ஆட்சிக்கலைப்பு என்பது தமிழ்நாட்டு மக்களுக்குப் புதிய விஷயமில்லை. எழுபதுகளின் மத்தியில் எமர்ஜென்ஸி என்கிற நெருக்கடி நிலை அமலில் இருந்த சமயத்தில் தமிழ்நாட்டில் முதன்முறையாக திமுக அரசு கலைக்கப்பட்டது. அதன் பின்னணியில் இருந்தவர் அப்போதைய பிரதமர் இந்திராகாந்தி.

ரேபரேலி மக்களவைத் தொகுதியில் இந்திரா காந்தி வெற்றிபெற்றது செல்லாது என்று அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. அதன் தொடர்ச்சியாக பிரதமர் பதவியை விட்டு விலகவேண்டிய நிர்பந்தம் இந்திராவுக்கு உருவானது.

நிலைமையைச் சமாளிக்கும் வகையில் நாட்டில் நெருக்கடி நிலையைக் கொண்டுவந்தார் இந்திரா. அதிகார அத்துமீறல்கள் அநாயாசமாக ஆரம்பித்தன. அரசியல் சட்டங்களையே திருத்தம் செய்யும் காரியங்கள் தொடங்கின “உங்களுக்கு ஏற்பட்ட சட்ட நெருக்கடிகளைத் தீர்த்துக்கொள்வதற்காக ஒட்டுமொத்த இந்தியாவையும் நெருக்கடியில் தள்ளாதீர்கள். அது ஜனநாயகத்தை ஊனப்படுத்திவிடும்’ என்று எச்சரித்தார் தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர்.

“ஒட்டுமொத்த தேசத்தின் பிரதமராக இருக்கும் என்னை ஒரு சாதாரண மாநில முதலமைச்சர் எச்சரிப்பதா?’ என்று ஆவேசப்பட்டார் இந்திரா. அந்த நொடியில் திமுக அரசைக் கலைக்கும் முடிவு எடுக்கப்பட்டது. அப்போது அவர் கையில் எடுத்த ஆயுதம், இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 356.

இந்திரா காந்தியின் விருப்பத்தை இம்மி பிசகாமல் செய்து முடித்தார் அன்றைய குடியரசுத் தலைவர். அறுதிப் பெரும்பான்மையைக் காட்டிலும் அதிகமான பலத்துடன் இருந்த திமுக அரசு அநியாயமான முறையில் கலைக்கப் பட்டது. ஆட்சிக்கலைப்பு, அதிகார அத்துமீறலின் உச்சம் என்று அனைத்து எதிர்க்கட்சிகளும் கண்டித்தன.

உண்மையில், 356 ஆவது பிரிவின் கீழ் கலைக்கப்பட்ட முதல் அரசு திமுக அரசு அன்று. அதற்கு முன்னரும் பின்னரும் பல்வேறு மாநிலங்களில் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் அல்லாத அரசுகள் கலைக்கப்பட்டுள்ளன. அப்படிக் கலைக்கப்பட்ட அரசுகளில் கிட்டத்தட்ட தொண்ணூறு சதவிகிதம் அரசுகள் காங்கிரஸ் அல்லாத அரசுகளே என்பதும் கலைக்கும் உத்தரவுகளை முதலில் பிறப்பித்ததும் அதிகம் பிறப்பித்ததும் காங்கிரஸ் அரசுகளே என்பதும் ஆச்சரியத்தை ஏற்படுத்த வில்லை. மாறாக, அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆம். இத்தனைக்குப் பிறகும் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கட்டிலில் இருக்கிறதே என்பதுதான் அதிர்ச்சிக்கான காரணம்.

சட்டம் ஒழுங்கு மோசம், பெரும்பான்மை இல்லை, நிர்வாகம் சரியில்லை என்று ஒவ்வொரு கலைப்புக்கும் ஒவ்வொரு காரணம் சொல்லப்பட்டது. ஆனால் அவற்றில் பெரும்பாலான காரணங்கள் ஒப்புக்குச் சொல்லப்பட்ட வைதானே தவிர உண்மையான காரணங்கள் அல்ல என்கிறார் பத்திரிகையாளர் தி. சிகாமணி. இந்திய அரசியல் குறித்துத் தொடர்ச்சியாகப் பேசியும் எழுதியும் வருபவர் இவர்.

