ANBAZHAGAN 350நீண்ட போராட்டத்திற்குப் பிறகு இனமானப் பேராசிரியர் அவர்கள் தொடுத்த வழக்கில் நாட்டுக்கு நீதி கிடைத்திருக்கிறது. நீதிபதி மிஸ்ரா தலைமையிலான மூவர் அமர்வு, மறுவிசாரணை தேவைப்படவில்லை என்று கூறினாலும், பவானிசிங் நியமனம் செல்லாது என்பதைத் திட்டவட்டமாகவும் தெளிவாகவும் கூறியுள்ளது.

ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலத்திற்கு உச்சநீதிமன்றம் வழக்கை மாற்றுகிறது என்றாலே, இந்த மாநிலத்தில் அந்த வழக்கு சரிவர நடத்தப்படுவதற்கு வாய்ப்பு இல்லை என்றே பொருள். ஆதலால் அப்படி மாற்றப்பட்ட எந்த ஒரு வழக்கிற்கும் அரசு வழக்கறிஞரை நியமிக்கும் உரிமையும், அதிகாரமும் மாற்றப்பட்ட மாநிலத்திற்கு மட்டுமே உண்டு என்பதனை நீதிபதிகள் எடுத்துக் கூறியுள்ளனர்.

சங்கராச்சாரியார் வழக்கு புதுவைக்கு மாற்றப்பட்டபோது, அவ்வழக்கிற்கான அரசு வழக்கறிஞரை அவர்கள்தான் நியமித்தனர். அந்த வழக்கில் தமிழக அரசின் மீது எந்தக் குற்றச்சாட்டும் இல்லை. எனினும் அரசு வழக்கறிஞரை நியமிக்கும் உரிமை புதுவைக்குத்தான் வழங்கப்பட்டது.

ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கிலோ, முதல் குற்றவாளியே அவர்தான். அப்படி இருக்க அவரே முதலமைச்சராகவும் இருந்து கொண்டு, அரசு வழக்கறிஞரையும் அவரே நியமிப்பது என்றால், அதனை விட வேறு என்ன கேலிக் கூத்து இருக்க முடியும்?

உண்மையில் அதனைவிடவும் மோசமான கேலிக் கூத்துகளும் நடந்தன. தனக்கு எதிரான வழக்கில் அரசு வழக்கறிஞரை மட்டுமின்றி, நீதிபதியையும் கூட அவரே உச்சநீதிமன்றத்தில் பரிந்துரைத்தார். இந்த வழக்கை இந்த நீதிபதிதான் விசாரிக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை வைத்தார். என் மீதான வழக்கில், தீர்ப்பையும் நானே எழுதுவதற்கு அனுமதிக்க வேண்டும் என்னும் ஒரு கோரிக்கையை மட்டும்தான் அவர் நீதிமன்றத்தில் நேரடியாக முன்வைக்கவில்லை.

அரசு வழக்கறிஞராக இருந்த பவானிசிங் நீதிமன்றத்தில் வாதாடுவதற்கே தயங்கினார். அவருடைய வாதுரையைப் பல காரணங்களைச் சொல்லிப் பலமுறை தள்ளிப் போட்டார். அதற்காக நீதிமன்றம் அவருக்குத் தண்டம் கூட விதித்தது. அரசு வழக்கறிஞருக்கு நீதிமன்றம் தண்டம் விதித்த முதல் வழக்கும் அதுவாகத்தான் இருக்கக் கூடும்.

இப்போது பவானிசிங் நியமனம் செல்லாது என்று கூறியிருக்கும் உச்சநீதிமன்ற நீதிபதிகள், அவருடைய எழுத்துப் பூர்வமான வாதுரையைக் கூட ஏற்கக் கூடாது என்று சொல்லி விட்டனர். மாறாக, பேராசிரியர் அவர்களின் சார்பில் எழுத்து வடிவிலான, 90 பக்கங்களுக்கு மிகாத வாதுரை நீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்று கூறியுள்ளனர்.

BhavaniSingh 35024 மணி நேரத்திற்குள் அவ்வாதுரையை நீதிமன்றத்தின் முன் வைக்கப்பட வேண்டும் என்று அவர்கள் கூற, வழக்கறிஞர்களோ, 12 மணி நேரத்திற்குள்ளாகவே நீதிமன்றத்தில் ஒப்படைத்து விட்டனர்.

மே 12ஆம் தேதி வரை, சிறப்பு நீதிமன்றத்தால் தண்டிக்கப் பட்டுள்ள ஜெயலலிதாவுக்கு உச்சநீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. எனவே அதற்குள்ளாக கர்நாடக உயர்நீதிமன்றத்தினுடைய தீர்ப்பு அறிவிக்கப்படலாம் என்னும் எதிர்பார்ப்பு பரவியுள்ளது. அது குறித்தும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் குறிப்பிட்டுள்ள ஒரு செய்தி மிக முதன்மையானது.

நம் நாட்டில் ஊழல் என்பது மிகப்பெரிய நோயாக உள்ளது. அதனைக் கவனத்தில் வைத்துக் கொண்டு, கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்க வேண்டும் என்றும் நீதிபதி மிஸ்ரா மிகக் குறிப்பாகக் கூறியுள்ளார்.

இச்சூழலில் இவ்வழக்கில் முன்பு அரசு வழக்கறிஞராக இருந்த ஆச்சார்யா அவர்களையே மீண்டும் கர்நாடக அரசு தங்கள் வழக்கறிஞராக நியமித்துள்ளது.

நீதிமன்றங்களின் மீதான நம் நம்பிக்கை மீண்டும் கூடியிருக்கிறது. நீதி வென்றிருக்கிறது - மறுபடியும் நீதி வெல்லும் என்ற உறுதியோடு பெங்களூரு தீர்ப்பை நாடே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.

Pin It