sigaram senthilnathanஇராமாநுசர் போன்ற சமய ஆச்சாரியார்கள் ஆகம சாத்திர அனுட்டானத்தில் செய்திருக்கும் மாறுதல்கள், சீர்திருத்தங்கள் -

இந்திய அரசு செய்திருக்கும் இந்து-லா சட்டச் சீர்திருத்தங்கள் -

தமிழ்நாடு அரசு செய்திருக்கும் ஆகமத்திற்கு மாறுபட்ட சில சட்டங்கள் -

சமய ஒருமைப் பாட்டினை உருவாக்கும் பொருட்டு மேலும் செய்ய வேண்டிய சீர்திருத்தங்கள் -

நடைமுறையில் உள்ள பல ஆகம முரண்பாடுகள், அவற்றின் புனிதம் அல்லது பிராயச்சித்தம் -

பிறவியின் அடிப்படையில் இல்லாமல், சாதி இன வேறுபாடு இல்லாமல் பணித் தகுதி அடிப்படையிலான அர்ச்சகர்கள் நியமனம் -

இவை குறித்து எல்லாம் விரிவான நல்ல விளக்கங்களைத் தருகிறது “ஆலயமும் ஆகமும்” என்ற நூல்.

நூலின் ஆசிரியர் சிகரம் ச.செந்தில்நாதன், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்.

ஆண்டவன், ஆகமம், நீதிமன்றம் - என்ற இவர் எழுதிய நூலின் விரிவாக்கமாக இந்நூல் வந்திருக்கிறது.

இடது சாரி சிந்தனையாளரான இந்நூல் ஆசிரியர், தான் சார்ந்த சிந்தனையை இந்நூலுள் வலிந்து திணிக்காமல், எடுத்துக் கொண்ட தலைப்பை ஒர் ஆய்வு நூலாகத் தந்திருக்கிறார்.

ஆகமம், அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர், நீதிமன்றங்களில் வழக்குகளும் தீர்ப்புகளும் - இப்படி மூன்று நிலைகளை நிலைநிறுத்துகிறார் ஆசிரியர்.

ஆன்மீக உலகில் பிரச்சினைகள் எழும்போதெல்லாம் அதை அடக்கப் பயன்படுத்தும் ஒரு சக்தி வாய்ந்த ஆயுதம் - ஆகமம்

கடவுளை எப்படிக் கேள்வி கேட்கக் கூடாதோ, அப்படி ஆகமத்தையும் கேள்வி கேட்கக்கூடாது.

அதாவது ஆகமம் என்றால் ஆரியருடையது என்ற எண்ணம் பரவலாக இருக்கிறது.

நுலாசிரியர் முற்றிலும் மறுக்கிறார். ஆகமம் திராவிடர்க்குரியது என்கிறார்.

ஆரியர்கள் இந்தியாவிற்கு வரும்போது வேதங்களோடு வந்தார்கள். ஆகமங்களுடன் வரவில்லை.

வேதம் பற்றிப் பேசிய ஆதிசங்கரர், ஆகமம் பற்றிப் பேசவில்லை.

கோயில் கட்டுதல், தெய்வச் சிலைகளை வைத்தல், வழிபாடு செய்தல், பரிவாரத் தெய்வங்கள் நிறுவப்படும் முறை, தினசரி பூசைகள், விசேஷ பூசைகள் இவை குறித்து விரிவாகக் கூறும் ஆகமம், வேத நெறி குறித்து ஏதும் கூறவில்லை, என்ற விளக்கத்தை நூலில் காணலாம். அதே சமயம், ஆகம மரபானது ஆரியருடையதன்று, அது திராவிடப் பராம்பரியம் சார்ந்ததே என்று கலாநிதி நா.சுப்பிரமணியம் சான்றையும் பிற அறிஞர்களின் சான்றுகளையும் காண்கிறோம்.

