டிசம்பர் மாத இறுதியில் அடுத்தடுத்து வந்த மூன்று செய்திகள் :

1. ஹைதராபாத்தில் நடைபெற்ற படப்பிடிப்பு நிகழ்ச்சி ஒன்றில், தடி, கம்புகளோடு உள்ளே புகுந்த தெலங்கானா ஆதரவாளர்கள், அங்கிருந்த நடிகர் மோகன்பாபுவின் மகளையும், மகளையும் அடித்து விரட்டிவிட்டு, புகைப்படக் கருவிகள், அரங்கத்தில் இருந்த பொருள்கள் அனைத்தையும் உடைத்து நொறுக்கினர். இதுகுறித்துத் தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதித் தலைவர் சந்திரசேகர ராவிடம் கேட்டபோது, அவர், “எங்கள் கட்சிக்காரர்கள் மிகவும் நல்லவர்கள். அதனால்தான் பொருள்களை உடைத்ததோடு நிறுத்திவிட்டனர். என்னைக் கேட்டால், மோகன்பாபுவின் மகன், மகளையே அடித்து உதைத்திருக்க வேண்டும் என்பேன். ஹைதராபாத் எங்களுக்குச் சொந்தம் என்று யாராவது சொன்னால், அவர்களின் நாக்கை ஒட்ட நறுக்கிவிடுவோம்” என்றார்.

2. மும்பையில், தாதர் அருகில் உள்ள பிரபாதேவி என்னுமிடத்தில், ஒரு கோயில் வாசலில் படுத்திருந்த பத்து, இருபது பிச்சைக்காரச் சாமியார்கள், ராஜ்தாக்கரேயின் ஆட்களால், உருட்டுத் தடி கொண்டு தாக்கப்பட்டனர். “இந்தி பேசுற பிச்சைக்காரப் பயலுவளே, ஒங்க ஊருல போய்ப் பிச்சை எடுங்கடா. இங்க ஏன் வரீங்க?” என்று கேட்டபடி அவர்கள் அந்தச் சாமியார்களைத் தாக்கினர்.

3. நக்சலைட் இயக்கத் தலைவர் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில், “தெலங்கானா மக்களே, கரையோர ஆந்திர முதலாளிகளின் வசம் உள்ள நிறுவனங்கள், சொத்துகள் எல்லாவற்றையும் பறித்துக் கொண்டு, அவர்களை விரட்டி அடியுங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த மூன்று செய்திகளும் இன்றைய அதிர்ச்சிகளாக மட்டுமின்றி, நாளைய உலகைப் பற்றிய கேள்விக்குறிகளாகவும் உள்ளன.

ஆந்திராவைப் பிரிக்கக் கூடாது என்று நடிகர் மோகன்பாபு சொன்னதற்காக, அவருடைய பிள்ளைகள் விரட்டப்பட்டுள்ளனர், பொருள்கள் நொறுக்கப்பட்டுள்ளன. ஆந்திரா பிரிக்கப்பட வேண்டுமா, வேண்டாமா என்பது ஒரு புறமிருக்க, ஒருவர் தன் கருத்தை வெளிப்படுத்தவே கூடாது என்பதும், மீறி வெளிப்படுத்தினால் அடித்து நொறுக்குவோம், நாக்கை அறுப்போம் என்பதும், எதிர்காலத்தை எங்கு கொண்டு சேர்க்கும்?

நாமெல்லாம் இந்தித் திணிப்பை எதிர்ப்பவர்கள்தாம், சாமியார்களின் போலித்தனத்தைத் தோலுரித்துக் காட்டத் துடிப்பவர்கள்தாம். ஆனாலும், கோயில் வாசலில் படுத்துறங்கும் பிச்சைக்காரச் சாமியார்களை உருட்டுக் கட்டைகளால் அடிப்பது எந்த வகையில் சரியானது?

சுரண்டிப் பிழைப்பவர்களின் சொத்துக்கைளைப் பறிமுதல் செய்வது குற்றமில்லைதான். ஆனாலும் கரையோர ஆந்திராக்காரர்கள் மட்டும்தான் சுரண்டல்வாதிகளா? குஜராத் சேட்டுகளும், ராஜஸ்தான் மார்வாரிகளும் இந்தியாவெங்கும் சுரண்டிக் கொழுக்கவில்லையா? ஏன், தெலங்கானா மக்களிடமும் சுரண்டல் பேர்வழிகள் இருக்கமாட்டார்களா? இந்தக் கேள்விகளுக்கெல்லாம், எந்த விடையும் கூறாமல், ஆள் ஆளுக்குச் சட்டத்தைக் கையில் எடுத்துக் கொள்வது நியாயம் ஆகாது.

