ஒருவிதமான ஊடக அரசியல் இங்கே நடந்து கொண்டுள்ளது. எல்லாவற்றையும் தீர்மானிப்பவர்களாகவும், திசைமாற்றுகின்றவர்களாகவும் தாங்களே இருக்க வேண்டும் என்று ஊடகங்கள் சில ஆசைப்படுகின்றன.

தமிழ்நாட்டைப் பொறுத்தளவில் பெரும்பாலான ஊடகங்கள் ‘தி.மு.க., எதிர்ப்பு’ என்னும் நிலைப்பாட்டில், காலூன்றி நிற்கின்றன. குறிப்பாக ‘தினமணி’, ‘துக்ளக்’ ஆகிய இரு ஏடுகளின் முழுநேரப்பணியே அதுதான். தினமலர் கூட, சில வேளைகளில் அ.தி.மு.க., அரசின் குறைபாடு களைச் சுட்டிக்காட்டுகின்றது. ‘அம்மா தண்ணீர்’ ஆபத்துக் குறித்து, ஜுனியர் விகடன் அட்டைப் படக்கட்டுரை வெளியிட்டது. ஆனால் தினமணிக்கோ எப்போதும் தி.மு.க., வசை புராணம்தான்.

அண்மையில், அந்த ஏடு ‘மெய்யாலுமா’ என்னும் பகுதியில் உண்மைக்கு முற்றிலும் மாறான, வஞ்சகமான செய்தி ஒன்றினை வெளியிட்டுள்ளது. தி.மு.க., பொருளாளரும், இளைஞர் அணியின் மாநிலச் செயலாளருமான, தளபதி ஸ்டாலின், கடந்த செப்டம்பர் 26 - 30 ஆகிய ஐந்து நாள்களில் இளைஞர் அணி சார்பில், தமிழகமெங்கும் தெருமுனைக் கூட்டங்களை நடத்துமாறு அறிவிப்பு வெளியிட்டிருந்தார். அ.தி.மு.க., அரசின் அவலங்களை விளக்கித் தமிழ்நாட்டின் பட்டிதொட்டி எங்கும் கூட்டங்கள் நடைபெற்றன. ஐந்தே நாள்களில் ஐந்தாயிரம் தெருமுனைக் கூட்டங்களை நடத்தித் தமிழகத்தையே கலக்கினர் தி-.மு.க., இளைஞர் அணியினர். மக்களும் பெருவாரியாகக் கூடினர். எதிர்பார்த்ததைவிடக் கூடுதலாகத் தாக்கத்தை அக்கூட்டங்கள் ஏற்படுத்தின.

பொறுக்க முடியவில்லை தினமணியால். உடனே ‘மெய்யாலுமா’ என்ற பகுதியில் ஒரு நச்சுச் செய்தியை வெளி யிட்டது. “ஐயாயிரம் கூட்டங்கள் நடந்ததாகச் சொல்கின் றனர். ஆனால் ஐநூறு கூட்டங்கள் கூட நடக்கவில்லை என்று சொல்கிறார்களே....மெய்யாலுமா?” என்று எழுதியது.

உண்மையை நாடறியும்... மக்கள் அறிவார்கள். தூங்குவது போல நடிக்கும் தினமணியை நம்மால் எழுப்ப முடியாது. தினமணிக்கு நம் பக்கத்து உண்மையை மெய்ப்பிக்க வேண்டிய தேவையும் நமக்கு இல்லை. எனினும், பெரம்பலூரில் உரையாற்றிய தளபதி ஸ்டாலின், “ஐயாயிரம் கூட்டங்கள் நடந்தமைக்கான சான்றுகளை நான் தருகிறேன். ஐநூறு கூட்டங்கள்கூட நடைபெற வில்லை என்பதற்கு உங்களிடம் சான்றுகள் உள்ளனவா?” என்று வெளிப்படை யாகக் கூட்டத்திலேயே கேட்டார். தினமணியின் மௌனம் இன்னும் கலையவில்லை.

உண்மையற்றவர்களின் வாய்கள் ஊமைகளாய்த்தானே இருக்கும்.

கோவைப் புறநகர் மாவட்டத்தில் மட்டுமே, நூற்றுக்கணக்கான கூட்டங்கள் நடந்துள்ளன. அம்மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் இராசேந் திரன், அத்தனைக் கூட்டங்களையும் படங்களுடன் பதிவு செய்துள்ளார். இப்படி ஒவ்வொரு மாவட்டத் திலும் பேரேடுகளில் கையெழுத்து களைப் பெற்றும், படங்களை ஒட்டியும் அமைப்பாளர்கள் முறைப்படி பதிவு செய்துள்ளனர். அனைத்து மாவட்டங் களிலும் நடைபெற்ற கூட்டங்களின் எண்ணிக்கையைக் கூட்டினால், ஐயாயிரத்துக்கும் கூடுதலாக இருக்குமே அல்லாமல், குறைந்திட வாய்ப்பில்லை.

இந்த உண்மைகள் எல்லாம் தினமணிக்கும் தெரியும். ஆனால், ‘தன் நெஞ்சறிந்து பொய்’யுரைக்கும் மனிதர் களை என்னவென்பது? ‘படித்தவன் சூதும் வாதும் செய்தால் அய்யோ என்று போவான்’ என்னும் பாரதியாரின் வரிகளை அடிக்கடி மேடையில் குறிப்பிடும் தினமணி ஆசிரியர் எழுதும்போது மட்டும் அவ்வரிகளை மறந்து விடுகிறார்.

மோடியின் கூட்டத் தைப் பன்மடங்கு ஊதிப் பெருக்கிக் காட்டும் தினமணிகள், தி.மு.க.,வின் கூட்டமென்றால் பன்மடங்கு சுருக்கிக் காட்ட முயல்கின்றன.

