பவுத்தம்: ஆரிய - திராவிடப் போரின் தொடக்கம் - 14

ஆரியத்தை எதிர்க்கிறார், ஆன்மாவை மறுக்கிறார், கடவுளை ஒதுக்குகிறார், ஒழுக்கத்தைச் சொல்கிறார்,உயிர்களைப்பேணுகிறார்,அறிவைப்பெறு என்கிறார்,ஒரு துறவிக் கூட்டத்தையே கூட்டிக்கொண்டு திரியும் இந்தப் புத்தரின் அடிப்படை நோக்கம்,உண்மையான கொள்கை, குறிக்கோள்தான் என்ன?

“துறவிகளே! நம் வாழ்க்கையின் முக்கிய நோக்கம் புகழில் இல்லை, கவுரவத்தில் இல்லை, ஒழுக்கங்களை முறையாகப் போற்று வதில் இல்லை,அறிவு உள்ளொளி இவை களைப் பெறுவதிலும் இல்லை.நம் வாழ்க்கை யின் சாரம் உண்மையான சமூக விடுதலையில் தான் இருக்கிறது. அதுவே நம் கொள்கை குறிக்கோள்” பவுத்தத்தின் அடிப்படை நோக்கம் என்ன என்ற புத்தரின் இந்த வாக்கு மூலத்தை மஜ்ஜிம நிகாயம் பதிவு செய்து தருகிறது.

“பிறப்பினால் ஒருவன் சண்டாளனாக ஆவதுமில்லை. பிறப்பினால் ஒருவன் பிராமணனாக ஆவதும் இல்லை” புத்தரின் அழுத்தமான இந்தக் கருத்தை நமக்குத் தருவது சுத்த நிபாதம்.

இங்கே சண்டாளனையும், பிராமண னையும்தான் ஒப்பீடு செய்துள்ளார் புத்தர். சத்திரியன், வைசியனை இங்கு கொண்டு வரவில்லை என்பது கவனிக்க வேண்டிய செய்தி.

“சாதியை எதிர்க்கும் விசயத்தில் புத்தர், தான் சொன்னதைத் தானே கடைப்பிடித் தார். ஆரிய சமூகம் செய்ய மறுத்ததை அவர் செய்தார்.ஆரிய சமூகத்தில்,சூத்திரன் அல்லது கீழ்சாதியைச் சேர்ந்தவன் ஒரு போதும் பிராமணன் ஆக முடியாது. ஆனால் புத்தர் சாதியை எதிர்த்துப் பேசியது மட்டுமின்றி, சூத்திரர்களையும், கீழ்சாதியினரையும் பவுத்தத் துறவிகளாக அனுமதித்தார்.புத்த மதத்தில் துறவிகள்,பிராமணியத்தில் பிராம ணர்களுக்கு இருந்த அந்தஸ்தைப் பெற்றிருந் தார்கள்” என்பது அம்பேத்கர் தரும் செய்தி.

முடிதிருத்தம் செய்யும் (நாவிதர்) சமூகத்தில் பிறந்தவர் உபாலி. பவுத்த சங்கத்தில் புத்தருக்கு அடுத்த இடத்தில் இந்த துறவி ஆனந்தருக்கு இணையான தகுதியைப் பெற்றிருந்தார். ஆரியத்தில் சூத்திரன் வேதம் படிக்கக் கூடாது.இங்கே பவுத்த சங்கத்தில் திரிபிடகத்தின் ஒரு பிரிவான வினயத்தை முதலாம் பவுத்தப் பேரவையில் படித்து, விளக்கிச் சொல்லி, அதை ஒழுங்குபடுத்தும் தலைமைப்பணியில் இருந்தார் உபாலி.

இராஜகிருகத்தில் வசிப்பவள் சுனிதா என்ற பெண். இவர் தெருக்களைச் சுத்தப் படுத்தும் ஒரு துப்புரவுத் தொழிலாளி.ஒருநாள் தெருவைச் சுத்தப்படுத்திக் கொண்டிருந்த சுனிதாவிடம் சென்ற புத்தர், “உனக்கேன் இந்த இழிவான தொழிலும், இழிவான வாழ்க்கை முறையும். (பவுத்த) சங்கத்தில் சேர்கிறாயா?” என்றார். சரி என்றதும், அவரைத் துறவியாக்கிவிட்டார் புத்தர்.சுனிதா வால் பாடப்பட்ட பாடல்கள்,தேரிகதா என்ற பவுத்த நூலில் இடம் பெற்றுள்ளன.

