கருத்துரிமைக்காக கம்யூனிஸ்ட்கள் போராட வேண்டியதின் அவசியத்தை விளக்கும் தோழர் ஆனந்தனின் உரை:

சமீப காலத்தில் கருத்துரிமையின் மீதான தாக்குதல்கள் மிகப் பெரிதாக வந்துகொண்டுள்ளன. ராஜஸ்தானில் நடைபெற்ற இலக்கியத் திருவிழாவில் எழுத்தாளர் சல்மான் ருஷ்டி கலந்து கொள்ள அனுமதிக்கப்படாததில் தொடங்கி மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி பாடப் புத்தகங்களில் மார்க்ஸ் எங்கெல்ஸ் போன்ற மாமேதைகள் குறித்த பாடங்கள் அகற்றப்படும் என்று அறிவித்தது வரை பல தாக்குதல்கள் அறிவிற்கும் கருத்துரிமைக்கும் எதிராக வந்துகொண்டுள்ளன.

மீண்டும் மீண்டும் தாக்குதல்

அதையடுத்து சி.பி.எஸ்.சி. அரசியல் அறிவியல் பாடப் புத்தகத்திலிருந்து நேரு, அம்பேத்கார் குறித்த சங்கர்ஸ் வரைந்த கேலிச் சித்திரம் அகற்றப்பட்டது நடந்தது. இதற்கு முன்பும் கூட 108 ராமாயணங்கள் என்ற ஏ.கே.ராமானுஜனின் ராமாயணம் குறித்த நூல் டெல்லி பல்கலைக் கழகத்தின் இந்திய வரலாற்றுப் பாடத் திட்டத்திலிருந்து சங்பரிவாரத்தின் மிரட்டலை ஒட்டி அகற்றப்பட்டது.

2007ம் ஆண்டு சிவசேனையின் மிரட்டலைத் தொடர்ந்து ரோகின்டன் மிஸ்ட்ரியின் சச் எ லாங் ஜேர்னி என்ற பல விருதுகளைப் பெற்ற நூல் மும்பை பல்கலைக் கழகத்தின் இளங்கலை இலக்கியப் பாடத்திலிருந்து அகற்றப்பட்டது. அதை அகற்றக் கோரி சிவசேனா மிரட்டல் விடுத்ததற்குக் காரணம் அது மாராட்டிய மக்களை தவறாகச் சித்தரிக்கிறது என்பதாகும். தற்போது கனடாவில் இருக்கும் அந்த எழுத்தாளர் கனடாவில் இருப்பதால் உயிர் தப்பியுள்ளார், இங்கிருந்திருந்தால் அவரது கதையே வேறு என்று சிவசேனைத் தலைவர் பால் தாக்கரேயின் பேரன் வீராவேசமாக அறிவித்தார்.

இவ்வாறு இலக்கியங்கள், பாடங்கள் மற்றும் கேலிச் சித்திரங்கள் பள்ளி மற்றும் பல்கலைக்கழகப் பாடத்திட்டங்களில் இருந்து தன்னிச்சையாக அமைச்சர்களாலும் பல்கலைக்கழகத் துணைவேந்தர்களாலும் அகற்றப்படும் பாசிஸப் போக்கு தலைதூக்கியுள்ளது. அதாவது கல்வி குறித்த விவகாரங்கள் கல்வியாளர்களால் நிர்வகிக்கப்பட வேண்டும். அது முறையான கல்வியியலாளர்களைக் கலந்து ஆலோசித்த பின் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற ஜனநாயக நியதி காற்றில் பறக்கவிடப் பட்டுள்ளது.

இதில் ஆச்சரியமளிக்கும் விசயம் மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியின் மார்க்சிய மாமேதைகள் குறித்த பாடத் திட்டங்களை அகற்ற வேண்டும் என்ற முடிவு சி.பி.ஐ(எம்). கட்சியினால் பெரிதாக எதிர்க்கப்படவில்லை என்பதே. உண்மையில் மம்தா பானர்ஜி இத்தகைய அடாவடித்தனமான நடவடிக்கைக்குச் செல்லத் துணிந்ததற்கான காரணம் மார்க்சிசத்தின் மாண்பினை பல்வேறு முதலாளித்துவ ஆதரவு மார்க்சிய விரோத நடவடிக்கைகளின் மூலமாக சி.பி.ஐ(எம்). கட்சி தனது ஆட்சியின் போது சீரழித்ததனாலேயேயாகும். அன்னிய, உள்நாட்டு முதலாளித்துவ நிறுவனங்கள் தொழில் தொடங்க ஏழை விவசாயிகளின் நிலங்களைக் குறைந்த விலைக்குப் பிடிங்கித்தர புத்ததேவ் பட்டாச்சாரியாவின் மேற்குவங்க அரசு முனைந்ததன் மூலம் அது ஈட்டிய அவப்பெயரே மார்க்சிசத்திற்கு எதிராக இத்தனைதூரம் வெளிப்படையாக முழங்க மம்தா பானர்ஜிக்குத் துணிவைத் தந்தது.

