கடந்த ஜீலை 22ம் நாள் மன்மோகன்சிங் அவர்கள் கொண்டுவந்த நம்பிக்கை கோரும் தீர்மானம் வாக்கெடுப்பிற்கு வந்த வேளையில் நாடாளுமன்றத்தில் மூன்று பாரதிய ஜனதாக் கட்சி உறுப்பினர்கள் கத்தை கத்தையாக கரன்சி நோட்டுகளை மக்களைவையில் காட்டினர். நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு ஆதரவாக வாக்களிக்கக் கோரி சமாஜ்வாதிக் கட்சிப் பிரமுகர் ஒருவரால் அவை கொடுக்கப்பட்டன என்று அவர்கள் கோஷமிட்டனர். அது அன்றைய செய்திகளை பரபரப்பாக ஒளிபரப்பிக் கொண்டிருந்த ஊடகங்களில் மாறி மாறி ஒளிபரப்பப்பட்டது. பல அரசியல் நோக்கர்களும் கட்சிகளின் தலைவர்களும் அந்த நாளை இந்திய ஜனநாயகத்தின் கறுப்பு நாள் என்று வர்ணித்தனர். அது குறித்து விசாரணை ஒன்றிற்கு ஆணையிடப்பட்டு அந்த விசாரணை முக்கியக் கட்சிகளை உள்ளடக்கிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழுவால் தற்போது நடைபெற்றுக் கொண்டுள்ளது.

அதையொட்டி பலரும் இந்திய நாடாளுமன்றம் திடீரென சீரழிந்து விட்டதாக நீலிக்கண்ணீர் வடிக்கின்றனர். ஆனால் தொடர்ச்சியாக நாடாளுமன்ற ஜனநாயக ஆட்சி முறையே பெரும் சீரழிவிற்கு படிப்படியாக ஆட்பட்டு வந்துள்ளது என்பதே கண்கூடான உண்மை.

கட்சிக்கு நன்கொடை தங்களுக்கு லஞ்சம்

சில காலங்களுக்கு முன்பு பொதுமக்களின் அடிப்படையான பிரச்னைகளை எடுத்துக்கூறக் கடமைப்பட்டவர்களான நாடாளுமன்ற உறுப்பினர்கள் தனைச் செய்யாமல் அதற்கு மாறாக சில முதலாளிகளின் நலனுக்கான பிரச்னைகளை நாடாளுமன்றத்தில் எடுத்துரைப்பதற்காக அந்த முதலாளிகளிடம் இருந்தே கையூட்டாக பெரும் பணம் பெற்ற செய்தி ஆதாரப்பூர்வமாக வெளிவந்தது. அதிக எண்ணிக்கையில் பாரதிய ஜனதாக்கட்சி உறுப்பினர்கள் அச்செயலில் ஈடுபட்டிருந்தனர். பொதுவாக முதலாளித்துவக் கட்சிகள் மக்கள் நலனை விட்டுக்கொடுத்து முதலாளிகளுக்கு சாதகமாக பேசுவது, செயல்படுவது வழக்கமாக நடைபெறும் ஒன்று. அதற்காக அவர்கள் சார்ந்திருக்கும் கட்சிகள் தேர்தல், மாநாடு போன்ற சமயங்களில் அம்முதலாளித்துவ நிறுவனங்களில் இருந்து பெரும் நிதியை நன்கொடையாகப் பெறுவதும் வழக்கம். அதைத் தாண்டி தங்களுக்காகவென்று தனியாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையூட்டுப் பெற்றதை கண்முன் நிறுத்தியதே அந்த சம்பவம்.

காசுக்காக மனைவி என்ற பொய்

பாரதிய ஜனதாக் கட்சியின் மற்றொரு எம்.பி. தன் மனைவி என்று கூறி வேறொரு பெண்ணை வெளிநாட்டிற்கு அழைத்துச் செல்கையில் பிடிபட்டது, அடுத்து முக்கிய செய்தியாக அடிபட்டது. வெளிநாட்டிற்கு அழைத்துச் சென்று அங்கு அப்பெண் வேலைவாய்ப்பு பெற்று சம்பாதிப்பதற்கு உதவும் வகையிலேயே அவர் அப்பெண்ணை அழைத்துச் சென்றது பின்னர் ஊர்ஜிதமாயிற்று. அதுவும் பணத்திற்காக செய்யப்பட்டது என்பதைக் கூற வேண்டியதில்லை. எனவே சீரழிவுகள் ஏதோ ஜீலை 22ம் தேதி மட்டும் தலைகாட்டியவை அல்ல. ஜீலை 22ம் தேதி வெளிவந்தது மறைந்து கிடக்கும் ஒரு மிகப்பெரிய சீரழிவு பனிமலையின் முகடுபோன்றதே என்பதையே மேற்கூறிய சம்பவங்கள் வெளிப்படுத்துகின்றன.

