இலங்கையின் மன்னார் பகுதியில் தோண்டத் தோண்டத் தமிழர்களின் பிணங்கள் கிடைத்துக்கொண்டே இருக்கின்றன. ஐக்கிய நாடுகள் அவை, முறையான விசாரணையைத் தொடங்குமானால், அங்கே நடைபெற்றுள்ள போர்க் குற்றங்களுக்கு அடுக்கடுக்கான ஆதாரங்கள் கிடைக்கும்.

 

மற்ற சட்டங்களைப் போலல்லாமல், ஒரு நூற்றாண்டு காலம் ஆனாலும் போர்க்குற்றச் சட்டம் தூங்காது என்பர். அக்குற்றங்களை மெய்ப்பிப்பதற்கும், போர்க் குற்றவாளிகளான ராஜபக்சே சகோதரர்களைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தித் தண்டிப்பதற்கும் உரிய நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது.

 

rajapakse_350இந்த உண்மைகளை உணர்ந்து கொண்ட சிங்கள இனவெறி அரசு, இப்போது இரண்டு செயல்களில் ஈடுபட்டுள்ளது. ஒன்று, தன் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜி.எல். பெரீசை வெளிநாடு களுக்கெல்லாம் அனுப்பித் தன் குற்றங்களை மறைக்க முயற்சி செய்வது. இன்னொன்று, கலாச்சார விழாக்களைப் பெருமளவுக்கு நடத்தி, தன் கோர முகத்துக்குக் கலை முகமூடி அணிந்து கொள்வது.

 

இரண்டாவது முயற்சிக்கான அடிப்படைதான், ஜுன் 2 - 4 தேதிகளில், இலங்கை அரசு அங்கு நடத்தத் திட்டமிட்டுள்ள அனைத்துலகத் திரைப்பட விழா. அந்த விழாவிற்கு இந்திய அரசு துணை போவது, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாக உள்ளது.

 

உலகம் கண்டிராத கொலைக்களப் பூமியில், உல்லாசமாகத் திரைப்பட விழா நடத்த நினைப்பது எவ்வளவு பெரிய வக்கிரம். அதற்கு அமிதாப் பச்சன் போன்ற புகழ்பெற்ற இந்திய நடிகர்களை அழைக்கிறது இலங்கை அரசு.

தி.மு.கழக உறுப்பினர் வசந்தி ஸ்டான்லி, நாடாளுமன்றத்தில் பேசும்போது ஒன்றை மிகத் தெளிவாகக் குறிப்பிட்டார். “ஏ.ஆர்.ரகுமான் போன்ற தமிழர்கள் ஆஸ்கர் பரிசு வாங்கிவந்தால், அவரை இந்தியர் என்று சொல்லிக் கொண்டாடுகிறீர்கள். கன்னியாகுமரிக் கடற்கரையில் இந்தியக் குடிமக்களான மீனவர்கள் கொல்லப்பட்டால், அவர்களைத் தமிழர்கள் என்று ஒதுக்கி விடுகிறீர்கள் ” என்றார்.

எப்போதும் அப்படித்தான் நடக்கிறது.

ஆனால் இப்போது ஒரு சிறிய மாறுதல். முதலில், திரைப்பட விழாவில் பங்கேற்க இசைவு தெரிவித்திருந்த அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யாராய் முதலான புகழ்பெற்ற நடிகர்கள், இப்போது தங்கள் மறுப்பைத் தெரிவித்து விட்டனர். அவ்விழாவில் பங்கேற்க இலங்கை செல்லப் போவதில்லை என்றும் அறிவித்து விட்டனர்.

மும்பையில் உள்ள ‘நாம் தமிழர்’ இயக்கத்தினர் நடிகர் அமிதாப் வீட்டை முற்றுகையிட்டு, மனுக்கொடுத்துச் செய்திகளை விளக்கியதும், அமிதாப்பின் மனமாற்றத்திற்குக் காரணமாயிருக்கலாம். அந்த வகையில் நாம் தமிழர் இயக்கப்பணி பாராட்டிற்குரியது.

அதே போன்று, சென்னையில் மே 17 இயக்கத்தினரும் சில முயற்சிகளில் ஈடுபட்டதைச் செய்தித்தாள்களில் பார்க்க முடிந்தது. பல்வேறு தமிழ் அமைப்புகள் தங்களின் உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளன.

தமிழ்த் திரையுலகம் அந்த விழாவைப் புறக்கணிப்பதாக அறிவித்துள்ள செய்தி ஆறுதலாக உள்ளது. திரை உலகினரின் இன உணர்வுக்கும், மனித நேயத்திற்கும் நாம் பாராட்டுத் தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளோம்.

எனினும் ஷாருக்கான், லாராதத்தா, விவேக் ஓபராய் போன்ற நடிகர்கள் சிலர், இலங்கை செல்லவிருப்பதாக அறிவித்துள்ளனர். மனிதநேயமற்ற இவர்களின் செயலை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம். அவர்களுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டிய நிலை எழுந்துள்ளது.

