பொதுவாக நடுத்தர வர்க்கத்துப் பெண்களிடம் ஒருமனநிலை பரவலாக நிலவுகிறது. அதாவது அவர்கள் ஒரு வகையில் ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையின் கைதிகளாகவும் உள்ளனர்; ஒரு விதமான வாழ்க்கை முறைக்குப் பழக்கப்பட்டுப் போனவர்களாகவும் அந்த வாழ்க்கை முறையை எந்தச் சூழ்நிலையிலும் இழந்துவிடுவது என்பதை சகித்துக் கொள்ள முடியாதவர்களாகவும் ஆகிவிடுகின்றனர். தாங்கள் வாழ்ந்து பழகிப்போன ஒரு வாழ்க்கைக்குப் பங்கம் நேரும் விதத்தில் தங்களது பிள்ளைகள் செல்வதை நடுத்தர வர்க்கத்துத் தாய்மார்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள். அதைப்போல் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த ஒரு மனைவியும் தன் கணவன் அத்தகைய நடவடிக்கையில் ஈடுபடுவதை விரும்பமாட்டாள்.

ஆனால் இத்தகைய மத்தியதர வர்க்கப் பெண்கள் தான் நமது நாட்டைப் போன்றதொரு நாட்டின் பெண்களில் பத்திரிக்கைகள் மற்றும் புத்தகங்கள் வாசிப்பவர்கள். அவர்கள் மனநிலைக்கு உகந்த வகையில் எழுதுவதையே குடும்பப் பத்திரிக்கைகள் என்று கூறிக் கொள்ளக்கூடிய பத்திரிக்கைகள் செய்கின்றன. இதனால் பொதுவாக சமூகமாற்ற அரசியலில் ஈடுபடுவோருக்கு இவர்களைப் பற்றி ஒரு அபிப்பிராயம் உள்ளது. அதாவது பெண்கள் ஒட்டுமொத்தமாகவே சமூகமாற்ற நடவடிக்கைகளில் ஈடுபட முன்வருவதில்லை. அவர்கள் தங்களின் கண்ணீரால் ஆண்களில் பாதிப்பேரையும் அதுபோன்ற நடவடிக்கைகளுக்கு வரவிடாமல் தடுத்து விடுகிறார்கள் என்ற அபிப்பிராயம் ஏற்படுகிறது.

இது ஆய்வுபூர்வமாகப் புள்ளி விபரங்கள் மூலம் நிரூபிக்கப்பட்டதொரு விஷயமல்ல. இருப்பினும் இதில் சுத்தமாகவே உண்மையில்லை என்றும் கூறமுடியாது. அதற்குக் காரணம் பெண்களின் இயற்கை அல்ல. மாறாகச் சொத்துடமை சமூக அமைப்பு காலங்காலமாக அவர்களை ஒரு போகப்பொருளாக கருதிப் பராமரித்து வந்ததுதான். அதாவது அவர்கள் சமூக உழைப்பிலிருந்து விலக்கப்பட்டவர்களாக ஆக்கப்பட்ட காலத்திலிருந்து சிறிது சிறிதாக  தன்னம்பிக்கையற்ற இந்த மனநிலை வளர்ந்து இன்று இவ்வாறு நிலை பெற்றுள்ளது.

நமது சமூகத்தில் நடைபெறும் அரசியலில் பல்வேறு ரகங்கள் உள்ளன. அவற்றில் ஆளுங்கட்சித் தலைவர் எதை உளறினார் எதிர்க்கட்சித் தலைவர் எந்த வசை மொழியை உதிர்த்தார் என்பவை குறித்து அறிக்கைகளும் பதில் அறிக்கைகளும் வெளியிட்டுக் கொண்டு நடத்தப்படும் ரகத்தைச் சேர்ந்ததாக மிகப்பெரும்பான்மையாக நிலவுவது ஒருவகை அரசியல்; இந்த ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் நம்மை ஆளும் மூலதனத்தின் எடுபிடிகளே. அந்த வகையில் ஒரே அடிப்படை நோக்கத்தைக் கொண்டிருக்கும் இவர்களுக்கிடையில் பெரும் வேறுபாடு இருப்பதுபோல் இந்த அற்பமான விஷயங்களை மையமாக வைத்து ஒரு பொய்த் தோற்றம் காட்டப்படுகிறது.