யாரும் கண்டு கொள்ளவில்லை

மிகவும் வருந்தத்தகுந்த விதத்தில் இந்த நடவடிக்கை பலரால் பெரிய அளவில் கண்டுகொள்ளப்படவே இல்லை. ஏனெனில் இன்றைய நிலையில் அரசியல் கட்சிகள் தங்களது நாடாளுமன்ற நலனை மனதிற்கொண்டு நடத்தும் பாவனைப் போராட்டங்களும் மக்களைப் பிளவுபடுத்தும் ஜாதியவாத, பிராந்தியவாத, மதவாத சக்திகள் நடத்தும் குருட்டுத்தனத்தைத் தோற்றுவிக்கும் போராட்டங்களுமே இயக்கங்கள் என்ற பெயரில் நாடு முழுவதும் நடைபெற்றுக் கொண்டுள்ளன.

மக்களை அணிதிரட்டி மக்களின் உள்ளக்கிடக்கையை மனதிற்கொண்டு ஆக்கப்பூர்வமான போராட்டங்கள் பெரும்பாலும் நடத்தப்படுவதில்லை. எனவே சரியான பிரச்னைகளை அடிப்படையாகக் கொண்டு மக்கள் மனதில் உருவாகும் எதிர்ப்புணர்வு பல சமயங்களில் இயக்க உருப் பெறாமல் போய்விடுகிறது. நாளடைவில் மக்கள் மனதிலிருந்து மங்கி மறைந்துவிடவும் அது அனுமதிக்கப்படுகிறது. இந்த நிலையைத் தன்னால் முடிந்த அளவு எதிர்கொள்வதற்காகக் கருத்தரங்கம் ஒன்று கம்யூனிஸ்ட் ஒர்க்கர்ஸ் பிளாட்ஃபார்ம் அமைப்பு மதுரை மணியம்மையார் மழலையர் பள்ளி வளாகத்தில் 20.05.2012 அன்று காலை 11 மணி முதல் 2.30 மணி வரையில் நடத்தியது.

அக்கருத்தரங்கில் சென்னையைச் சேர்ந்த மார்க்சிய சிந்தனை மையத்தின் தலைவர்களில் ஒருவரான தோழர் சுவாமிநாதன் அவர்களும், மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் ஊடகவியல் துறை முன்னாள் பேராசிரியர் கோவிந்தன் ஐயா அவர்களும், ஓய்வு பெற்ற தியாகராயர் கல்லூரி பொருளியல் பேராசிரியர் சேவுகப் பெருமாள் அவர்களும் கம்யூனிஸ்ட் ஒர்க்கர்ஸ் பிளாட்ஃபார்மின் தென் இந்தியப் பொறுப்பாளர் ஆனந்தனும் கலந்து கொண்டு உரையாற்றினர். கூட்டத்திற்கு மாற்றுக்கருத்து ஆசிரியர் தோழர் த.சிவக்குமார் தலைமையேற்றார்.

தோழர் சுவாமிநாதன் தனது உரையில் இதுபோன்ற கூட்டங்கள் மார்க்சிசம் பேசிக் கொண்டே மார்க்சிய விரோதிகளாகச் செயல்படும் கட்சிகளை அம்பலப்படுத்தும் விதத்தில் நடத்தப்பட வேண்டுமே தவிர மம்தா பானர்ஜி போன்றவர்களின் பாடப் புத்தகத்தில் இருந்து மார்க்சிய மேதைகளின் படங்களை அகற்றும் போக்கிற்கு எதிராக நடத்தப்பட வேண்டியதில்லை என்று குறிப்பிட்டார். இந்தப் போக்குகளில் இருந்தெல்லாம் சமூகத்தை விடுவிக்க நம்முன் உள்ள ஒரே வழி மக்களிடையே மார்க்சிய அறிவைக் கொண்டு செல்வதுதான் என்று கூறினார்.

பேராசியர் கோவிந்தன் ஐயா அவர்கள் தனது உரையில் கருத்துரிமைக்கு எதிரான போக்கு எவ்வாறு பெளத்த, சமண மதங்களுக்கு எதிராக ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே மேற்கொள்ளப்பட்டது என்பதை விரிவாக எடுத்துரைத்தார்.

பேராசியர் சேவுகப் பெருமாள் அவர்கள் தனது உரையில் மக்களிடையே சரியான கருத்துக்களைக் கொண்டு செல்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இதுபோன்ற கூட்டங்கள் அரங்கக் கூட்டங்களாக இல்லாமல் பொதுக் கூட்டங்களாக நடத்தப்பட வேண்டும்; அப்போது தான் அது பரந்த அளவில் மக்களைச் சென்றடையும்; மிக உயர்ந்த இடதுசாரி முற்போக்குச் சிந்தனைகளை உள்ளடக்கிய நூல்களைப் படிக்கும் போக்கு மாணவர்களிடமும் இளைஞர்களிடமும் ஊக்குவிக்கப்பட வேண்டும் என்று தனது உரையில் குறிப்பிட்டார்.

தோழர் ஆனந்தனின் உரை

இறுதியில் உரையாற்றிய தோழர் ஆனந்தன் தனது உரையில் பின்வரும் கருத்துக்களை முன்வைத்தார்.

