் என, பல சேவைகளைத் தொடர்ந்து வழங்கி வருகிறது.

இவை தவிர்த்து, அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள், தந்தை பெரியாரின் பிறந்த நாள் ஆகியவை, படிப்பு வட்டத் தோழர்கள் பெருமளவில் இருக்கும் சில மாநிலங்களான நியூ ஜெர்சி, பாஸ்டன், மிச்சிகன், கனெக்டிகட் போன்ற இடங்களில் மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி, ஓவியப் போட்டியோடு கொண்டாடப்படுகின்றன. அடுத்த தலைமுறையினருக்கும் தந்தை பெரியாரை அறிமுகப்படுத்தும் ஒரு வாய்ப்பாகவே இந்த விழாக்களைக் கொண்டாடுகின்றது படிப்பு வட்டம். 2019 ஆம் ஆண்டு தந்தை பெரியாரின் பிறந்த நாளை பாஸ்டனில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி தலைமையில் வெகு சிறப்பாகப் பட்டிமன்றத்தோடு கொண்டாடி மகிழ்ந்தது படிப்பு வட்டம் என்பது குறிப்பிடத்தக்கது. 

பெரியார் பன்னாட்டு அமைப்பின் சார்பாக நடந்த மனிதநேய மாநாட்டில் படிப்பு வட்டத் தோழர்கள் கலந்து கொண்டு குழு விவாதம் நடத்தி, சாதியை அமெரிக்கச் சட்டத்தில் தண்டனைக்குரிய குற்றமாகச் சேர்க்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

படிப்பு வட்டத்தின் சார்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் ஆளூர் ஷாநவாஸுக்கு "செயல் விருது" வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது. அதே போல தந்தை பெரியாரின் 141 ஆவது பிறந்த நாளில் பாஸ்டன் நகரில் திராவிடர் கழகத்தின் தலைவர் ஆசிரியர் கி. வீரமணிக்கு "Stalwart Of Dravidian Ideology" என்ற விருதையும், ஆசிரியரின் இணையர், பல சோதனையான களங்களில் ஆசிரியருக்கு உறுதுணையாக இருக்கின்ற மோகனா அவர்களுக்கு "சுயமரியாதை இயக்க வீராங்கனை" என்ற விருதையும் வழங்கிப் படிப்பு வட்டம் பெருமை அடைந்தது.

அமெரிக்கப் பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டம் பகுத்தறிவுப் பாதையில் தொடர்ந்து பயணிக்கும்!