பேராசிரியர் அருணன் சொல்வதைக் கேளுங்கள்,“அருந்ததியர்பால் அன்பும்,கருணையும் காட்டிய முதல் மெய்ஞானி புத்தர். வாழ்வின் கடைகோடி மனிதர்களாக ஒடுக்கப்பட்டிருந்த துப்புரவுத் தொழிலாளர் களையும் சமதையாக மதித்த உண்மையான துறவி புத்தர் ”

ஸ்ராஸ்வஸ்தியில் வாழ்ந்த சோபகா ஒரு சுடுகாட்டுத் தொழிலாளி. அச்சுடுகாட்டு வழியாக ஒருமுறை புத்தர் சென்றபோது, சோபகா பவுத்த சங்கத்தில் சேர்க்கப்பட்டார். இவர் பறையர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தரின் வீட்டில் கடைநிலை ஊழிய ராய் இருந்த சன்னா,சட்டிப்பானை செய்யும் குயவர் சமூகத்தைச் சேர்ந்த தன்னியா, மீனவர் சமூகத்தின் சதி, மாடுமேய்க்கும் நந்தர், கோரைப் புல் தொழிலாளர் சுமங்கல் போன்ற ஒடுக்கப் பட்டவர்கள் எல்லாம் புத்தரால் பவுத்தத் துறவிகளாக ஆக்கப்பட்டார்கள்.

எந்த ஆரியச் சதுர்வருணக் கோட்பாட்டால் கீழ்சாதியாக ஆக்கப்பட் டார்களோ,அதே கீழ்சாதியில் இருந்து துறவி கள் உருவாக்கப்பட்டு,அதே சதுர்வருணக் கோட்பாட்டிற்கு எதிராகப் போராடும் துறவிகளைப் போராளிகளாக உருவாக்கிய வர் புத்தர்.

ஆரியத்தால் ஒதுக்கப்பட்ட சாதிகளுக்கு இணையாக,ஒதுக்கப்பட்ட,ஒடுக்கப்பட்ட பெண்களையும் துறவிகளாக்கி பிராமணர் களுக்குச் சமமான தகுதியை பவுத்தத்தில் கொடுத்தவர் புத்தர்.

கீழ்சாதியினரைப் பவுத்தத்தில் சேர்ப்ப தற்குக் கட்டுப்பாடு எதுவும் இருக்கவில்லை. அத்தகைய குழுக்களிடம் இருந்து வந்த ஆதரவு மகத்தானது, கணிசமாக இருந்தது. பவுத்தம் தெய்வீக அவதாரம் இல்லை.அது சங்கம்.வரலாற்றுத் தன்மை கொண்ட ஒட்டுமொத்த அக்கரை அங்கே நிலவியது என்ற ரொமிலா தாப்பரின் மதிப்பீடு,தாழ்த்தப்பட்ட மக்களின் மீது பவுத்தத் திற்கும், பவுத்தத்தின் மீது தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் உள்ள சமூக அக்கறை கொண்ட நெருக்கத்திற்கு வலிமை சேர்க்கிறது.

ஒருமுறை அஸ்ஸலாயன என்ற ஆரியன் புத்தரிடம் பிராமணனே சாதியில் உயர்ந்த வன். மற்ற சாதியினர் தாழ்ந்தவர்கள் என்று கூறுகிறான்.

புத்தர் அவனைப் பார்த்துச் சொல்கி றார், “அஸ்ஸலாயனா! நீ அறிந்திருப்பாய் என்று நினைக்கிறேன்.அண்டைய (யவனம் கம்போஜம் முதலிய)நாடுகளில் இரண்டே சாதியினர்தான் இருக்கிறார்கள். எஜமானர் அடிமை இவைதான் அவ்விரு சாதிகள். இதில் எஜமானன் அடிமையாகவும் முடியும்,அடிமை எஜமானனாகவும் மாறமுடியும்.உங்கள் சதுர்வருணச் சமூக அமைப்பு ஏன் இதுபோன்ற உலகம் தழுவியதாக அமைய வில்லை...யாகத்தீயில் அவிப் பொருள்களைக் கொட்டுவதால் மட்டும் சாதிச் சுத்தம் வந்துவிடாது. அது வெளியேதான் எரிகிறது.நான் (மக்களின்) நெஞ்சங்களில் தீமூட்டி இருக்கிறேன். அது என்றும் அணையாது எரிந்து கொண்டுதான் இருக்கும்”

சாதியத்தைப் புத்தர் எந்த அளவுக்கு வெறுத்தாரோ, அதே அளவுக்குச் சாதியத் திற்கு எதிராக மக்களையும் திரட்டி இருக்கி றார் என்பதற்கு மஜ்ஜிம மற்றும் சம்யுத்த நிகாயங்கள் தரும் இக்குறிப்பு சான்றாக நிற்கிறது.

