இலங்கை அரசின் இருப்பு என்பது சிங்கள - பௌத்தத்தை பாதுகாப்பது, வளர்த்தெடுப்பது எனும் கோட்பாடுகளின் அடிப்படையிலேயே தங்கியுள்ளது. இதுவரை ஆட்சிக்கு வந்த எல்லா அரசாங்கங்களும் இந்த இருப்பைத் தக்கவைத்துக் கொள்வதில் தீவிரத் தன்மையும் அக்கறையையும் வெளிப்படுத்தி வந்துள்ளன. சுதந்திரத்திற்கு பின்னர் வந்த எல்லா அரசாங்கங்களும் அரசாங்கம் கைமாறுகின்றபோதெல்லாம் தமது இருப்புக்கு அடிப்படையாக இருக்கும் சிங்கள - பௌத்த சித்தாந்தத்தை தீவிரமாக பற்றிப் பிடித்து வந்துள்ளன.

இலங்கையின் அரசியல் வரலாற்றில் சிங்கள- பௌத்த பேரினவாதம் மேலாதிக்கம் செலுத்தும் அம்சமாக எழுச்சி யடைந்துள்ளது. தமிழ்பேசும் மக்களது வாழ்வாதார உரிமைகள் சமூக பாதுகாப்பு மற்றும் சுதந்திரம் சனநாயகம் சமத்துவம் போன்றவை யாவும் திட்டமிட்டுப் பறிக்கப்பட்டன. இது அரசியலாகவும் சமூகநீதியாகவும் புதுப்பரிணாமம் பெற்றது. சிங்கள - பௌத்த பேரினவாத இயக்கப் போக்கு அனைத்தையும் மீறி நிறுவனமயப்பட்டது. தமிழ் மக்கள் ஒரு தனியான தேசம் என்ற உயர்ந்த பரிமாணம் எதிர்காலம் நோக்கிய ஆத்மார்த்தத் தெரிவுகளுக்கு களம் அமைத்துக் கொடுத்தது.

தொடர்ந்து சிங்கள-பௌத்த அரசின் இன ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக நீண்டகாலமாகப் போராடி வந்த தமிழ்தேசம் 1970களில் தனது போராட்டத்தை சாத்வீக வடிவிலிருந்து வன்முறை வடிவத்துக்கு மாற்றியது. இத்தகைய வடிவமாற்றத்துக்கேற்ப அப்போராட்டத்தில் தீவிரமாகப் பங்குகொள்கின்ற பிரிவினரிலும் போராட்டத்தை வழிநடத்திச் செல்கின்ற தலைமையிலும் மாற்றங்கள் ஏற்பட்டன.

இப்போது போராட்டத்தில் தீவிரமாக ஈடுபடுகின்ற பிரிவினராக இளைஞர்களும் மாணவர்களும் விளங்கினர். இவர்களில் இருந்தே போராட்டத் தலைமையும் உருவானது. இந்த நிகழ்வுடன் தமிழ்த் தேசத்தின் போராட்டத்தில் திருப்புமுனை ஏற்பட்டது. தமிழ் தலைமையின் ஐக்கியமும் சிதறியது. தமிழ்மக்களின் ஒன்றிணைந்த அரசியல் தலைமையானது நீண்டகால முயற்சியின் பின்னர் உருவாக்கப்பட்டது. இதன் பின்னர் தலைமை திடீர் திடீரென தோன்றிய ஆயுதக் குழுக்களினால் பகிர்ந்து கொள்ளப்பட்டது.

தமிழ் மக்களின் போராட்டத்தில் 1980களின் முற்பகுதி கிளர்ச்சியும் கொந்தளிப்பும் மிக்க காலப்பகுதியாக விளங்கியது. வட-கிழக்குத் தழுவியதாக முழுத் தமிழ் மக்களும் போராட்டத்தின் பால் அக்கறையும் அனுதாபமும் வெளிப்படுத்தினர். போராட்டம் சார்ந்த செயற்பாடுகளில் மறைமுகமாகவும் நேரடியாகவும் ஈடுபட்டனர். எனினும் இவர்களை ஒன்றுதிரட்டி அமைப்பாக்கி பல்வேறுபட்ட வெகுசனப் போராட்டங்களை முன்னெடுக்கின்ற ஆற்றலைக் கொண்டதாக எந்த ஒரு விடுதலை அமைப்பும் தன்னை வெளிப்படுத்தவில்லை.