‘356 : தலைக்கு மேல் கத்தி’ என்ற தலைப்பில் இவர் எழுதியிருக்கும் புத்தகத்தை, இந்தியாவில் நடந்த ஆட்சிக் கலைப்புகள் பற்றிய தகவல் களஞ்சியம் என்று சொல்லலாம். சுதந்தரம் தொடங்கி இன்று வரையிலான காலகட்டத்தில் நடந்த ஒவ்வொரு ஆட்சிக்கலைப்பின் பின்னணியில் இருக்கும் அரசியலையும் காரணங்களையும் தகுந்த ஆதாரங்களுடனும் நுணுக்கமான ஆய்வுடனும் பதிவுசெய்திருக்கிறார்.

ஆட்சிக்கலைப்பு, குடியரசுத்தலைவர் ஆட்சி, 356 என்பன போன்ற பதங்கள் காதில் விழுந்தாலே கம்யூனிஸ்ட் அரசு கலைக்கப்பட்டதும் கலைஞர் அரசு கலைக்கப்பட்டதும்தான் சட்டென்று நினைவுக்கு வரும். ஆனால் 1951 ஆம் ஆண்டு முதலே இத்தகைய நடவடிக்கைகள் தொடங்கி விட்டன என்று சொல்லும் நூலாசிரியர், இந்தியாவுக்கென்று பிரத்யேக அரசியல் அமைப்புச் சட்டம் வருவதற்கு முன்பே பாட்டியாலா மற்றும் கிழக்கு பஞ்சாப் மாநிலத்தில் (இன்றைய பஞ்சாப்) குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டதை உதாரணம் காட்டுகிறார்.

சட்டம் ஒழுங்குச் சீர்குலைவு, நிர்வாகச் சீர்குலைவு என்ற பொத்தாம் பொதுவான காரணத்தை முன்வைத்தே பெரும்பாலான மாநில அரசுகள் கலைக்கப்பட்டுள்ளன. ஆனால் கடந்த கால அரசியல் நிகழ்வுகளைக் கவனமாகப் பார்த்தால், ஆட்சிக் கலைப்புக்கான காரணங்களை நான்கு வகைகளாகப் பிரிக்கலாம்.

• உட்கட்சிப் பிரச்னைகளைச் சமாளிப்பதற்காக.
• எதிர்க்கட்சிகளை ஒடுக்குவதற்காக.
• ஆளுமையை வெளிப்படுத்துவதற்காக.
• பழிவாங்கும் நடவடிக்கையாக.

ஒவ்வொரு காரணத்துக்கும் பொருத்தமான உதாரணங்கள் புத்தகம் நெடுக விரவிக் கிடக்கின்றன. பஞ்சாப் ஆட்சிக்கலைப்பு காங்கிரஸ் கட்சியின் உட்கட்சிச் சிக்கலைச் சரிசெய்வதற்காகச் செய்யப்பட்டது. கேரளத்து கம்யூனிஸ்ட் அரசு கலைக்கப்பட்டது எதிர்க்கட்சிகளை ஒடுக்கும் நோக்கத்துக்கு உதாரணம். திமுக அரசைக் கலைத்தது பழிவாங்கும் நடவடிக்கைக்கு எடுத்துக்காட்டு. காஷ்மீர் ஆட்சிக்கலைப்பு ஆளுமையை வெளிப்படுத்தும் நோக்கத்துடன் செய்யப்பட்டதற்கான ஆதாரம்.

சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்து இன்றுவரை 111 முறை 356 ஆவது அரசியல் சட்டப்பிரிவு பயன்படுத்தப் பட்டுள்ளது. அவற்றில் நியாயமான நடவடிக்கைகளை விரல்விட்டு எண்ணிவிடலாம். தொண்ணூறு சதவிகிதத்துக்கும் அதிகமானவை அதிகார அத்துமீறல்களே. அதைத் தொடங்கி வைத்ததும் காங்கிரஸ் கட்சிதான். அதில் ஆதிக்கம் செலுத்துவதும் காங்கிரஸ் கட்சிதான் என்பதை ஆதாரங்களுடன் பதிவு செய்திருக்கிறார் நூலாசிரியர்.

