"இந்தி ஓர் அன்னிய மொழி'' - அண்மையில் வழக்கொன்றில் தீர்ப்பு வழங்கும்போது, குஜராத் உயர்நீதிமன்றம் இவ்வாறு தன் கருத்தைப் பதிவு செய்துள்ளது. குஜராத்தில் ராஜ்காட், ஜுனாகாட் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் சங்கம், நிலம் கையகப்படுத்தப் பட்டமை தொடர்பாக, அம்மாநில உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்தது.

அவ்வழக்கின் தீர்ப்பில், குஜராத் மாநில அரசு, தொடக்கப் பள்ளிகளில் குஜராத் மொழியே கற்பிக்கிறது. இம்மாநிலத்தில் குஜராத் மொழியே பேசப்படுகிறது. இந்தி பேசப்படுவதில்லை. இந்த அடிப்படையில் இந்தி ஓர் அன்னிய மொழியே என்ற கருத்தை நீதிமன்றம் பதிவு செய்திருக்கிறது. இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு. இது ஒருபுறம் இருக்க, சனவரி 6ஆம் நாள் டில்லியில் நடந்த 15ஆம் உலக சமஸ்கிருத மாநாட்டின் தொடக்க விழாவில் பேசிய பிரதமர் மன்மோகன் சிங், சமஸ்கிருத மொழியின் வளர்ச்சிக்காக மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ளப்போவதாக அறிவித்திருக்கிறார்.

"சமஸ்கிருத மொழி எந்த ஒரு இனத்துக்கோ மதத்துக்கோ மட்டும் சொந்தமானதன்று. குறுகிய மனப்பான்மையை ஒழிக்கக் கூடிய, விடுதலை உணர்வை வளர்க்கும் வகையிலான பண்பாட்டைப் பறைசாற்றும் மொழி அது. சுதந்திரமும் சகிப்புத் தன்மையும் அதனுள் பொதிந்து இருக்கிறது... இன்றைக்கும் வாழ்ந்திருக்கும் மொழிகளுள் மிகப் பழமையானது சமஸ்கிருதம்.

இதை மதச் சடங்குகளுக்காகவும், வழிபாடுகளுக்காகவும் மட்டுமே பயன்படும் மொழி என்று கருதிவிடக் கூடாது... பல்வேறு ஆச்சாரியார்களும், அறிஞர்களும் தங்களின் கருத்துகளைப் புனிதமான வேதங்களிலும், உபநிசத்துகளிலும் பதிவு செய்திருக்கின்றனர்... இம்மொழியை வளப்படுத்தவும், பிரபலப்படுத்தவும் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துவதற்கான முயற்சிகளை அரசு மேற்கொள்ளும்'' மன்மோகன் சிங் பேச்சின் சாரம் இது.

இந்தப் பேச்சில் இருந்து ஒரு செய்தி மிகத் தெளிவாகத் தெரிகிறது. மன்மோகன் சிங் சொல்லும் வேதங்கள், உபநிடதங்கள், ஏன் பகவத்கீதையைக் கூட அவர் படிக்கவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. படித்திருந்தால் இப்படிப் பேசியிருக்க மாட்டார். ஆரிய இனத்திற்கும், இந்து மதத்துக்கும் மட்டுமே சொந்தமான மொழி சமஸ்கிருதம். மற்றவர்கள் இம்மொழியைப் படிக்கக்கூடாது என்பது மனுவின் சட்டம்.

ரிக்வேதத்தில் புரு­ சூக்தம் நால்வருணப் படிநிலை குறித்துப் பேசுகிறது. நான்கு வருணங்களையும் நானே படைத்தேன் என்று கண்ணன் கூற்றாகக் கீதை சொல்கிறது. இவையல்லாம் குறுகிய மனப்பான்மையை ஒழிக்கக் கூடியதாகவோ, விடுதலை உணர்வை வளர்க்கும் பண்பாடாகவோ அமையவில்லை.

