ஒன்றிய ஆட்சி ஒற்றை இந்தியாவின் பெருமையைப் பேசிக் கொண்டிருக்கிறது. நாடு முழுவதும் ஒரே மதம், ஒரே ரேசன் கார்டு, ஒரே மொழி அதிலும் புனித மானது சமஸ்கிருதம் என்றெல்லாம் ஒற்றை ஆட்சி பற்றிப் பேசி, நாட்டை சர்வாதிகாரப் பாதைக்கு இழுத்துச் சென்று இந்தியாவை இந்து இராஷ்டிரமாக மாற்றலாம் என்பது அவர்கள் போடுகிற தந்திரமான கணக்கு. சரி இருக்கட்டும்;
ஒற்றை இந்தியாவை இவர்கள் உருவாக்குவதற்கு முன்பாக, இவர்கள் ஆட்சி செய்து கொண்டிருக்கிற மாநிலங்களில் தற்போது தலைதூக்கி ஆடிக் கொண்டிருக்கிற எல்லைப் பிரச்சனைகளை தீர்க்க முடியாமல் திண்டாடிக் கொண்டிருக்கிறார்களே அதற்கு என்ன பதிலை சொல்லப் போகிறார்கள். 1956 ஆம் ஆண்டு மொழி வழி மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. அப்போது பெலகாவி மாவட்டத்தில், மராத்தி பேசும் மக்கள் வசிக்கும், 865 கிராமங்கள் கர்நாடக மாநிலத்துடன் இணைக்கப்பட்டன. அதே போன்று மகராஷ்டிராவில் ஜாட் தாலுகாவில் கன்னடம் பேசும் கிராமங்கள் கர்நாடக மாநிலத்துடன் இணைக்கப்பட்டன. இரு மாநிலங்களின் எல்லைகளிலும் அந்தந்த மொழி பேசும் மக்கள் இணக்கமாகத் தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். ஆனால், கட்சிகள் தங்களது சுயநலத் திற்காக இந்த எல்லைப் பிரச்சனையை தூண்டிவிட்டு கலவரத்தை செய்து வருகின்றன.
பெலஹாவி மகராஷ்டிராவிற்கே சொந்தம் என்று ஒரு கட்சி போர்க்கொடி தூக்கி அவ்வப்போது கலவரங்களை நடத்தி வருகின்றது. அந்தக் கட்சியின் பெயர் “மகராஷ்டிர ஏகிரன்” கட்சி. அதே போல கர்நாடகாவிலும் ஒரு கட்சி இருக்கிறது. அதன் பெயர் “இரட்சண வேதிக கட்சி” என்று பெயர். அந்தக் கட்சி, மகராஷ்டிர எல்லைகளில் இணைக் கப்பட்ட கர்நாடக கிராமங்களை மீண்டும் கர்நாடகாவுடன் இணைக்க வேண்டும் என்று அவ்வப்போது கலவரங்களை செய்து வருகிறது. கட்சிகள் தான் இப்படி இருக்கிறது என்றால் முதலமைச்சர்களும் அதற்கு ஒன்றும் குறைந்தவர்கள் இல்லை.
மகராஷ்டிராவின் முதலமைச்சராக இருக்கின்ற ஏக்நாத் ஷிண்டே, கர்நாடக முதலமைச்சராக இருக்கின்ற பொம்மை இருவரும் அமித்ஷா வை சந்தித்து இதற்கு ஒரு தீர்வு காண வேண்டும் என்று முறையிட்டார்கள். அமித்ஷா இரண்டு மாநிலங்களிலும் மூன்று எம்.பி.களைக் கொண்ட குழுவை நியமித்து சட்ட ரீதியான தீர்வைக் காணலாம் என்ற உறுதியளித்தார். உறுதி அப்படியே கிடப்பில் போடப்பட்டு இருக்கிறது. பிரச்சினை நீதிமன்றத்திலும் நிலுவையிலே இருக்கிறது.
இந்நிலையில் கர்நாடக முதலமைச்சர் பொம்மை அந்த மாநிலத்தின் சட்டமன்றத்தில், கர்நாடகத்தில் இருந்து மகராஷ்டிராவில் இணைக்கப்பட்ட பகுதிகளில் ஒரு துளி அங்குலத்தைக் கூட விட்டுத் தர மாட்டோம் என்று கூறி விட்டார். மகராஷ்டிர முதலமைச்சர் இந்த கர்நாடகத்துடன் இணைக்கப்பட்ட 865 கிராமங்களை மகராஷ்டிராவுடன் சட்ட ரீதியாக இணைக்கப்படும் என்று சட்டமன்றத்திலேயே தீர்மானம் கொண்டு வந்து அறிவித்து விட்டார்.
மோதல்கள் வெடித்துக் கொண்டு இருக்கின்றன. காரணம், கர்நாடகா தற்போது சந்திக்கவிருக்கும் தேர்தல்தான். தேர்தலில் வாக்கு வங்கிக்காக இந்த நாடகங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. ஒற்றை இந்தியாவும், ஒற்றை இந்து மதமும், ஒற்றைக் கலாச்சாரமும் பேசுகின்ற பாஜக ஆட்சி, இரண்டு மாநிலங்களின் எல்லை களில் வாழ்கிறவர்களும் பெரும்பான்மை யினர் இந்துக்கள் தான், இரண்டு மாநில முதல்வர்களும் இந்துக்கள் தான். இவர்களுக்குள் ஏன் ஒற்றைத் தன்மையை, ஒற்றுமையை ஏற்படுத்த முடியவில்லை? என்ற கேள்விக்கு பதில் கூறியாக வேண்டும்.
- விடுதலை இராசேந்திரன்