இவைகளையயல்லாம் விடக் கொடுமை என்னவென்றால், இவை போன்ற மனிதநேயமும், ஜனநாயகமும் அற்ற செயல்களை எல்லாம், “அடடா பாருங்கள், அவர்களிடம் எவ்வளவு போர்க்குணம் உள்ளது” என்று பாராட்டுவதுதான். அப்படிப் பாராட்டி, இளைஞர்களைத் தூண்டிவிட்டு, திரும்பும் இடமெல்லாம் ரத்தக் களறியாக மாற வழி செய்வது, நேர்மையான எந்த மனிதராலும் ஏற்றுக் கொள்ள முடியாதது.

இன, மொழி உணர்வோ, மண்ணின் மைந்தர்கள் கோட்பாடோ பிழையானவை அல்ல. “அவரவர் நாட்டில் அவரவர் வாழ்க, மற்றயல் நாட்டைச் சுரண்டுதல் அடியோடு வீழ்க” என்னும் புரட்சிக் கவிஞரின் வரிகள் எல்லா வகையிலும் பொருத்தமானவை. இந்திய ஒருமைப்பாடு, ஒரே நாடு, ஒரே பண்பாடு போன்ற போலி முழக்கங்கள் இனி இந்தியாவின் எந்த மூலையிலும் எடுப்படப் போவதில்லை. காஷ்மீருக்கான சிறப்புச் சட்டத்தை (பிரிவு 370) ஒழிக்க வேண்டும் என்னும் பா.ஜ.க.வின் முழக்கம் எள்ளி நகையாடப்பட்டு, அதனை எல்லா மாநிலங்களுக்கும் விரிவுபடுத்து என்னும் முழக்கமே இனி ஒலிக்கப்போகிறது. 90 சதவீத நிலங்களை அவரவர் மண்ணில் அவரவர்தான் வாங்கும் உரிமை உடையவர் என்னும் சட்டம் இயற்றப்பட்டே ஆக வேண்டும்.

இவை அனைத்தும் நியாயமான கோரிக்கைகள். இவற்றை மக்கள் மன்றத்திற்குக் கொண்டு சென்றும், இந்தக் கருத்தில் உடன்பாடு உடையவர்கள் அனைவரையும் இந்தியா முழுவதும் ஒருங்கிணைத்தும் ஆற்ற வேண்டிய அரசியல் பணிகள் ஏராளமாக உள்ளன. இந்த முயற்சிகள் உடனே வெற்றி பெறக் கூடியவை அல்ல. இதில் கருத்து வேறுபாடுகள் வருவதற்கு வாய்ப்புகள் உண்டு. அப்போது கருத்து மோதல்கள் தவிர்க்க இயலாதவை.

‘முடியாது, மாற்றுக் கருத்துக்கே இடமில்லை. மாற்றுக் கருத்துச் சொல்பவர்களைத் தடி கொண்டு தாக்குவோம்’ என்பது பாசிசம். இத்தாலிச் சொல்லான பாசிசம் என்பதன் மூலச்சொல் ‘தடி’ என்று கூறுவர். அந்தத் தடியைக் கையில் எடுத்து இன்று நாம் வெற்றி பெறலாம். ஆனால் அதைவிட வலிமையான தடி, நாளை நம் எதிரியின் கைகளுக்குக் கிடைக்கக்கூடும்.

நியாயங்களைத் தடிகளின் வலிமை முடிவு செய்யும் நாட்டில் அழிவுகளே மிஞ்சும். வன்முறையின் மூலமும், கொடூரத்தாக்குதல்களின் மூலமும் பெறும் வெற்றிகளை நாம் கொண்டாடினால், பிறகு நமக்கும், ராஜபக்சேவுக்கும் வேறு என்ன வேறுபாடு?

ராஜபக்சேயாக இருப்பதைக் காட்டிலும், அநாகரிகம், அசிங்கம், அருவருப்பு வேறு ஏதேனும் உண்டா?

- சுப.வீரபாண்டியன்

Pin It