தளபதி ஸ்டாலினுக்குத் தமிழக மெங்கும் பெருகிக்கொண்டிருக்கும் செல்வாக்கை எப்படியேனும் இருட் டடிப்புச் செய்துவிட வேண்டும் என்ற முயற்சிதான் இது. கடந்த 6ஆம் தேதி பெரம்பலூரில் இருந்து, மலையாளப் பட்டி என்னும் சிற்றூர் நோக்கி, அவர் பயணம் செய்தபோது, நாற்பது கிலோ மீட்டர் தொலைவுக்கும், சாலையின் இருமடங்கிலும் மக்கள் கூட்டம். வழிநெடுக, கோனேரிப்பாளையம், எசனை, வேப்பந்தட்டை, கிருஷ்ணா புரம், வெங்கலம், தழுதாளை, அரும்பாவூர், மேட்டூர், வெட்டுமேடு என எதிர்ப்பட்ட அனைத்துப் பேரூர், சிற்றூர்களிலும், ஆண்களும், பெண் களும் குழுமி நின்று வரவேற்றனர். ஐம்பதடிக்கு ஒருமுறையேனும் மகிழுந்து நின்று நின்றே போக வேண்டியிருந்ததை, அவருடன் அதே வண்டியில் பயணம் செய்த நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசாவும், குமரி மாவட் டத்தைச் சேர்ந்த நண்பர் ஆஸ்டினும், நானும் நன்கறிவோம்.

சுருக்கமாய்ச் சொன்னால், கட்சியின் தலைவர்களில் ஒருவர் என்னும் நிலையிலிருந்து, மக்களின் தலைவர் என்னும் நிலைக்கு அவர் உயர்ந்திருக்கும் காட்சியை அன்று நேரில் கண்டோம்.

கண்டு நாங்கள் மகிழ்ந்தோம். தினமணியோ பொருமுகிறது. இதைக் கூட ‘மெய்யாலுமா?’ என்று தினமணி கேட்டுப்பார்க்கலாம். ‘மெய்யாலும்தான் தினமணியே மெய்யாலும்தான்’ என்று மக்கள் கூறுவார்கள்.

வேறு சில ஊடகங்களும், அவ்வப்போது தங்கள் கைவரிசையைக் காட்டத் தவறுவதில்லை. 06.10.2013 ஆம் நாளிட்ட ஜுனியர் விகடனில், ‘கழுகார் பதில்கள்’ பகுதியில், “ கருணாநிதியின் செம்மொழி மாநாடு, ஜெயலலிதாவின் சினிமா நூற்றாண்டு விழா - ஒப்பிடுக” என்று ஒரு கேள்வி. அதற்குக் கழுகார், “ இரண்டுமே அரசுப் பணத்தில் தங்களுக்குத் தாங்களே நடத்திக் கொண்ட ஆராதனைகள்” என்று விடை சொல்கிறார்.

இவ்விடை, செம்மொழி மாநாட் டைச் சிறுமைப்படுத்துவதோடு, முற்றிலும் தவறான ஒரு தகவலையும் தருகிறது. திரைப்பட நூற்றாண்டு விழாவில் நடைபெற்றதைப்போல, ‘அழைக் கப்பட்டுப் பலரும், அழைப்பின்றிப் பலரும்’ அவமதிக்கப்பட்டார்களா? முனைவர் சிவத்தம்பி உள்ளிட்ட தமிழறிஞர்கள் தொடங்கி, இல.கணேசன் உள்ளிட்ட மாற்றுக் கட்சி அரசியல் தலைவர்கள் உட்பட பலரும் அழைக்கப்பட்டுச் சிறப்பிக்கப்பட்டனரே! அனைவரது கருத்துகளுக்கும் அம்மாநாட்டின் மேடை இடம் தந்ததே! கலைஞர் தலைவர் அவர்கள் கொடுத்த, “போரைப் புறந்தள்ளிப் பொருளைப் பொதுவாக்குவோம்!” என்னும் தலைப்பை, அவர் முன்னிலையிலேயே வழக்கறிஞர் அருள்மொழி மறுத்துப் பேசினாரே-... யாராவது எதிர்த்தார் களா? கலைஞரே அருகில் அழைத்துப் பாராட்டினாரே! அந்த ஜனநாயகமும், திரைப்பட நூற்றாண்டு விழாவில் அம்மையார் காட்டிய சர்வாதிகாரமும் ஒரே மாதிரியாகத்தான் கழுகுப் பார்வையில் படுகின்றதா?

செம்மொழி மாநாட்டில் எத்தனை ஆய்வுக் கட்டுரைகள்...எத்தனை விவாதங்கள். எதுவுமே ஜுனியர் விகடனின் பார்வைக்கு வரவில்லையா?

சென்ற இதழில் திரைப்பட நூற்றாண்டு விழாவைத் தாக்கி எழுதிவிட்ட ஜுனியர் விகடன், ‘அம்மாவின்’ கோபத்திற்கு ஆளாகிவிடக் கூடாதே என்று அஞ்சி, இப்படிச் ‘சமன்படுத்தும்’ முயற்சியில் இறங்குவதுதான், ‘பத்திரிகை தர்மமா?’.

இந்த ஆட்சியில் பேசப்பட வேண்டிய மக்களின் சிக்கல்கள் எவ்வளவோ உள்ளன. அவற்றை எல்லாம் கண்டுகொள்ளாமல், அரசு தரும் விளம்பரத்திலேயே ஊடகங்கள் கண்ணும் கருத்துமாக இருக்கலாமா?

ஆளும்கட்சியை ஆதரித்துவிட்டுப் போங்கள். அதற்காக உண்மைச் செய்திகளை மறைப்பதும், திரிப்பதும் நாணயமான செயல்கள்தானா? ஒன்றை மறந்துவிடாதீர்கள்...எவ்வளவு பஞ்சை அள்ளிக் கொட்டினாலும், நெருப்பின் கொழுந்துகள் நீண்டு கொண்டேதான் இருக்கும்!

