அண்மையில் நோபல் பரிசு பெற்ற அறிஞர்கள் ஒன்பது பேர் அணுமின் நிலையங்களுக்கு எதிராகக் குரல் எழுப்பியிருக்கின்றனர். அவர்கள் மட்டுமல்ல, உலகெங்கும் அணு மின் நிலையங்களுக்கு எதிர்ப்பு வலுப் பெற்று வருகிறது. மராட்டியத்தில் இரத்தினகிரி எனும் பகுதியில் அமைக்கத் திட்டமிடப்பட்டிருக்கும் அணுமின் நிலையத்தை எதிர்த்து மராட்டியர்கள் போர்க்குரல் எழுப்புகின்றனர்.

காவல் துறையை ஏவி விட்டு மக்கள் எழுச்சியை அடக்குகிறது அரசாங்கம். ஆனால் தமிழகம் அசை வில்லாமல் இருக்கிறது. கூடங்குளத்தில் அமைத்துக் கொண்டிருக்கிற அணுமின் நிலையத்தை முதலில் கேரளாவில்தான் நிறுவத் திட்டமிட்டிருந்தது இந்திய அரசு. ஆனால் கேரளாவில் மார்க்சியப் பொதுவுடைமைக் கட்சி பேராயக் (காங்கிரசு) கட்சி உள்ளிட்டு அனைவரும் போராடி எதிர்த்தனர். எனவே அதை அங்கு நிறுவாமல், தமிழகத்தின் கூடங்குளத்தில் நிறுவ முடிவெடுத்தது இந்திய அரசு.

கேரளாவில் எதிர்த்த மார்க்சியப் பொதுவுடைமைக் கட்சியும், பேராயக் (காங்கிரசு) கட்சியும் தமிழ்நாட்டில் வாய்மூடிகளாகி விட்டன. ஊமைத் தனமாய்க் கிடக்கிறது தமிழகம். ஏன் இந்த நிலை? அணுமின் நிலையத்தால் ஏற்படும் அழிவுகள் குறித்து விளக்கமாகத் தெரிந்து கொண்டாவது எதிர்க்க முனைவோம்.

மின்சாரம் இன்றைய மனித வாழ்வில் ஓர் அங்கம். புனல் மின்சாரம், அனல் மின்சாரம், காற்றாலை மின்சாரம் என்று பல நிலைகளில் மின்சாரம் உருவாக்கப்பட்டு வந்தபின் அணு ஆற்றலின் மூலமும் மின்சாரத்தை உருவாக்கும் முயற்சிகளைக் கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் அறிவியலாளர்கள் கண்டறிந்தனர்.

1932 ஆம் ஆண்டு ஜேம்சு சாட்விக் என்பவர் நியூட்ரானைக் கண்டு பிடித்ததைத் தொடர்ந்து இந்த முயற்சி வேகம் எடுத்தது. அணுக்களைப் பிளந்தோ, அவற்றை இணைப்பதின் மூலமோ உண்டாகும் அணு ஆற்றலைக் கண்டுபிடித்தனர். அவ்வாறு அணு ஆற்றøப் பயன்படுத்தி மின்சாரம் உருவாக்கப் படுகிறது. அணு ஆற்றலைப் பயன்படுத்தி முதல் முதலாக 1951 ஆம் ஆண்டு திசம்பர் 20 ஆம் நாள் அமெரிக்காவில் ஐதகாவில் ஆர்கோ என்ற இடத்தின் அருகே மின்சாரம் அணு ஆற்றல் மூலம் தொடங்கப்பட்டது.

அணு ஆற்றல், மின்சார உருவாக்கத்திற்கு மட்டும் இன்றி அணு ஆயுதங்கள் உருவாக்கவும் பயன்படுத்து கிறார்கள். மேலும் போர்க் கப்பல்கள் விண்வெளி ஓடங்கள் ஆகியவையும் அணு ஆற்றல் மூலம் இயக்கப்படுகின்றன. அணு உலைகளைப் பொறுத்த மட்டில் பெரும் சிக்கலே அவற்றின் பாதுகாப்புதான்.