ஆரம்பத்தில் தங்களது துறைகளில் ஏதாவது முறைகேடுகள் இருந்தது தெரியவந்தால் தாமாகவே முன்வந்து பதவிவிலகும் அமைச்சர்களை கொண்டிருந்த நாடாளுமன்றமே, இன்று இந்த நிலைக்கு ஆளாகியுள்ளது. அரியலூர் இரயில் விபத்தின் போது, அப்போது இரயில்வே மைச்சராக இருந்த லால்பகதூர் சாஸ்திரி அவர்கள் விபத்திற்குப் பொறுப்பேற்று பதவி விலகியது இவ்விடத்தில் நினைவு கூறப்பட வேண்டியதாகும்.

கட்சி அஜண்டாவும் தனிஅஜண்டாவும்

அந்தளவிற்கு இருந்த நாடாளுமன்ற தரம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து இன்று எந்தளவிற்கு வந்துள்ளது என்றால், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தாங்கள் சார்ந்திருக்கும் கட்சிகளின் அறிவிக்கப்பட்ட நிலைகளுக்கு மாறாக, வேறொரு நிலை எடுத்து தங்களது தனி நபர் அஜென்டாவை செயல்படுத்தும் அளவிற்கு சென்றுள்ளனர் என்றளவிற்கு அவை வெளிவந்துள்ளன.

நம்பிக்கை வாக்கெடுப்பின் போது அவ்வாறு பலர் தங்கள் சொந்த அஜென்டாவை முதன்மைப்படுத்தி தங்களுக்கு வாக்களிக்க முன்வருவர் என்ற நம்பிக்கையை கருத்தில் கொண்டே காங்கிரஸ் கட்சி துணிச்சலாக இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் இறங்கியது. உள்ளபடியே அப்பொழுது பல்வேறு கட்சிகள் அறிவித்தபடி காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாகவும், எதிராகவும் விழ வாய்ப்புள்ள வாக்குகளை கணக்கிலெடுத்துப் பார்த்தால் காங்கிரஸ் கட்சி கொண்டு வந்த தீர்மானம் தோல்வியடைந்து விடும் நிலையே இருந்தது.

ஒட்டு மொத்தத்தில் இந்த வாக்கெடுப்பின் போது அனைத்துக் கட்சிகளயும் சேர்ந்த 23 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவர்கள் சார்ந்திருந்த கட்சிகளின் ஆணைகளை மீறி வாக்களித்தனர். அதிகபட்சமாக பாரதிய ஜனதாக் கட்சியைச் சேர்ந்த 8 பேரும், அதற்கு அடுத்தபடியாக சமாஜ்வாதி கட்சியின் 6 நாடாளுமன்ற உறுப்பினர்களும், ஜனதாதளக் கட்சியின் ஒரு உறுப்பினரும், காங்கிரஸ் கட்சியின் ஒரு உறுப்பினரும், மதச் சார்பற்ற ஜனதா தளத்தின் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரும், தெலுங்கு தேச கட்சியின் ஒரு உறுப்பினரும், பிஜு ஜனதா தளத்தின் ஒரு உறுப்பினரும் தங்கள் தங்களது கட்சிகளின் ஆணைகளை மீறி வாக்களித்திருந்தனர். ஐக்கிய ஜனதா தளம், சிவசேனா, பஞ்சாபின் தற்போதைய ஆளும் கட்சியான சிரோமனி காலிதளம் ஆகிய கட்சிகளை சேர்ந்த தலா ஒவ்வொரு உறுப்பினர்கள் தங்களது கட்சிகளின் ஆணைகளை மீறி வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாதிருந்தனர்.