Pin It

07.10.2013 அன்று, நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் வடக்கு மாகாண முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டுள்ளார். அமைச்சர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் 11ஆம் தேதி பதவியேற்றனர். சிங்கள இனவெறியை வென்று, தங்களுக்கான ஒரு மாகாண அரசைத் தமிழ்மக்கள் அமைத்திருக்கிறார்கள். அவர்களுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையில் அமைந்திருக்கும் மாகாண அரசுக்கும் முதலில் நம்முடைய மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்த வெற்றியானது, ஈழத்தமிழர் களைப் பற்றி இரண்டு வெவ்வேறு விதமான எண்ணங்களை, உலகநாடுகளுக் கும், சிங்கள அரசியல்வாதிகளுக்கும் தோற்றுவித்துள்ளது. இந்த வெற்றி, சுயஉரிமையே தமிழ்மக்கள் விரும்பும் அரசியல் தீர்வு என்பதை உலக நாடு களுக்கு உணர்த்தியிருக்கிறது. மற்றொரு புறம், சிங்கள ஆட்சியாளர்களுக்கு ஒருவிதமான அச்சத்தை உருவாக்கி யிருக்கிறது.

இப்போது அமைந்துள்ள வடக்கு மாகாண அரசு, மத்திய சிங்கள ஆட்சிக்குக் கீழ் அமைந்துள்ள அரசு. ஒரு மாநில அரசுக்குரிய முகாமையான அதிகாரங்களான நிலம்சார்ந்த அதிகாரமும், காவல்துறை அதிகாரமும் மாகாண அரசுக்குக் கிடையாது. இனிமேலும் வழங்கப்படக்கூடாது என்று, ஜாதிக ஹெல உருமய (இலங்கையின் பி.ஜே.பி.,) உள்ளிட்ட இனவாதக் கட்சிகள் தொடர்ந்து வற்புறுத்திக் கொண்டிருக்கின்றன. எந்த ஒரு வளர்ச்சி நடவடிக்கையையும், சிங்கள ஆளுநரின் ஒப்புதலுடன்தான் மேற்கொள்ள முடியும். சுருக்கமாகச் சொன்னால், ஆட்சியில் இருந்தாலும், அதிகாரமற்ற அரசாகத்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசு இருக்கும்.

பிறகு ஏன் சிங்கள அதிகார வர்க்கத்தினர் அச்சப்படவேண்டும்?

“விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவுதான் தேர்தலில் நின்று வெற்றி பெற்று, ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. அரசியல் தந்திரத்தின் மூலம், தமிழர்கள் தங்களுடைய உரிமைகளைப் பெற்றுவிடு வார்களேயானால், அதனைச் சிங்களர் களால் திரும்பப் பெற முடியாது. தமிழ் இன வாதம் புதிய வடிவில் ஆரம்பித் துள்ளது என்று” ஜாதிக ஹெல உருமய கட்சியைச் சேர்ந்த அமைச்சர் உதய கம்மன்பில சொல்கிறார்.

‘மீண்டும் நந்திக்கடல் நோக்கிப் போக வேண்டாம் என்று விக்னேஸ்வரன் ஐயாவைக் கேட்டுக்கொள்கிறோம்’ என்றும் எச்சரிக்கிறார்.

இப்படிப் பேசி, சிங்கள மக்களிடம் அச்சத்தையும், இனவெறியையும் தூண்டி விடுகின்ற வேலைகளில் சிங்கள அமைப்புகள் இறங்கியிருக்கின்றன.

உலக நாடுகளின் கண்துடைப் புக்காக நடத்தப்பட்ட தேர்தல்தானே அன்றி, தமிழர்களுக்கு உண்மையான அரசியல் அதிகாரத்தை வழங்கும் நோக்கில் நடத்தப்பட்ட தேர்தல் அன்று என்பதை இதுபோன்ற பேச்சுகள் காட்டுகின்றன.

வடக்குப் பகுதியில் வளர்ச்சிப் பணிகள் பாதிக்கப்படாது, இலங்கை மத்திய அரசு தமிழ் மாகாண அரசுக்குத் தேவையான ஒத்துழைப்பு வழங்கும் என்றெல்லாம் ஒரு பக்கம் சொல்லப் பட்டாலும், நிலவுகின்ற சூழல் அதற்கு மாறாகவே உள்ளது. ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்ட நினைவுகளை அந்த மண்ணில் இருந்து சுவடே இல்லாமல் அழித்துவிட நினைக்கின்றனர் சிங்கள ஆட்சியாளர்கள்.

ஏற்கனவே மாவீரர் துயிலும் இடமும், தேசியத் தலைவரின் வீடும் சிதைக்கப் பட்டுவிட்டன. சில தினங்களுக்கு முன், புதுக்குடியி ருப்புப் பகுதியில் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் பயன்படுத்தியது என்று சொல்லி, ஒரு பதுங்கு குழியை இராணுவம் குண்டு வைத்துத் தகர்த்துள்ளது.

“நாம் பிரபாகரனின் பதுங்கு குழியை அழித்துள்ளோம். தீவிரவாதியின் ஆவியை உயிரோடு விட்டுவைத்திருக்க வேண்டிய அவசியம் எமக்கு இல்லை. விடுதலைப் புலிகளின் தடயங்களை இனியும் வைத்திருக்க வேண்டிய தேவையில்லை” என்று விளக்கமளித்திருக்கிறார், இராணுவப் பேச்சாளர் ருவான் வணிகசூரிய.

தமிழர் பகுதிகளில் இருந்து இராணுவத்தைத் திரும்பப் பெற வேண்டும், சிங்களக் குடியேற் றங்களை நீக்க வேண்டும், 13ஆவது சட்டத்திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பனவற்றைத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புத் தொடர்ந்து முன்வைத்து வருகிறது.

