19ஆம் நூற்றாண்டின் மத்தியில் நடைபெற்ற சிப்பாய்களின் புரட்சியை, இந்தியாவின் முதல் சுதந்திரப்போர் என்று இன்றும் பாட நூல்கள் நமக்குச் சொல்லிக் கொடுக்கின்றன. ஆனால் அதற்கு ஒரு நூற்றாண்டுக்கு முன்பே தமிழ்நாட்டில் ஆங்கிலேயர்களை எதிர்த்து, அவர்களின் ஆதிக்கத்தை எதிர்த்து, அந்த ஆதிக்கப் பண்பாட்டை எதிர்த்துப் போர்முரசம் கேட்டது என்னும் உண்மை வரலாறு, பல நூல்களில் இப்போதும் மறைக்கப்படுகிறது.

ondi veeran1755ஆம் ஆண்டு தொடங்கி ஆங்கிலேயர்களின் வரி வசூலை, ஆதிக்கத்தை எதிர்த்த ஒரு தமிழ் மன்னன்தான் பூலித்தேவன்.

நெற்கட்டும் செவல் என்னும் பகுதியை ஆண்டு வந்த அந்தப் பூலித்தேவனின் ஈடு இணையற்ற படைத்தளபதி ஒண்டிவீரன். இருவரின் எதிர்ப்பையும் எதிர்கொள்ள முடியாமல் ஒரு முறை ஆங்கிலேயப் படை மதுரை மாநகருக்குத் திரும்பி வந்துவிட்டது.

பிறகு பீரங்கிகளோடு அவர்கள் வந்திருக்கின்றனர் என்பதை அறிந்து கொண்ட பூலித்தேவன், அதனைச் சமாளிக்கத் தன் தளபதி ஒண்டிவீரனை தனியாகவே அனுப்பி வைத்தார். அங்கு சென்று ஒண்டிவீரன் ஆளில்லாத நேரத்தில் பீரங்கிகளை அவர்களின் கோட்டைகளை நோக்கித் திருப்பி வைத்தார். பீரங்கிகள் வெடித்த போது ஆங்கிலேயர்களின் அரண்கள் சரிந்து வீழ்ந்தன. தனி ஒரு மனிதனாக எதிரியின் குகைக்குள் சென்று வெற்றியை ஈட்டி வந்ததால் அந்த மாவீரன் ஒண்டிவீரன் என்று அழைக்கப்பட்டார்.

1767ஆம் ஆண்டு பூலித்தேவன் மறைந்த பிறகும், சில ஆண்டுகள் தங்கள் படையைப் போற்றிப் பாதுகாத்து நாட்டையும் காத்தவன் ஒண்டிவீரன். அவ்வீரனின் நினைவு நாள் ஆகஸ்ட் 20 என்று இணையதளங்களில் காணப்படுகிறது.

ஆங்கிலேயர்கள் மட்டும்தான் அந்நியர்கள் என்று இல்லை யாரெல்லாம் தங்கள் ஆதிக்கத்தை, தங்கள் பண்பாட்டை நம் மீது திணிக்க முயற்சி செய்கிறார்களோ அவர்கள் அத்தனை பேரும் அந்நியர்கள்தான். அந்நியப் பண்பாட்டுக்கு ஒரு நாளும் நாம் தலை வணங்க முடியாது.

எல்லோரும் ஒன்றாக இருப்பது நல்லது. ஆனால் அதற்கு அவரவர் அடையாளத்தை விலையாகக் கொடுக்க வேண்டும் என்பதில்லை. பன்மைத்துவம்தான் ஜனநாயகத்தின் அடிக்கட்டுமானம் என்று சொல்லலாம். ஆங்கிலேயர்கள் அதனை மறுத்து தங்கள் பண்பாட்டை, தங்கள் மொழியை, தங்கள் பொருளாதாரத்தை இங்கு கொண்டு வந்து திணித்தார்கள். இப்போது நாட்டில் மீண்டும் அதே முயற்சி தொடங்குகிறது.

நாம் ஒண்டிவீரனின் பரம்பரைகள். ஒரு நாளும் ஆதிக்கத்திற்கு அடிபணிய மாட்டோம்.

ஒரே மாலையில் கலந்து கிடக்கும் பூக்களாய் என்றும் இணங்கி இருப்போம். ஆனால் புலியும் மானுமாய் ஒரு நாளும் நாம் பலியாக மாட்டோம்.

நம் மீது ஆதிக்கம் செலுத்த வருகிற பார்ப்பனியப் பண்பாட்டை, சமஸ்கிருத மொழியை, வட ஆரிய வல்லமையை ஒரே அணியில் நின்று ஒண்டிவீரனைப் போல் எதிர்க்க வேண்டிய தேவையை மறுபடியும் காலம் நம் கண் முன்னால் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறது.சமூக நீதியை, ஜனநாயகத்தை, மத நல்லிணக்கத்தை, பெண் விடுதலையைப் பேணிக் காக்க அனைவரும் ஒர் அணியில் இருப்போம். எதிரிகளை ஒண்டி வீரனைப் போல் நின்று, என்றும் எதிர்ப்போம்!

- சுப.வீரபாண்டியன்