குடியரசுத்தலைவர் எதிர்கொள்ள வேண்டிவரும் தர்ம சங்கட நிலை

இந்த அளவு எண்ணிக்ககையில் கட்சிகளின் ஆணைகளை மீறி தன் உறுப்பினர்கள் வாக்களித்தது ஒரு புதிய பரிமாணத்தை நாடாளுமன்ற ஜனநாயக அரசியலில் கொண்டுவந்துள்ளது. அதாவது அரசியல் ஒரு தொழில் போல் ஆகிவிட்டது, அதில் அதிக பணம் முதலீடு செய்ய முடிந்தவர்கள், வெற்றி பெற வாய்ப்புள்ள கட்சிகள் விரும்பும் அளவிற்கு அக்கட்சிக்கு பணம் வழங்கவும், தேர்தலுக்காக செலவிடவும் தயாராக இருந்தால் அவர்களுக்கு போட்டியிட எளிதில் இடம் கிடைத்துவிடும். தற்போது எந்த ஒரு கட்சிக்கும் நிலையான கொள்கை என்று எதுவுமில்லாமல் போய்விட்டதால், வசதியுள்ளவர்கள் அவர்களது வசதியை பொருத்து எக்கட்சியின் வேட்பாளராகவும் போட்டியிட முடியும். அவ்வாறு போட்டியிடும் அவர்கள் அடுத்து தங்களுக்கு போட்டியிட்டு வெற்றிபெற வாய்ப்புள்ளவையாக தங்கள் கட்சி இல்லாமல் போய்விட்டால், வ்வாய்ப்புள்ள வேறொரு கட்சிக்குத் தாவிக் கொள்ளலாம். இவை போன்ற நிலைகள் இந்திய அரசியலில் தோன்றியுள்ளன

எனவே அவர்கள் தங்களின் தனிநபர் ஜெண்டாவை முதன்மைப்படுத்தி செயல்படுவது மிகவும் சாத்தியமாகிவிட்டது என்பதே இன்று தோன்றியுள்ள வெளிப்படையான நிலை. இந்நிலை நீடித்துக்கொண்டே போனால், கட்சிகளின் ஆதரவை அடிப்படையாகக் கொண்டு ஆட்சியமைக்க கட்சிகளை ழைக்கும் நிலைமாறி, நாடாளுமன்ற உறுப்பினர் ஒவ்வொருவரின் நிலையையும் குடியஅரசுத் தலைவர் கணக்கிலெடுத்துக் கொள்ள வேண்டும் என்ற நிர்ப்பந்த நிலை விரைவில் உருவாகிவிடும். இது தான் எவ்வளவு கசப்பாக இருந்தாலும் நாம் ஜீரணித்து ஆகவேண்டிய பாராளுமன்ற ஜனநாயகத்தின் தற்போதைய நிலை.

இனவாதமும் மதவாதமும் இந்த நிலையை மனதிற்கொண்டே கட்சிகளும் நம்பிக்கை வாக்கெடுப்பை ஒட்டி தங்களது வாக்கு சேகரிக்கும் வேலைகளை மேற்கொண்டனர். மன்மோகன்சிங் சீக்கிய இனத்தைச் சேர்ந்தவர். அவருக்கு எதிராக சீக்கிய இனத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிப்பதா? என்ற பிரச்சாரம் காங்கிரஸால் மிகவும் சாதுர்யமாக மேற்கொள்ளப்பட்டது. அவர்கள் இவ்வாறு விரித்த வலையில் ஒரு மீன் சிக்கவே செய்தது. ஒரு சிரோமனி காலி தள உறுப்பினர் கட்சி ஆணையை மீறி அவையில் கலந்து கொள்ளாமல் நம்பிக்கைத் தீர்மானம் வெற்றிபெற உதவி செய்தார்.

வகுப்பு வாதத்திற்கு எதிராக சீறும் பாம்பாக தன்னைக் காட்டிக் கொள்ளும் சி.பி.ஐ(எம்) கட்சி தன் தலைவர்களில் ஒருவரான எம்.கே.பாந்தே என்பவரின் மூலமாக முஸ்லீம் மதவாத மனநிலையை பயன்படுத்தும் வகையில் ஒரு பிரசாரத்தை கட்டவிழ்த்துவிட்டு நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்கிரஸிற்கு எதிராக வாக்குகளைத் திரட்டும் வேலையைச் செய்தது. அதாவது, இந்த அணுஒப்பந்தத்தை ஆதரிக்கும் முடிவினால், முலாயம்சிங் யாதவ் உத்திரப்பிரதேத்தில் முஸ்லீம் இன மக்களின் வாக்குகளை இழக்க நேரிடும் என்று அவர் கூறினார்.