பொறுப்பேற்றுள்ள மாகாண அரசும் இவற்றை, அதிபர் ராஜபக்சே, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் ஆகியோரிடம் வலியுறுத்தி இருக்கிறது. 13ஆவது சட்டத்திருத்தம் தொடர்பாக இலங்கைக்கு இந்தியா அழுத்தம் கொடுக்கும் என்று இலங்கையில் சொன்ன குர்ஷித், இந்தியா திரும்பியதும் அதைப்பற்றி எதுவுமே பேசாமல், பாகிஸ்தான் பற்றிப் பத்திரி கையாளர்களிடம் பேசிவிட்டுப் போய்விட்டார்.

13ஆவது திருத்தம் பற்றிய இந்திய வெளியுறவுத் தறை அமைச்சரின் கருத்துக்கு, ‘அது குறித்து முடிவு செய்ய வேண்டிய இடம் இலங்கை நாடாளு மன்றம்தான்’ என்று ராஜபக்சே விடை சொல்லி இருக்கிறார். ஆனால் சிங்கள அரசியல்வாதிகளோ, வடக்குக் கிழக்கு இணைப்பு என்பது என்றைக்கும் சாத்திய மில்லை. தமிழர்களுக்கு நிலம் மற்றும் காவல்துறை அதிகாரங்கள் வழங்கக் கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருக்கிறார்கள்.

இப்படி இந்தியாவும், இலங்கையும் இரட்டை வேடம் போடுகின்ற நிலையில், நம்முடைய அணுகுமுறையிலும் மாற்றம் வர வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது. அதன் வெளிப்பாடுதான் ஈழமக்களின் தேர்தல் வெற்றி.

முகாம்களிலிருந்த இராணுவத்தினர், தேர்தலுக்குப் பின், மீண்டும் தெருக்களில் ஆயுதங்களோடும், வாக்கி டாக்கிக ளோடும் வாகனங்களில் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டுவருகின்றனர். கெடுபிடிகளும், காவல் சோதனைகளும் மீதமிருக்கின்ற வாழ்க்கையின் இயல்பு நிலையைப் பாதிக்கின்ற மோசமான சூழல் அங்கே நிலவுகிறது. ‘இலங்கையைச் சிங்கள நாடாக்க எங்களால் முடியும்’ என்று சிங்கள வெறியர்கள் கொக்கரிக் கின்றனர். இப்படிப்பட்ட சூழலில்தான், சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான வட மாகாண அரசு அமைந்திருக்கிறது.

ராஜபக்சே முன்னிலையில், பதவி யேற்றுக் கொண்ட பின்பும் விக்னேஸ் வரன் மீது விமர்சனங்கள் அதிகமாகி யிருக்கின்றன. அவருடைய அணுகுமுறை, குற்றவாளிக் கூண்டிலிருந்து ராஜபக்சே வைக் காப்பாற்றவே உதவும் என்றும், தண்டிக்க உதவாது என்றும் குற்றம் சாட்டப்படுகிறது.

இலங்கை அரசமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டு நடந்த தேர்தலின் மூலம்தான் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் என்னும்போது, அந்நாட்டு அதிபரின் முன்பாகப் பதவியேற்றது ஒன்றும் பிழையானதாகிவிடாது.

போர்க்குற்றங்களை முன்னெ டுத்துள்ள உலக நாடுகளிடம், தமிழர் பகுதிகளில் ஜனநாயகமான முறையில் தேர்தல் நடத்துகின்ற அளவுக்கு இங்கே அமைதியான சூழல் உருவாக்கப்பட்டி ருக்கிறது என்பதைக் காட்டுவதற்காக இந்தத் தேர்தல் பயன்படும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. எனினும் சிறுகச் சிறுகச் செத்துக்கொண்டிருக்கும் மக்களைக் காக்க வேண்டிய தேவை நமக்கு இருக்கிறது.

இந்தத் தேர்தலை ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட உலக நாடுகள் வரவேற்றுள்ள நிலையில், அந்நாடுகளின் கவனம் தமிழர் பகுதிகளின் மீது இருக்கும்படிச் செய்ய வேண்டியது அவசியம். காரணம், ஈழத்தமிழர்கள் இந்தத் தேர்தலில் இப்படிப்பட்ட ஒருமித்த வெற்றியைப் பெறுவார்கள் என்பதை இந்தியாவே எதிர்பார்த்திருக்கவில்லை என்பதை, வெளிவிவகாரத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்தின் பேச்சு காட்டுகிறது.

சம்பூரில் அனல் மின்நிலையம் அமைக்க ஒப்பந்தம் போட்டுவிட்டு வந்திருக்கிறார் சல்மான் குர்ஷித். அந்தப் பகுதி மக்களின் எதிர்ப்பினால், சிங்கள அரசு செய்யத் தயங்கிக் கொண்டிருந்த ஒன்றை, இந்திய அரசு போய் முடித்து வைத்திருக்கிறது. இதுதான் உண்மைநிலை என்னும்போது, பாறாங்கல்லில் மோதி மண்டையை உடைத்துக் கொள்வது புத்திசாலித்தனமாகுமா?

இவ்வளவு சிக்கல்களுக்கு நடுவில், பொறுப் பேற்றிருக்கும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள், மக்களின் நம்பிக்கைக்கு உரியவர்களாக நடந்துகொள்ள வேண்டியது மிக முக்கியம். ஆனால், அவர்களுக்குள்ளும் பதவிச் சண்டைகள் வந்துபோகின்றன என்னும் செய்தி வேதனையைத் தரக்கூடியதாக இருக்கிறது. திக்கு திசை புரியாமல் இருந்த நிலையில், தேர்தலின் மூலம் ஒரு பிடிமானத்தைப் பெற்றிருக்கிறார்கள் ஈழத்தில் உள்ள மக்கள். வாழ்க்கையைப் பணயம் வைத்துத் தேர்தலில் வாக்களித்த, ஈழத்தில் வாழும் மக்களுக்கும், அவர்களின் விருப்பங்களுக்குமே மாகாண அரசு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

நெருப்புக்கு அருகில் இருப்பவனுக்குத்தான் அதன் கொடுமை தெரியும். ஏர்லங்கா விமானம் ஏறி கலை இலக்கிய சங்கமத்துக்கு மட்டும் ஈழம் வந்து போகின்றவர்களும், இந்தியாவின் ராஜபக்சே மோடியோடு கூட்டணி வைத்து, பத்ம வியூகம் அமைப்பதில் முன்னணியில் நிற்பவர்களும், ‘விக்னேஸ்வரன் ராஜபக்சே முன்னிலையில் பதவியேற்றதில் எனக்குத் துளியும் மகிழ்ச்சியில்லை’ என்று சொல்வதும், விமர்சனம் செய்வதும் எந்தவிதத்திலும் நியாயமில்லை.