இதுபோன்ற ரகத்தைச் சேர்ந்த  உண்மையான ஆளும் வர்க்க அரசியலைச் செவ்வனே தரமாக செய்துவருவது பத்திரிக்கைகளே. பத்திரிக்கைகளில் ஏறக்குறைய 90 சதவீதத்திற்கு மேல் இத்தகைய ஆளும் வர்க்க நலனை உயர்த்திப் பிடிப்பவையாகவே உள்ளன. அதற்கு எதிராக உறுதியான உழைக்கும் வர்க்க நிலைபாட்டைச் சமரசமின்றி உயர்த்திப்பிடிக்கும் பத்திரிக்கைகள் பலரது கண்களில் படக்கூடிய அளவிற்குக்கூடப் பிரபலமானவைகளாக இல்லை. எனவே பத்திரிக்கைகள் என்றாலே ஆளும் வர்க்க நலன் பேணுபவைகளே என்றாகிவிட்டது.

அந்த அடிப்படையில் நமது பத்திரிக்கைகள் நடுத்தர வர்க்கப் பெண்கள் மனநிலையைக் கணக்கில் கொண்டு அவர்களது மனநிலைக்கு உகந்த விதத்தில் செய்திகளையும் நிகழ்ச்சிகளையும் துணுக்குகளையும் வெளியிடுகின்றன. சமூகத்தில் நிகழக்கூடிய எத்தனையோ ஒன்றுக்கொன்று முரண்பட்ட, செய்திகளாக வெளிவரத் தகுதியுள்ள விஷயங்கள் இருந்தாலும் அவற்றிலிருந்து அவர்களுக்குத் தேவையானவற்றை மட்டும் தேர்ந்தெடுத்து அவை வழங்குகின்றன.

இது தரமானவை என்று கருதப்படக்கூடிய பத்திரிக்கைகளின் நடைமுறை. ஆனால் ஆளும் வர்க்கத்திற்குச் சாதகமான அரசியலை இத்தனை நாசூக்காகத் தரத்துடன் செய்து கொண்டிருக்கும் பத்திரிக்கைகளையும் அவை கடைப்பிடிக்கும் பத்திரிக்கை தர்மத்தையும் கூடக் கடைப்பிடிக்காது அப்பட்டமாக ஆளும் வர்க்க அரசியலைச் செய்யும் வேலையிலும் கூட சில தமிழ்ப் பத்திரிக்கைகள் ஈடுபடத் தொடங்கிவிட்டன. எடுத்துக்காட்டாக தமிழ்த் தினசரியான தினமலர் பத்திரிக்கையின் 26.09.2010 வாரமலர் இதழில் கார்ல் மார்க்ஸைப் பற்றியும் அவரது மனைவி ஜென்னி மார்க்ஸ் குறித்தும் வெளிவந்துள்ள ஒரு துணுக்குச் செய்தியைப் பார்ப்போம்.

ஜென்னி மார்க்ஸ் குறித்த துணுக்கு

அச்செய்தியின் உள்ளடக்கம் இதுதான் அதாவது கார்ல் மார்க்ஸ் - ன் மனைவி பெரிய பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்தவர்; அவர் கார்ல் மார்க்ஸ் - ஐ மணந்து வறுமையில் கஷ்டப்பட்டார்; கடைசி வரையில் வறுமையுடன் போராடிய அவர் அவரது கணவர் இறந்த பிறகு சோகத்துடன் கூறினார்: மூலதனம் நூலை எழுதியதன் மூலம் அவர் பெயரும் புகழும் பெற்றார். அதை எழுதியதற்குப் பதிலாக மூலதனத்தை அவர் தேடியிருந்தால் எங்களது வாழ்க்கை எவ்வளவோ நன்றாக இருந்திருக்கும் என்று.

