கிராமங்களின் வேலிகளில் செழித்து வளர்ந்திருக்கிற செடிகளில் பெரும்பாலன வற்றிற்குப் பெயர் என்னவென்று தெரியாது. அவைகள் ரசிக்கத் தெரிந்தவர்களின் மனச் சிம்மாசனங்களில் ஏதோ ஒரு பிடித்தமான பெயரில் அமர்ந்து கொள்கின்றன. அவை தப்புச் செடிகளாக இருக்கலாம். ஏனெனில் யாரும் எதற்காகவும் விதைக்காத செடிகள் அவை.

பயிர்களாகும் என்று நினைத்து விதைத்த பல விதைகள் சுணங்கிய பயிர்களாகி விடுவதும், விளைச்சலை உறுதி செய்து விடுகிறபோதும் சில பதர்களையே தந்துவிடுவதும் களம் கண்ட உழவன் அறிவான்.

யாரும் விதைக்காத செடிகள் அபூர்வங்களை அடையாளப் படுத்துவது போல,கோனூர் வைரமணியின் “தப்புச் செடி” இசையின்பமும், கிராமத்துச் சொல் மணமுமாக நம்முன் விளைந் திருக்கிறது. நவீன கவிதையின் சொல் மிரட்டல் இல்லை. புதுக் கவிதையின் கூறியது கூறல் இல்லை.

யாரும் எளிதாக பேசுகிற சொற்களால் கவிதைப் பயணத்தைத் தொடர்ந்திருக்கிறார். “தப்புச்செடி”யின் நிழலில் தாராளமாக இளைப் பாறலாம். அது நுங்கின் இளமையையும், கருப்பட்டி இனிப்பையும், பச்சரிசி மாவின் தித்திப்பையும், எள்ளுருண்டையின் சுவையையும் அடையாளப்படுத்தும்.

தப்புச்செடி, கோனூர் வைரமணி
நிவேதிதா புத்தகப்பூங்கா, 14/260, இரண்டாவது தளம், பீட்டர்ஸ் சாலை,
இராயப்பேட்டை, சென்னை - 14. 984714603.

Pin It