பள்ளி மற்றும் கல்லூரி பாடப் புத்தகங்களிலிருந்து நூல்களை அகற்றுவது போன்ற போக்குகள் கல்வியாளர்களாலும் அறிவுத்துறைச் சேர்ந்தவர்களாலும் அடையாளம் கண்டு எதிர்க்கப்பட வேண்டிய விசயங்கள். ஒரு கம்யூனிஸ்ட் அமைப்பிற்கு அதுகுறித்து விரிவாகப் பேசுவதற்கு என்ன இருக்கிறது என்ற கேள்வி இயல்பாக பலரிடமும் எழுகிறது. சமூகத்தில் மட்டுமின்றி இதுபோன்ற கூட்டங்களில் கலந்து கொள்வதற்காக அழைக்கப்பட்டுள்ளவர்களின் மனதிலும் இக்கேள்வி உள்ளது. இது அவர்கள் ஆற்றிய உரைகளில் இருந்து இலைமறை காயாக வெளிப்படவும் செய்கிறது. இருந்தாலும் நாம் ஒரு கருத்தரங்கம் நடத்தி இவ்விசயத்தை மக்களிடம் கொண்டுசெல்ல முனைவது ஏன்?

செய்ய வேண்டியது என்ன?

மாமேதை லெனின் தனது புகழ்பெற்ற நூலான செய்ய வேண்டியது என்ன? என்ற நூலில் சில அரிய அவசியமான கருத்துக்களை முன்வைத்தார். அதாவது கம்யூனிஸ்ட் கட்சியைப் பாட்டாளி வர்க்கத்தின் முன்னணிப் படை என்று குறிப்பிடுகிறோம். பாட்டாளி வர்க்கமோ அன்றாட உடல் உழைப்பிலும் கருத்து உற்பத்தியிலும் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளும் வர்க்கம். அதை சமூகப் புரட்சியின் முன்னணிப்படை என்று கூற வேண்டுமானால் அது அதன் பிரச்னைகளை மையப்படுத்திப் போராடுவதோடு சமூகத்தின் மற்ற பகுதி மக்களின் பிரச்னைகளையும் மையப்படுத்தி போராடவல்லதாக இருக்க வேண்டும்.

முன்னணிப்படை

புரட்சிக்கு முந்தைய ரஷ்ய நாட்டில் கொடுங்கோலன் ஜாரின் ஆட்சி நடந்தது. அந்தக் கொடுங்கோன்மைக்கு எதிராகச் சமூகத்தின் பல பிரிவினர் போராடினர். அதில் சிறிய அளவில் மன்னர் ஆட்சியை எதிர்த்துப் போராடிய ரஷ்ய முதலாளிகளும் அடங்குவர். அவர்கள் தவிர தாராளவாத ஜனநாயக மதிப்புகளின் பால் காதல் கொண்டிருந்த கல்லூரிப் பேராசிரியர்கள், மாணவர்கள் அறிவு ஜீவிகள் போன்ற மத்தியதர வர்க்கத்தைச் சேர்ந்தவர்களும் இருந்தனர். ஜார் ஆட்சியின் பின்புல ஆதரவு சக்தியாக இருந்த நிலவுடமையாளர்களை எதிர்த்து பண்ணை அடிமைகள், சிறு மற்றும் நடுத்தர விவசாயிகள் ஆகியோரும் போராடிக் கொண்டிருந்தனர். இந்நிலையில் ஜார் ஆட்சி தூக்கியயறிப்பட வேண்டுமானால் பாட்டாளி வர்க்கம் மட்டும் அதற்கு எதிராக அணிதிரண்டால் போதாது. மேலே குறிப்பிடப்பட்ட மக்கள் பகுதியினரும் ஜார் ஆட்சிக்கு எதிராக அணிதிரட்டப்பட வேண்டும். அப்போது தான் கொடுங்கோன்மை ஜார் ஆட்சியைப் பெருமளவிற்குத் தனிமைப்படுத்தி முறியடிக்க முடியும்.

எனவே ஜார் ஆட்சிக்கு எதிரான முன்னணிப் படையாக பாட்டாளி வர்க்கம் விளங்க வேண்டுமென்றால் பாட்டாளி வர்க்கத்தின் கட்சியான கம்யூனிஸ்ட் கட்சிக்குப் பாட்டாளி வர்க்கம் குறித்த அறிவும் புரிதலும் இருந்தால் மட்டும் போதாது. ஜாருக்கு எதிராக நிலையயடுக்கும் வாய்ப்பினைக் கொண்டிருக்கும் அனைத்துப் பகுதியினர் குறித்த அறிவும் புரிதலும் அக்கட்சிக்கு வேண்டும். அப்போது தான் அது தன்னை ஜாருக்கு எதிரான புரட்சியின் முன்னணிப்படை என்று அறிவித்துக் கொள்ள முடியும். இதுவே மாமேதை லெனின் முன்வைத்த கருத்தாகும்.

