ஸ்ரீலங்கா அதிபர் தேர்தலில், கொடுங்கோலன் மகிந்த ராஜபக்சேயின் வெற்றி எதிர்பார்த்ததுதான் என்றாலும், இவ்வளவு பெரிய வாக்கு வித்தியாசத்தை யாரும் எதிர்பார்க்கவில்லை. தேர்தல் நாளில், தமிழர்களின் பகுதிகளில் குண்டுகளை வெடித்து, வாக்குச் சாவடிகளுக்கு வருவதற்கே அச்சம் ஏற்படுத்தியதும், பல இடங்களில், நேரடியாகவே தமிழர்களை வாக்குப் பதிவு செய்ய விடாமல் தடுத்ததுவும், கூடுதல் வாக்கு வித்தியாசத்திற்குக் காரணங்களாக இருக்கலாம்.

எனினும் ராஜபக்சேயின் வெற்றிக்குத் தமிழர்களும் ஒரு விதத்தில் காரணமாகியுள்ளனர். தமிழர்கள் அனைவரும் ஒரே அணியில் நின்றிருந்தால், குறைந்த பட்சம், முதல் சுற்றிலேயே 58.5 % வாக்குகள் பெற்று, வெற்றி பெற்ற நிலை வந்திருக்காது. 50 விழுக்காட்டிற்கும் குறைவான வாக்குகளையே இருவரும் பெற்றிருப்பின், இரண்டாவது சுற்றுத் தேர்தல் தேவையாகியிருக்கும். அப்போது தமிழர்களின் வாக்குகளை நாட வேண்டிய தேவை இருவருக்கும் வந்திருக்கும்.

தேர்தல் களத்தில் தமிழர்களின் வாக்குகள் பல பக்கமும் சிதறிவிட்டன. சம்பந்தனார் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டணி, பொன்சேகாவை ஆதரித்தது. டக்ளஸ், கருணா போன்ற துரோகிகள் ராஜபக்சேவை ஆதரித்தனர். சிவாஜிலிங்கம் சுயேச்சையாய்த் தேர்தலில் இறங்கினார். மலையக மக்களின் வாக்குகள் ஒரே திசையில் இல்லை. இரண்டு கொலைகாரர்களில் எவன் வென்றால் என்னவென்று கருதிப் பலர் வாக்களிக்கவில்லை.

இப்படிச் சிதறிப்போன வாக்குகள், ஒரு விதத்தில் ராஜபக்சேவுக்கு உதவியாய்ப் போய்விட்டன. சிங்களர்களைப் பொறுத்தளவில், தமிழினத்திற்குக் கூடுதல் கொடுமைகளைச் செய்தவனைத்தானே ஆதரிப்பார்கள்.

தமிழர்களுக்கு, தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் தான் தலைவர் என்றால், சிங்களர்களுக்கு ராஜபக்சேதானே தலைவராக இருக்க முடியும். எனவே சிங்களர் வாக்குகளில் பெரும்பான்மை, ராஜபக்சேவுக்குக் கிடைத்திருக்க வாய்ப்புண்டு.

ஈராக் நாட்டையே அழித்தொழித்தபின், அமெரிக்காவில் நடைபெற்ற தேர்தலில், ஜார்ஜ் புஷ் தோல்வி அடைவார் என்றே உலகம் எதிர்பார்த்தது. ஆனால் அவர் வென்றார். ஆனாலும் அந்த வெற்றி இழுபறியாகத்தான் இருந்தது. அப்படி ஒரு வெற்றிதான் ராஜபக்சேவுக்கும் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு பொய்யாகிவிட்டது. அமெரிக்கர்களுக்கு இருந்த மனிதநேயமும், ஜனநாயக உணர்வும் கூடச் சிங்களர்களுக்கு இல்லாமல் போய்விட்டது.

“தருமத்தின் வாழ்வதனைச் சூது கவ்வும்

தருமம் மறுபடியும் வெல்லும் ” என்றான் பாரதி.

ஆனால் நடைமுறையிலோ, பலவேளைகளில், மறுபடியும், மறுபடியும் சூதுதான் வெல்கிறது.

-சுப.வீரபாண்டியன்

Pin It