இந்த அமைப்புகள் தமிழீழ விடுதலையை நோக்கி உறுதியாக முன்னேறுவதிலும் பார்க்க, தம்மைத் தமிழ் மக்களின் தலைமையாக நிலைநாட்டுவதையே பிரதான இலக்காகக் கொண்டிருந்தன. எனினும் இதனைச் சாதிப்பது அவ்வளவு எளிதாக இருக்கவில்லை.

தமிழ் மக்களின் தலைமையைப் பெற்றுக் கொள்வதற்காக முன்னைய தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைமையோடு, இப்போது புதிதாக உருவாகி வந்த ஆயுதக் குழுக்களும் போட்டியிட்டன. தமிழ் மக்களைப் பொறுத்தவரை அவர்கள் பொதுவாக இந்த எல்லா ஆயுதக் குழுக்களையும் அனுதாபத்தோடும் அக்கறையோடும் மதித்து அவற்றுக்கு தமது ஆதரவை வழங்கி வந்தனர்.

தமிழ் மக்களின் தலைமை என தம்மைக் கூறிக்கொண்ட அமைப்புகள் பௌத்த - சிங்கள அரசுக்கு எதிரான போராட்டத்தை உறுதியாக முன்னெடுப்பதன் மூலமாக தமது தலைமையை நிலைநாட்ட முயற்சிக்கவில்லை. தமக்கு அரசியல் வழிமுறையை உருவாக்கவில்லை.

போராட்டத்தின் நோக்கம் அதில் பங்குகொள்கின்ற சமூகப் பிரிவுகள், போராட்ட வழிமுறைகள், ஏனைய சமூகங்களுடனான உறவுகள் என ஒரு போராட்டம் எதிர்கொள்கின்ற அடிப்படை விடயங்கள் உள்ளடக்கியதாக பலமான ‘ஐக்கிய முன்னணி’ அவசியம் என்பதை உணர்ந்து அதை நோக்கியதான தமது வேலைத்திட்டங்களை வகுக்கக்கூடிய அரசியல் முதிர்ச்சியை எந்த அமைப்பும் வெளிப்படுத்தவில்லை.

இவற்றுக்குப் பதிலாக ஆயுத பலத்தின் மூலம் தமிழ் மக்களைக் கட்டுப்படுத்தி தமது தலைமையை ஏற்படுத்த அவை முயற்சித்தன. தமிழ் மக்களின் விமரிசனச் சுதந்திரங்களையும் தொடர்பூட கங்களையும் சுயமான சமூகப் பண்பாட்டு நிறுவனங்களையும் இவை கட்டுப்படுத்தின. விரிவான ஜனநாயக சூழலை ஏற்படுத்துவதற்குப் பதிலாக ஒவ்வொரு அமைப்பிலும் அதிகார ஆதிக்க உணர்வுகளே வெளிப்பட்டன. தமக்குள்ளே உட்கொலைகளை நிகழ்த்துமளவிற்கு நிலைமைகள் வளர்ந்தன. இத்தகைய அராஜக அரசியல் அழித்தொழிப்பு அரசியலாக மாற்றம் பெற்றது. மக்களுக்கு எதிராகவும் ஆயுதம் திரும்பியது.

தம்முன் முரண்பட்டு பிரிந்து சென்றவர்கள் வேறு அமைப்புகளில் இணைவதைத் தடுப்பதாகவும் தம்மைப் பற்றி அவர்கள் வெளியிடக்கூடிய கருத்துகளின் காரணமாகத் தாம் தமிழ் மக்களினால் நிராகரிக்கப்படலாம் என்பதனாலும் அவர்களை உடனடியாக அழித்தனர். மேலும் தமக்குப் போட்டியாக இருக்கின்ற ஏனைய அமைப்புகளை வீழ்த்துகின்ற செயற்பாடுகளில் விதிவிலக்கின்றி ஒவ்வொரு அமைப்பும் ஈடுபட்டது. இவ்வாறு தமிழ் மக்களில் எந்தப் பிரிவினரும் தமக்கு எதிரான நிலையை எடுக்கவிடாது தடுப்பதில் ஒவ்வொரு அமைப்பும் தீவிரமாகச் செயல்பட்டது.