மின்சாரம் உருவாக்கத்திற்காகப் பல்வேறு நாடுகள் அணு உலைகளை அமைத்து உள்ளன. இந்தியாவிலும் அணு உலைகள் நிறுவப்பட்டு உள்ளன.

அணுமின்சாரம் உருவாக்கம்:

அணுக்கரு பிளவுக்கு முகாமையாகப் பயன்படுத்தப் படும் யுரோனியம் அல்லது புளுட்டோனியம் நிலத்திற்குள் கிடைக்கும். "இந்தக் கனிமங்கள்தாம் அணு ஆற்றலை உருவாக்கத் தேவையான முகாமையான மூலப் பொருட்களாகும். எனவே ஒவ்வோர் அணுமின் உலையிலும் அணுக்கரு பிறப்புக்குத் தேவையான யுரோனியம் அல்லது புளுட்டோனியம் கம்பிகள். எதிர் எதிரே இருக்கும் இந்தக் கம்பிகளைக் "கோர்' என்று சொல்வார்கள். அணு உலையில் நடுப் பகுதியில் அணுக்கலனில் உள்ள தண்ணீரில் இந்தக் கோல் வைக்கப்பட்டு இருக்கும். உலோகத்தனமான இந்த அணுக்கலன் மிகவும் பாதுகாப்பானது. அணுக்கரு பிறப்பைக் கட்டுக்குள் வைப்பதற்குப் "போரான்' அல்லது காட்மியம் வைக்கப்பட்டு இருக்கும். இவைக் கட்டுப்பாட்டு கம்பிகள் எனப்படும்.

அணுக்கருவைப் பிளக்கும் போது மிக அதிக அளவில் வெப்பம் ஏற்படும். அந்த வெப்பம் கலனுக்குள் இருந்து வெளியேறாத வகையில் அணுக்கலனின் சுவர் மிகவும் தடிமானதாக இருக்கும்.

மேலும் அணுக்கதிரைப் பிளக்கும் போது ஏற்படும் கடும் வெப்பத்தினால் கொள்கலனில் உள்ள நீர் கொதித்து பெருமளவில் நீராவி உருவாகும் அழுத்தம் மிகுந்த அந்த நீராவிக் குழாய் மூலம் கொண்டு செல்லப் பட்டு மிகப் பெரிய உந்தம் இயக்கப்படும். அது இயங்குவதன் மூலம் மின்னாக்கி (ஜெனரேட்டர்) வழி மின்சாரம் உருவாக்கப்படுகிறது.

அந்த வகையில் பார்க்கும்போது அணுமின்சாரம் உருவாக்க அடிப்படையாக அணு உலையில் ஏற்படும் வெப்பத்தைத் தணிக்க தண்ணீர் பயன்படுகிறது. அணுக்கலனின் வெப்பம் குறிப்பிட்ட அணுவைத் தாண்டாமல் பார்த்துக் கொள்வது மிகவும் முகாமை யானது. இதனால் தண்ணீர் மூலம் அணுக்கலன் எப்போதும் குளிர்விக்கப்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும் இதற்கு அதிகதண்ணீர் தேவைப் படும். கடற்கரையோரம் அணுமின் நிலையம் அமைப்பதற்கு இதுவும் ஒரு காரணம் ஆகும்.

ஏதாவது ஒரு கோளாறு ஏற்பட்டு, தண்ணீர் வரவு பாதிக்கப்பட்டால் அணுக்கலன் அதிக வெப்பம் அடைந்து வெடித்து விடும்.

உலகில் அணு உலைகள்:

உலகில் தற்போது 443 அணு உலைகள் உள்ளன. 31 நாடுகளில் அணு ஆற்றல் உருவாக்கப்படுகிறது. மேலும் புதிதாக 482 அணு உலைகளை உருவாக்கத் திட்டமிட்டுக் கொண்டுள்ளனர்.

