தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களின் நேர்காணல் ஒன்று தந்தி தொலைக்காட்சியில் 28.03.2015 இரவு ஒளிபரப்பாயிற்று. வாரம்தோறும் ஒளிபரப்பாகும் ‘கேள்விக்கு என்ன பதில்’ நிகழ்ச்சி அது.

ஊடகங்களுக்கென்றும், நேர்காணல்களுக்கென்றும் சில அறங்கள் உண்டு; இருக்க வேண்டும். அவை அனைத்தையும் மீறி, எப்படியாவது ஆசிரியரை இழிவு படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு வெளியான ஒரு நேர்காணலாகவே அது இருந்தது.

ki veeramani 340‘உங்களுடைய கார் எண் என்ன, அது எண்சோதிட அடிப்படையில் பெறப்பட்டதா ‘ என்னும் அளவிற்குக் கீழ் இறங்கிக் கேள்விகள் கேட்கப்பட்டன.

நிகழ்ச்சி முழுவதும் பாண்டேயைப் பார்த்து, ‘நீங்க, கேளுங்க, சொல்லுங்க’ என்று மதிப்போடு பேசினார் ஆசிரியர். ஓரிடத்தில் கூட மரியாதைக் குறைவான எந்தச் சொல்லையும் அவர் பயன்படுத்தவில்லை. ஆனால் நிகழ்ச்சியின் முடிவில், பாண்டே ஆசிரியரைப் பார்த்து, ‘நன்றி வீரமணி’ என்று குறிப்பிட்டார். நமக்குத் தெரியவில்லை, ஒருவேளை ஆசிரியரின் வயது 41ஆகவும், பாண்டேயின் வயது 82 ஆகவும் இருக்கலாம்!

பாண்டே நடத்தும் நிகழ்ச்சிகளில் எப்போதும் ஒன்று தெளிவாக இருக்கும். திராவிட இயக்கத்தைத் தாக்கும் நோக்கம் எப்போதும் இலை மறை காயாக இருந்து கொண்டே இருக்கும். இந்த நிகழ்ச்சியிலும், பட்டப் பெயர்கள் கொடுத்துக் கொள்வது திராவிட இயக்க மரபு என்றார். ஏன், மற்ற இயக்கங்களிலேல்லாம், பட்டங்களே இல்லையா? பெருந்தலைவர் என்பது காமராஜர் அவர்களின் இயற்பெயரா? ஆச்சாரியார் என்பது ராஜாஜியின் இயற் பெயரா-? மகாத்மா என்பது காந்தியாரின் இயற்பெயரா? அரசியலுக்கு வெளியில், காஞ்சிபுரம் போனால், பெரியவாள், சின்னப் பெரியவாள், பால பெரியவாள் என்றெல்லாம் அழைக்கப்படும் ‘வாள்’கள் எங்கிருந்து வந்தன?

கேள்விகள் மட்டுமின்றி, பாண்டே கேள்வி கேட்ட விதம், அடிக்கடி உதிர்த்த கேலிப் புன்னகை எல்லாமே ஊடகத்திற்குரிய நாகரிகத்தோடு இல்லை. ஒருமுறை ஆசிரியரே குறுக்கிட்டு, “இந்த நக்கல் எல்லாம் வேண்டாம்“ என்று சொல்லும் அளவுக்கு அது தரக் குறைவாக இருந்தது.

பதிவு செய்யப்பட நிகழ்ச்சி என்பதால், எங்கு வேண்டுமானாலும் வெட்டி ஒட்டிக் கொள்ளும் வாய்ப்பு அவர்களுக்கு உண்டு. அந்த வகையில் என்ன நடந்திருக் கிறது என்பதையும் பார்க்க வேண்டியுள்ளது. இடை இடையே சில மேற்கோள்களைத் திரையில் காட்டினார்கள். அம்பேத்கார் மாட்டு இறைச்சி உண்ணக்கூடாது என்று சொல்ன்னதாகக் கூறிய பாண்டே, அதற்கு ஏற்ற சில வரிகளை அம்பேத்கார் நூலிலிருந்து திரையில் காட்டினார். ஆனால் அதில், “இறந்த விலங்குகளை உண்ண வேண்டாம்“ என்றுதான் இருந்தது. இறந்த விலங்குகளை யாரும் உண்ணக்கூடாது என்பதை நாம் அறிவோம்.அதைத்தான் அவர் கூறியுள்ளார். நீடாமங்கலம் பற்றிக் கேள்வி கேட்டார். அது பற்றி உங்களுக்கு என்ன தெரியும் என்று ஆசிரியர் கேட்டபோது, அவருக்கு அது குறித்துத் தெளிவாகத் தெரியவில்லை. ஆனால், ஆசிரியரை மட்டுமின்றிப் பெரியாரையும் கொச்சைப்படுத்தி விட வேண்டும் என்ற ஆவல் அவருக்கு இருந்தது என்பது மட்டும் நன்றாகத் தெரிந்தது!

தமிழ்த் தலைவர்களை இழிவுபடுத்துவது, பாண்டேக்கு மகிழ்ச்சி தரலாம். ஆனால், தந்தி இதழைத் தொடங்கிய ஆதித்தனார் அனைவரையும் மதித்தவர். உலகத் தமிழர் நலம் பேணியவர். பாண்டேயின் நடத்தையோ, ஆதித்தனாரையே அவமானப்படுத்துவதாக அமைகிறது.

Pin It