ஈழத்தில் மாபெரும் இனப்படுகொலை நிகழ்த்தியப் போர்க் குற்றவாளி இராபக்சேவிடம் விரல்நீட்டிப் பேசவேண்டிய இந்தியப் பேரரசு, கையேந்திப் பேசியதன் விளைவு, இந்தியாவின் யோசனையை நிராகரித்தது இலங்கை என்ற தலைப்புச் செய்திகள் பத்திரிகைகளில் இடம் பெற்றன.

தமிழக சட்டப்பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானம் இயற்றியபின், மத்திய அரசால் இலங்கைக்கு அனுப்பப்பட்ட தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர மேனன், இந்திய வெளியுறவுச் செயலாளர், நிருபமாராவ், பாதுகாப்புச் செயலாளர் பிரதீப்குமார் ஆகியோர் அடங்கிய இந்தியக் குழு கொழும்புவில் இராஜபக்சேவைச் சந்தித்துப் பேசியது.

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய சிவசங்கர மேனன், இலங்கை இனப்பிரச்சினைக்கு அரசியல் அடிப்படையில் தீர்வுகாண 1987ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட இலங்கையின் 13ஆம் அரசியல் சாசன சட்டத் திருத்தத்தின் அடிப்படையில் ஈழத்தமிழர்களுக்குச் சுய அதிகாரம் வழங்குவதில் இலங்கை அரசு தீவிரமாக இருப்பதாகச் சொன்னார்.

ஆனால் இந்தியக் குழு இலங்கையிடம் பேசிவிட்டு நாடு திரும்பும் முன்னரே, ஈழத்தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிப்பது தொடர்பாக இந்திய அரசின் யோசனையை இலங்கை நிராகரித்தது என்று, அந்நாட்டு ஊடகங்களே செய்தி வெளியிட்டு விட்டன.

ஈழத் தமிழர்களக்கு அரசியல் அதிகாரங்கள், வாழ்விடங்கள் மீதான அதிகாரங்கள், காவல்துறை அதிகாரங்கள் போன்ற முக்கியமான அதிகாரங்களை அளிக்க முடியாது என்று இந்தியக் குழுவினரிடம் இலங்கை அரசு நேரடியாக தெரிவித்ததாகத் தெரிகிறது என்று ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டன.

ஐ.நா. அவையின் ஆய்வுக் குழு அளித்த அறிக்கையின்படி, இராஜபக்சே மனிதநேயமற்ற ஒரு போர்க்குற்றவாளி. இனப்படுகொலையாளன்.

புகழ்பெற்ற பி.பி.சி. தொலைக்காட்சியின் 4ஆவது அலைவரிசை ஈழப்படுகொலைக் கொடூரங்களைச் செய்திப்படமாக இப்போது வெளியிட்டுக் கொண்டிருக்கிறது. இக்கொடூரத்தை நார்வே நாடாளுமன்ற உறுப்பினர்கள் பார்க்கச் சகிக்காமல் அவையை விட்டுக் கண்ணீரோடு வெளியேறியதாகவும் ஒரு தகவல் கூறுகின்றது.

ஈழத்தமிழ் இனத்தைப் பூண்டோடு ஒழிப்பதில் தீவிரம் காட்டி வரும் இராஜபக்சே, ஐ.நா. அறிக்கையைக் கூட மதிக்கவில்லை என்பது மட்டுமன்று, இந்தியாவையும் மதிக்கவில்லை. ஆனால் தன்னைக் காப்பாற்றிக் கொள்ளமட்டும் இந்தியா துணை செய்ய வேண்டும் என்று முதலைக் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறார்.

ஆனாலும் மீண்டும் பேசுவதற்கு பிரதமர் மன்மோகன்சிங் புறப்பட இருக்கிறாராம் இலங்கைக்கு.

வாழிடங்களுக்கான அதிகாரம் மறுக்கப்படுவதால், அங்கு சிங்களக் குடியேற்றம் நடக்கும். காவல்துறை அதிகாரம் மறுக்கப்படுவதால் சிங்களக் காவலரின் ஒடுக்குமுறை தொடரும். அரசியல் அதிகாரம் மறுக்கப்படுவதால், ஈழத்தமிழர்கள் நிரந்தரமாக இரண்டாந்தரக் குடிகளாக்கப்படுவார்கள்.

இனியும் மேனன்களும், ராவ்களும் பேசிப்பேசி ஒன்றும் ஆகப்போவதில்லை.

போர்க்குற்றவாளி இராஜபக்சேவைத் தண்டிக்க இத்தருணத்தையாவது பயன்படுத்தித் தன் தவற்றை இந்தியா திருத்திக் கொள்ளவேண்டும்.

Pin It