இத்தனைக்கும் இந்த அரசியல் சட்டப்பிரிவு விவாதக்களத்தில் இருந்தபோதே பலத்த சர்ச்சை களைக் கிளப்பியிருக்கிறது. குறிப்பாக, ஆளுநரின் பரிந்துரையின் பேரில்தான் இந்தப் பிரிவு பயன்படுத் தப்படவேண்டும் என்று முதலில் வரையறை செய்யப்பட்டிருந்தது. பின்னர், ஆளுநரின் பரிந்துரையிலோ அல்லது வேறு வகையிலோ என்றொரு திருத்தம் செய்யப்பட்டது. “வேறு வகையிலோ” என்று சொல்வதன்மூலம் அத்துமீற லுக்கு வழிகாட்டப்படுகிறது என்று எச்சரிக்கைகள் எழுந்தன.

அதற்கு விளக்கம் அளித்த டாக்டர் அம்பேத்கர், “பிராந்திய அரசின் நிர்வாகத்தில் மத்திய அரசு தலையிடவேண்டும் என்பதற்காக இந்தச் சட்டப்பிரிவு கொண்டுவரப்படவில்லை. அதேசமயம், நான் எதிர்பார்ப்பது என்னவென்றால், அந்தச் சட்டப்பிரிவுகள் எப்போதும் பயன் பாட்டுக்கு வரக்கூடாது. அவை டெட் லெட்டர் எனப்படும் உயிரற்ற பிரிவுகளாக இருக்கவேண்டும் என்பதுதான்’ என்றார். மேலும், இந்தப் பிரிவு துஷ்பிரயோகம் செய்யப்படுமானால், அது 356இல் உள்ள குறைபாடு என்பதைவிட, அதைப் பயன்படுத்தும் ஆட்சியாளர் மீதே குறைபாடு என எடுத்துக் கொள்ளவேண்டும் என்றார் அம்பேத்கர்.

ஆனால் 356 விஷயத்தில் அம்பேத்கரின் நம்பிக்கை 111 முறை நொறுக்கப்பட்டிருக்கிறது என்பதுதான் இந்தப் புத்தகம் சொல்லும் முக்கியமான செய்தி. இந்திய அரசியலை உலுக்கிய பஞ்சாப், தமிழ்நாடு, ஜம்மு - காஷ்மீர், உத்தரபிரதேசம், கேரள ஆட்சிக் கலைப்புகள் அனைத்தையும் வெறும் தகவலாக, புள்ளிவிவரங்களின் தொகுப்பாகச் சொல்லாமல், சமகால அரசியல் பின்புலத்துடன் சொல்லியிருப்பது புத்தகத்தின் சிறப்புக்குரிய அம்சம்.

356 ஆவது பிரிவு தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்பதால் அந்தப் பிரிவை அடியோடு நீக்கவேண்டும் என்கிறது ஒரு தரப்பு. இல்லை, அப்படியரு பிரிவு அவசியம். இல்லையென்றால் இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கே ஊறு நேர்ந்துவிடும் என்கிறது இன்னொரு தரப்பு. ஆனால் சில திருத்தங்களைச் செய்து, 356 ஆவது பிரிவை எச்சரிக்கையுடன் பயன்படுத்த வழிவகை செய்யவேண்டும் என்ற குரலும் கேட்கிறது. ஒவ்வொரு கோரிக்கையின் பின்னால் இருக்கும் ஆதரவு, ஆபத்துகளை அழகாகச் சொல்லியிருக்கிறார் நூலாசிரியர்.