ஏதோ மன்மோகன்சிங்கும், ஜார்ஜ்புஷ்சும் சீக்கிய இன மக்களுக்கு ஆதரவாகவும், முஸ்லீம்களுக்கு எதிராகவும் இந்த அணு சக்தி ஒப்பந்தத்தைச் செய்து கொண்டது போல ஒரு பொய்த் தோற்றத்தை இவர்கள் உருவாக்கினர். அதாவது அப்பட்டமாக சொல்வதானால் அமெரிக்கா அணு எரிபொருள் தயார் செய்யும் அந்நாட்டு நிறுவன முதலாளிகளின் நலனுக்காகவும், இந்தியா இந்திய முதலாளி வர்க்கத்தின் ஒட்டு மொத்த நலனுக்காகவும் செய்து கொண்டதே இந்த 123 ஒப்பந்தம். அதற்கு இதுபோன்ற மதவாத பரிமாணத்தை ஏற்படுத்தி முதலாளி வர்க்கத்தை மூடி மறைத்து காக்கும் வேலையை இவ்விரு கட்சிகளும் நாசூக்காக செய்தன. இந்தியாவின் இறையாண்மையை காப்பாற்றவும், அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்க்கவும் மேற்கொள்ளப்பட்டவை என்பது போன்ற தோற்றம் காட்டினாலும் உண்மையில் இவ்விரு போக்குகளும் கடைந்தெடுத்த சந்தர்ப்பவாத போக்குகள.

அத்துடன் சரியான கொள்கை கோட்பாடின்றி நேர்மையாக தங்களின் செயல்களுக்கான உண்மையான காரணங்களை முன்வைக்க தவறி எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற அடிப்படையில் மத உணர்வுகளை நாசூக்காக தூண்டிவிடும், விசிறிவிடும் இப்போக்குகளும் வகுப்புவாத ரகத்தைச் சேர்ந்தவையே. அதாவது பெரும்பான்மை மதவெறி வாதத்தை மட்டுமே வகுப்புவாதம் என்று குறிப்பிடுவதும், சிறுபான்மை மதவெறிப்போக்குகளை வகுப்புவாதமல்ல என்பது போன்று சித்தரிப்பதும் மிகவும் தவறான, மக்களிடையே வநம்பிக்கையை ஏற்படுத்தும் போக்குகளாகும். மிகவும் அடக்கமாகவே சொன்னால்கூட இதனை பிரதிபலிப்பவர்கள் கம்யூனிச உணர்வுக்கல்ல, முதலாளித்துவ ஜனநாயக உணர்வுக்குக்கூட உகந்த வகையில் செயல்படாதவர்கள.

குறைந்து வரும் உறுப்பினர் தரம்

முதலாளித்துவ ஜனநாயகத்தின் இன்றைய சீரழிந்த நிலைக்கு இன்னொரு எடுத்துக்காட்டு, இந்திய - யு.எஸ். அணு ஒப்பந்தத்திற்கான முன்முயற்சி மேற்கொள்ளப்பட்டு ஏறக்குறைய மூன்று ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் இதனை விளக்கி மக்களிடையே பிரச்சாரம் மேற்கொள்ள தனது எம்.பிகளுக்கு காங்கிரஸ் கட்சி இப்போதுதான் றிவுறுத்தியுள்ளது என்ற விஷயமாகும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்ததென்று அவர்கள் கருதும் ஒரு ஒப்பந்தம் குறித்து பிரச்சாரம் எதையும் மேற்கொள்ளாமல் ஆளும் கட்சி உறுப்பினர்கள் இவ்வளவு காலம் என்ன அரசியல் பணியினை மேற்கொண்டிருந்தார்கள்?

ஒரு ஒப்பந்தம் குறித்த ஆவணத்தைப் பொது மக்களுக்கென தயாரித்து வெளியிடுவது வழக்கமாக நடைபெறும் ஒன்று. ஆனால் தங்களது எம்.பிகளுக்காக என்று ஆவணத்தை தயாரித்து வெளியிடுவதன் மூலம் தற்போதைய அக்கட்சி எம்.பிகளின் தரம் என்ன? என்ற கேள்வியை காங்கிரஸ் கட்சியின் இச்செயல் முன்னுக்கு கொண்டுவந்துள்ளது. ஒரு ஆவணத்தை தயாரிக்கும் அளவிற்கு குறைந்த பட்ச தரத்தையும், தகுதியையும் கொண்டிருக்க வேண்டிய எம்.பிக்கள் யதார்த்தத்தில் ஆவணத்தைப் படித்து அறிந்து கொள்ள வேண்டிய நிலையில் உள்ளனர் என்பதை இதன் மூலம் காங்கிரஸ் ஒப்புக்கொண்டுள்ளது.