இந்தச் சூழலில்தான், இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி.எல். பெரீஸ், சில நாள்களுக்கு முன்பு அமெரிக்கா சென்று, ஐ.நா. அவையின் செயலர் பான் கீ மூனைச் சந்தித் திருக்கிறார். “இது எங்களின் உள்நாட்டு விவகாரம். இதில் ஐ.நா. தலையிட வேண்டாம்” என்று கேட்டுக் கொண்டதோடு, “நாங்களே ஒரு விசாரணை வைத்து முடிவைச் சொல்கிறோம்” என்றும் கூறியிருக்கிறார். குற்றவாளியே தனக்கான விசாரணைக் குழு அமைத்துக் கொள்ளும் ஒன்பதாவது உலக அதிசயம் இதுதான்.

அமெரிக்காவின் வெளிநாட்டு அமைச்சர் ஹிலாரி கிளிண்டனையும் பெரிஸ் சந்தித்துப் பேசி இருக்கிறார்.

ஜனநாயகத்திலும், சகோதரத்துவத்திலும், மனித நேயத்திலும் நம்பிக்கை உள்ளவர்கள் ஒருங்கிணைந்து முயற்சிகள் எடுக்க வேண்டிய நேரம் இது. மிகக் கொடூரமான போர்க் குற்றவாளிகள் தப்பிப்பதற்கு உலக நாடுகளும், ஐ.நா. அவையும் இடம் கொடுத்தவிடக் கூடாது என்னும் குரல் உலகெங்கும் ஒலிக்கட்டும்.
.


- சுப.வீரபாண்டியன்
Pin It

அனைத்துத் தனியார் கல்வி நிறுவனங்களுக்குமான கட்டணத் தொகையை தமிழக அரசு நிர்ணயம் செய்துள்ளது. இது ஒரு வரவேற்கத்தக்க நிகழ்வாகும்.

எனினும் கடந்த பல ஆண்டுகளாகத் தத்தம் விருப்பத்திற்கு ஏற்ப கல்விக் கட்டணங்களை வாங்கிப் பழகிவிட்ட தனியார் கல்வி நிறுவனங்கள் இவ்வாணையை எதிர்க்கின்றன. மேல்முறையீடுகளுக்கும் சென்றுள்ளன. தொடக்கத்தில், வரிந்துகட்டிக் கொண்டு கட்டண நிர்ணயத்தை எதிர்த்த அவர்கள், பிறகு சற்றுக் கீழ் இறங்கியுள்ளனர். மக்களின் பொது நலனுக்கு எதிராக நாங்கள் எந்த ஒன்றையும் வலியுறுத்த மாட்டோம் எனப் பெருந்தன்மையாகக் கூறுவதுபோல ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளனர். இதில் ஒருவிதமான பாசாங்கு தென்படவே செய்கிறது. இந்த அறிக்கைக்குப் பின்னால், வெளியிடப்படாத வேறு ஒரு திட்டம் அவர்களிடம் இருக்கக் கூடும் என்றே தோன்றுகிறது.

எந்த ஒரு சமரசத்திற்கும் இடமில்லை என்று முதலில் மிக உறுதியாகக் கூறிய தமிழகப் பள்ளிக் கல்வி அமைச்சரிடமும் இப்போது ஒரு சிறு சமரசம் தென்படுகிறது. எக்காரணம் கொண்டும் தன்நிலையில் இருந்து தமிழக அரசு வழுவிடக்கூடாது என்பதே நம் விருப்பம்.

பெயர் பெற்றுவிட்ட சில கல்விநிறுவனங்கள் ஆண்டிற்கு ஒருமுறை, ஒருநாள் மட்டுமே அனுமதிக்கான விண்ணப்பங்களை வழங்குகின்றன. மக்களும், அந்தக் குறிப்பிட்ட நாள் வரும்போது, முதல் நாள் மாலையில் இருந்தே துண்டுவிரித்து, தெருவில் உறங்கி, அடுத்த நாள் அந்த விண்ணப்பங்களைப் பெற்றுச் செல்கின்றனர். திட்டமிட்டே, கல்வியையும் பெற்றோர்களையும் இழிவுபடுத்தும் செயல் இது. இந்த அவமானங்களைப் பொருட்படுத்தாது பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளுக்கான கல்விப் பணியை நிறைவுசெய்வதாக எண்ணிப் பெருமைப்படுகின்றனர். இப்படி வரிசையில் நிற்கும் பெற்றோர்களில் படித்தவர்களும், பணக்காரர்களும்தான் மிகுதியாக உள்ளனர்.

அறிவியலும், தொழில்நுட்பமும் பேரளவிற்கு வளர்ந்திருக்கும் இன்றைய சூழலில், விண்ணப்பங்களை வழங்குவதற்கு, மின்னஞ்சல் முதலான ஆயிரம் எளிய முறைகள் உள்ளன. ஆனால் எல்லோரையும் காத்துக்கிடக்க வைத்து, அவர்களை இழிவுபடுத்தி விண்ணப்பங்களை வழங்குவதுதான், அக்கல்விக் கூடத்திற்குப் பெருமை என்று அவர்கள் நினைக்கிறார்கள். இழிவை இவர்களும் சுமக்கிறார்கள்.