ஆட்சிக்கலைப்பு என்றால் அதற்கு காங்கிரஸ் மட்டுமே பொறுப்பன்று, காங்கிரஸ் அல்லாத அரசுகளும் அந்தக் காரியத்தைச் செய்திருக்கின்றன என்கிறார் நூலாசிரியர். அதற்கு ஜனதா ஆட்சிக் காலத்தில் நடந்த ஆட்சிக்கலைப்பை உதாரணம் காட்டுகிறார். ஆனால் அதன்பிறகு காங்கிரஸ் அல்லாத கட்சிகளால் பெரிய அளவில் ஆட்சிக்கலைப்புகள் நடக்கவில்லை என்பதும் கவனத்துக்குரியது.

ஆட்சிக்கலைப்பு என்ற ஆயுதத்தை ஏந்திக்கொண்டு கட்டுக்கடங்காத குதிரையாகத் திரிந்துகொண்டிருந்த மத்திய அரசுக்குக் கடிவாளம் போட்டது எஸ்.ஆர். பொம்மை வழக்கு. அதுநாள்வரை ஆட்சிக்கலைப்பு என்பது அரசியல் நடவடிக்கை என்று சொல்லி, அதில் தலையிடாமல் ஒதுங்கியிருந்தது நீதித்துறை. ஆனால் 1989 ஆம் ஆண்டு கர்நாடகத்தில் ஆட்சியில் இருந்த எஸ்.ஆர். பொம்மை அரசு கலைக்கப்பட்டபோது அவர் சட்ட யுத்தத்தைத் தொடங்கினார்.

வழக்கின் முடிவில் ஆட்சிக்கலைப்பு நடவடிக்கைகளுக்கு சில ஒழுங்கு விதிகள் உருவாக்கப்பட்டன. மத்திய அரசின் அதிகாரங்கள், ஆளுநரின் செயல்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் மாற்றங்கள் ஏற்பட்டன. அவற்றைப் பற்றிய தகவல்கள் ஒரு அத்தியாயம் முழுக்க பதிவுசெய்யப்பட்டுள்ளது. தவறவிடக்கூடாத அத்தியாயம் அது.

ராஜமன்னார் குழு பரிந்துரைகள் என்ற தலைப்பில் ஒரு அத்தியாயம் இடம்பெற்றுள்ளது. அதில், திமுக பற்றிய பத்தியில், “தனித்தமிழ்நாடு கோரிக்கையை 1962-ல் கைவிட்ட அந்தக் கட்சியின் நிறுவனர் அண்ணாதுரை’ என்ற வரி இடம்பெற்றுள்ளது. உண்மையில், தனித்தமிழ்நாடு கோரிக்கையை திமுக முன்வைக்கவும் இல்லை. கைவிடவும் இல்லை. திமுகவின் கோரிக்கை, திராவிட நாடு. மத்திய அரசு பிரிவினைத் தடைச் சட்டத்தைக் கொண்டு திமுகவின் கைகளை முறுக்கியபோது, திராவிட நாடு கோரிக்கை கைவிடப்பட்டது என்பதுதான் வரலாறு. கண்ணில் பட்ட குறைபாடு இதுமட்டுமே.

ஆட்சிக்கலைப்புகளை மட்டும் அலசாமல், மத்திய - மாநில உறவுகள் குறித்து இந்திய அளவில் நடத்தப்பட்ட விவாதங்கள், மத்திய அரசு அமைத்த சர்க்காரியா ஆணையம், திமுக அரசு அமைத்த ராஜமன்னார் குழு, திமுகவின் மாநில சுயாட்சிக் கோரிக்கை என்று பல விஷயங்கள் குறித்தும் இந்தப் புத்தகம் விவாதிக்கிறது.

இந்திய அரசியலில் தவிர்க்கமுடியாத அங்கமாக மாறியிருக்கும் கலைப்பு/கவிழ்ப்பு அரசியலின் கறுப்புப்பக்கங்களை காத்திரமான தரவுகளுடன் காட்சிப்படுத்துகிறது இந்நூல். சமகால அரசியலை அறிந்துகொள்ளவும் புரிந்துகொள்ளவும் விரும்பும் அனைவரும் வாங்கி, வாசிக்க வேண்டிய நூல்!

356: தலைக்கு மேல் கத்தி!
தி. சிகாமணி
பாவை பப்ளிகேஷன்ஸ் வெளியீடு
விலை : ரூ 70/-

Pin It