சனவரி 14 - வெள்ளிக்கிழமை, கேரள தமிழக எல்லையில் உள்ள புல்மேடு 'பலி' மேடாகிப் போனது. 102 அய்யப்ப பக்தர்கள் நெரிசலில் சிக்கி, மிதிபட்டு இறந்துபோன செய்தியைக் கேட்டு, நம்முடைய நெஞ்சமெல்லாம் பதறித்துடித்தது. விலை மதிப்பில்லாத நூற்றுக்கணக்கான உயிர்கள், பாழாய்ப்போகின்ற பக்தியின் பெயரால் காவு வாங்கப்பட்ட கொடுமையான நிகழ்வு அது. அரும்பெரும் உறவுகளை அறியாமையால் இழந்து வாடுகின்ற பக்தர்களின் குடும்பத்தினர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் முதலில் நம்முடைய ஆறுதலைத் தெரிவிக்கிறோம்.

sabarimalai_340அய்யப்பன் யார், அவனுடைய பிறப்பின் 'பெருமை' எத்தகையது, மகரஜோதி எப்படிப்பட்ட ஏமாற்றுவித்தை என்பதெல்லாம் அய்யா பெரியாரின் காலந்தொட்டு அக்கு வேறு, ஆணி வேராக ஆராய்ந்து அலசிக் காயப்போட்டுக் கொண்டு வருகின்றன கருஞ்சட்டைக் கழகங்கள். எனவே மீண்டும் மீண்டும் அதைப்பற்றிய ஆராய்ச்சிக்குள் நாம் போக வேண்டியதில்லை.

அதே நேரத்தில், மக்களின் கண்மூடித்தனமான பக்தி மோகத்தைப் பணம் குவிப்பதற்கான மூலதனமாக்கியுள்ள கோயில் நிர்வாகங்கள் கடுமையான கண்டனத்திற்குரியவை. உண்டியல் நிறைவதிலும், பக்த ‘கோடி’கள் வந்து குவிவதிலும் திருப்பதி ஏழுமலையானுக்கு அடுத்த இடத்தில் இருப்பவன் சபரிமலை அய்யப்பன். மக்கள் கூட்டம் அலைமோதும் என்று தெரிந்தும், தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளைச் செய்யாத கேரள அரசிற்கு மனித உயிர்கள் மலிவாகி விட்டன போலும். பாவம் நம்பிச் சென்ற பக்தர்களை அரசும் காக்கவில்லை, அந்த அய்யப்பனும் காக்கவில்லை.

ஆனால் அய்யப்பன் பக்தி மோகத்தைப் பற்றி நாம் கொஞ்சம் கூடுதல் கவனத்துடனும், கவலையுடனும் அணுகிப்பார்க்க வேண்டியுள்ளது. கடத்தலில் தொடங்கியதுதான் இந்த அய்யப்பன் கலாச்சாரம் என்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். 1976ஆம் ஆண்டு தமிழகம் மற்றும் கேரளத்தில் கடுமையான அரிசித் தட்டுப்பாடு ஏற்பட்டபோது, இங்கிருந்து கேராளாவிற்கு மூட்டை மூட்டையாக அரிசி கடத்தப்பட்டது. தமிழக அரசு அதிரடி நடிவடிக்கைளை மேற்கொண்டு இந்தக் கடத்தலைத் தடுத்து நிறுத்தியது.

இந்நிலையில், கேரள மாநிலத்தின் அரிசித் தேவையைச் சரிகட்ட அம்மாநிலத்தவர்கள் கண்டுபிடித்ததுதான் இருமுடி கட்டும் சடங்கு. ' சட்டபடித் தடுக்கிறீர்களா, இதோ சடங்கு என்ற பெயரில் தமிழனின் தலையில் வைத்தே அரிசியைக் கடத்துகிறோம் பாருங்கள் ' என்று தமிழர்களை முட்டாள்களாக்கிவிட்டனர் அய்யப்பனின் பெயரால். பக்தி வந்தால் புத்தி போய்விடும் என்று தந்தை பெரியார் சொன்னது  நூற்றுக்கு நூறு சரியான கூற்று என்பதைத்தானே இது காட்டுகிறது.