மக்களை நேரடியாகச் சந்தித்துப் பேசும் தலைவராக இருந்தவர் புத்தர். மக்களிடம் பேசினார். கருத்துகளை முன் வைத்தார்.விவாதங்களை நடத்தினார்.கீழ்சாதியாக ஆக்கப்பட்ட சூத்திரர்களை அரவணைத்தார். மக்கள் உள்ளங்களில் சாதிக்கு எதிரானக் கனலை மூட்டினார். பவுத்தம் வளர்ந்தது.

ஆடிப்போனது ஆரியம்.சதுர்வருணம் சரியத் தொடங்கியது.சாதிகள் புத்தர் காலத்தில் தகர்ந்து போயின. ஆனால் அது சாகவில்லை. அதற்கு உயிர் இருந்தது.

பதறிப்போன ஆரியர்கள் அவர்களின் இலட்சிய சமுதாய அமைப்பைக் காப்பாற்றி நிலைநிறுத்த வேண்டிய அவசியத்திற்காக சாதியைக் காப்பாற்ற முனைந்தார்கள்.

சாதிய மேலாண்மைக் கட்டமைப்பை, புத்தரின் பெயரால் பவுத்தத்திற்குள் கட்டிய மைக்கும் வேலையை ஆரியவாத மகாயானர் கள் முன்னெடுத்தார்கள்,புத்தரின் மறைவுக் குப் பின்னால்.

மகாயான ஆரிய பவுத்தத் துறவிகள் தங்களை உயர்ந்தவர்களாகச் சொன்னார்கள். புனிதமானவர்களாகக் காட்டிக் கொண்டார் கள். ஆரியத்தின் கடவுள், அவதாரங்கள், பூசைகள், சடங்கு முறைகளைப் புத்தரின் மேல் ஏற்றிச் சொன்னார்கள்.புத்தரையும் அவரின் கொள்கைகளையும் கருத்துகளையும் மாற்றி அமைத்தார்கள்.மறைமுகமாகச் சாதி மகாயாணத்தில் நுழைந்தது.

வருணம் எங்கே இருக்கிறது?உயிரில் இருக்கிறதா?உடலில் இருக்கிறதா?பரம்பரைக் குருதியில் இருக்கிறதா? ஆசாரங்களில் இருக்கிறதா? வேதங்களை அறிவதில் இருக்கிறதா? அறிவில் இருக்கிறதா?செயலில் இருக்கிறதா?எங்கே இருக்கிறது வருணம் என்று முழக்கமிட்ட அசுவகோசர், வருணம் எங்கேயும் இல்லை அது ஏமாற்று வேலை, வெட்டிப் பேச்சு என்று ஆரியத்தையும், மகாயாணத்தையும் திருப்பித் தாக்கினார். அவரின் “வஜ்ரசூசி” நூலில் இது குறித்து விரிவாகப் பார்க்கலாம்.

ஆரியம் செய்த அடுத்த வேலை இராமாயணம், மகாபாரதம், அதன் துணைக் கதைகள் மூலமும், பகவத் கீதை மூலமும் வருணாசிரமத்தை வலிமைப்படுத்தத் தொடங்கியதுதான். அதனால்தான் இன்று 3500க்கும் மேலான சாதிகள் இந்தியாவில் வளர்ந்து விரிந்து விட்டன.

புத்தர் தன் காலத்தில் சாதி அமைப்பு முறையைத் தகர்த்தார் தடுத்து நிறுத்தினார்.

“பெரிய கடலில் இருக்கும் நீர் உவர்ப்புச் சுவையை மட்டுமே கொண்டிருக் கிறது. என் கொள்கையில் சமநீதி சமூக விடுதலை மட்டுமே இருக்கிறது”

“நெருப்பு வானத்திற்கும் பூமிக்கும் நடுவில் உள்ள பொருள்களை எரித்துவிடும். என் கொள்கை உயர்வு தாழ்வைச் சொல்லும் வருணாசிரமச் சாதியை எரிக்கும்”

புத்தரின் இந்த நெருப்புச் சொற்கள் அவரை அடையாளம் காட்டிவிட்டது.சாதி ஒழிப்பின் முதல் போராளி புத்தர்தான்!

 - தொடரும்

Pin It