1

அவர்கள் பார்வையில்

எனக்கு-
முகம் இல்லை
இதயம் இல்லை
ஆத்மாவும் இல்லை

அவர்களின் பார்வையில்-
இரண்டு மார்புகள்
நீண்ட கூந்தல்
சிறிய இடை
பருத்த தொடை
இவைகளே உள்ளன

சமையல் செய்தல்
படுக்கையை விரித்தல்
குழந்தை பெறுதல்
பணிந்து நடத்தல்
இவையே எனது கடமைகள் ஆகும்

கற்பு பற்றியும்
மழை பெய்யெனப் பெய்வது பற்றியும்
கதைக்கும்
அவர்கள்
எப்போதும் எனது உடலையே
நோக்குவர்

கணவன் தொடக்கம்
கடைக்காரன் வரைக்கும்
இதுவே வழக்கம்.

- அ.சங்கரி


2

கருப்பட்டி மிட்டாய்க்குப்
பிள்ளையழ
பலத்த கைத் தட்டலுக்கிடையே
கரகாட்டக்காரிக்கு
ராசாத் தேவர்
அன்பளிப்பு
நூத்தியொண்ணு

0

பதினெட்டுப் பட்டி சூழ
சந்நதம் கொண்ட மாரியாத்தா
சட்டென இறங்கினாள்
பெரியவீட்டு சாந்தி மீது
"என்ன வேண்டும்
கேள் மகனே" என்றாள்.
ஆவேசங் கொண்டாலும்
அழகு ததும்பும்
அவளிடம்
அத்தனை பேர் முன்
எப்படிக் கேட்பேன்
நீதான் வேண்டுமென்று.

- வித்யாஷங்கர்

0

தவம்

உனக்கென்ன
சாமி பூதம்
கோவில் குளம் ஆயிரமாயிரம்
ஜாலியாய் பொழுது போகும்
வலப்பக்கக் கடல் மணலை
இடப்பக்கம் இறைத்திறைத்து
நகக் கணுக்கள் வலிக்கின்றன
அடியே
நாளையேனும் மறக்காமல்
வா.

- பாலகுமாரன்

0

என்ன செய்வ
திந்தக் கையை
என்றேன். என்ன செய்வ தென்றால்
என்றான் சாமி. கைக்கு வேலை
என்றிருந்தால் பிரச்னை இல்லை;
மற்ற நேரம், நடக்கும் போதும்
நிற்கும்போதும் இந்தக் கைகள்
வெறுந்தோள் முனைத்தொங்கல், தாங்காத
உறுத்தல் வடிவத் தொல்லை
என்றேன். கையைக் காலாக் கென்றான்.

- சி.மணி

0

இருப்பதற்கென்று
வருகிறோம்
இல்லாமல்
போகிறோம்

- நகுலன்

0
காவியம்

சிறகிலிருந்து பிரிந்த
இறகு ஒன்று
காற்றின்
தீராத பக்கங்களில்
ஒரு பறவையின் வாழ்வை
எழுதிச் செல்கிறது

- பிரமிள்

0
அலைகளைச் சொல்லிப்
பிரயோஜனமில்லை
கடல் இருக்கிற வரை.

- நகுலன்

0

பிணம் புதைக்க
சுடுகாட்டுக்கு வந்த கூட்டத்தில்
ஒருவர் கேட்டார்
“இந்தப் பக்கமெல்லாம்
நெலம் என்ன வெலைக்குப்
போகுதுங்க”

- இந்திரன்

0

பிரசுரம்

விலை ரூபாய் 30.
வெளிநாட்டுக்கார
முகமூடி எழுதியது.
உள்நாட்டில் தலை
இல்லாமல் அலையும்
முண்டத்தின் மொழிபெயர்ப்பு.
நூலின் பெயர்:
"இருப்பின் அமைப்பு முதல்
தலையின் இன்மை வரை”

- பிரமிள்

0

மெய்ப்பொருள் : 2

எதையேனும் சார்ந்திரு
கவித்துவம்
தத்துவம் காதல்
இங்கிதம் சங்கீதமிப்படி
எதன் மீதேனும் சாய்ந்திரு
இல்லையேல் உலகம்
காணாமல் போய்விடும்

- வண்ணநிலவன்

Pin It