ஆணு ஆற்றல் உருவாக்கத்தில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. பிரான்சு இரண்டாவது இடத் திலும், ஜப்பான் மூன்றாம் இடத்திலும் ரசியா நான்காவது இடத்திலும், ஜெர்மனி ஐந்தாவது இடத்திலும் உள்ளன. அடுத்தப்படியாக இந்தியா விலும் மற்ற நாடுகளிலும் உள்ளன.

இந்தியாவில் மகராட்டிரம், ராஜஸ்தான், கருநாடகம், உத்திரபிரதேசம், குஜராத், தமிழ்நாடு, ஆகிய தேசங்களில் அணுமின் நிலையங்கள் அமைக் கப்பட்டுள்ளன. இவற்றில் மிக அஞ்சத்தகுந்ததும், பாதுகாப்பு இல்லாததுமான அணு உலைகள் நிறுவப்பட்டுள்ளன.

நெல்லை மாவட்டத்தில் கூடங்குளத்தில், ரசியாவின் உதவியுடன் அணுமின் நிலையம் அமைக்க ப்பட்டுள்ளது. முதல் பிரிவில் 1000 மெகாவாட் மின்சாரம் உருவாக்கப்படும். இரண்டாவது பிரிவில் வருகிற திசம்பர் மாதம் உருவாக்கம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது மராட்டி யத்தில் உள்ள ஜெய் தாபூரில் அணு மின் நிலையம் அமைக்க முயற்சி நடக்கிறது. இந்த ஜெய்தாபூர் அணுமின் திட்டம் என்பது உலகிலேயே மிகப் பெரிய 9,900 மெகாவாட் திறன் கொண்ட அணுமின் திட்டமாகும். அணு ஆற்றல் கட்டுப்பாட்டு அறிக்கை சட்டமாக்கப்பட்ட பின்னர் உருவாக்கப் போகும் பேரழிவுத் திட்டம்தான் இத்திட்டம். ஜெய்தாபூர் துறைமுகத்தை ஒட்டியுள்ள மதுபான் கிராமத்தில் இது அமைய உள்ளது.

இந்த அணுமின் நிலையத்தில் பிரான்சு நாட்டின் அரிவா எனும் நிறுவனத்தின் ஆறு அணு உலைகள் நிறுவப்பட உள்ளன. முதற் கட்டமாக 1650 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு அணு உலைகள் 2012லிருந்து 2014க்குள் நிறுவப் போகிறார்களாம். இதற்கு மட்டும் ஏறத் தாழ உருவா 25000 முதல் 35000 கோடிகள் வரை செலவாகும் என்று மதிப்பிடப் பட்டிருக்கிறார்கள். தற்போது இந்தியாவில் 19 அணு உலைகள் உள்ளன.

அணு உலைகள் நேர்ச்சிகள்:

இதுவரை உலகில் 3 பெரிய அணு உலை நேர்ச்சிகள் நடந்துள்ளன. 1969 இல் சுவிட்சர்லாந்தில் லுசன்சு அணுஉலை வெடித்தது. இதனால் அந்த நாடு மிகப் பெரும் அழிவுகளை எதிர் கொள்ள வேண்டியிருந்தது.

1979 ஆம் ஆண்டு அமெரிக்காவின் மூன்று மைல் தீவில் அணு உலை வெடித்தது. இதனால் அமெரிக்கா மக்கள் அரசை எதிர்த்துக் கடுமையாகப் போராடினர். மக்களும் பெருமளவில் பாதிக்கப்பட்டனர்.

1986ல் ரசியாவில் உக்ரைன் பகுதியில் உள்ள செர்னோபில் அணு உலை வெடித்தது. இதில் ரசியாவின் மக்கள் மட்டுமின்றி அண்டை நாடுகளும் பாதிப்புக்குள்ளாயின. காரணம் காற்றில் கதிரியக்கம் பரவி பல்லாயிரக்கணக்கான மக்கள் பலியானார்கள். பல இலக்கம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அள்ளிக் கொண்டு போகப்பட்டனர். செர்னோபிலைச் சுற்றி ஐம்பது மைல் வட்டத்திற்குள் உள்ள பகுதிகள் சுடுகாடாக மாறிப் போயின.

