தமிழ்நாடு பாஜகவின் மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்கள், திமுகவின் ஊழல் பட்டியலை வெளியிடப் போவதாகப் பல்வேறு முன்னறிவிப்புகளையும், மிகப்பெரிய விளம்பரங்களையும் செய்துவிட்டு இன்று காலை அதனை வெளியிட்டு இருக்கிறார். தமிழ்நாட்டு அரசியலில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தப் போகிற பட்டியல் என்று பாஜகவினரும், பாஜகவின் ஊது குழல்களும் நம்பிக் கொண்டிருந்தார்கள். ஆனால் நடந்திருப்பது முற்றிலும் வேறாக இருக்கிறது!

annamalai bjp 260திமுகவின் அமைச்சர்கள், தலைவர்கள் ஆகியோர் என்னென்ன ஊழல்கள் செய்து இருக்கிறார்கள் என்பதை அண்ணாமலை சான்றுகளோடு விளக்கப் போகிறார் என்றுதான் பலரும் எண்ணினர். ஆனால் அவர் முதலமைச்சர் குடும்பத்தினரின் சொத்துப் பட்டியலை வெளியிட்டு இருக்கிறார்! அவற்றுள் பல பினாமிகளின் பெயரில் உள்ள சொத்துகள் என்றும் கூறியிருக்கிறார். அதற்கான ஆதாரத்தை மட்டுமின்றி, சொத்துகளுக்கான ஆதாரத்தையும் அவர் காட்டவில்லை. அவர் வெளியிட்டு இருப்பது ஊழல் பட்டியலில்லை, அது வெறும் சொத்துப் பட்டியல் என்று சிலர் கூறுகின்றனர். உண்மையில், அது ஊழல் பட்டியலும் இல்லை, சொத்துப் பட்டியலும் இல்லை. வெறும் அபத்தப் பட்டியல் என்று தான் சொல்ல வேண்டும்!

அவர் குற்றம் சாட்டியுள்ள மிகப் பலர் தேர்தலில் போட்டியிட்டவர்கள். அனைவருமே வருமான வரி கட்டுகின்றவர்கள். அப்படி இருக்கும் போது அவர்கள் சொத்துப் பட்டியலை ஏற்கனவே வெளியிட்டு இருப்பார்கள். வருமான வரித்துறையிடமும் சமர்ப்பித்திருப்பார்கள். அதில் தவறு இருக்கிறது அல்லது அவை ஊழலின் மூலம் சேர்த்த சொத்துக்கள் என்றால், வருமான வரித் துறையும், அமலாக்கத் துறையும் இந்நேரம் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். எந்த நடவடிக்கையும் இதுவரையில் எடுக்கப்படாத போது, இந்த சொத்துகள் ஊழலின் மூலம் சேர்க்கப்பட்டவை என்று அண்ணாமலை சொல்வாரானால், அவர் வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை இரண்டும் செயலற்றுப் போய் இருக்கின்றன என்று கூறுவதாகவே பொருள்!

தன்னை அறியாமலேயே தான் ஒரு ஊழல் குற்றவாளி என்பது போன்ற பிம்பத்தையும் அண்ணாமலையே ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார். தான் கட்டியிருக்கும் கடிகாரத்தின் விலை 3 லட்சம் ரூபாய் எனக் கூறும் அவர், தன்னால் வீட்டு வாடகையைக் கூடக் கட்ட முடியவில்லை என்றும், வீட்டு வாடகை, எரிபொருள் செலவு போன்றவற்றைத் தன் நண்பர்கள்தாம் பார்த்துக் கொள்கிறார்கள் என்றும் கூறியிருக்கிறார். வீட்டு வாடகை கூட கட்ட முடியாத ஒருவர் 3 லட்சம் ரூபாய்க்கு எப்படிக் கடிகாரம் வாங்கினார் என்பது ஒரு புறம் இருக்க, இவருக்காக வாடகை மற்றும் செலவுகளை ஏற்றுக் கொள்ளும் அந்த நண்பர்கள் யார் என்ற கேள்வி மறுபுறம் எழுகிறது. என்ன நோக்கத்திற்காக அதை அவர்கள் செய்கிறார்கள் என்கிற கேள்வியும் எழுகிறது! ஒன்றிய அரசின் ஆளுங்கட்சியாக இருக்கும் பாஜகவின் மாநிலத் தலைவரிடம், சின்ன மீனைப் போட்டு பெரிய மீனைப் பிடிக்க முயற்சி செய்கிறார்களா? அண்ணாமலை ஒரு ஊழல்வாதிதானோ என்கிற ஐயத்தையும் இந்த நேர்காணல் உருவாக்குகிறது!

திமுக ஒரு ஊழல் கட்சி என்பதற்கு அண்ணாமலை இரண்டு ஆதாரங்களைக் காட்டியுள்ளார். ஒன்று. திமுகவை விட்டுப் பிரிந்து போன நேரத்தில் கவிஞர் கண்ணதாசன் எழுதிய வனவாசத்தில் உள்ள செய்தி. இன்னொன்று, திமுகவைக் கடுமையாக எதிர்த்துக் கொண்டு இருந்த நேரத்தில், ஜெயகாந்தன் குறிப்பிட்ட ஒரு குற்றச்சாற்று!

கட்சியிலிருந்து விலகியவர்கள் அல்லது ஒரு கட்சியை எதிர்க்கிறவர்கள், அந்த கட்சியின் மீது சொல்லும் குற்றம் குறைகளை எல்லாம், ஊழலுக்கான ஆதாரம் என்று சொன்னால், அண்ணாமலையின் ஐபிஎஸ் பட்டத்தை அல்லவா நாம் சந்தேகப்பட வேண்டி இருக்கிறது! அப்படிப் பார்த்தால் அண்ணாமலையைப் பற்றி, காயத்ரி ரகுராம் சொன்ன குற்றச்சாட்டுகளை நாம் அப்படியே எடுத்துக் கொள்ளலாமா? இப்போது ஆருத்ரா மோசடியில் அவர் பெயர் சிக்கிச் சின்னாபின்னமாகிக் கொண்டிருப்பதை நாம் ஆதாரமாகக் காட்டி நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்க முடியுமா? என்ன கேலிக் கூத்து இதுவெல்லாம்!

ஒரு வலையொளி நேர்காணலில், பாஜகவின் தலைவர்களில் ஒருவரான பேராசிரியர் சீனிவாசனிடம், திமுக வின் ஊழல் பட்டியலை வெளியிடப் போவதாகச் சொல்லும் அண்ணாமலை, ஏன் அதிமுக ஊழல் பட்டியலை வெளியிடவில்லை என்று கேட்கப்படுகிறது. அதற்கு அவர், “நாங்கள் பசுஞ்சாணத்தைத் தெளிக்கிறோம் என்றால் , ஏன் குதிரைச் சாணத்தையும் சேர்த்துத் தெளிக்கவில்லை என்று கேட்கிறீர்கள் என்கிறார். இவ்வளவு புத்திசாலிகளைப் பாஜக எப்படித் தாங்குகிறதோ தெரியவில்லை!

அவர் ஐபிஎஸ், இவர் பேராசிரியர்! பாவம் பாஜக!!

- சுப.வீரபாண்டியன்

Pin It