சொல்லுதல் யார்க்கும் எளிது அரியவாம்
சொல்லி வண்ணம் செயல்.

Pin It

இந்திய முன்னாள் பிரதமர் இராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, இணைக்கப்பட்டவர்கள் பேரறிவாளன், சாந்தன், முருகன்.

இக்கொலை வழக்கில், சிறப்புக் கண்காணிப்புக் குழு வழங்கிய அறிக்கையின் அடிப்படையில், பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோர் மீது தொடுக்கப்பட்ட வழக்கில், இவர்களைக் குற்றவாளிகளாக நீதிமன்றம் அறிவித்து, மரணதண்டனை விதித்தது.

இத்தீர்ப்பை எதிர்த்து நெடிய போராட்டத்தை இவர்கள் நடத்திக்கொண்டிருக்கும் நிலையில், புலனாய்வு அமைப்பின் விசாணை நிறைவுதராததால், மறுவிசார ணை தேவை என்று நீதிமன்றத்தில் முறையீடு செய்துள் ளார் பேரறிவாளன்.

சிறப்புக் கண்காணிப்புக் குழுவின் விசாரணை முறையாக நடைபெறவில்லை. அப்படி நடைபெற்றால் இச்சதித் திட்டத்தின் பின்னணியில் உள்ள அனைத்து உண்மைகளும் வெளிவரும். பெயர் குறிப்பிடப்படாத சில அரசியல்வாதிகள், அதிகாரிகளுக்கு இதில் தொடர்பு இருக்கிறது. அதனால் விசாரணை நேர்மையாக நடைபெறவில்லை.

குற்றம் சாட்டப்பட்டு ஆனால் அவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்படவில்லை. அவர்களைச் சிறப்பு விசாரணைக் குழு அமைத்து நீதிமன்றத்தின் நேரடிக் கண்காணிப்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பேரறிவாளன் தன் மனுவில் கூறியு-ள்ள கோரிக்கைகள் நியாயமானவைகள்.

இவ்வழக்கு முதலாவது கூடுதல் நீதிமன்ற நீதிபதி என்.தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தபோது புலனாய்வு அமைப்பு பதில்மனு தாக்கல் செய்தது. அதில் ஜெயின் கமிஷன் அறிக்கையின் அடிப்படையில், இந்த வழக்கைத் தொடர்ந்து கண்காணிக்க, சி.பி.ஐ.யின் கீழ் பல்நோக்கு விசாரணை ஒழுங்குமுறை முகமை 1998இல் அமைக்கப்பட்டு, இவ்வழக்கில் தொடர்புடையவர்களைக் கண்காணித்தும், விசாரித்தும் வருவதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதன்மூலம் இவ்வழக்கில் தொடர்புடையவர்கள் மீதான விசாரணையை முறையாக முடிக்கவில்லை என்பதை சி.பி.ஐ. ஒப்புக் கொண்டுள்ளது. குறிப்பாக ஜெயின் கமிஷன் சந்தேகத்திற்குரியவர்கள் என்று சுட்டிக்காட்டிய சுப்பிரமணியசாமி, சந்திராசாமி ஆகியோர் விசாரிக்கப்படவில்லை.

பேரறிவாளன் கோரிக்கையில் அரசு அதிகாரிகளும் விசாரணை வளையத்தில் வருகிறார்கள். குற்றப்புலனாய்வு அமைப்பின் பதில் மனுவின் மூலம் ஒரு செய்தி தெளிவாகிறது. அதாவது ராஜீவ் கொலைக் குற்ற வழக்கின் விசாணை முழுமையாக முடிக்கப்படவில்லை, விசாரணை தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. தொடர்புடையவர்கள் இன்னமும் கண்காணிக்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

விசாரணையே முடியாமல் தண்டனை வழங்கியது என்ன நீதி? சாதாரண மக்களின் கடைசி நம்பிக்கை நீதிமன்றம். அதுவே கேள்விக்குரியதாக மாறிவிடக் கூடாது.

***

ஒரு நூலகம் மறைந்துவிட்டது

நாமக்கல் நா.பா.இராமசாமி அய்யா அவர்கள் சென்ற மாத இறுதியில் இறந்துவிட்ட செய்தி, ஒவ்வொரு தமிழ் உணர்வாளரின் நெஞ்சிலும் மிகப் பெரிய வேதனையை ஏற்படுத்தியுள்ளது. மறைந்தவர் தனி மனிதரில்லை, அவரே ஒரு நூலகம் என்பதை அவருடன் பழகியவர்கள் அறிவார்கள். ஏறத்தாழ 35 ஆயிரம் நூல்களை வாங்கிப் பாதுகாத்த பெருமகன் அவர். அவர் வீடு முழுவதும் நூல்கள்தான். அனைத்தும் அரிய நூல்கள். எங்கும் கிடைக்காத, ஒரு நூற்றாண்டுக்கு முந்திய நூல்கள் பல அவர் வீட்டில் இருக்கின்றன.

உடல்நலமில்லாமல் இருந்த நேரத்திலும் கூட, நூல்களைப் பற்றியே கூடுதலாக அவர் கவலைப்பட்டுக் கொண்டிருந்தார். எல்லா நூல்களையும் ஈழத்திற்கு அனுப்பிவிட வேண்டும் என்கிற எண்ணத்தோடும் அவர் இருந்தார். பழகுதற்கு இனிய அப்பெருமகனாரின் நினைவுகள் நம் நெஞ்சை வாட்டுகின்றன. அவர் குடும்பத்தினரோடு இணைந்து நாமும் துயரத்தைப் பகிர்ந்து கொள்வோம்.