தமிழ், ஈப்ரு போன்ற தொன்மையான மொழிகளுள் சமஸ்கிருதமும் ஒன்றே தவிர, அதுவே முதல் பழமையான மொழி அன்று. ஆச்சாரியார்கள், ஆரிய அறிஞர்களின் கருத்துகள் எனச் சொல்லும் வேத உபநிடதச் செய்திகள் மனித நேயத்திற்கு மாறுபட்டவை. இந்தக் கருத்துகள் எல்லாம் சமஸ்கிருத மொழியில் உள்ள நூல்களில்தான் சொல்லப்பட்டி ருக்கின்றன. இந்த மொழியை வளர்க்கத்தான் பிரதமர் தீவிர நடவடிக்கை எடுக்கப் போகிறாராம்.

குஜராத் உயர்நீதி மன்றமோ இந்தியை அம்மாநிலத்தின் அன்னிய மொழி என்று கருத்து கூறுகிறது. மன்மோகன் சிங்கோ இந்தியா முழுமைக்கும் சமஸ்கிருதத்தைச் சொந்த மாக்க முயல்கிறார்.

இந்திக்கும் சமஸ்கிருதத்திற்கும் என்ன தொடர்பு?

ஆரியர்கள் பண்டைய இந்தியாவுக்குள் நுழையும்போதே அவர்களின் சொந்த மொழியான "ஆர்ய'' மொழியைக் கைவிட்டு விட்டார்கள். கி.மு.1000 காலகட்டங்களில் அவர்களால் உருவாக்கப்பட்ட புதிய மொழி சமஸ்கிருதம். முதலில் அதற்கு எழுத்து வடிவம் இல்லை.

பிராகிருத வரிவடிவ எழுத்துகளின் மாற்றங்களை அடுத்துத் தோன்றிய "கடிபோலி'' என்ற எழுத்து வடிவ மொழியில் இருந்து தோன்றியதே "இந்தி''. எனவே சமஸ்கிருதத்தின் பிள்ளைகளுள் மிக நெருக்கமான பிள்ளைமொழி இந்தி. அகண்ட பாரதம், ஆட்சி மொழி இந்தி, அதன்மூலம் சமஸ்கிருதத்தை உயிர்ப்பித்து ஆரிய ஆதிக்கத்தை நிலைநிறுத்துவது இதுதான் இந்துத்துவ வாதிகளின் திட்டம்.

இதன் மூலம் மனு(அ)தர்மம் கோலோச்சும், குலக்கல்வித் திட்டமே நடைமுறைக்கு வரும். சூத்திரர்கள் "கைதட்டிக்'' கொண்டுதான் சாலையில் போக வேண்டிய நிலை உருவாகும் என்றால் மறுக்க முடியுமா? இதுதானே கடந்த கால வரலாறு ! ஓர் இனத்தை அழிக்க வேண்டுமானால் அவ்வினத்தின் மொழியை முதலில் அழிக்க வேண்டும். மொழி அழிந்தால் இனம் சிதையும், மறையும், அழியும். 1937ஆம் ஆண்டு சுயராஜ்ய(காங்கிரஸ்) கட்சி தமிழகத்தில் ஆட்சி அமைத்த போது, ராஜாஜி முதல்வராகப் பொறுப்பேற்றார். முதல்வர் பொறுப்பேற்ற ராஜாஜி சில நாட்களில்,சென்னை தட்சிண பாரத் இந்தி பிரச்சார சபா விழாவிலும், சென்னை இராமகிருஷ்ணா மாணவர் விடுதி கூட்டத்தில் பேசும்போதும், பள்ளிகளில் இந்தி கட்டாய பாடமாக்கப்படும் என்று அறிவித்தார்.