இவ்வாறு பல்வேறு வகையிலும் சமூகத்திற்கும், பொதுநலத்திற்கும் எதிராக இயங்குகின்ற தனியார் கல்வி நிறுவனங்கள் பலவற்றையும், ஒரு கட்டுக்குள் கொண்டுவரவேண்டிய மிகப்பெரிய தேவை அரசுக்கு உள்ளது. நியாயமான கட்டணங்களை நியமிப்பதன் மூலமும், மேலும் சில விதிமுறைகளை விதிப்பதன் மூலமும் அரசு கல்வித் துறையில் நற்செயல்களைச் செய்ய வேண்டுமென நாடு எதிர்பார்க்கிறது.

- சுப.வீரபாண்டியன்

 

Pin It

மாறிய பாலினத்தார் (Transgenders) :

உடல் அளவில் குறிப்பிட்ட பாலின உறுப்புகள் பெற்று (ஆண்/பெண்) வளர வளரமனதளவில் உடல் பாலின அடையாளத்திற்கு மாறாக உணர்பவர்கள் மாறிய பாலினத்தார் என அழைக்கப்படுவர்.

transgendersஉடல் இன உறுப்பளவில் ஆணாக பிறந்து மனதளவில் தங்களைப் பெண்களாக உணர்பவர்கள் (திருநங்கைகள்), அதே போல் பெண்களாகப் பிறந்து தங்களை ஆண்களாக உணர்பவர்களும் உண்டு.

மேலும் பிறக்கும் போதே பாலின உறுப்புகள் சரியாக அமையப்பெறாமல் இன்ன பாலினம் என்று பார்வை மூலம் அறிய முடியாமல் பிறப்பவர்களும் உண்டு. இவர்கள் மருத்துவ ரீதியாக ஹெர்மோஃப்ரோடைட்ஸ் (Hermophrodites) எனறு அழைக்கப்படுகிறார்கள். இவர்களின் பாலின நிலை பல வகை மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைகளின் மூலமாக வரையறுக்கப்படுகிறது. ஆனாலும் இவர்கள் மனதளவில் வளர்ந்த பின் எவ்வாறு உணர்கிறார்கள் என்பதை பொறுத்து இவர்களுடைய வாழ்க்கை அமையும்.

மாறிய பாலினப் பெண்கள் (அ) திருநங்கைகள்:

திருநங்கைகள் (ஆணிலிருந்து பெண்) ஆணாதிக்க சமூகத்தில் அதிக இழிவு படுத்துதல், உரிமைகள் மறுத்தல் மற்றும் ஒதுக்கிவைக்கப்படுதல் போன்ற அவல நிலைகளுக்குட்பட்டு, எவ்வித சமூக அங்கீகாரமும் கிடைக்கப்பெறாமல் பாலியல் தொழில், இலவசமாக பணம் வசூலித்தல் போன்ற சுய மரியாதைக்கு மாறான செயல்பாடுகளில் ஈடுபட்டு வாழவேண்டும் என்ற நிலையிலேயே உள்ளனர்.

தமிழக அரசு இவர்களையும், இவர்களது பிரச்சினைகளையும் இனம் கண்டு, இவர்க ளுக்கென்று நலவாரியம், குடும்ப அட்டை, அடையாள அட்டை, அரசு மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு போன்ற உரிமைகளை வழங்கி தரமான வாழ்க்கை முறையினை வழங்க சிறப்பான முயற்சிகள் எடுத்து வருகிறது.

அடையாளச் சிக்கல் :

ஆனாலும் திருநங்கைகள் யார் என குறிப்பிட்ட அடையாளம் வழங்க முடியாத குழப்பநிலை இன்னும் இருந்து வருவது அப்பட்டமான உண்மை.

பெண்மை கலந்த செயல்பாடுகளுடன், ஆணுடையிலும், மறைவாக அவ்வப்போது பெண்ணுடை அணிந்தும் வலம் வருபவர்கள் (Transvesites) , உடலளவில் (ஆணுறுப்புடன்) எந்த மாற்றத்திற்கும் உட்படாமல் உடையளவில் மட்டும் மாற்றம் கொண்டு பெண்ணுடையுடன் வாழ்பவர்கள்(Transexuals/Cross dressers) , மனதின் பெண்மைக்கேற்ப தன்னுடைய உடலை அறுவை சிகிச்சை மூலம் மாற்றியமைத்து முழுமையான பெண் போன்று வாழ்பவர்கள் (Transvesites) என் சில மாறுப்பட்ட பரிமாணங்களில் திருநங்கைகள் உள்ளனர்.

சமுதாயப் புறக்கணிப்பு :

சமூக அங்கீகாரம், உரிமைகள் அடைதல், தங்களுடைய இரத்த சம்பந்த குடும்பத்தாருடன் இணைந்த வாழ்க்கை, கல்வி பெறுதல், வேலை வாய்ப்பு மற்றும் அதைத் தொடர்ந்த கண்ணியமான வாழ்க்கை முறை அமைவதில் இன்னும் சிக்கலான நிலையே நீடிக்கிறது.

இந்தப் பரிமாணத்தில் உள்ள ஒவ்வொரு வகையினருக்கும் சமுதாய அங்கீகாரத்திலிருந்து உரிமை அடிப்படையிலான தேவைகளும் சிறிது மாறுபட்டிருக்க வாய்ப்புகள் உள்ளன. ஆனால் சுமுகமான, கண்ணியமான, சமுதாயத்துடன் இணைந்த வாழ்க்கை மறுக்கப்படுவதால் அவர்களே (சொந்த குடும்பச் சூழலை விட்டு வெளியேறியவர்கள்) தனி குழுக்களாக வாழ்ந்து வருகின்றனர்.