Pin It

தனித்தெலுங்கானா கோரிக்கையின் அடிப்படையில் பற்றி எரிந்தது போராட் டம், அந்தப் பகுதியில். அப்பொழுது சீமாந்திரா எனப்படும் இராயலசீமா, கடலோர ஆந்திரப் பகுதிகள் அமைதியாக இருந்தன. இது தனித்தெலுங்கானா என்ற கொள்கை முடிவை மத்திய அரசு அறிவிப்பதற்கு முன் நடந்த நிகழ்வு.

அறிவிப்பிற்குப்பின் தெலுங்கானா அமைதியாகிவிட்டது. சீமாந்திரா பகுதிகளில் போராட்டத்தீ கொழுந்து விட்டு எரியத் தொடங்கிவிட்டது. இது தெலுங்கானா பிரிவுக்கு எதிரான போராட்டம்.

03.10.2013 அன்று கூடிய மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், ஆந்திராவில் இருந்து தனித்தெலுங்கானா மாநிலம் உருவாக்க எடுத்த முடிவுக்குப் பின்னர், 13 மாவட்டங்களில் போராட்டம் மிகத் தீவிரம் அடைந்துள்ளது.

கடையடைப்புப் போராட்டம், பேருந்துகள் நிறுத்தம், தீவைப்பு, கல்வீச்சு, உருவபொம்மைகள் எரிப்பு என்று தொடர்ந்த வன்முறை யினால், துப்பாக்கிச்சூடு நடத்தப் பெற்றது மட்டுமின்றி, விஜயநகரம் உள்பட சில பகுதிகளில் ஊரடங்கு உத்தரவும் போடப்பட்டது.

அரசுப்பணியாளர்கள் ஆந்திர முதல்வரின் வேண்டுகோளை ஏற்க மறுத்துத் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகி றார்கள். மில் தொழிலாளர்களும் போராட்டத்தில் இறங்கிவிட்டார்கள். இதனால் ஆந்திராவின் பெரும்பகுதி மாவட்டங்கள் மின்சாரம் இல்லாமல் இருளில் மூழ்கிக் கிடக்கின்றன. மின்தொடர் வண்டிகள் மட்டுமின்றி, மற்ற தொடர்வண்டிகளும் நிறுத்தப்பட்டுள்ளன.

தன் கோயிலுக்கு வரும் பக்த கோடிகளைத் தடையின்றி வரச்செய்ய திருப்பதி வெங்கடாசலபதியால் கூட முடியாத அளவுக்குப் போராட்டங்கள் வலுப்பெற்று வருகின்றன.

காக்கிநாடாவில் ஒய்.எஸ்.ஆர்., கட்சியின் மத்திய அமைச்சர் பல்லம் ராஜு, விசாகப்பட்டினத்தில் மத்திய அமைச்சர் புரந்தேஸ்வரி, மாநில அமைச்சர் கண்டசீனிவாசராவ் ஆகியோ ரின் வீடுகள் போராட்டக்காரர்களால் முற்றுகைக்குள்ளாக்கப்பட்டன. ஸ்ரீகாகுளத்தில் மாநில அமைச்சர் கொண்டுரு முரளி வீட்டின் முன் “வீடு காலியாக உள்ளது” என்று எழுதிப்போட்டுப் போராட்டம் நடத்தியிருக்கிறார்கள்.

இந்திய வரலாற்றில் ஒரு மாநிலப் பிரிவினைக்கு இதுபோன்ற ஒரு பெரிய போராட்டம் இதுவரை நடந்ததில்லை.

பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தின் போதே தெலுங்கு பேசும் மக்களின் முன்னேற்றம் கருதி அமைக்கப்பட்ட “ஆந்திர மகா சபா”வின் பின்புலம், சென்னை மாகாணச் சட்டப்பேரவைத் தேர்தலில் தெலுங்கு பேசும் மக்கள் பகுதியில் காங்கிரசுக்கு ஏற்பட்ட படுதோல்வி, 58 நாள்கள் தொடர் உண்ணாவிரதம் இருந்து உயிர் துறந்த பொட்டி ஸ்ரீராமுலுவின் தியாகம், அவைகளின் விழைவால் ஏற்பட்ட கலவரங்கள் போராட்டங்களை அடுத்து, இந்தியாவின் முதல் மொழிவழி மாநில மாக, கர்னூலைத் தலைநகராகக் கொண்டு உருவானதுதான் ஆந்திரப்பிரதேசம்.

இன்றைய ஆந்திராவின் தெலுங்கானாப் பகுதி 1948இல் ஐதராபாத் நிஜாம் உஸ்மான் அலிகான் ஆட்சிக்கு உட்பட்டு இருந்தது. இந்தப் பகுதியை இராயலசீமா, கடலோர ஆந்திரப்பிரதேசத்துடன் இணைத்த பொழுது ஐதராபாத் தலைநகரம் ஆகியது.

ஏறத்தாழ 65 ஆண்டுகளுக்கு முன்பே தெலுங்கானா மக்கள் தங்கள் பகுதியைத் தனித் தெலுங்கானா மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார்கள்.

ஆந்திராவின் தெலுங்கானா தனி மாநிலப் போராட்டம் ஒரு தேசிய இனப் போராட்டம் என்று சொல்ல முடியாது. இவ்விருபகுதி மக்களின் தாய்மொழி தெலுங்கு. அவர்களின் பண்பாட்டுக் கூறுகள் அனைத்தும் ஒரே தன்மையானவை. ஆனாலும் தெலுங்கானாவைத் தனிமாநிலமாக ஆக்குவதற்கு அங்குள்ள மக்கள் போராடு கிறார்கள் என்றால் என்ன காரணம்?