மத்தியதர வர்க்க கல்விமான்கள் மற்றும் அறிவு ஜீவிகளிடமிருந்து பாட்டாளி வர்க்கம் படித்துக்கொள்ள வேண்டிய பாடம் என்பது பெருமளவு உள்ளது. கல்வி வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளதான பாட்டாளி வர்க்கம் அத்தகைய வாய்ப்பினைப் பெற்றுள்ள மத்தியதர வர்க்க அறிவு ஜீவிகளிடமிருந்து ஆக்கப்பூர்வமான கல்வி மூலம் கிட்டும் வி­யங்களையும் தகவல்களையும் அறிந்துகொள்ள வேண்டும்.

உழைக்கும் வர்க்கமே உண்மையை உரைக்க முடியும்

கல்வி அறிவு மறுக்கப்பட்டுள்ள வர்க்கமான அழுக்கும் தூசியும் படிந்த உழைக்கும் வர்க்கம் எவ்வாறு சமூகமாற்றத்தை நிகழ்த்தும் முன்னணிப் படையாகத் திகழ முடியும் என்பது இங்கு எழும் மற்றொரு முக்கியக் கேள்வியாகும். வரலாற்றின் ஒவ்வொரு கால கட்டத்திலும் அடிப்படை சமூகமாற்றத்தை நிகழ்த்துவதில் முன்னிலை வகிக்கும் வர்க்கங்களே அடிப்படையில் உண்மையை எடுத்துரைக்க முடிந்தவையாக இருந்துள்ளன.

அப்படிப்பட்ட வர்க்கங்களிலெல்லாம் மிகக் குறிப்பானதும் சிறப்பானதுமான தன்மையைப் பெற்றுள்ள வர்க்கம் பாட்டாளி வர்க்கமாகும். அடிமை, நிலவுடமை சமூக அமைப்புகளில் இருந்து அடிப்படை மாற்றங்களைக் கொண்டுவந்த நிலவுடமை மற்றும் முதலாளி வர்க்கங்கள் எந்தவகை சமரசமும் இன்றி உண்மையை அவை முற்போக்காக இருந்த காலகட்டத்திலேயே எடுத்துரைக்க முடியாதவையாக இருந்தன.

அதற்கான காரணம் அடிமை நிலையிலிருந்து சமூகத்தை விடுவிப்பதில் முக்கியப் பங்காற்றிய நிலவுடமை வர்க்கம் அன்றிருந்த பாட்டாளி வர்க்கத்தின் துணையோடு அடிமை சமூகத்திலிருந்தான விடுதலையைச் சாதிக்க முனைந்தது. அதன் விளைவாக அது நிலைநாட்ட விரும்பியது நிலவுடமை சமூக அமைப்பு. நிலவுடமை சமூக அமைப்பும் ஒரு அடிப்படைக் கோளாறினைக் கொண்டதாகவே இருந்தது. அதாவது பண்ணை அடிமைச் சுரண்டலை அடிப்டையாகக் கொண்டதாக நிலவுடமை அமைப்பு இருந்தது. எனவே அடிமை சமூகத்தை எதிர்த்த புரட்சிக்குத் தலைமை தாங்கிய நிலவுடமை வர்க்கம் ஒப்பீட்டளவில் உண்மை பேச வல்லதாக இருந்ததே தவிர எவ்விதத் தயக்கமுமின்றி முழு உண்மையை எடுத்துரைக்க வல்லதாக இருக்கவில்லை.

அதைப் போலவே நிலவுடமை அமைப்பிலிருந்து பாட்டாளி வர்க்கத்தின் துணையோடு முதலாளித்துவ சமூக அமைப்பை நிறுவதற்கான அடிப்படை சமூக மாற்றத்திற்குத் தலைமை தாங்கிய முதலாளி வர்க்கமும் மனிதனை மனிதன் சுரண்டும் கோளாறினைக் கொண்ட முதலாளித்துவ சமூக அமைப்பை நிறுவவல்லதாகவே இருந்தது. எனவே அந்த வர்க்கமும் முழு உண்மையை எடுத்துரைக்க வல்லதாக வரலாற்று ரீதியாக இருக்கவில்லை.

ஆனால் முதலாளித்துவ சமூக அமைப்பிலிருந்து சோசலிச, கம்யூனிச சமூக அமைப்பை நிறுவும் பணியில் தன்னை வரலாற்று ரீதியாக ஈடுபடுத்திக் கொள்ளும் பாட்டாளி வர்க்கமோ தனது வர்க்க ஆட்சியை நிறுவி தனது நலன்களை மட்டும் பராமரித்துக் கொள்ளும் தன்மை பொருந்தியதாக இருக்கவில்லை. அது உருவாக்கும் எழுச்சியின் விளைவாக சமூகத்தில் வர்க்கங்களே இல்லாத ஒரு சூழல் உருவாகும் வாய்ப்பு இருந்தது. மேலும் அந்த வர்க்கம் இழப்பதற்கு தனது கைவிலங்குகளைத் தவிர வேறெந்தச் சொத்தையும் கொண்டிராத வர்க்கமாக இருந்தது. எனவே வரலாற்று ரீதியாக முழு உண்மையை எந்த ஒளிவு மறைவுமின்றிப் பேச வல்லதாகவும் அந்த உண்மையை நடைமுறைப் படுத்துவதற்காக மிக உயர்ந்த துணிவுடனும் தியாக மனப்பான்மையுடனும் அர்ப்பணிப்புடனும் தன்னை சமூகமாற்ற இயக்கங்களில் ஈடுபடுத்திக் கொள்ள வல்லதாகவும் பாட்டாளி வர்க்கம் விளங்கியது. எனவேதான் அது சமூக மாற்றத்தின் முன்னணிப் படையாக விளங்குவற்கான அனைத்து வாய்ப்புகளையும் கொண்டதாக இருந்தது.