எனவே இவர்களை ஒரு குறிப்பிட்ட குழுவாக அடையாளம் காண்பதிலும், தேவைகள் என்னவென்று புள்ளி விவரங் கள் சேகரிப் பதிலும் எப்போதும் ஒரு தொய்வு நிலையே உள்ளது.

எச்.ஐ.வி / எய்ட்ஸ் தடுப்பு நடவடிக்கைகள் உலகஅளவில் அனைத்து வகை மக்கள் மத்தியிலும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. திருநங்கைகள் அனேகமாக பாலியல் தொழிலை வாழ்வாதா ரமாகக் கொண்டுள்ளதால், எய்ட்ஸ் தடுப்பு நடிவடிக்கைகளின் போது, அவர்கள் அடையாளம் காணப்படுகின்றனர். அதைத் தொடர்ந்து தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டு, சமீப காலமாக தமிழகத்தில் திருநங்கைள் வெளிப்ப டையாகத் தெரிய வந்துள்ளனர்.

பல காலமாக இவர்களைப் பற்றித் தவறான புரிதலும், சமூக அக்கறையின்மையுமே இருந்து வருகிறது.

மக்கள் தொகைக் கணக்கெடுப்பு விதிமுறைகளில் அடையாளமின்மை :

இதற்கு ஒரு சிறந்த உதாரணமே மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் விதி முறைகளில் இவர்களின் எண்ணிக்கையைக் குறிப்பெடுப்பது பற்றிய தெளிவின்மை மற்றும் குழப்ப நிலை.

இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு பாரம்பரியமிக்கதாகவும், உலகளவில் சிறந்த தெனவும் கருதப்படுகிறது.

முதல் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு 1872 இல் பல் கால நிலைகளில் எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் 1881 இல் நாடு முழுவதும் ஒரே நேரத்தில் சீரான கணக்கெடுப்பு நடத்தப்படடுள்ளது. அதை த் தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை எவ்வித தடையுமின்றி நடைபெற்று வருகிறது. 2010 - 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு சுதந்திரத்திற்குப் பிறகு எடுக்கப்படும் 15வது கணக்கெடுப்பாகும்.

மக்கள் தொகை கணக்கெடுப்பதென்பது வெறுமனே மக்களின் எண்ணிக்கையைக் கண்டறிவது என இல்லாமல், நாட்டின் பல நிலைகளில் வாழ்பவர்களின் குடியுரிமை சரியாக அமைய வழிவகுக்கும் என்பதாகும்.

1872 மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் இருந்து, இப்போது (2010) நடைபெற்றுவரும் முதல் நிலை வீடு சார்ந்த கணக்கெடுப்பு (House listing and housing census) மற்றும் 2011 பிப்ரவரியில் நடைபெறவிருக்கும் தனிமனித கணக்கெடுப்பு (Population enumeration) வரைக்கும் மக்கள் கணக்கெடுப்பு சட்டத்தில் பல திருத்தங்கள் ஏற்பட்டுள்ளது.

மத்திய அரசின் பொது பதிவாளர், மக்கள் கணக்கெடுப்பு ஆணையர் மற்றும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஆணையம் வாயிலாக, கணக்கெடுப்பில் ஈடுபடும் அலுவலர்களுக்கு பல விதிமுறைகள் வழங்கப்பட்டுள்ளது.

கணக்கெடுப்பு அட்டவணையின் கட்டம் 10, 11 மற்றும் 12 இல் ஒரே வீட்டில் வசிக்கும் அனைத்து நபர்களின் விபரங்கள் குறிப்பிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதாவது கட்டம் 10 இல் மொத்த நபர்களின் எண்ணிக்கையும் 11 இல் ஆண்கள், 12 இல் பெண்களுக்கான விபரங்கள் குறிப்பிட்டாக வேண்டும் என்றும், குறிப்பாக காயடிக்கப்பட்டவர்கள் (Eunuchs), பிறவியிலேயே பாலின உறுப்பு சரியாக அமையப் பெறாதவர்கள் (Hermophrodites) அனைவருமே 11 ஆம் கட்டத்தில்தான், அதாவது ஆண்கள் என்றுதான் குறிப்பிட வேண்டும் எனத் தெள்ளத் தெளிவாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே இந்த அறிவுறுத்தலின்படி திருநங்கைகளையும் ஆண்கள் என குறிப்பிடும் நிலையே உள்ளது.

மாறிய பாலின நிலை அடையாளம் (Transgenders), காயடிக்கப்பட்டவர்கள் (Eunuchs) அடையாளத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டது.

இந்திய இதிகாசங்களில் பல இடங்களில் குறிப்புகள், வரலாற்றுக் காலங்களில் சில கதாபாத்திரங்கள், பைபிள் போன்ற பண்டைய நூல்கள் அனைத்திலுமே காயடிக்கப்பட்ட ஆண்களைப் (Eunuchs) பற்றியே அதிகம் குறிப் பிடப்பட்டுள்ளன.

காயடிக்கும் முறைக்கும் (Castration), மாறிய பாலின உணர்வால் தங்கள் உடலை மாற்றி யமைத்துக் கொள்வதென்பதற்கும் (Emasculation) எந்த சம்பந்தமும் இல்லையென்பதுதான் உண்மை.

