இந்தியக் கடலோரக் காவல் படையினரைச் சிங்கள மீனவர்கள் கடத்திச் சென்று விட்டதாகச் சில நாட்களுக்கு முன்பு வந்த செய்தி மிகுந்த வேதனைக்குரியதாக மட்டும் அல்லாமல், எள்ளி நகையாடக் கூடியதாகவும் இருக்கிறது.
கடந்த 20 ஆண்டுகளில் சிங்களக் கடற்படை பலமுறை நம் தமிழக மீனவர்களைக் கடத்திச் சென்றிருக்கிறது. பலரைக் கொன்றும் குவித்திருக்கிறது. ஏறத்தாழ 400 மீனவர்கள் இன்றுவரை சிங்களப்படை யினரால் சுட்டுக் கொல்லப்பட்டிருக் கின்றனர் என்பது நம் நாட்டிற்கு நேர்ந்துள்ள ‘தேசிய அவமானம்’.
சிங்களப் படை, உலக நாடுகளின் உதவியோடு ஈழமக்களை அழித்தது. நம்மால் தடுக்க முடியவில்லை. தடுக்கவில்லை என்பதோடு மட்டுமல்லாமல், இந்திய அரசு அக்கொடூரத்திற்குத் துணைபோகவும் செய்தது. அடுத்த நாட்டின் இறையாண்மையைக் காப்பதாக அதற்கு விளக்கம் சொல்லப்பட்டது. சிங்கள அரசின் இறையாண்மை குறித்துக் கவலைப்பட்டுக் கவலைப்பட்டு இளைத்துப் போன இந்திய அரசு, தன் சொந்த நாட்டின் இறையாண்மை குறித்து அவ்வளவாக கவலைப் பட்டதாகத் தெரியவில்லை. அதனால்தான் நம் மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படும் போதெல்லாம், கவலை தெரிவித்து ஒரு கடிதம் எழுதினால் போதும் என்று நினைத்துவிட்டது.
கடல் எல்லை தாண்டிவந்த காரணத்தால் தமிழக மீனவர்களைச் சுட்டுக் கொன்றோம் என்று அந்த அரசு கூறியது. ஆனால் 1980களில் ஒருமுறை அவ்வரசின் கடற்படை எல்லைதாண்டி நம் நாட்டுக்குள்ளேயே வந்து பாம்பன் அருகிலுள்ள ஓலைக்குடா என்னும் கிராமத்து மீனவர்களைத் தோட்டாக்களால் துளைத் தெடுத்தது. அப்போதும் கூட நேச நாடான சிறீலங்காவுடன் நட்புப் பாராட்டுவதிலேயே கவனம் செலுத்தியது.
இப்போது நிலைமை இன்னும் வேறு மாதிரியாக மாறிவிட்டது. வேறுமாதிரியாக என்பதை விட, உலகம் கேள்விப்பட்டிராத வகையில் மாறிவிட்டது என்று கூறலாம். அங்கே இருந்து படகில் வந்த சிங்கள மீனவர்கள், நம் எல்லையோரக் காவல்படையினரை மிரட்டிக் கடத்திப் போய் விட்டார்களாம். அவர்கள் வலை மட்டும் வைத்திருந்தார்கள். இவர்கள் துப்பாக்கி எல்லாம் வைத்திருந்தார்கள். வலை மிரட்டியது, துப்பாக்கி துவண்டது.
இது எப்படி நடந்தது, அப்படி நடப்பதற்கான சாத்தியக் கூறுகள் உண்டா என்பதெல்லாம் பெரிய கேள்விக் குறியாகத்தான் இருக்கிறது. காவல் படையினர் கையில் வைத்திருந்த துப்பாக்கி களைச், சுடுவதற்கு இல்லையயன்றாலும் மிரட்டு வதற்காவது ஏன் பயன்படுத்தவில்லை என்று சிறுவர்கள் கூடக் கேட்கிறார்கள் . நம்மால் விடை சொல்ல முடியவில்லை.
ஒரு கேள்வி எல்லோரிடமும் மிச்சப்பட்டுக் கிடக்கிறது. ‘ இது என்ன கேலிக்கூத்து ’ என்பதுதான் அது.
- சுப.வீரபாண்டியன்