தனக்கு எதிராக வருபவைகளைத் தன்னுள் அடக்கி அதை அழிப்பது ஆரியம்.

அப்படித்தான், ஆகமம் எளிய வழிபாட்டில் தொடங்கினாலும், வேதங்களின் செல்வாக்கால், சடங்குகளால் சாதியும் மொழியும் கடந்த ஆகமத்தில் நந்தன்களும் தமிழும் தீண்டத் தகாததாக ஆகிவிட்டன. அதனால்தான் ஆகமம் தமிழர் மரபாக இருந்த போதிலும் எதிர்த்து நிற்க வேண்டிய நிலைக்குத் தமிழர்கள் தள்ளப்பட்டு இருக்கிறார்கள் என்று வரிகளைப் பதிவு செய்கிறார் ஆசிரியர் செந்தில்நாதன்.

இந்திய அரசியல் சட்டத்தின் 17 ஆம் பிரிவு தீண்டாமையை நீக்கிவிட்டது.

ஆனால் பிரிவுகள் 25 (B) மற்றும் 26 (B) இதில் முரண்படுகிறது என்கிறார் ஆசிரியர்.

பிரிவு 25 (B) இந்து மதத்தைச் சார்ந்த எல்லா வகுப்பினர்களுக்கும் பாடுபாடின்றித் திறந்து வைக்கப்படுவதற்குத் தேவைப்படும் சட்டத்தை அமல்படுத்தவும் அல்லது அத்தகைய புதிய சட்டத்தை உருவாக்கவும் முனைந்தால், அரசைத் தடுக்க முடியாது.

பிரிவு 26 (B), ஒரு மதத்தைச் சார்ந்தவர்கள் தத்தம் மதம் சம்பந்தப்பட்ட விவகாரங்களைத் தாமே நிர்வகிக்க உரிமை உடையவர்கள் என்கிறது. இந்தப் பிரிவுப்படி கோயில் நிர்வாகம் மற்றவர்கள் கோயிலுக்குள் நுழைவது மதம் சம்பந்தப்பட்ட விசயம் அல்லது விவகாரம் என்ற அடிப்படையில் தடுக்க முடியும்.

இன்னொரு சட்டத்திருத்தம் 1971ம் ஆண்டு திமுக ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்டது. பிரிவு 55ன்படி அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர்களாக ஆகலாம் என்கிறது. அதாவது பரம்பரை அர்ச்சகர் முறைக்கு விழுந்த அடி.

இவைகளுக்கு இடையில்தான ஆலயமும் ஆகமமும் உச்ச நீதிமன்றத்தில் வழக்குகளாக நுழைகின்றன.

வழக்குகள் எப்படி நடைபெற்றன? தீர்ப்புகள் எப்படி வந்தன? ஆகமும் ஆலயமும் என்ன பாடுபட்டன? வேதமும் ஆகமமும் எப்படி கிறுகிறுக்க வைத்தன? என்பனவற்றை உரிய சான்றாதாரங்களுடன் இந்நூல் சுவைபட எடுத்துக்கூறுகின்றது.

பின் இணைப்புகளாக நிதியரசர்களின் அறிக்கைகள் இணைக்கப்பட்டுள்ளமை பயன் தருவதாக இருக்கிறது.

எழுத்து நடை தடை இல்லாமல், எளிமையாக, அமைந்திருப்பது படிப்பவர்களைச் சோர்வடையாமல் படிக்கத்தூண்டுவதாக உள்ளமை சிறப்புக்குரியது.

அருமையான நூல், அறிய வேண்டிய செய்திகள்.

நூல்            :           ஆலயமும் ஆகமமும்

ஆசிரியர்      :           சிகரம் ச.செந்தில்நாதன்

சந்தியா பதிப்பகம்,

77, 53வது தெரு, 9ஆம் அவென்யூ, அசோக் நகர், சென்னை-83

தொடர்புக்கு: 044-24896979

விலை

ரூ.195/-

Pin It