அதிகமாக, காயடிக்கும் செயல் முறை (ஆண் மையை நீக்குதல்) அந்த நிலைக்குட்படுத்தப்படும் நபரின் விருப்பமின்றி செயல்படுத்தப் பட்டிருக்கவேண்டும். ஏனெனில் திடகாத்திரமான ஆண்கள் (பெரும்பாலும் அடிமைகள்) கவனம் பாலியல் ஈர்ப்புக்குட்படாமல் தங்களுடைய கடமைகளை (பல்லக்குத் தூக்குதல், அந்தப்புறக் காவல் போன்றவை) செய்ய வேண்டும் என்பதற்காகக் காயடிக்கப்பட்டனர் என நாம் சில நூல்களில் படித்திருக்கிறோம்.

அதன் பின்னரும் அவர்களின் மனதின் உணர்வு ஆண்தன்மையுடன் இருப்பதால் அவர்கள் தங்களை ஆண்கள் என்றே அடையாளப்படுத்திக் கொண்டனர்.

எந்த வரலாறுகளிலும் உடல் அளவில் ஆணாகப் பிறந்து மனதளவில் பெண்ணாக உணரும் மாறிய பாலின நிலையில் இருந்தவர்களைப் பற்றி எந்தக் குறிப்புகளும் இல்லையயனலாம்.

இதற்குக் காரணம் இவர்கள் எண்ணிக்கையில் குறைவாக இருப்பதாலும், ஆணாதிக்க சமூகத்தில் ஆண் பெண்போல் இருப்பதை இழிவாகக் கருதுவதும் காரணமாக இருக்கலாம். எனவே இவர்களுக்கென்று தனி அடையாளம் மற்றும் அங்கீகாரம் வழங்கப்படாமல், காயடிக்கப் பட்டவர்கள் என பொதுவான அடையாளத்துடன் காணப்பட்டுள்ளனர்.

மக்கள் தொகைக் கணக்கெடுப்பும் அந்த காலக்கட்டத்தில் இருந்தே செயல்பட்டு வருவதால் அதன் விதி முறைகளிலும் இந்தக் குழுவினரை ஆண்களாகக் குறிப்பிடும்படி அறிவுறுத்தப்பட்டு வந்துள்ளது.

ஆனால் இவர்களுக்கென்று உரிமை மீறல்களும், ஒதுக்கிவைத்தலும், இழிவுபடுத்தலும், சமுதாய அங்கீகாரமின்மையும் அதிகரித்து வந்ததாலும், தங்களின் மன நிலை பெண்மையாக இருக்கும் பட்சத்தில், பெண்ணுக்குரிய உடல் மாற்றத்திற்குத் தங்களை உட்படுத்திக் கொள்ள அதிகமானோர் முன்வந்ததாலும், மாறிய பாலினநிலை என்னும் வழக்கு 1960 களில் இருந்து அதிகமாகப் பதிவு செய்யப்பட்டது.

மேலும் மாறிய பாலினத்தார், அதிகமாக மாறிய பாலினப்பெண்கள், முழுமையான பெண்களாக வாழ்ந்து வருகின்றனர். எனவே இவர்களை மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் ஆண்களாகப் பதிவு செய்யும் பட்சத்தில், இவர்களின் எண்ணிக்கையை அறிவதிலோ, இவர்களின் உரிமைத் தேவைகளுக்கேற்ப முழுமையான நடவடிக்கைகளை செயல்படுத் துவதிலோ இன்னும் சிக்கலான நிலையே நீடிக்கும்.

இது தொடர்பாக பிரதமருக்குத் தமிழக முதல்வர் வைத்துள்ள வேண்டுகோள் மிகவும் பாராட்டுக்கும், வணங்குதலுக்கும் உரியதாகும்.

மக்கள் தொகைக் கணக்கெடுப்பு விதி முறைகளில் மாற்றம் செய்வதென்பது பல நிலை பேச்சுவார்த்தைகள், நடவடிக்கைகள் உள்ளடங்கிய மிகப் பெரிய செயல்பாடு என்பதால், வரும் 2011 பிப்ரவரி தனி மனித கணக்கெடுப்பின் போது செயல்படுத்த முடியாத காரியமாகக் கூட அமையலாம்.

குறைந்த பட்சம் அடுத்த 10 ஆண்டுகளுக்குப் பின்னராவது செயல்படுத்தும் வகையில் முயற்சிகள் அவசியமென்பது தெள்ளத் தெளிவான செய்தி.

வளர்ந்து வரும் நாகரீக உலகில் ஒரு குழு மக்கள் அங்கீகாரமில்லாமல், கண்ணியமான வாழ்க்கை அமையப் பெறாமல் இருப்பது, மனித உரிமைக்கு முற்றிலும் அப்பாற்பட்ட நிலை எனும் நோக்கில், இந்தச் சூழ்நிலைக்கு ஒரு தீர்வு என்பது எவராலும் மறுக்க முடியாத செய்தி.