இன்னும் பல்லாயிரம் மக்களுக்குக் குருதிப் புற்று நோய் வந்து கொண்டிருக்கிறது. இனியும் வரும் என்று பல ஆய்வுகள் அறிக்கை அளித்துள்ளன. ஏறத்தாழ 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு அதன் பாதிப்பு இருக்குமாம்.

இந்த நேர்ச்சிக்குப் பிறகு ரசியாவில் அணு உலைகள் நிறுவுவதை அந்த அரசே நிறுத்தியுள்ளது. ஆனால் அதே ரசியாவுடன் தமிழகத்தில் கூடங்குளத்தில் அணு உலைகளை அமைக்கிறது ரசிய அரசு. இதற்கு 20,000 கோடி உருவா கடனாகவும், அதற்கு 17,000 கோடி வட்டியாகவும் ஆக மொத்தம் 37000 கோடி ரசியாவிற்கு செலுத்தியாக வேண்டுமாம். அதுவும் அவை பணத்திற்கு மாற்றுப் பொருளாக சர்க்கரை, கோதுமை, பழங்கள், பூக்கள் இவற்றைத்தான் கொண்டு செல்கின்றனர்.

அமெரிக்காவிற்கு அருகில் அமெரிக்காவிற்குச் சொந்தமானதீவில் அணு உலைகளை உருவாக்கியது. அந்த உலையிலும் நேர்ச்சி ஏற்பட்டது. கதிரியக்கத் தைத் தடுக்க முடியவில்லை. 7 ஆண்டுகளாக 102 கோடி டாலர்கள் செலவு செய்தது. ஆனாலும் கெட்டிப்படுத் தப்பட்ட கான்கிரீட் கலவையை மீறி கதிரியக்கம் பரவுகிறதுஎன்ற உண்மை இப்போது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.

நியூயார்க் நகருக்கு சற்று தொலைவில் லாங்ஜ லாண்டு தீவில் அணுமின் உலையை அமெரிக்கா அமைத்தது. கட்டிடப் பணிகள் முடிவடையும் நிலையில் அந்த உலையின் ரதம் (அபாயம்) நியூயார்க் நகர மக்களுக்குத் தெரிந்தது. நியூயார்க் நகரமே நெருப்புக் கோளமாக எழுந்தது. மக்கள் கடும் போராட்டங்கள் நடத்தினர். இப்போது அந்த அணு உலையை அப்படியே கிடப்பில் போட்டது அமெரிக்கா.

அமெரிக்காவின் மேற்கு எல்லைப் பகுதி பாலைவனப் பகுதியாகும். திவாடா என்ற அந்தப் பகுதியில் அணுக் கழிவுகளை அங்கே ஆழக் குழி தோண்டிப் புதைக்க அமெரிக்க அரசு முயன்றது. பாலைவனப் பகுதி மக்கள் எழுச்சியால் போராட்டங் களைத் தொடங்கினர். அதன்பின் தங்கள் மண்ணில் அணு உலை அமைப்பது அமெரிக்காவிற்குப் பெரும் தலைவலியாகி விட்டது. அணுக் கழிவுகள் கக்கும் கதிர் இயக்கம் பத்தாயிரம் ஆண்டுகள் வரை இருக்கும் என்று அணுவியல் அறிஞர்கள் அச்சம் தெரிவிக் கின்றனர்.

இவ்வாறு பாதிப்பிற்கு உள்ளான நாடுகள் அனைத்தும் இந்தியாவிற்கு உதவி செய்வதாகக் கூறி இங்கு வளரும் தலைமுறைக்குத் தீ வைத்து எரிக்கத் திட்டமிடுகின்றன. இதை நன்கு உணர்ந்த இந்திய அரசு அதன் ஆட்சியாளர்களின் கொள்ளைக்காக மக்களைப் பற்றிக் கவலை கொள்ளாமல் அவர்கள் வாழும் பகுதியிலேயே அணு உலையை நிறுவுகின்றது.