உடனே தமிழக காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தி இந்தியோடு சமஸ்கிருதத்தையும் கட்டாயப்பாடமாக்க வேண்டும் என்றார். இதுதான் வர்ணாசிரம தர்மத்தைக் கொண்டு செல்லும் வழியாக அவர் கருதினார். களம் கண்டது தமிழகம் இந்தி ஆதிக்கத்திற்கு எதிராக! தந்தை பெரியார், நாவலர் சோமசுந்தர பாரதியார், மறைமலை அடிகளார், உமாமகேசுவரானர், கி.ஆ.பெ. விசுவநாதம், பேராசிரியர் கா.சு. பிள்ளை, அஞ்சாநெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரி, ஊ.பு.அ. சவுந்திர பாண்டியனார் போன்ற தலைவர்கள் மக்களைத் தட்டி எழுப்பி இந்தி எதிர்ப்புப் போரைத் தொடங்கினார்கள். திருவாரூர், மாணவர் கலைஞர் 38ஆம் ஆண்டு தன் முதல் போராட்டமாக இந்தி எதிர்ப்புப் போரில் இறங்கினார்.

இதன் உச்சகட்டமாக அமைந்தது 1964-65ஆம் ஆண்டின் இந்தி எதிர்ப்புப் போராட்டம். 1965 சனவரி 26ஆம் நாள் இந்தி இந்தியாவின் ஆட்சி மொழி என்ற குடியரசுத் தலைவரின் ஆணை தமிழகத்தை உலுக்கியது. தமிழக மாணவர்கள் இந்தியை எதிர்த்து வீதியில் இறங்கிப் போராடினார்கள். வகுப்புகளைப் புறக்கணித்தார்கள். அன்றைய முதல்வர் பக்தவச்சலம் மாணவர்களை அடக்கி ஒடுக்கக் காவல்துறையைப் பயன்படுத்தினார். ஆனால் அதையும் மீறினார்கள் மாணவர்கள். அடி, உதை, கண்ணீர்ப் புகை வீச்சு, துப்பாக்கிச் சூடு என்று போர்க்களமானது தமிழகம். மாணவர்கள் மட்டுமல்லாமல் மக்களின் ஆதரவும் கிடைத்தது.

இந்தி எதிர்ப்புப் போரின்போது தமிழுக்காய் உயிர்துறந்தார்கள் கீழப்பழுவூர் சின்னச்சாமி, சிவலிங்கம், கீரனூர் முத்து, வீரப்பன், தண்டபாணி முதலான மாவீரர்கள். வேறு வழியின்றி மத்திய அரசு பணிந்தது. "இந்தி பேசாத மக்கள் விரும்பும்வரை, இந்தி திணிக்கப்பட மாட்டாது'' என்று உறுதி மொழி அளித்தார் அன்றைய பிரதமர் நேரு. 67ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலில் மாணவர் சமுதாயமும், மக்களும், காங்கிரஸ் கட்சியை வேரோடும் வேரடி மண்ணோடும் தூக்கி எறிந்துவிட்டார்கள். இன்று அல்லாடிக்கொண்டு இருக்கிறது அந்தக் காங்கிரஸ் தமிழகத்தில்.

இதை எல்லாம் யாரும் இன்றைய பிரதமர் மன்மோகன்சிங்கிற்குச் சொல்லவில்லை போல் தெரிகிறது. அதனால்தான் அவர் சமஸ்கிருதத்தின் வாலைப்பிடித்து ஆடிக்கொண்டு இருக்கிறார். அதன் மூலம் இந்தியை அரியணை ஏற்ற அவர் முயல்கிறார்.

சனவரி 25 தமிழக மொழிப் போராளிகளின் வீரவணக்க நாள். இந்த நாளில் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு ஒரு செய்தி - இந்தியை நெஞ்சில் வைத்துச் சமஸ்கிருதப் புலிவாலைப் பிடித்தால், மீண்டும் தமிழகம் ஒரு மொழிப்போரைச் சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும்.

Pin It