எதிர்கால மக்கள் தொகைக் கணக்கெடுப்புகளில் மாறிய பாலின உணர்வாளர்களை (Transgenders) முறையாக கணக்கெடுக்க சில தொலை நோக்குப் பார்வைகள் :

மாறிய பாலின உணர்வாளர்களுக்கென்று மக்கள் தொகைக் கணக்கெடுப்புக்கு இணையான மாவட்ட ரீதியான, அரசின் நேடியான தலையீடுதலின் மூலமாகத் தனி அலுவலர்கள் நியமித்து தீவிரமான கணக்கெடுப்பு ஒன்று நடத்தலாம்.

பல பரிமாணங்களில் இருக்கும் மாறிய பாலின உணர்வுள்ளவர்களைப் பற்றிய முழு விபரங்களை அலுவலர்களுக்குப் பயிற்சி அளித்துத் தனித் தனிக் கட்டங்களில் குறிப்பிடலாம்.

அதாவது,

1. உடலுறுப்பு பாலின அடையாளத்திற்கு மாறாக, மனதளவில் மற்ற பாலினமாக உணரும் தன்மையுடையவர்கள்

2 உடல் அளவில் மாற்றங்களுக்குட்படாமல், வெளிப்படையாக உடையளவில் மட்டும் மாற்றத்துடன் வாழ்பவர்கள்

3 உடல் அளவில் நிரந்தரமான மாற்றங்களுக்கு (பெண்ணிலிருந்து / ஆணிலிருந்து) உட்பட்டவர்கள்

எனும் பிரிவுகளில் தனித் தனிக் கட்டங்களில் குறித்துக் கணக்கெடுப்பு செய்யலாம்.

அதைத் தொடர்ந்து நிரந்தரமான மாற்றத்திற்குட்பட்டவர்களுக்கு மாறிய பாலின பெண்/ ஆண் என அடையாள அட்டைகள் வழங்கலாம்.

பொதுவாக இந்த முறையைச் செயல்படுத்துவதன் மூலம் பால் மாற்றுத் தன்மை அதிகரிக்கும் என்பதோ, ஊக்குவிக்கப் படுகிறார்கள் என்பதெல்லாம் விதண்டாவாதம். உடல் மற்றும் மனதளவில் ஆண் உணர்வுடன் இருப்பவர்கள் எக்காரணத்தைக் கொண்டும் பால் மாற்றுக்கு உட்பட மாட்டார்கள் என்பது மருத்துவ ரீதியான, உளவியல் ரீதியான உண்மை.

நிரந்தர அடையாள அட்டை உள்ளவர்களை வரும் கணக்கெடுப்பில் முறையே கட்டங்கள் 11, 12 இல் சேர்க்க அறிவுறுத்தலாம்.

சமூக வாரியான கணக்கெடுப்பில் மாறிய பாலினம் எனும் சமூகத்தில் இந்த பிரிவினரைக் குறிப்பிட்டு, இவர்களுக்கு உரிமை, சட்ட ரீதியான இட ஒதுக்கீடு / வாய்ப்புகள் பெற ஆவன செய்யலாம்.

நிரந்தர அடையாள அட்டை வழங்குவதை மருத்துவச் சான்றிதழ்களுடன் கூடிய விண்ணப் பங்களை வலியுறுத்தி முறைப்படுத் தலாம்.

ஏனெனில் உடல் அளவில் நிரந்தர மாற்றத்திற்குட்படாதவர்கள் அனேகமாக தன் ரத்த சம்பந்தமுள்ள குடும்பங்களுடன், குடும்ப அட்டையுடன் கூடியஅடையாளத்துடனேயே இருப்பார்கள். இதன் மூலம் ஒரு நபருக்கு இரு அடையாளங்கள் போன்ற குளறுபடிகளைத் தவிர்க்கலாம். (உதாரணமாக உடலளவில் நலமாக இருப்பவர்கள், விபத்து போன்றவைகளால் உடலுறுப்புகள் இழக்கும் பட்சத்தில் மாற்றுத் திறனாளிகள் என்னும் அடையாள அட்டை பெறுவது போல)

Pin It

மெத்தப்படித்தவர் ஜவகர்லால் நேரு. அவர் எழுதியிருக்கும் நூல்களும், கடிதங்களும் அவரின் அறிவாற்றலைப் பறைசாற்றுகின்றன. தன் குருநாதர் காந்தியோடு ஒப்பிடும்போது, நேரு ஒரு பகுத்தறிவாளர், நாத்திகர், முற்போக்காளர் என்றெல்லாம் பேசுபவர்கள் இருந்தார்கள் - இருக்கிறார்கள்.

nehru

ஆனால் நேரு ஒரு பிற்போக்காளர். பார்ப்பனர்களுக்குரிய மத, ஐதீக நம்பிக்கை உடையவர் என்பதை உலகுக்கு வெளிச்சம் போட்டுக்காட்டி, நேருவை அம்பலப்படுத்த ஒரு பெரிய முயற்சியை எடுத்தார் புரட்சியாளர் அம்பேத்கர். இதுபற்றி க. திருநாவுகரசு சொல்வதைக் கேளுங்கள் :