அனைத்தையும் பயன்படுத்த வேண்டும்

எனவே இந்தியாவிலும் பாட்டாளி வர்க்கமும் அதன் கட்சியான கம்யூனிஸ்ட் கட்சியும் அடிப்படை சமூகமாற்றத்தின் முன்னணிப் படையாக விளங்க வேண்டுமானால் அது இன்று நிலவும் முதலாளித்துவத்தின் ஆட்சிக்கு எதிராக எழும் அனைத்துப் பிரச்னைகளையும் கையாள வல்லதாகவும் முதலாளித்துவத்திற்கு எதிராக நிலை எடுக்கும் அனைத்து சக்திகளையும் பயன்படுத்த வல்லதாகவும் இருந்தாக வேண்டும். அந்த அடிப்படையில் ஒரு காலத்தில் கடைப்பிடிக்கப்பட்ட ஜனநாயக நியதிகள், உரிமைகள் ஆகியவை பறிபோகும் சூழ்நிலை எழும் போது அதற்கு எதிராக நிலை எடுக்கவல்ல அனைத்து சக்திகளையும் இந்தியாவில் கம்யூனிஸ்ட் என்ற பெயரில் செயல்படும் எந்தவொரு சரியான இயக்கமும் பயன்படுத்த முடிந்ததாகவும் இருக்க வேண்டும்.

நிறுவனமயமாகி உள்ள தாராளவாத மதிப்புகள்

இந்தப் பிரச்னையில் அத்தகைய அக்கறை கொண்டவர்களாக யார் உள்ளனர் என்ற கேள்வி பலரின் மனதில் எழலாம். நிச்சயமாக பழைய தாராளவாத மதிப்புகள் இல்லாமல் போவதைக் கண்டு மனம் வெதும்பும் சக்திகள் இருக்கவே செய்கின்றன. முதலாளித்துவம் தனது தொடர்ச்சியான இருக்கையை நியாயப்படுத்துவதற்காக சில ஜனநாயக நியதிகளை நிறுவனமயப் படுத்தியுள்ளது. எனவே அந்த நியதிகள் அத்தனை எளிதில் ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தாமல் அகற்றப்படக் கூடியனவாக இருக்கவில்லை. குறிப்பாக நீதி அமைப்பிற்கும் நிர்வாகத்திற்கும் இடையே ஒரு முரண்பாடு இருந்து கொண்டிருப்பதை நாம் பார்க்கிறோம். கீழ்மட்ட நீதி அமைப்பு நிர்வாகத்திற்குச் சாதகமாக வெகு வேகமாக மாறிக் கொண்டிருக்கும் போதிலும் உச்ச நீதிமன்றம் போன்ற உயர்மட்ட நீதி அமைப்புகளில் அப்படிப்பட்ட நிலை இன்னும் முழுமையாக ஏற்படவில்லை.

இதற்கான காரணம் நெருக்கடி சூழ்ந்த முதலாளித்துவத்தின் நலனைப் பேணுவதற்காக ஜனநாயகத்தின் ஒரு நிரந்தர அங்கமாக உள்ள நிர்வாகம் பல ஜனநாயக நியதிகளை தூக்கியயறிய விரும்புகிறது. ஆனால் ஜனநாயகத்தின் மற்றொரு அங்கமான நீதி அமைப்பு அதற்கு அது விரும்பும் விதத்தில் உடனடியாகத் துணைபோவதில்லை. சமூகத்தில் அறிவு ஜீவி மத்தியதர வர்க்கமும் இந்தத் தாராளவாத மதிப்புகளும் ஜனநாயக நியதிகளும் பறிபோவதை மிகுந்த கவலையுடனேயே பார்க்கிறது.

அசுர வேகம்

மேலும் சமீப காலமாக சில ஜாதியவாத, பிராந்திய வெறிவாத சக்திகளால் உருவாக்கப்படும் நிர்ப்பந்தங்களுக்கு அடிபணிந்து பள்ளி மற்றும் கல்லூரிப் பாடப் புத்தகங்களில் உள்ள பாடங்கள், கேலிச் சித்திரங்கள் போன்றவற்றை அகற்றுவதில் காட்டப்படும் வேகம் அசுரத்தனமாக உள்ளது. அம்பேத்கர், நேரு ஆகியோர் குறித்த கேலிச் சித்திரம் குறித்த ஆட்சேபணை எழுப்பப்பட்ட உடனேயே அது அகற்றப்படும் என்ற அறிவிப்பு வருகிறது. அதுமட்டுமல்ல அதுபோன்ற 150க்கும் மேற்பட்ட கேலிச் சித்திரங்களும் அகற்றப்படும் என்று எந்தவகையான சீர்தூக்கிப் பார்க்கும் மனநிலையும் இன்றி நாடாளுமன்ற அவையிலேயே மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் அறிவிக்கிறார். அது மட்டுமின்றி அக்கேலிச் சித்திரம் எவ்வாறு அரசியல் அறிவியல் பாடத் திட்டத்தில் இடம் பெற்றது என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு அதை இடம்பெறச் செய்தவர்கள் மீது நடவடிக்கையும் எடுக்கப்படும் என்று கூறுவது வரை கபில் சிபல் செல்கிறார்.

