முன்பெல்லாம்
அடிக்கடி
வந்தமர்வாய்
என் மனக்கிளையில்
ஒரு பழகிய
பறவையைப் போல.

எனக்கான
சொற்களையும்,
வண்ணங்களையும்
சேர்த்து
கொஞ்சம்
கொண்டுவருவாய்
என காத்திருந்தேன்.
இலைகளையும்
மலர்களையும்
உதிர்த்து
நிழல்களின்றி
வெறும்
கிளைகளைமட்டும்
பரப்பி.

என்னில் ஏதும்
தளிர்கள் துளிர்க்காதென
கருதி
உதிர்த்துப் போயிருக்கிறாய்
என்
கிளையொன்றில்
உன் சிறகுகளை.

பலத்த காற்றினூடும்
கீழே தள்ளாமல்
அதை
பற்றியபடி நீள்கிறது
என் காத்திருப்பு.
சருகுகளின்
சலசலப்புக்கு
பதிலேதும் கூறாமல்...

Pin It