farmers 600

தமிழகத்திற்குத் தண்ணீர் தரமாட்டோம் என்கிறது கர்நாடகம். சொன்னதைச் செய்வோம். உபரி நீரைக்கூட தமிழக எல்லைக்குச் செல்ல அனுமதிக்க மாட்டோம் என்று காவிரியின் குறுக்கே அணைகளைக் கட்டுகிறது அம்மாநில அரசு.

குறிப்பாக, கர்நாடகம் கட்ட முடிவெடுத்துள்ள, மேகதாது அணை, தமிழகத்தின் டெல்டா விளைநிலங்களை வறண்ட நிலங்களாக ஆக்குவதற்கான அடையாளம்.

உச்சநீதிமன்றத்தில் வழக்குகள், தீர்ப்புகள், ஆணையங்கள், குழுக்கள் அமைத்தால்...எல்லாம் சரி!

ஆனால் கர்நாடக அரசு எதற்கும் அடங்கவில்லை, நீதிமன்றங்களை மதிப்பதுமில்லை.

களத்தில் இறங்கிய வேளாண் பெருங்குடி மக்களின் அறைகூவலால் திரண்டெழுந்தது தமிழகம். அதிமுக, பா.ஜ.க. தவிர்த்து அனைத்து அரசியல் கடசிகள், வணிகர் சங்கங்கள், பிற தொழிற்சங்கங்கள், இயக்கங்கள், நிறுவனங்கள் என அனைவரின் ஆதரவுடன் நிகழ்ந்த தமிழகம் தழுவிய மாபெரும் வேலை நிறுத்தம் மாபெரும் வெற்றியைத் தந்தது.

அரண்டுபோன கர்நாடக முதல்வர் சித்தராமையா தமிழக அரசியல் நெருக்கடிகளுக்கு அஞ்சமாட்டோம் என்றார் பதற்றமாக.

காவிரியின் உபரி நீரைச் சேகரித்து, கர்நாடகத்தில் குடிநீருக்கும் பயன்படும் மேகதாது கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை நிறைவேற்ற இருக்கிறோம். கர்நாடக எல்லையில் அணைகட்ட கர்நாடகத்திற்கு முழுஉரிமை இருக்கிறது என்றும் கூறுகிறார் சித்தராமையா.

காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பின் படி, தமிழகத்திற்கு உரிய நீரை வழங்க வேண்டிய அரசு இப்படிக் கூறுகிறது என்றால், தேசியம் என்ற போலி வேடத்திற்கு அங்கே இடமே இல்லை என்பது வெள்ளிடை மலையாகிறது.

உண்மையைச் சொன்னால், காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை குப்பையில் போட்டுவிட்டு, மழைக் காலங்களில் பெய்யும் அடை மழையால் ஏற்படும் வெள்ளப்பெருக்கினால், கர்நாடக அணை நிரம்பி அதன் உபரி நீர்தான் தமிழகத்திற்கு வருகிறது.

கோடைக்காலங்களில் முழுமையாக நீர் தடுக்கப்படுகிறது.

கர்நாடகத்தில் காவிரியின் குறுக்கே இருக்கும் மிகப்பெரிய அணை கிருஷ்ணராஜ சாகர் அணை. இன்னொன்று கபினி அணை.

இவை இரண்டில் இருந்தும் வரும் நீர் ஒருங்கிணையும் இடம் டி.நரசிங்கபுரம். இங்கிருந்துதான் மேட்டூருக்குத் தண்ணீர் வருகிறது.

இந்த டி.நரசிங்கபுரத்தில்தான் தற்போது கர்நாடக அரசு மேகதாது அணை கட்ட முடிவெடுத்து, நிதி ஒதுக்கி இருக்கிறது.

கிருஷ்ணராஜ சாகர் அணையிலும், கபினி அணையிலும் முதலில் நீர் தேக்கப்படுகிறது.

அங்கிருந்து வரும் உபரி நீர் இதுவரை தமிழகத்திற்கு விடப்பட்டது. ஆனால் இனி மேகதாது அணை அந்த உபரிநீரையும் தேக்கிக் கொள்ளும்.

இனி அங்கிருந்து உபரிநீர் கூட தமிழகத்திற்கு வரும் வாய்ப்பு இல்லை. காரணம் கட்டப்பட இருக்கும் மேகதாது அணை. அதில் 43 டி.எம்.சி. தண்ணீரைத் தேக்கிவிட முடியும்.

மத்திய சுற்றுச் சூழல் அமைச்சர் சொல்கிறார், கர்நாடக அரசு அணைகட்ட அனுமதி வாங்கவில்லை என்று.

கர்நாடக முதல்வர் சொல்கிறார் எவ்வித நெருக்கடிகளுக்கும் அஞ்சி மேகதாது அணைகட்டும் திட்டத்தைக் கைவிடமாட்டோம் என்று.

சிரமறுத்தல் மன்னனுக்குப் பொழுதுபோக்கு - மக்களுக்கோ உயிரின் வாதை என்பதைப் போல, இவ்விரு அரசுகளும் தமிழக வேளாண் மக்களின் உயிரோடு விளையாடிக் கொண்டிருக்கின்றன.

நீதிமன்றம், மக்கள் போராட்டங்கள் என்றில்லாமல், நாடாளுமன்றத்திலும் இப்பிரச்சினை எழுப்படுகிறது. திமுக, அதிமுக உள்பட அனைத்து உறுப்பினர்களும் இந்த பிரச்சனையில் இணைந்து குரல் கொடுக்கிறார்கள்.

மக்கள் போராட்டங்கள் தோற்றதாக வரலாறு இல்லை. மக்களை ஒதுக்கித்தள்ளும் தேசியங்கள் அற்று வீழ்ந்த கதைகள் உலக வரலாற்றில் இல்லாமல் இல்லை.

காவிரி - மேகதாது - தமிழகம் கர்நாடகம் - இந்தியம் என்ன சொல்லப் போகிறதோ எதிர்காலம்?

Pin It