அணு உலை அமைத்து மின்சாரம் உருவாக்கம் செய்யும் திட்டங்களுக்குப் பல நாடுகள் விடை கொடுத்து வருகின்றன. அணு உலைகளே வேண்டாம் என்று அமெரிக்காவே பெருமூச்சு விடுகிறது. ஆனால் அணு உலை என்னும் கொள்ளிக் கட்டையை இந்தியா வின் தலையில் செருகிட திட்டமிடுகிறது அமெரிக்கா.

ரசியா, பிரான்சு போன்ற நாடுகளிடமிருந்து எந்த வகைக் கட்டாயங்களும் இல்லாமல் ஒப்பிட்டளவில் குறைந்த விலையில் அணு ஆற்றலுக்கான மூலப் பொருட்களைப் பெறுவதற்கான வாய்ப்புகள் இருக் கின்ற போதும், பல வகைக் கட்டாயங்களோடு கூடுத லான விலையும் கொடுத்து அவற்றை அமெரிக்காவிட மிருந்து வாங்குவதற்குப் பேரம் பேசி முடித்துள்ளது இந்திய அரசு. தீவிர எதிர்ப்பிலிருந்தும் ஆட்சிக்கே அச்சுறுத்துலாக இருந்தும் அமெரிக்காவுடனான அணு ஆற்றல் ஒப்பந்தத்தை நிறைவேற்றியே தீருவது என்ற பிடிவாதத்தோடு உள்ளது இந்திய அரசு. இந்நிலையில் நாளைய சூழல்களில் ஏதும் நேர்ச்சிகள் நடந்தால் அமெரிக்கக் குழுமங்களிடமிருந்து அணு உலைகளை வாங்கி இயக்கும் இந்திய அரசும் தனியார் தரகு முதலாளிகளும் அணு உலை நேர்ச்சிகளுக்குப் பொறுப்பேற்க வேண்டும். அவர்களும் கூட நேர்ச்சியில் ஏற்படும் பாதிப்பு என்னவாக இருந்தாலும் அதிகமாகப் போனால், மொத்தம் 500 கோடி உருவாய்க்குத் தான் இழப்பீடு தர முடியும் என்றும் பொருள் பாதிப்பு இருந்தால் மேலும் 1500 கோடி உருவா இந்திய அரசு தான் நட்ட ஈடு கொடுக்கும் என்றும் முடிவு ஏற்படுத்திக் கொண்டனர்.

அனைத்துலக அணு ஆற்றல் ஆணையத்துடன் ஒப்பந்தமிடுவதால் மேலும் 300 கோடி ஆக 2300 கோடி உருவாதான் கோர முடியும். இச்சட்டத்தின் முகாமையான கூறு என்னவெனில் வாங்கப்படும் அணு உலைகளின் தரம் பாதுகாப்பு (உத்திரவாதம்) ஆகியவற்றுக்கு அதை வடிவமைப்ப வர்களும் விற்பவர்களும் பொறுப்பேற்க மாட்டார் களாம். அதனால் பாதிக்கப்படுபவர்கள் நேரடியாக அமெரிக்க நீதிமன்றங்களுக்குப் போக முடியாது. இங்குள்ள அதன் இயக்குநர்கள் அமெரிக்கக் குழுமங்களுடன் பேரம் பேசி பெற்றுத்தரும் நட்ட ஈட்டைப் பெற்றுக் கொண்டு வாய் மூடிக் கொள்ள வேண்டுமாம். அணு உலை நேர்ச்சிகள் 71% விழுக்காடு அமெரிக்கா வில்தான் நடந்து உள்ளன.