“ இந்து மதத்தின் புரட்டுகள் ” எனும் புத்தகத்தை அவர் (அம்பேத்கர்) 1954 ஆம் ஆண்டு, ஜனவரி முதல்வாரத்தில் எழுதத் தொடங்கினார். அப்புத்தகம் எழுதும் பணி 1955 நவம்பரில் முடிந்தது. இது அச்சிட நான்கு படிகள் எடுக்கப்பட்டன. படிகள் எடுக்கப்பட்டத் தாள்கள் கனமானதாகவும், உயர்ந்த தாளாகவும் இருந்தன. அச்சுப்பணி தொடங்கும் தருவாயில் தடைபட்டது. அம்பேத்கர் அப்புத்தகத்தில் இரண்டு முக்கியப் படங்களைச் சேர்க்க விரும்பினார். குடியரசுத் தலைவராக இருந்த டாக்டர் இராஜேந்திரப்பிரசாத் காசிக்குச் சென்று, அங்குள்ள பார்ப்பனர்களை வணங்கியதோடு, அவர்களின் பாதங்களைக் கழுவிக் குடித்தார். இக்காட்சியைப் படமாகப் புத்தகத்தில் அம்பேத்கர் இணைக்க விரும்பினார்.

அடுத்த படம் டில்லியில் 1947 ஆகஸ்டு 15 ஆம் தேதி சுதந்திர இந்தியாவின் முதல்பிரதமராகப் பண்டித ஜவகர்லால் நேரு பதவி ஏற்பதற்கு முன்பு காசியிலிருந்து வரவழைக்கப்பட்ட பார்ப்பனர்களால் யாகம் வளர்க்கப்பட்டது. அதன் அருகே பண்டித நேரு அமர்ந்து இருந்தார். அவரிடம் காசிப் பார்ப்பனர்கள் இராஜ தண்டத்தை வழங்கினார்கள். எடுத்து வந்திருந்த கங்கை நீரை நேருவுக்குத் தந்து அருந்தச் செய்தார்கள். இதற்கான படத்தையும் இப்புத்தகத்தில் வெளியிட வேண்டும் என்று அம்பேத்கர் விரும்பினார். இராஜேந்திரபிரசாத் பற்றிய படம் கிடைத்தது. நேருவின் ‘ யாகப்படம் ’ கிடைக்கவில்லை, தேட வேண்டியதாகி விட்டது ”.

திராவிட இயக்கத் தமிழர் பேரவை வெளியிட்ட அண்ணல் அம்பேத்கர் - புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பிறந்தநாள் மலரில் இவ்வாறு எழுதி இருக்கிறார்.

இப்பொழுது நேருவின் பூசாரி முகத்தை அம்பலப்படுத்தும் இன்னொரு படம் நமக்குக் கிடைத்திருக்கிறது.

‘ நேரு பண்டிதரின் வைதீகக் கோலம் ’ என்ற தலைப்பில், “ பகுத்தறிவு வீரர் - நாஸ்திகவாதி பண்டித ஜவகர்லால் நேரு தமது தாயாரின் முக்திக்காக பிரயாகையில் மரணச்சடங்கு நடத்தும் காட்சி ” என்ற எழுத்துக்களுடன் 1938, மார்ச் 20 ஆம் நாள் ‘ குடிஅரசு ’ இதழில் தந்தை பெரியார் இந்தப் படத்தை வெளியிட்டு இருக்கிறார்.

பகுத்தறிவு வேடத்தில் சோசலிசம் பேசிய நேருவின் மார்பில் பார்ப்பனிய பூணூல். குளிக்கும் இடம் பிரயாகை. பார்ப்பனர்களின் புண்ணிய நதிகளுள் இதுவும் ஒன்று. நேருவுக்கு அருகில் குளிப்பவர்களும் பார்ப்பனர்களே ! அவர்களின் பின்தலைக் குடுமியும், பூணூலும், உடையும் இதை உறுதி செய்கிறது.

புரட்சியாளர் அம்பேத்கர் நேருவின் பகுத்தறிவு வேடத்தை அம்பலப்படுத்த முயன்றும், பதிப்பித்து வெளியிட இயலாமல் போனாலும், அதையே இன்னொரு படத்தின் மூலம் நேருவை அம்பலப்படுத்தினார் தந்தை பெரியார்.

புரட்சியாளர் அம்பேத்கரின் முயற்சியும், தந்தை பெரியாரின் செயலும் இங்கு ஒன்றுபட்டதனால், சோசலிசவாதியாக அல்ல, பூணூல் பூசாரியாகக் காட்சி தருகிறார் பண்டித ஜவகர்லால்நேரு.

(1938 ஆம் ஆண்டு குடிஅரசு இதழில் வெளியான இப்புகைப்படத்தைக் “ கருஞ்சட்டைத் தமிழர் ” இதழுக்கு அனுப்பி உதவியவர் பேராசிரியர் ஆ. திருநீலகண்டர் - நன்றி.)

Pin It

துக்ளக்கில் தொடர்ந்து எழுதும் பழ.கருப்பையாவின் கட்டுரைகளைப் படிக்கின்றீர்களா?