இச்செய்தி எந்த நூலில் இருந்து எடுக்கப்பட்டது என்ற தகவல் எழுதியவரால் குறிப்பிடப்படவில்லை. இச்செய்தியைப் படிக்கும் நமது நடுத்தர வர்க்கப் பெண்களுக்கு இச்செய்தியின் உண்மைத்தன்மை குறித்து நிச்சயமாக எந்தச் சந்தேகமும் ஏற்படாது. ஏனெனில் ஒரு பெண்ணின் மனநிலை இவ்வாறே இருக்கும் என்றே அவர்கள் உறுதியாக நம்புவர்.

மறுக்க முடியாத உண்மைகள்

“பணக்கார குடும்பத்தில் பிறந்தவராக இருந்தாலும் ஜென்னி, மார்க்ஸ் - ன் மனைவியாக மட்டுமல்ல அவரது உதவியாளராகவும் இருந்தார்; அவரது பல நூல்களைப் பிரதிகள் எடுக்கும் வேலையையும் அவர் மிகுந்த ஈடுபாட்டுடன் செய்து கொண்டிருந்தார். அம்மை நோயினால் பாதிக்கப்பட்டு மிகவும் பலவீனமாகவும் பார்வைக் குறைவோடும் இருந்த வேளையிலும் கூட மார்க்ஸ் ஓக்ட் என்பருக்கு எழுதிய பதிலினை மிகுந்த சிரத்தையுடன் பிரதி எடுத்தார். எத்தனை சிரமமான வாழ்க்கையை நடத்தினாலும் எதிர்காலம் குறித்த மிதமிஞ்சிய நம்பிக்கையுடனேயே தன் கணவர் இருந்தார் என்று மிகுந்த பெருமிதத்துடன் அவர் அனைவரிடமும் கூறிவந்தார்.

தாங்கள் பொருளாதார ரீதியாக ஒவ்வொரு நாளும் படும் சிரமங்கள் குறித்த தனது கவலையெல்லாம் சிறுசிறு அன்றாடச் சிரமங்களும் கவலைகளும் என் கணவர் தனது சிந்தனையையும் எழுத்துக்களையும் அமைதியுடன் தொடர்வதைப் பாதித்துவிடக் கூடாது என்பதுதான் என்று கூறினார்”. என்றெல்லாம் நாம் கூறினால் அதனை ஏற்றுக்கொள்ள நடுத்தர வர்க்கத்துப் பெண்களின் மனநிலை தயங்கவே செய்யும், ஆனால் அதுதான் உண்மை; ஆதாரபூர்வ உண்மை; மார்க்ஸ் எங்கெல்ஸ் நினைவுக் குறிப்புகள் என்ற நூலில் கூறப்பட்டுள்ள ஜென்னி மார்க்ஸ் - ன் உயர்வினை பறைசாற்றும் விஷயங்களில் ஒரு சிறு துளிபோன்ற  வாரமலர் இதழின் துணுக்கைப் படிக்கும் நடுத்தர வர்க்கத்துப் பெண்களுக்கு பணக்கார குடும்பத்திலிருந்து ஒரு பெண்ணைக் காதலித்து மணந்து அவளை இத்தனை கஷ்டங்களுக்கு ஆள்படுத்திய ஒரு கொடுமைக்காரர் என்று மார்க்ஸ் குறித்து ஒரு எண்ணம் தோன்றினால் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை.

அதில் கூறப்பட்டுள்ள மற்றொரு விஷயமும் விஷமத்தன்மை வாய்ந்தது. அது கார்ல் மார்க்ஸ் இறந்த பிறகு ஜென்னி மார்க்ஸ் இதைக் கூறினார் என்பதாகும். அதன் உள்பொருள் அவர் உயிருடன் இருந்தபோது, தன்மனதில் பட்ட இக்கருத்தைக் கூறினால் மார்க்ஸின் மனம் புண்படும் அல்லது அதனை மையமாக வைத்து அவர்கள் உறவில் விரிசல் ஏற்படும் என்று கருதி வெளியிடாதிருந்தது போலவும் அதனால் அவர் இறந்த பிறகு இதனை அவர் கூறியுள்ளார் என்று வாசகர்கள் எடுத்துக் கொள்ளும் விதத்திலும் அத்துணுக்கை எழுதியவர் அதனைக் கொண்டு வந்திருக்கிறார்.