ஜப்பானில் கடந்த மாதம் ஏற்பட்ட நிலநடுக் கத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட ஆழிப் பேரலைகளால் கடற்கரை நகரமன புருசிமாவில் உள்ள அணுமின் நிலையம் பெருத்த சேதம் அடைந்தது. வெப்பம் அதிகரித்ததன் காரணமாக அங்குள்ள அணு உலைகள் வெடித்ததில் கதிர்வீச்சு ஏற்பட்டு விட்டது.

இந்த நேர்ச்சி இதுவரை நடந்த நேர்ச்சிகளில் பெரிய நேர்ச்சியாகும். 25000 குடும்பத்தினர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இதனால் ஜப்பான் நாடே அச்சத்தால் உறைந்து போய் உள்ளது. ஆனால் ஒரு குடும்பத் திற்கு 50 இலக்கம் உருவா இழப்பீட்டுத் தொகையைக் கொடுத் தது ஜப்பான் அரசு.

அணுமின் நிலையங்களில் உள்ள அணு உலைகள் அனைத்துமே மிகவும் பாதுகாப்பாகத்தான் உருவாக்கப்பட்டு இருந்தன என்றே வைத்துக் கொண்டாலும், நில அதிர்ச்சி தாக்குதல் ஆழிப் பேரலைத் தாக்குதல் என எதிர்பாராமல் ஏற்படும் போது அணு உலைகள் வெடித்து அதில் இருந்து கதிர் வீச்சு ஏற்படும் அச்சம் உள்ளது. இந்தக் கதிர் வீச்சு ஒரு குறிப்பிட்ட அளவைத் தாண்டும் போது அதன் பாதிப்பால் அந்தப்பகுதியில் ஏராளமான உயிர்ச் சேதம் ஏற்படும். மேலும் அந்தப் பகுதியில் நீர், நிலம், காற்று ஆகியவையும் தங்கள் இயற்கைத் தன்மையைஇழந்து கதிர் வீச்சினால் நச்சுத் தன்மை ஆகி நீண்ட காலப் பாதிப்பை ஏற் படுத்தி விடும். இதனால் தான் ஒரு குறிப்பிட்ட இடத்தில் அணு மின் நிலையம் அமைக்கும் போது அந்தப் பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்.

அணுக்கதிர் வீச்சினால் ஏற்படும் பாதிப்பு:

அணுமின்சாரம் உருவாக்கத்தில் உள்ள மிகப் பெரிய சிக்கலே அணுக்கதிர் வீச்சுதான். இந்தக் கதிர்வீச்சு உடலைத் தாக்கும்போது அதன் அளவுக்கு ஏற்ப நோய்களை உண்டாக்குவதோடு மரணத்தையும் விளைவிக்கும். அணு உலைகளில் நேர்ச்சி ஏற்படும்போது அங்கி ருந்து அணுக்கதிர் வீச்சு ஏற்படும் அச்சம் உள்ளது.

அணு உலையில் இருந்து கதிர் வீச்சு கசியும் போது அது காற்றின் மூலமாகவும், அணு உலையை குளிர்விக்கப் பயன்படுத்தப்படும் நீரின் மூலமாகவும் பரவும். மேலும் மண்ணிலும் இறங்கும். காற்றில் கலக்கும் கதிர் வீச்சு காற்றின் வேகத்தைப் பொறுத்தது அது வீசும் திசையிலேயே பரவும். வானில் நீராவி யாகப் பரவும் கதிர் வீச்சு மழை பெய்யும் போது நீர்த் துளியாகவும் நம் மீது விழும். நீர் மூலம் மண்ணுக்குள் இறங்கும் கதிர் வீச்சினால் செடி, கொடிகள், பாதிக்கப் படும். கடலில் கலப்பதால் கடல் வாழ் உயிரிகள் அனைத்தின் வழியாகவும் பரவும்.