அதைப்போல் மகாராஷ்ட்ராவின் பம்பாய் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ரோகின்டன் மிஸ்ட்ரியின் சச் எ லாங் ஜேர்னி என்ற நூலை இளங்கலை ஆங்கில இலக்கியப் பாடப் புத்தகத்திலிருந்து ஒரே நாளில் அகற்றினார். இதில் கொடுமை என்னவென்றால் அந்த நூலைக் குறை கூறியவர்கள் எவரும் அதனைப் படிக்கவில்லை என்பது தான். அவ்வாறு படிக்காதவர்களில் அந்நூலை பாடத் திட்டத்திலிருந்து அகற்றிய பம்பாய் பல்கலைக் கழகத்தின் அப்போதைய துணைவேந்தரும் உள்ளடங்குவார். புள்ளியியல் கற்பிக்கும் ஆசிரியரான அவர் இலக்கியம் குறித்து எதையும் அறியாதவர் மட்டுமல்ல; அதை அறிந்தவர்களிடம் விவாதித்து முடிவெடுக்காதவராகவும் இருந்தார்.

உள்நோக்கம் கொண்டது

அதைப்போல் வெளிப்படையாகப் பார்க்கும் போது மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் மார்க்ஸ், எங்கெல்ஸ் ஆகிய மாமேதைகளின் கருத்துக்கள் அடங்கிய பாடங்களை மேற்குவங்கப் பாடப் புத்தகங்களில் இருந்து அகற்றுவது என்ற முடிவு சிறுபிள்ளைத் தனமானது போல் வெளிக்குத் தோன்றுகிறது. ஆனால் அதில் நிச்சயமான உள்நோக்கம் உள்ளது. மார்க்சிஸ்ட் என்ற பெயரில் அந்த மாநிலத்தில் செயல்பட்ட சி.பி.ஐ(எம்). கட்சி கடைப்பிடித்த மக்கள் விரோதக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு அம்மாநில மக்களிடையே தோன்றிய அதிருப்தியையும் வெறுப்பையும் மார்க்சிஸத்தின் மீதான வெறுப்பாக அவர் மாற்ற முயல்வது ஒரு திட்டவட்டமான அதாவது சமூகமாற்ற சிந்தனையைக் கட்டுப்படுத்த முயலும் செயல்.

மாற்றம் தேவையில்லையா?

வந்துகொண்டுள்ள கருத்து சுதந்திரத்தின் மீதான இத்தகைய தாக்குதலின் இலக்கு என்னவென்று தீவிரமாக ஆய்வு செய்தால் அதில் நமக்குத் தெரிய வருவது இப்போதுள்ள சூழ்நிலை அடிப்படையில் அப்படியே நீடிக்க வேண்டும். சமூகம் குறித்த எந்த ஆழ்ந்த சிந்தனையும் ஏன் இந்த சூழ்நிலையை மாற்றக் கூடாது? இது மாற்றப்படவே முடியாததா? என்ற எண்ணப்போக்கை ஏற்படுத்தக் கூடாது என்ற அடிப்படையினைக் கொண்டதாகவே உள்ளது.

இதுபோன்ற ஒரு ஜனநாயக விரோதப் போக்கை ஜனநாயகம் ஓரளவு நிலை பெற்றுள்ள மேலை நாடுகளில் கொண்டுவர வேண்டுமானால் அதனை வெளிப்படையாகச் செய்வதைத் தவிர வேறு வாய்ப்புகள் அந்நாட்டு அரசுகளுக்குக் கிடையாது. ஆனால் இந்தியாவிலோ இங்கு நம்மால் கொண்டாடப்படும் வேற்றுமையில் ஒற்றுமை என்ற போக்கு இத்தகைய ஜனநாயக விரோத நடவடிக்கைகளை ஆளும் வர்க்க சக்திகள் எடுப்பதைப் பெரிதும் எளிதாக்கியுள்ளது.

பயன்படும் பிரிவினை

அதாவது ஜாதியவாத சக்திகளை வைத்து அம்பேத்கர் குறித்துக் கருத்துக்கள் கூறுவதைத் தீண்டத்தகாததாக்கி விடலாம். அதைப்போல் பிற்பட்டோர் ஜாதிய வாதத்தைத் தூண்டிவிட்டு வேறு சில தலைவர்கள் குறித்த விமர்சனப்பூர்வ ஆய்வுகளைக் கட்டுப்படுத்தி விடலாம். இவ்வாறு ஒவ்வொன்றாகக் கட்டுப்படுத்தி பாடத்திட்டங்களை வகுத்தெடுத்து மாணவர்களுக்குக் கற்பித்தால் அவர்களின் விமர்சிக்கும் போக்கும், சுய சிந்தனையும் மழுங்கி இருக்கின்ற இன்றைய பல கொடுமைகளுக்கும் கோளாறுகளுக்கும் காரணமான சமூக அமைப்பே நிரந்தரமானது என்ற முடிவிற்கு வந்துவிடுவர்.