மற்ற மாநிலங்களைவிட தமிழ்நாட்டில்தான் அய்யப்பனுக்குப் பக்தர்கள் அதிகம். ஆண்டுதோறும் ஏறத்தாழ 50 இலட்சம் பேர் தமிழகத்திலிருந்து சபரிமலைக்குச் செல்கிறார்கள். ஒரு இருமுடியில் 1 கிலோ அரிசியும், குறைந்தது ஒரு தேங்காயும் கட்டாயம் இருக்கும். தோராயமாகப் பார்த்தால் கூட, ஆண்டொன்றுக்கு 500 டன் அரிசியையும், 50 இலட்சம் தேங்காய்களையும் தமிழர்கள் தலைமேல் சுமந்துகொண்டுபோய் அங்கே கொட்டுகிறார்கள். கொசுறாக நெய் வேறு.

நாட்டுக்குழைத்த பெரியோர்களைப் பின்பற்றுபவர்களைவிட, திரைப்படக் கதாநாயகர்களை வழிகாட்டிகளாகக் கொள்பவர்களே தமிழ் நாட்டில் அதிகம். இந்த மனோநிலை சபரிமலை செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக் காரணமாயிற்று என்றால் மிகையில்லை. மறைந்த நடிகர் மதிப்பிற்குரிய நம்பியார் அவர்களின் ஒழுக்கமான வாழ்க்கைக்கு, ஆரோக்கியமான நீண்ட ஆயுளுக்கு, அவர் ஆண்டுதோறும் சபரிமலைக்குச் செல்வதே காரணம் என்ற தவறான நம்பிக்கை இங்கே விதைக்கப்பட்டது. அவரைப்போல இன்னும் பல பிரபலங்கள் திரைத்துறையில் மட்டுமல்ல, அரசியலில் இருப்பவர்களும் இன்றும்கூட இருமுடி கட்டி சபரிமலைக்குச் செல்வதைப் பார்க்கிறோம். தனக்குப் பிடித்த நடிகர் விளம்பரத்தில் (மட்டும்) குடிக்கின்ற குளிர்பானத்தைத்தான்  குடிப்பேன், அவர் பயன்படுத்தும் உள்ளாடையைத்தான்  பயன்படுத்துவேன் என்ற கொள்கை முடிவைப் போலத்தான் அய்யப்பனுக்கு மாலை போடுவதும்.

அய்யப்பன் 'மகிமைக்கு' நம்பியார் முத்திரையாகிப் போனதைப் போல, திருவண்ணாமலையின் 'பெருமைக்கு' ரஜினிகாந்தும், இசைஞானி இளையராஜாவும், விசிறி சாமியாரின் சீடர் பாலகுமாரனும் விளம்பரதாரர்களாகிவிட்டனர். இவர்களின் ரசிக சிகாமணிகள் அந்தப் புண்ணிய ஸ்தலங்களுக்குப் படையயடுப்பதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளனர். வடநாட்டு பானிபூரி இங்கே இறக்குமதியானது போதாதென்று, பாபா வேறு வந்து இறங்கியிருப்பது ரஜினியின் கூடுதல் கைங்கர்யம்.  இதில் அரசியல்வாதி நடிகர் சரத்குமாரும்  பாபாவின் குகைக்குப் போய்த் திரும்பியிருக்கிறார். இந்த கண்மூடித்தனங்களும், முட்டாள்தனங்களும் நம்மை ஒரு கட்டத்தில் குகைக்குக் கொண்டுபோய்விடும் போலத்தான் தெரிகிறது - பாபா குகைக்கு அல்ல, கற்காலக் குகைகளுக்கு.

இவர்களைப் போன்றவர்களின் பக்தி விளையாட்டிற்கு, வறுமையில் வாடுகின்ற மக்கள்தான் விட்டில் பூச்சிகளாய்ப் பலியாகின்றனர். வண்டி இழுப்பவர்கள், விவசாயக் கூலிகள், தினக் கூலிகள், அடித்தட்டு, நடுத்தர மக்கள்தான் அதிக எண்ணிக்கையில் சபரிமலைக்குச் செல்கின்றனர். குழந்தைகளுக்கு மருந்துக்குக் கூட நெய் வாங்கக் காசில்லாவிட்டாலும் பரவாயில்லை, இருமுடி தேங்காயில் ஊற்றுவதற்கும், ஊர் திரும்பும் வரை விளக்கெரிப்பதற்கும் கடன்பட்டாவது கண்டிப்பாக நெய் வாங்கியாக வேண்டும். விளக்கெண்ணையை, கடத்தல் வியாபாரி அய்யப்பன் ஏற்றுக்கொள்ளவே மாட்டான்.  இதற்காக மேலும் மேலும் வட்டிக்குப் பணம் வாங்கிக் கடன்காரர்காளவதுதான் அய்யப்பன் இவர்களுக்குத் தருகின்ற ' வரம் '. போனசாக மரணமும்.