அணுக்கதிர் வீச்சின் அளவின் தாக்கத்தைப் பொறுத்து உடலில் அதன் தாக்கங்கள் தெரியும். காற்றில் அணுக்கதிர் வீச்சின் தாக்கத்தால் குமட்டல் வாந்தி, தலைவலி, காய்ச்சல் போன்ற அறிகுறிகள் ஏற்படும். இரண்டு மூன்று கிழமைகள் போனால் வயிற்றுப் போக்கு உண்டாகி கைகால் உளைச்சல் ஏற்படும். தலைமுடி உதிர ஆரம்பிக்கும். உடலின் உள்ளுறுப்புகள் ஒவ்வொன்றாக செயல் இழக்கும். நீண்டகால நோய்களாகப் புற்று நோயை உருவாக்கும் கதிர் வீச்சின் தாக்கத்துக்கு ஏற்ப நரம்பு மண்டலமும் கருதி ஓட்டமும் பாதிக்கப்படும். கதிர்வீச்சின் அளவு அச்சக் கட்டத்தை தாண்டும் போது மரணம் ஏற்படும். அணுக்கதிர் வீச்சு குழந்தைகளைத் தாம் மிக அதிக அளவில் பாதிக்கும். ரசியாவில் செர்னோபில் அணு உலை நேர்ச்சி ஏற்பட்ட பிறகு அந்தப் பகுதியில் வாழ்ந்த குழந்தைகள்தாம் தைராய்டு, புற்று நோயால் அதிக அளவில் தாக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத் தக்கது.

கதிரியக்கத்தின் தாக்கம் அந்த சமயத்துடன் மட்டும் முடிந்து விடுவது இல்லை. பல ஆண்டு களாகத் தொடரும் கதிரியக்கத் தின் தாக்கத்துக்கு உள் ளானவர்கள் நடை பிண மாவார்கள். கதிர் வீச் சின் பாதிப்புக்கு உள்ளா னவர்களுக்குப் பிறக் கும் குழந்தைகள் ஊனத் துடன் பிறக்கும் அச்சம் உள்ளது. இந்தத் தாக்கம் தலைமுறை தலை முறையாகத் தொடரும் என்பதுதான் மிகப் பெரிய அவலம்.

கதிர்வீச்சின் விளைவு:

கதிர் வீச்சு "மில்லி சீவர்ட்' என்ற கணக்கில் அளக்கப்படுகிறது. ஒரு சீவர்ட் என்பது 1000 மில்லி சீவர்ட் (எம்.எஸ்.வி.) ஆகும்.

தொலைக்காட்சி பார்ப்பது, எக்ஸ்ரே எடுத்துக் கொள்வது போன்றவை மூலம் கதிர் வீச்சுகள் நம்மைத் தாக்குகின்றன. சான்றாக "சிடி ஸ்கேன்' எடுக்கும்போது 15 முதல் 30 எம்.எஸ்.வி. என்ற அளவில் கதிர் வீச்சின் தாக்கம் இருக்குமாம். ஆனால் இதனால் பெரிய ஆபத்து இல்லை. ஒரு சீவர்ட் (1000 எம்.எஸ்.வி) கதிர் வீச்சு தாக்கம் என்றால் வாந்தி மயக்கம் ஏற்படும். ஆனால் உயிருக்கு ஆபத்துஇல்லை. 5 சீவர்ட் கதிர்வீச்சு தாக்கம் என்றால் ஒரு மாதத்தில் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம்.

பொதுவாகக் கதிர் வீச்சு தாக்கம் அளவு அதிகரிக்கும் போது புற்று நோய் ஏற்பட வாய்ப்பு உருவாகிறது. உலகம்முழுவதும் இப்படிக் கதிர்வீச்சு தாக்கத்தால் புற்று நோய் ஏற்பட்டுஇருப்பவர்கள்தான் அதிகம்.

அணுமின் திட்டத்தின் மூலம் பெறப்படும் மின்சாரத்தின் செலவு, அதன் அடக்கச் செலவை விட 2 முதல் 3 மடங்கு அதிகமாகும் என அணுக்கருவி களுக்கான தடை மற்றும் அமைதிக் கூட்டமைப்பு விரிவாக பட்டியலிட்டுள்ளது. பிரான்சு நாட்டின் ஆறுகளை அணுக் கழிவுகளால் நாசப்படுத்துவதாக அந்த நாட்டிலேயே அரிவா நிறுவனத்தின் மீது வழக்குநடந்து வருகிறது.