நிலவியல் அடிப்படையில் வளம் மிக்க பகுதி தெலுங்கானா. கிருஷ்ணா நதியும், கோதாவரி நதியும் தெலுங்கானா வழியாகத்தான் சீமாந்திராவுக்கு வருகின்றன. சிங்கரேணி நிலக்கரிச் சுரங்கத்தில் இருந்துதான் சீமாந்திரா அனல்மின் நிலையங்களுக்கு நிலக்கரி வருகின்றது.

தெலுங்கானாவின் விளைநிலங்கள் 80 சதவீதமாக இருந்தாலும், அவை சீமாந்தி ராவின் ஆதிக்கச் சாதிப் பணக்காரர்களின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. விளை பொருள்கள் பெரும்பாலும் கடலோர ஆந்திரப் பகுதிகளுக்குப்போய்விடுகின்றன. மண்ணின் மைந்தர்கள் கூலிகளாய் குறுகிப்போய் இருக்கிறார்கள். ஐதராபாத் கணினிமயப்பட்ட உயர் தொழில் நுட்ப மாக உயர்ந்திருந்திருந்தாலும், அதனால் எந்தப்பயனும் தெலுங்கானா வுக்கு ஏற்படவில்லை. இதுவே தனித் தெலுங்கானா கோரிக்கைக்கு அடிப்படையானது.

ஒரு தேசிய இனத்திற்குள் சாதி ஆதிக்கம், பொருளாதாரச் சுரண்டல், ஏற்றத்தாழ்வு, சமத்துவம் இன்மை, ஒடுக்குமுறை இவைகளை ஏற்றுக்கொள்ள முடியாது. அப்படி இருக்கும் நிலையில், ஒடுக்கப்பட்டவர்கள் கொதித்து எழத்தான் செய்வார்கள். அந்த எழுச்சிதான் தெலுங்கானா தனிமாநிலப் போராட்டம். இந்தப் போராட்டத்தை ஆந்திர அரசியல் தலைவர்களும், கட்சிகளும் அரசியலாக்கி சுயலாபம் அடைய முயற்சிக்கின்றன.

எடுத்துக்காட்டாக 2008ஆம்ஆண்டு அக்டோபர் 9ஆம் தேதி கூடிய தெலுங்கு தேசக் கட்சியின் அரசியல் தலைமைக் குழுவில் தெலுங்கானா அமைவதற்கு ஆதரவு தெரிவித்ததோடு, “ தெலுங்கானா அமைப்பது வரலாற்றின் முக்கியத் தேவை. அதற்கான ஒத்துழைப்பை தெலுங்கு தேசம் கட்சி மத்திய அரசுக்குக் கொடுக்கும்” என்று உறுதியளித்துத் தீர்மானம் நிறைவேற்றிய சந்திரபாபுநாயுடு, இன்று அதற்கு நேர் எதிராக தில்லியில் உண்ணாவிரதம் இருந்து கொண்டு இருக்கிறார்.

2013 ஜுன் 25ஆம் தேதி ஆந்திராவின் இருபுலபாயா என்ற இடத்தில் கூடிய ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் செயற்குழுவில், “ஆந்திரத்தைப் பிரிப்பதன் மூலம் அந்த மாநில மக்களுக்குச் சமமான நீதி கிடைக்குமானால், அந்த முயற்சிக்கு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் முழு ஆதரவு அளிக்கும்” என்று தீர்மானம் இயற்றி, அதற்கான கடிதத்தை அக்கட்சியின் தலைவர் விஜயம்மா கொடுத்திருக்கிறார்.-இவைகளுக்கு நடுவே பா-.ஜ.க., குட்டையைக் குழப்பிக்கொண்டிருக்கிறது. மத்திய ஆளும் கட்சியான காங்கிரஸ் இப்பிரச்சினையை நிதானமாய், முறைப்படி அணுகாமல் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. 2014ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை முன்வைத்தே தெலுங்கானா மாநிலப் பிரிவினையைக் காங்கிரஸ் அவசரக்கோலத்தில் அள்ளித்தெளித் துள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள்.

தெலுங்கானாச் சிக்கலை வெறும் அரசியலாக மட்டும் பார்க்காமல், அப்பகுதி மக்களின் வாழ்வியல் மற்றும் சமஉரிமைக்கான போராட்டமாகப் பார்க்க வேண்டும். கல்வி, வேலைவாய்ப்பு களில் மண்ணின் மைந்தர்களுக்கு உரிய முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.

தெலுங்கானாவின் வளர்ச்சிக்கான நிதி ஆதாரம், மனிதவள மேம்பாடு குறித்தெல் லாம் சரியான திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும்.

எந்த ஒரு செயலும், அதனுடைய தீர்வை ஒட்டி மட்டுமல்லாமல், அந்தத் தீர்வை நோக்கி நகர்ந்த அணுகுமுறையை யும் சார்ந்தே மதிப்பிடப்படும். தெலுங்கானா பிரிவினை சரியா, தவறா என்பதில் இருவேறு கருத்துகள் இருக்கலாம். ஆனால் அதனை மத்திய அரசு கையாண்ட விதம் சரியானதில்லை என்பதே நம் கருத்து.

Pin It

(உலகத் தமிழியல் ஆய்வு நடுவத்தின் சார்பில், 14.08.2013 முதல் 18.08.2013 வரை, லண்டனில் நடைபெற்ற ஆய்வு மாநாட்டின் விடைபெறு விழாவில், திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டியன் ஆற்றிய நிறைவுரையின் ஒரு பகுதி)

இம்மாநாட்டின் நிறைவுரைச் சொற்பொழிவை ஆற்றுவதற்கு எனக்கு வேறு தகுதி உள்ளதோ, இல்லையோ, ஒரு தகுதி கண்டிப்பாக உள்ளது. கடந்த நான்கு நாள்களாக, வேறு எல்லாப் பணிகளையும் மறந்து, தொடர்புகளை எல்லாம் துறந்து, முழு நேர மாணவனாகி, இங்கு படிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரைகளில் ஒன்றைக் கூடத் தவற விடாமல் கேட்டுக் குறிப்புகளையும் எடுத்து, இந்த உலகிலேயே முற்று முழுக்க வாழ்ந்தேன் என்பதுதான் அந்தத் தகுதி என்று கருதுகின்றேன்.