அய்யப்பனுக்கு மாலை போடுவதற்கு நிறைய விதிகளும், விரதங்களும் ஏற்படுத்தப் பட்டிருக்கின்றன. அதில் ஒன்று, மாலை போட்டவர்கள் சாவு வீட்டிற்குப் போகக் கூடாது என்பது. அப்படிப் போனால் அய்யப்பனுக்கு ஆகாது அதாவது ஆணுக்கும் ஆணுக்கும் பிறந்த அய்யப்ப சாமிக்குத் தீட்டாகிவிடும் (இதுபோன்ற நிறைய 'ஒவ்வாமைகள்' (அலர்ஜி) கடவுள்களுக்கு இருக்கிறது).  ஒரு வேளை மிகவும் நெருங்கிய உறவினர்கள் இறந்துபோனால், மாலையைக் கழட்டி வைத்துவிட்டுப் போகலாம். இங்கே நமக்கு சில கேள்விகளைக் கேட்கத் தோன்றுகிறது (என்ன செய்வது, எல்லாம் பெரியார் ஊட்டிய பகுத்தறிவு படுத்தும்பாடு).  சாவு தீட்டு என்பதை வைத்துப் பார்த்தால்,   அய்யப்பன் குந்தியிருக்கின்ற இடமே தீட்டுப்பட்டுவிட்டதே.  நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் ஒரே நேரத்தில் இறந்ததால் ஒட்டுமொத்த மலையுமே அல்லவா தீட்டாகிப்போனது.  தீட்டாகிப்போன இடத்தில் கடவுள் எப்படி இருப்பார்? ஒரு சாவையே சகித்துக்கொள்ளாத அய்யப்பன், நூற்றுக்கணக்கான சாவுகளை எப்படிச் சகித்துக்கொள்வான்? இவ்வளவு பெரிய தீட்டு ஏற்பட்ட பிறகு அய்யப்பன் அந்த மலையில் இருப்பானா?

இதில் 'மேயிற மாட்டை நக்குன மாடு கெடுத்த' கதையாக,   குட்டிச் சாமிகள் வேறு உருவாக்கப்பட்டு வருகிறார்கள். பள்ளிக் கூடத்தில் படிக்கும் குழந்தைகளுக்கும் மாலை போட்டு மலையேற்றி விடுகின்றனர். கழுத்தில் பாசி மணி மாலைகளோடு பள்ளிக்குச் செல்கின்றனர். வீட்டுப்பாடம் செய்து கொண்டு வராவிட்டாலும், வகுப்பில் பாடங்களைப் படிக்காவிட்டாலும் ஆசிரியர்கள் அவர்களைக் கண்டிக்கக் கூடாது, அடிக்கவும் முடியாது. கேட்டால் அவர்கள் அய்யப்ப சாமிகளாம். 'அடிக்காதீங்க டீச்சர், அடிச்சீங்க அவ்வளவுதான் அய்யப்ப சாமி உங்களைச் சும்மா விடாது' என்று ஆசிரியர்களையே மிரட்டுகின்றனர் இந்தக் குட்டிச் சாமிகள். தவறு செய்தாலும் கடவுள் பெயரைச் சொல்லித் தப்பித்துக் கொள்ளலாம் என்ற ஏமாற்று வித்தையைத்தானே கற்றுக்கொடுக்கிறது பக்தி.

மகரஜோதி தரிசனம் மரணத்தைத் தந்திருக்கிறது. மகரஜோதி தெய்வீக சக்தியால் தானே தோன்றுகிறதா அல்லது செயற்கையாக உருவாக்கப்படுகிறதா என்பதை அறியவிரும்புவதாகக் கேரள உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேரள அரசிடம் தெரிவித்திருக்கிறார்கள். அதைப்பற்றியயல்லாம் ஆராய முடியாது என்று  அனைத்தையும் அறிவியலைக் கொண்டு ஆராயச் சொன்ன மார்க்சின் மாணவர் முதல்வர் அச்சுதானந்தன்  பதில் சொல்லிவிட்டார். மகர ஜோதி என்பது, கோயில் நிர்வாகம் மற்றும் கேரள வனத்துறை இணைந்து செய்யும் புரட்டு வேலை என்பதை பகுத்தறிவாளர்கள் ஆதாரத்துடன் நிறுவியிருக்கின்றனர். இனி ஆராய என்ன இருக்கிறது.

மாற வேண்டியது மூடத்தனங்களில் மூழ்கிக் கிடக்கின்ற மக்கள்தான். சாமியே மரணம் அய்யப்பா!

Pin It