பின்லாந்து, பிரிட்டன், பிரான்சு நாடுகளைச் சேர்ந்த ஐரோப்பிய ஆற்றல் முறைப்படுத்தல் ஆணைய அதிகாரிகள் அரிவா நிறுவனத்தின் அணு உலைகளை ஏற்கவில்லை. இந்த அரிவா நிறுவனம்தான் இப்போது ஆறு அணு உலைகளை இந்தியாவில் நிறுவப் போகிறது. இதனால் அப்பாவி மக்கள்தாம் பாதிப்பு அடைவார்கள். அமைக்கப்படும் அணு உலைக்கு எதிராக அதை சுற்றியுள்ள மக்கள் போராட்டங்கள் நடத்தியும் அவர்களை ஒடுக்கி அணு உலைகளை நிறுவ செய்கின்றது இந்த அரசாங்கம்.

மரபு சார்ந்த மின்சாரம்:

தற்போது இந்தியாவில் மின்சார உற்பத்தியில் 71% விழுக்காடு அனல் மின்சாரம், 26 விழுக்காடு புனல் மின்சாரம் என மரபு சார்ந்த நிலையில் மின்சாரம் உருவாக்கப்படுகிறது. இந்தியாவுக்குள் தமிழ்நாட்டில் தான் காற்றாலை மின் உருவாக்கம் மிக அதிகம். இந்தியா முழுமையும் உருவாக்கப்படும் மின் அளவு 3600 மெகாவாட் மின் அளவு தமிழகத்தில் மட்டும் 2040 மெகாவாட் மின் அளவு.

உலக அளவில் தமிழகம் இரண்டாம் இடத்தில் காற்றாலை மின்சாரம் உருவாக்கும் இடத்தில் உள்ளது. அமெரிக்காவில் கலிபோர்னியாவில் 2045 மெகாவாட் உருவாக்கப்படுகிறது. தமிழகத்தில் 5 மெகாவாட் மட்டும் குறைவு.

508 பேரூராட்சிகளில் கதிரவ மின்சாரம் உருவாக்கப்படுகிறது. 240 மெகாவாட் மின் உருவாக்கம் கரும்பு சக்கையிலிருந்து உருவாக்கப்படுகிறது. 50க்கும் மேற்பட்ட இடங்களில் கழிவுகளிலிருந்து மின்சாரம் பெறப்படுகிறது.

இவையில்லாமல் நெய்வேலியில் கிடைக்கும் மின்சாரத்தில் மூன்றில் ஒரு பகுதியையே இந்திய அரசிடமிருந்து தமிழகம் விலைக்குப் பெறுகிறது. மற்ற இருபகுதிகளைபிற தேசங்களுக்கு இந்தியா விற்றுக் கொள்ளையடிக்கிறது. இப்படியான அறியாமையில் தமிழகம் இருக்கிறது. ஆக இத்தனை வழிகளில் இவ்வளவு மின்சாரம் பெறுகிறபோது, கூடங்குளம், கல்பாக்கம், அணுமின் நிலையங்கள் தமிழகத்திற்கு எதற்கு?

கல்பாக்கத்தில் ஏற்கனவே இருக்கும் மூன்று அணு உலைகள் இல்லாமல் இன்னும் இரண்டு அணு உலைகளையும் கட்டத் தொடங்கியுள்ளனர். கூடங்குளத் திலும் கட்டி முடித்துள்ளனர். "உலகமே அணு உலைகளை எதிர்க்கின்றன. ஆனால் நாம் ஊமைகளாக அல்லவா இருக்கின்றோம். தமிழகத்தையும் தமிழக மக்களையும் நாசமாக்கும் அந்த அணுமின் நிலையங்களை நாமல்லாமல் யார் விரட்டப் போகிறார்கள்?

- முருகன், செந்தில், அரசக்குமரன்

Pin It