ஹெகலின் கண்ணோட்டம்

அதாவது ஹெகலின் கண்ணோட்டமான ‘நிலவுவது அனைத்தும் பகுத்தறிவுப் பூர்வமானதே’ என்ற கருத்தை நிலைநாட்டி விடலாம். அதாவது இன்றுள்ள அமைப்பு மக்களின் பல அடிப்படைப் பிரச்னைகளைத் தீர்க்காதது மட்டுமின்றி அதனை உக்கிரப் படுத்துவதாகவும் இருக்கும் சூழ்நிலையை மூடிமறைத்து இதுவும் பகுத்தறிவுப் பூர்வமானதே என்ற எண்ணத்தை நிலைநாட்டி விடலாம்.

இத்தகைய திசை வழியிலேயே இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. உண்மையில் யஹகலின் கருத்தோட்டம் இத்தகைய இருக்கும் நிலையே நிரந்தரமானது; பகுத்தறிவுப் பூர்வமானது என்ற கருத்தை முன்வைக்கவில்லை. ஒரு சமூக அமைப்பு மோசமானதாக இருந்தால் அந்த மோசமான சூழ்நிலைக்கு எதிரானதாகத் தோன்றும் எதிர்ப்பும் அந்த அமைப்பின் பங்கும் பகுதியுமானதே. அப்போக்கு வளர்த்தெடுக்கப்படாத வரை நிலவும் மோசமான சூழ்நிலை நிரந்தரமானதாக இருக்கும். அந்த எதிர்ப்பு வளர்த்தெடுக்கப்படுவதும் பகுத்தறிவுப் பூர்வமானதே என்ற கருத்தைத் தான் ஹெகல் முன்வைத்தார். இதையே லுத்விக் புயர்பாக் குறித்த தனது கண்ணோட்டத்தை முன்வைக்கும் போது எங்கெல்ஸ் வலியுறுத்திக் கூறினார்.

எனவே இந்த வழிகாட்டுதலைத் தனது அணிகளுக்கு வழங்கி ஜனநாயக மதிப்புகள் அழிவது குறித்து கவலை கொண்டுள்ள மக்கட் பகுதியையும் அணுகித் தன் பக்கம் கவர்ந்திழுப்பது சமூகமாற்ற சக்திகளின் மிகமுக்கியக் கடமையாகும். இதனை அரங்கக் கூட்டமாக நடத்தாமல் பொதுக் கூட்டமாக நடத்திக் கூறலாமே? அது பரந்த அளவில் மக்களைச் சென்று சேருமே என்ற கருத்து மேலோட்டமாகப் பார்க்கும் போது சரியானதே. ஆனால் இன்று பொதுக் கூட்டங்கள் குறித்து உருவாக்கப்பட்டுள்ள எதிர்பார்ப்பு நம்மைப் போன்ற மிகக்குறைந்த செலவில் கருத்துக்களைக் கொண்டுசெல்ல முனைவோருக்கு சாத்தியமானதாக இல்லை. மிகப்பெரும் பொருட்செலவில் பொதுக்கூட்டத்திற்கு வருபவர்களையும் செலவு செய்து அழைத்து வருவதன் மூலமே தற்போது பொதுக் கூட்டங்கள் ஏற்பாடு செய்து நடத்தப்படுகின்றன.

நடைமுறைக்கு ஒவ்வாத கருத்து

இதுபோல் அணிதிரட்டும் போக்குகளை விடுத்து நேரடியாகவே மக்களிடம் மார்க்சியக் கருத்துக்களைக் கொண்டு சென்று அவர்களை சமூகமாற்றத்தை நோக்கி வழிநடத்தலாமே என்று முன்வைக்கப்படும் கருத்தும் நடைமுறைக்கு ஒவ்வாத ஒன்றே.

ஒரு சித்தாந்தத்தை அதைக் கற்பதன் மூலமே தெரிந்து கொள்வதற்கு ஒரு குறிப்பிட்ட அளவிற்கு அடிப்படைக் கல்வி மக்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டிருக்க வேண்டும். நமது நாட்டைப் பொறுத்தவரை அத்தகைய அடிப்படைக் கல்வி வழங்கப்படாதது மட்டுமின்றி வழங்கப்படும் கல்வியிலும் மதச்சார்பற்ற, விஞ்ஞானப்பூர்வ தன்மைகள் மிகவும் குறைவாகவே உள்ளன. எனவே இங்கு சாதாரண மக்களிடையே சமூகமாற்றச் சிந்தனையைக் கொண்டு செல்வதையும் இயக்கங்கள் மற்றும் பொது நிகழ்ச்சிகள் மூலமாகவே நடத்த வேண்டியுள்ளது. இது காலங்காலமாக பரிசோதித்து கைக்கொள்ளப்பட்ட ஒரு முடிவு. வெறுமனே இக்கூட்டத்தில் உரையாற்றும் போக்கில் தோன்றிய கருத்தல்ல.

