இருபது ஆண்டுகளுக்கு மத்தியில் மோடியின் ஆட்சிதான் என்று அமித்ஷா கூறுவது குறித்துத் தங்கள் கருத்து என்ன?

Amit Shahபாரதிய ஜனதாக்கட்சியைப் பொறுத்தவரை, அது நாடாளுமன்ற ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லாமல் செயல்பட்டு வரும் கட்சி. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் நரேந்திரமோடி அதிபர் வேட்பாளர் போலச் சித்தரிக்கப்பட்டுப் பிரச்சாரம் செய்யப்பட்டது. பாரதிய ஜனதாக் கட்சி அவரை மட்டுமே முன்னிலைப்படுத்தியது. எல்.கே.அத்வானி, முரளிமனோகர் போன்றோரைப் புறக்கணித்தது. நாட்டு மக்களுக்கும் மோடிதான் தெரிந்தாரே தவிர, பா.ஜ.க. தெரியவில்லை. மோடி பேசுவது பா.ஜ.க. கொள்கையாகக் கருதப்பட்டது. நவீன தொழில்நுட்பத் துறை மூலமாக ஒரு பொருளைக் கார்பரேட் நிறுவனம் எப்படிச் சந்தைப்படுத்த முடியுமோ, அப்படி மோடி சந்தைப்படுத்தப்பட்டார், அதற்கு ஊடகங்களும் துணை போயின.

இப்படி இந்நாட்டின் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மோடியை மீண்டும் பிரதமராக்க இத்தகைய உத்தியை பா.ஜ.க. கையாளுகிறது. ஆனால் 10 மாதங்களில் மோடி ஆட்சியின் சாயம் வெளுத்துவிட்டது. வெளிப்படையாக வளர்ச்சி பற்றிப் பேசினாலும், ஆர்.எஸ்.எஸ். தனது ரகசியத் திட்டத்தின் மூலம் மதவாத அரசியல் நடத்தி சிறுபான்மையினரிடம் பதற்றத்தை ஏற்படுத்துகிறது. வேற்றுமையில் ஒற்றுமை கொண்டு மத நல்லிணக்கம் மூலமாகவே நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல முடியும். இச்சித்தாந்தத்தில்தான் நாடு சுதந்திரம் பெற்ற 67 ஆண்டுகளில் 54 ஆண்டுகள் காங்கிரஸ் மத்தியில் ஆட்சி செய்ய முடிந்தது. இச்சித்தாந்தத்திற்குத் தகுதியற்ற கட்சி பா.ஜ.க. எந்த நிலையிலும் அடுத்த 20 ஆண்டுகள் நாங்கள்தான் ஆட்சி செய்வோம் என்று ஜவஹர்லால் நேரு உட்பட எந்தத் தலைவரும் சொன்னதில்லை. இட்லர், முசோலினி பாதையில் பயணம் செய்யும் மோடி அடுத்த 20 ஆண்டுகள் ஆட்சி செய்வார் என்று அமித்ஷா சொல்வது, சர்வாதிகார ஆணவப் பேச்சு. இதை ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை உடைய மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். தலைநகர் தில்லியின் ஆட்சியைப் பிடிக்க முடியாத மோடி - அமித்ஷா கூட்டணியின் இந்தக் கனவு, அமித்ஷாவின் இந்தப் பேச்சு இந்தியாவில் நிச்சயம் நிறைவேறாது.

  - கோபண்ணா, இந்திய தேசிய காங்கிரஸ்

Pin It