மாநாட்டின் தொடக்க நாள் அன்று என்னுள் ஓடிய ஒரு எண்ணத்தை இங்கு பகிர்ந்து கொள்ளலாம் என்று கருதுகின்றேன். அன்று நான் விழா அரங்கில் அமர்ந்திருந்தபோது, என் அருகில், லண்டன் செல்வா விநாயகர் கோவில் குருக்கள்மார்கள், காவி உடையுடன் அமர்ந்திருந்தனர். நான் வழக்கம் போல் கறுப்புச் சட்டையில் இருந்தேன். கறுப்பையும், காவியையும் தமிழன்றி வேறு எது இணைக்கும் என்று எண்ணிச் சிரித்துக் கொண்டேன்.

அவ்வாறே, அரசியல் கருத்து வேறுபாடு கொண்டவர்களும் இங்கே இணைந்துள்ளோம். இம்மாநாட்டிற்கு வருகை தந்துள்ள, உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் அவர்களும், நானும், முற்றிலும் வேறு வேறுபட்ட இரு அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்கள் என்பதை அனைவரும் அறிவர். எனினும் நாங்கள் இங்கே அரசியல் சிந்தனைகளைத் தாண்டி, ஆய்வு மாணவர்களாகவே இணைந்திருந் தோம் என்பது குறிக்கத்தக்கது.

பல்வேறு கொடிகள், பல்வேறு தலைமைகளின் கீழ் நாம் வேறுபட்டு நின்றாலும், தமிழ் என்னும் ஒரே குடையின் கீழ் அனைவரும் ஒன்றுபட்டு நின்று, எதிர்காலத் தமிழ் இன, மொழி வளர்ச்சிக்குப் பாடுபட முடியும் என்ற நம்பிக்கையை இம்மாநாடு தந்துள்ளது.

தமிழியல் ஆய்வையும் இம்மாநாடு சிறப்புற நடத்தியுள்ளது. பத்துக்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து இங்கு வந்துள்ள அறிஞர்கள், 124 ஆய்வுக் கட்டுரைகளை வழங்கியுள்ளனர். அவற்றுள் ஏறத்தாழ ஐம்பது கட்டுரைகள் படிக்கப்பட்டு விவாதிக்கப் பட்டுள்ளன. இது ஒரு போற்றத்தக்க நிகழ்வாகும்.

இவையெல்லாம் வெறும் தொடக்கம்தான் என்பதை நாம் மறந்துவிடலாகாது. இம்முயற்சிகள் தொடர வேண்டும். தமிழ் அறிவையும், தமிழ் உணர்வையும் மென்மேலும் வளர்த்தெடுத்திட வேண்டிய கடமை, தமிழர்களாகிய நம் அனைவருக்கும் உள்ளது. அத்தோடு இன்னொரு கடமையும் நம் முன் இருக்கிறது.

புலம் பெயர்ந்த நாடுகளில் வாழும் இன்றைய தலைமுறைப் பிள்ளைகள், 'நாங்கள் ஏன் தமிழ் படிக்க வேண்டும்?' என்று கேட்பதாகக் கூறினார்கள். இன்று நீங்கள் எல்லோரும் வானில் கிளை விரித்திருக்கலாம்; எனினும், அனைவரும் மண்ணில்தான் வேர் பிடிக்க வேண்டும்.

என்றேனும் ஒரு நாள் நம் தாய் மண்ணிற்குத் திரும்ப வேண்டியவர்கள் தாமே நாமெல்லாம்? இன்னும் பல்லாண் டுகள் நீங்கள் இந்த மண்ணிலேயே வாழ்ந்தாலும், ஆங்கிலேயர்களை விட அழகாக ஆங்கிலம் பேசினாலும், ஒருநாளும் ஆங்கிலேயராக முடியாது.

அவர்களும் உங்களை ஆங்கிலேயர் என்று ஏற்க மாட்டார்கள். ஆங்கிலம் பேசினாலும் நீங்கள் ஆங்கிலேயர் இல்லை. தமிழே பேசத் தெரியவில்லை என்றாலும், நீங்கள் தமிழர்கள்தாம்!

ஆயிரம் மொழிகளைக் கற்றுக் கொள்ளுங்கள். ஆனால் தாய் மொழியை மறந்து விடாதீர்கள்! எந்த நாட்டில் வேண்டுமானாலும் வாழுங்கள்...ஆனால் சொந்த நாட்டை மறந்து விடாதீர்கள்!

மூத்தவர்களுக்கு ஒரு வேண்டுகோள்! குறைந்தது திருக்குறளையாவது பிள்ளை களுக்குக் கற்றுக் கொடுங்கள். திருக்குறள் படித்தால் வேலை கிடைக்குமா என்று கேட்டால், கிடைக்காது என்பதுதான் உண்மை. ஆனால், திருக்குறள் படித்தால், கிடைத்த வேலை நிலைக்கும், புதிய உறவுகள் கிளைக்கும், வாழ்வு செழிக்கும். காரணம், திருக்குறள் என்பது ஒரு வாழ்வியல் நூல். எந்த மண்ணிலும், எந்த ஒரு மொழி பேசும் மக்களோடும் எப்படிச் சேர்ந்து வாழ்வது என்பதையும், எப்படிச் சிறந்து வாழ்வது என்பதையும் திருக்குறள் நம் பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுக்கும்.

தமிழர்களாய் இணைந்தோம்......தமிழர்களாய்ப் பிரிகிறோம்... மீண்டும் மீண்டும் தமிழர்களாய் இணைவதற்காக!

Pin It