எந்த கட்சியும் விதிவிலக்கானதல்ல

சி.பி.ஐ.(எம்) கட்சியைப் பொருத்தவரையிலும் கூட அது மிக உயர்ந்த கட்டுப்பாட்டைக் கொண்டிருக்க கூடிய கட்சி என்ற நிலை மலையேறி போய்விட்டது என்பதையே, சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி கட்சி கட்டுப்பாட்டிற்கு உட்பட்டு பதவி விலக மறுத்த நிலை உறுதிப்படுத்துகிறது. அனைவராலும் தேர்ந்தெடுக்கப்பட்டு சபாநாயகர் என்ற ஒரு பதவியை வகிப்பவர் அவர்; பல்வேறு சட்ட, சம்பிரதாய வரம்புகள் அவர் ராஜினாமா குறித்த விஷயத்தில் இருக்கின்றன போன்றவை கணக்கிலெடுக்கப்பட வேண்டியவையே.

ஆனாலும் தமிழ்நாட்டில் சில மாதங்களுக்கு முன்பு அக்கட்சியின் சட்டமன்றக் குழுவின் தலைவர் பதவி இறக்கம் செய்யப்பட்டது, அக்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களின் தரத்தையும், தார்மீக நெறிமுறையையும் தோலுரித்துக்காட்டுகிறது. தமிழ்நாட்டில் திருப்பூர் சட்டமன்ற தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு அக்கட்சியின் சட்ட மன்ற குழுவின் தலைவராக தெரிவு செய்யப்பட்ட திரு.கோவிந்தசாமி திருப்பூர் வட்டார பனியன் ஆலை தொழிலாளர்களின் நலனுக்கு விரோதமாக, அவ்வட்டார ஆலை முதலாளிகளின் நலனுக்கு ஆதரவாக செயல்பட்டார் என்றெழுந்த புகாரின் அடிப்படையில் அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

இந்த நிலையில் திரு. சோம்நாத் சாட்டர்ஜி விஷயத்தில் உண்மையிலேயே காங்கிரஸ் ஆட்சிக்கு வெளியிலிருந்து ஆதரவளிக்கும் ‘சரியான’ நிலையை மேற்கொண்டதற்காக அக்கட்சி பெருமகிழ்ச்சி டையவேண்டும். ஏனெனில் பதவிகள் அக்கட்சி உறுப்பினர்களயும் சபலத்திற்கு ஆளாக்குகின்றன என்பதையே இந்நிகழ்வுகள் அழுத்தமாக கோடிட்டு காட்டுவதால் அவர்கள் ஆட்சியில் பங்கெடுப்பது என்ற நிலையை எடுத்திருந்தால் இன்னும் பல வாக்குகளை அதாவது எத்தனை அமைச்சர் பதவிகள் அவர்கள் பெற்றிருப்பார்களா அத்தனை வாக்குகளை அவர்கள் இழக்க வேண்டியிருந்தாலும் இருந்திருக்கும்.

இவ்வாறு பாராளுமன்ற ஜனநாயக மரபுகளும், தன் உறுப்பினர்களின் தரமும், தகுதிகளும், கட்சிகள் கொள்கை ஏதுமின்றி செயல்படும் போக்கும், தன் விளவாக நாடாளுமன்ற உறுப்பினர்களை தாங்கள் சார்ந்துள்ள கட்சிகளின் ஜெண்டாக்களை மீறி தங்களது சொந்தநலன் சார்ந்த ஜெண்டாவை முதன்மைப்படுத்தும் போக்கும், அவையின் மைய மண்டபத்தில் கூடி கூச்சலிட்டு அவையின் நேரத்தையும், நாடாளுமன்ற நடவடிக்கை களுக்காக செலவிடப்படும் பணத்தையும், விரயமாக்கும் போக்கும் மாமேதை லெனின் வர்ணித்தவாறு ‘நாடாளுமன்றங்கள் அரட்டை மடங்கள்’ என்ற வரையறையின் வரம்பிற்குள் கூட வைத்திருக்கவில்லை. அதையும் தாண்டி அவை கூச்சல் மடங்களாக ஆகியுள்ள நிலையையே உறுதிப்படுத்துகிறது.

Pin It