- வீ.பாபு, மேட்டுப்பாளையம்

அவ்வப்போது படிக்கிறேன். அவர் பழ.கருப்பையாவாக இல்லாமல், ‘ பல ’ கருப்பையாவாக இருக்கிறார். தமிழ்ப் பற்றாளராக உள்ளார், தமிழின எதிரி சோவின் ஏட்டில் தொடர்ந்து எழுதுகிறார். எப்போதும் திராவிட இயக்கத்தின் மீதான தன் எரிச்சலைக் கொட்டுகிறார். அதே நேரம், ஏதாவது ஒரு திராவிடக் கட்சியில் உறுப்பினராக இருக்கிறார். ஊரிலுள்ள ஊழலையயல்லாம் எதிர்க்கப் புறப்பட்டவர் போல் எழுதுகிறார். ஆனால் போயஸ் தோட்ட ஊழல் ராணிக்கு ஊதுகுழலாக இருக்கிறார். முற்போக்கான கருத்துகளை மேடைகளில் பேசுகிறார், தன் குடும்பத்தில் சாதி மறுப்புத் திருமணம் நடந்தால் அதனை எதிர்க்கிறார், புறக்கணிக்கிறார். விடுங்கள், உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசும் பல கருப்பையாக்கள் காலந்தோறும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

குஷ்பு தி.மு.கவில் இணைந்திருப்பது பற்றி...?

- இ.புவனா, சென்னை - 33

அரசியல் எல்லோருக்கும் பொதுவானது, திரைத்துறையிலிருந்து ஏராளமானவர்கள் ஏற்கனவே அரசியலுக்கு வந்துள்ளனர். குஷ்புவை மட்டும் தனித்துப் பார்க்க வேண்டிய தேவை இல்லை. பெண்கள் அரசிய லுக்கு வருவது வரவேற்கத் தக்கதுதானே !

திராவிட மாயை என்று ஒரு புதிய புத்தகம் வந்துள்ளதே, படித்தீர்களா ?

- ராஜராஜன், பட்டுக்கோட்டை

படித்தேன். ஆர். எஸ்.எஸ் ஆதரவாளரான ஒரு பச்சைப் பார்ப்பனர்அந்த நூலை எழுதியுள்ளார். அந்த நூலில் பொய்கள் கூடப் புதிதாய் இல்லை. திராவிடம், திராவிட இயக்கம் போன்ற சொற்கள், பார்ப்பனர்களுக்கும், பார்ப்பன ஆதரவாளர்களுக்கும் எட்டிக் காயாய்க் கசக்கத்தான் செய்யும்.

பார்வதி அம்மாள் மீண்டும் வல்வெட்டித்துறைக்கே சென்றுவிட்டாரே ?

- ஆ. இராமலிங்கம், வேலூர்

சென்று விட்டார் என்பதை விட, அனுப்பப்பட்டு விட்டார் என்பதே சரி. அம்மா உடல் நலம் பெறாவிட்டால் கூடக் குற்றமில்லை, கலைஞருக்கு நல்ல பெயர் வந்துவிடக் கூடாது என்பதில் கவனமாயிருக்கும் தலைவர்கள் சிலரின் மறைமுக ஏற்பாடுதான் அது.

இங்கே நடைபெற்ற கூட்டமொன்றில் பேசிய நாஞ்சில் சம்பத், “ கருணாநிதி டெல்லி போய் வந்தார் என்கிறார்கள். அவர் எங்கே போய் வந்தார்? அவரைத் தூக்கிக் கொண்டு போனார்கள், தூக்கிக் கொண்டு வந்தார்கள். அவ்வளவுதான் ” என்று பேசியிருக்கிறார். அது குறித்து...?

இரா. இளங்கோவன் , மைலாப்பூர், சென்னை 4

நண்பர் நாஞ்சில் சம்பத்துக்கும் ஒருநாள் வயதாகும்.

எம்.ஆர். ராதாவையும், எஸ்.வி. சேகரையும் கலைஞர் ஒப்பிட்டுப் பேசியுள்ளாரே, அதனை நீங்கள் ஏற்கிறீர்களா?

- மா. வேலுச்சாமி, விருத்தாசலம்.

ஏற்கவில்லை. நடிகவேள் ராதா, பெரியாரின் போர்வாள். எஸ்.வி. சேகர், சங்கராச்சாரியின் சாமரம்.

இணையதளத்தில் உங்களின் மீது கடுமையான விமர்சனங்கள் வெளியாகி உள்ளனவே?

- தேன் மொழியான், சென்னை - 17

Idiot, Nonsense என்றெல்லாம் சிலர் எழுதி உள்ளனர். இவை விமர்சனங்களல்ல. வெறும் வசைகள். இணையதளங்களில் ஒளிந்து கொண்டு ‘ நிழல் யுத்தம் ’ நடத்துபவர்களைப் பற்றி நாம் கவலை கொள்ளத் தேவையில்லை. எனினும் அது பற்றிய ஒரு சில செய்திகளை நம் தோழர்கள் அறிந்திருப்பீர்கள். ஒருவரே, பல பெயர்களில் மின்னஞ்சல் முகவரிகளை வைத்துக்கொண்டு, பல கடிதங்களை அனுப்ப முடியும். அவர்கள் யார், எங்கிருந்து எழுதுகின்றார்கள் என்பதையயல்லாம் படிக்கின்றவர்கள் அறிந்து கொள்ள முடியாது. எனவே நம்மைப் பலரும் எதிர்க்கின்றனர் என்பது போன்ற மாயத்தோற்றத்தை உருவாக்குவதே அவர்களின் நோக்கம். இந்த அவதூறுகளுக்கெல்லாம் அச்சப்பட்டால், பொதுவாழ்வில் நாம் இயங்கவே முடியாது. அவற்றைப் புறந்தள்ளிவிட்டு, நம் பணிகளை நாம் தொடர்வோம் !

Pin It