அனைத்துத் தனியார் கல்வி நிறுவனங்களுக்குமான கட்டணத் தொகையை தமிழக அரசு நிர்ணயம் செய்துள்ளது. இது ஒரு வரவேற்கத்தக்க நிகழ்வாகும்.

எனினும் கடந்த பல ஆண்டுகளாகத் தத்தம் விருப்பத்திற்கு ஏற்ப கல்விக் கட்டணங்களை வாங்கிப் பழகிவிட்ட தனியார் கல்வி நிறுவனங்கள் இவ்வாணையை எதிர்க்கின்றன. மேல்முறையீடுகளுக்கும் சென்றுள்ளன. தொடக்கத்தில், வரிந்துகட்டிக் கொண்டு கட்டண நிர்ணயத்தை எதிர்த்த அவர்கள், பிறகு சற்றுக் கீழ் இறங்கியுள்ளனர். மக்களின் பொது நலனுக்கு எதிராக நாங்கள் எந்த ஒன்றையும் வலியுறுத்த மாட்டோம் எனப் பெருந்தன்மையாகக் கூறுவதுபோல ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளனர். இதில் ஒருவிதமான பாசாங்கு தென்படவே செய்கிறது. இந்த அறிக்கைக்குப் பின்னால், வெளியிடப்படாத வேறு ஒரு திட்டம் அவர்களிடம் இருக்கக் கூடும் என்றே தோன்றுகிறது.

எந்த ஒரு சமரசத்திற்கும் இடமில்லை என்று முதலில் மிக உறுதியாகக் கூறிய தமிழகப் பள்ளிக் கல்வி அமைச்சரிடமும் இப்போது ஒரு சிறு சமரசம் தென்படுகிறது. எக்காரணம் கொண்டும் தன்நிலையில் இருந்து தமிழக அரசு வழுவிடக்கூடாது என்பதே நம் விருப்பம்.

பெயர் பெற்றுவிட்ட சில கல்விநிறுவனங்கள் ஆண்டிற்கு ஒருமுறை, ஒருநாள் மட்டுமே அனுமதிக்கான விண்ணப்பங்களை வழங்குகின்றன. மக்களும், அந்தக் குறிப்பிட்ட நாள் வரும்போது, முதல் நாள் மாலையில் இருந்தே துண்டுவிரித்து, தெருவில் உறங்கி, அடுத்த நாள் அந்த விண்ணப்பங்களைப் பெற்றுச் செல்கின்றனர். திட்டமிட்டே, கல்வியையும் பெற்றோர்களையும் இழிவுபடுத்தும் செயல் இது. இந்த அவமானங்களைப் பொருட்படுத்தாது பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளுக்கான கல்விப் பணியை நிறைவுசெய்வதாக எண்ணிப் பெருமைப்படுகின்றனர். இப்படி வரிசையில் நிற்கும் பெற்றோர்களில் படித்தவர்களும், பணக்காரர்களும்தான் மிகுதியாக உள்ளனர்.

அறிவியலும், தொழில்நுட்பமும் பேரளவிற்கு வளர்ந்திருக்கும் இன்றைய சூழலில், விண்ணப்பங்களை வழங்குவதற்கு, மின்னஞ்சல் முதலான ஆயிரம் எளிய முறைகள் உள்ளன. ஆனால் எல்லோரையும் காத்துக்கிடக்க வைத்து, அவர்களை இழிவுபடுத்தி விண்ணப்பங்களை வழங்குவதுதான், அக்கல்விக் கூடத்திற்குப் பெருமை என்று அவர்கள் நினைக்கிறார்கள். இழிவை இவர்களும் சுமக்கிறார்கள்.

இவ்வாறு பல்வேறு வகையிலும் சமூகத்திற்கும், பொதுநலத்திற்கும் எதிராக இயங்குகின்ற தனியார் கல்வி நிறுவனங்கள் பலவற்றையும், ஒரு கட்டுக்குள் கொண்டுவரவேண்டிய மிகப்பெரிய தேவை அரசுக்கு உள்ளது. நியாயமான கட்டணங்களை நியமிப்பதன் மூலமும், மேலும் சில விதிமுறைகளை விதிப்பதன் மூலமும் அரசு கல்வித் துறையில் நற்செயல்களைச் செய்ய வேண்டுமென நாடு எதிர்பார்க்கிறது.

- சுப.வீரபாண்டியன்

 

Pin It