1

வெகுநாட்கள் காணாத பிரிவின்பால்
உண்டான பேரன்பில்
செல்லப் பிராணியைப் போல்
அது கால்களுக்குள் நுழைந்து
என் உடலை நக்கி
திக்குமுக்காடச் செய்யலாம்
அல்லது
அன்பின் வெறிமிகுந்து
என் நெஞ்சையும் தாக்கலாம்
எதற்கும் ஆயத்தமாகவே
செல்ல வேண்டும்
கடலுக்கு

2

அங்கொன்றும் இங்கொன்றுமாக
எவ்வித ஒழுங்குமற்று
எழுப்பப்பட்டிருக்கும்
சமாதிகளுக்கு இடையே
எனக்கான இடத்தைத் தேடியபடி
போய்வந்து கொண்டிருக்கிறேன்
அவ்வழியில் பயணிக்கும் போதெல்லாம்

3

இரந்து நின்றவனுக்கு
ஒரு ரூபாய் கொடுத்தேன்
கையெடுத்துக் கும்பிட்டு
கடவுளாக்கினான் என்னை
வெட்கமாயிருந்தது

4

சலித்துக் கொண்டிருந்த காற்று
சட்டென நின்றுவிட்டது
முயன்று முயன்று முடியாமல்
வெறுமையின் பிடியிறுகி
இறந்துகிடக்கிறது நான்
காற்றைத் தின்ன நாவை நீட்டியபடி

- முத்து பழனியப்பன்

Pin It