ஜென்னி, மார்க்ஸூக்கு முன்பே மறைந்து விட்டார்

ஆனால் உண்மை என்னவென்றால் மார்க்ஸ் இறப்பதற்கு 15 மாதங்களுக்கு முன்பே ஜென்னி மார்க்ஸ் இறந்து விட்டார். அத்துயரம் ஏற்படுத்திய வேதனையின் பாதிப்பினால் படிப்படியாக மனதிற்குள் வெதும்பி வெதும்பி 15 மாதங்கள் கழித்து கார்ல் மார்க்ஸ் - ம் தூங்கிக் கொண்டிருந்தவாறே தன் இன்னுயிரைத் துறந்தார்.

உண்மைகள் எல்லாம் அந்த நடுத்தெரு நாராயணன் என்பவர் எழுதிய துணுக்கிற்கு இத்தனை நேர் விரோதமாக இருக்கையில் அவை குறித்த அக்கறை ஏதுமின்றி நாம் ஒன்றை, ஒரு வரலாறு பேசும் சிந்தனையாளரைப் பற்றி, அவரது சொந்த வாழ்க்கை குறித்து எழுதுகிறோமே அதனை எந்த ஆதாரத்தினைக் கொண்டு எழுதுகிறோம் என்று சிறிதளவும் எண்ணிப் பார்க்காது அவர் எழுதியிருப்பது ஒன்றே ஒன்றை அடிப்படையாக வைத்ததாகத்தான் இருக்க முடியும்; அதாவது 150 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த நிகழ்வுகள் குறித்த ஆதாரங்களை யார் தேடிப்பிடித்துத் தனது துணுக்கின் உண்மைத்தன்மையை கேள்விக்குரியதாக ஆக்கப் போகிறார்கள் என்ற அடிப்படையிலானதாகத்தான் அது இறுக்க முடியும்.

மறுக்க முடியுமா

ஆனால் மார்க்ஸின் எழுத்துகள் மட்டுமல்ல; அவரது வாழ்க்கையும் சமூக மாற்ற மனநிலை கொண்டோருக்கு முன்மாதிரியே. அவரது குடும்பம் அவரும் அவரது மனைவியும் குழந்தைகளும் மட்டுமல்ல. ஜெர்மனி, பிரான்ஸ் , பிரஸ்ஸல்ஸ், இங்கிலாந்து என எங்கும் விரவி கிடந்த எங்கெல்ஸ், லீப்னேஸ்ட் போன்ற தோழர்களையும் உள்ளடக்கியதாக அது இருந்தது, அக்குடும்பத்தை ஒன்றுபடுத்திய சக்தி அவரது சிந்தனையே. அது வழிநடத்திய தோழர்கள் அனைவரும் மார்க்ஸுக்கு உதவுவது தங்கள் தலையாய கடமை எனக்கருதினார். அவருக்குப் பொருளாதார ரீதியாக உதவுவதற்காகவே அவரே மிகப்பெரும் சிந்தனையாளராக இருந்த போதும் எங்கெல்ஸ் அவரது திறனோடு சிறிதும் ஒத்துபோகாதா கணக்கெழுதும் பணியில் அமர்ந்தார். ஆனால் அதைப்பற்றி அவர் எங்கும் பேசவில்லை.

சமூக படிநிலையில் மார்க்ஸைக் காட்டிலும் உயர்ந்த நிலையிலிருந்த ஜென்னி அவரை காதலித்து மணந்தார். ஜென்னியை கவர்ந்தது மார்க்ஸின் உருவபோளிவல்ல; உள்ளபோலிவும் சிந்தனைத்திரனுமே ; அவர் மார்க்ஸுடன் வாழ்ந்த காலம் முழுவதும் அவர் மனைவியாக மட்டுமல்ல; அவரது லட்சியத்தின் துணைவியாகவும் இருந்தார். அவர்களது வாழ்க்கை எத்தனை ஆண்டுகளானாலும் என்றும் பசுமையானது; அவரது லட்சிய தோழர்களின் மனதில் ஆழப்பதிந்தது.

Pin It