பாசிஸத்தின் இரு கூறுகள்

பாசிஸம் என்பது இரண்டு கூறுகளைக் கொண்டது. ஒன்று அது கடும் அடக்குமுறையைக் கையாண்டு சமூகமாற்ற சக்திகளை ஒடுக்கவல்லது. ஆனால் அந்த முறை நிரந்தரமான ஒன்றல்ல. அத்தகைய அடக்குமுறைக்கு மக்கள் பழகிப் போய்விட்டால் அதுகுறித்த அச்சம் அவர்களிடமிருந்து அகன்றுவிடும். மேலும் அது கொடுங்கோன்மை அமைப்பு என்பதில் பரந்த அளவில் மக்களுக்கு இரண்டு கருத்துக்கள் நாளடைவில் இல்லாமல் போய்விடும். எனவே துணிவுடன் அப்போக்கிற்கு எதிராக மக்கள் அணி திரளுவதை நீண்டநெடிய காலத்திற்கு ஒத்திப்போட முடியாது.

அதனால் தான் பாசிஸம் அதன் மற்றொரு போக்கான மக்களைத் தாஜா செய்து தன் பக்கம் வைக்கும் போக்கைக் கடைப்பிடிக்கிறது. அப்போக்கிற்கு உறுதுணையாக இருப்பது தற்போது காலாவதியாகிப் போன ஒரு காலத்தில் சமூகப் பொருத்தம் உடையதாக இருந்த கருத்துக்களும் கண்ணோட்டங்களுமே. அக்கண்ணோட்டங்களில் முக்கியமானது தேசிய வாதமாகும். ஒரு காலத்தில் அன்னிய ஏகாதிபத்திய ஆட்சி நிலவும் போது முற்போக்குத் தன்மையுடன் அனைத்து மக்களையும் ஒருங்கிணைக்க வல்லதாக இருந்த அக்கண்ணோட்டம் இன்று சீர்குலைந்து பகுத்தறிவுப்பூர்வ சிந்தனையை மழுங்கடிக்கும் தன்மை வாய்ந்ததாக உள்ளது.

செம்மொழி

தமிழ்நாட்டில் நிலவும் தமிழ் தேசியவாதமும் அந்த ரகத்தைச் சேர்ந்தது தான். லெனின் தனது பிரசித்தி பெற்ற தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளது போல் தேசிய இனங்கள் தங்களது சலுகைகளுக்காகவும் தாங்கள் மேன்மையாகக் கருதப்படுவதற்காகவும் போராடுவதைக் கம்யூனிஸ்ட்கள் எதிர்த்திருக்க வேண்டும். ஆனால் இங்கு கம்யூனிஸ்ட்கள் என்ற பெயரில் செயல்படுபவர்கள் அவ்வாறு செய்தார்களா என்பதை சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். தமிழுக்குச் செம்மொழி அந்தஸ்து கொடுக்கப்பட்டதையே ஒரு தேவையற்ற சலுகையாகவும் அநாவசிய மேன்மைபடுத்துவதாகவும் தமிழக உழைக்கும் வர்க்கக் கட்சிகள் கருதியிருக்க வேண்டும். அதைக் கம்யூனிஸ்ட்கள் என்ற பெயரில் தமிழ்நாட்டில் செயல்படுபவர்கள் செய்யவில்லை.

மாறாகக் கேரளாவின் சி.பி.ஐ(எம்). கட்சி மலையாளமும் செம்மொழி அந்தஸ்துப் பெறுவதற்கு தகுதி வாய்ந்த மொழியே என்ற கருத்தை அதன் தலைவரான பேபி என்பவரின் மூலம் வலியுறுத்தியது. இந்தப் பின்னணியில் பாசிஸத்தின் அடக்குமுறைக் கூறை மட்டும் வைத்து அதைக் கொண்டிருந்தால் மட்டுமே எந்த நடவடிக்கையும் பாசிஸ நடவடிக்கையாகக் கருதப்பட வேண்டும் என்று கருதுவது சரியானதாக இராது. எனவே கம்யூனிஸ்ட்களாகிய நாம் தற்போது கருத்து சுதந்திரத்தின் மேல் ஆளும் வர்க்க சக்திகளால் கொண்டுவரப்பட்டுக் கொண்டிருக்கும் தாக்குதல்கள் இந்தப் பாசிஸப் பின்னணியிலேயே வந்து கொண்டுள்ளன; ஆளும் வர்க்கம் விண்ணை முட்டும் அளவிற்கு உரத்து எடுத்துரைக்கும் முதலாளித்துவ ஜனநாயக மதிப்புகளையும் கூடத் தனக்குச் சேராததாகிப் போன உடையாகி விட்டதெனத் தூக்கியயறியும் நிலைக்கு வந்துவிட்டது என்பனவற்றை அனைத்துப் பகுதி மக்கள் மத்தியிலும் கொண்டு சென்று காலாவதியாகிப் போன இந்தச் சுரண்டல் அமைப்பை மாற்றப் பாடுபட வேண்டும்.

இக்கருத்துக்களை முன்வைத்து தோழர் ஆனந்தன் தனது உரையை நிறைவு செய்தார்.

Pin It