தமிழ் மக்கள் தம்மீது விடுதலை அமைப்புகளால் மேற் கொள்ளப்பட்ட அராஜக நடவடிக்கைகளை, ஜனநாயக விரோதப் போக்குகளை ‘தேசவிடுதலைப் போராட்டம்’ என்ற உயரிய இலட்சியத்தின் பெயரால் வெகுஜனரீதியான எதிர்ப்புகள் எதுவுமின்றி ஏற்றுக்கொள்ளும்படி செய்யப்பட்டார்கள். அதே நேரம் ஆங்காங்கு அமைப்புகளுக்கு எதிரான சில எதிர்ப்புப் போராட்டங்களும் வெளிப்பட்டன. ஆனால் அவை தொடர முடியாமல் பார்த்துக் கொண்டன.

தேச விடுதலைப் போராட்டத்தின்போது இத்தகைய அராஜகங்கள் ஜனநாயகமின்மை குறிப்பிட்ட காலத்திற்குத் தவிர்க்க முடியாதவை என்று அமைப்புகளால் நியாயப்படுத்தப்பட்டன. இவ்வாறு பல அமைப்புகளுள் இழையோடிய சனநாயகமின்மை, அராஜகம், உட்கொலை, மக்களுடனான முரண்பாடு... முதலானவற்றை புலிகள் அமைப்பு தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு அதிகார மையத்தை நோக்கி வேகமாக முன்னேறியது. ஒவ்வொரு அமைப்பும் படிப்படியாக தடைசெய்யப்பட்டு அழித்தொழிக்கப்பட்டன. ஜனநாயக பூர்வமாக சிந்தித்து கருத்து வெளிப்படுத்தும் சக்திகளுக்கும் மிரட்டல் விடப்பட்டது. பலர் கொலை செய்யப்பட்டனர். இதனால் மிக மோசமான அச்சவுணர்வு ஜனநாயகமற்ற சூழல் உருவானது. விடுதலை உணர்வும் அரசியல் தெளிவும் உள்ள பலர் நாட்டைவிட்டு வெளியேறினர். இன்னும் பலர் எந்த அரசாங்கத்தை எதிரியாகக் கொண்டு செயற்பட்டார்களோ அந்த அரசாங்கத்துடன் இணைந்து செயற்படத் தொடங்கினர்.

தமிழ்மக்களை அழிக்கும் நடவடிக்கைக்குத் துணைபோயினர். விடுதலைப் புலிகளது ஏகபோகத் தலைமைத்துவம் எழுச்சி பெற்றது. இன்னும் சிலர் தேச விடுதலைப் போராட்டம் என்ற உயரிய இலட்சியத்தின் பெயரால் புலிகளை அங்கீகரிக்க வேண்டிய நிர்ப்பந்தமும் ஏற்பட்டது. புலிகள் இயக்கத்தின் ஆதிக்கம் வட கிழக்குப் பிரதேசங்களில் புதுவடிவம் பெற்றது.

தமிழ் மக்களிடமிருந்து வெகுசன ரீதியான எதிர்ப்புகளை முகங்கொடுக்காத புலிகள் உள்ளிட்ட அமைப்புகள் வடகிழக்கு முஸ்லிம்கள் மீதும் அராஜகங்களைக் கட்டவிழ்த்துவிட்டனர். இதன் உச்சமாக புலிகள் அமைப்பு வடக்கிலிருந்து முஸ்லிம் மக்களைத் துரத்தியது. பல வருடங்களாக அகதிகளாக வாழ அவர்கள் நிர்ப்பந்திக்கப்பட்டனர்.

இந்த இடத்தில் இன்னொரு உண்மையையும் நாம் பதிவு செய்ய வேண்டும். ஒரு கட்டத்தில் ஜே.ஆர் தலைமையிலான அரசாங்கம் முஸ்லிம்களையும் தமிழர்களையும் கிழக்கில் நிரந்தரமாக பிரித்துவிடும் சூழ்ச்சியில் திட்டமிட்டுச் செயற்பட்டது. குறிப்பாக முஸ்லிம் தலைமைகளை தமிழர்களுக்கெதிராகப் பயன்படுத்துவதில் புதிய வியூகம் வகுத்துச் செயற்பட்டது. இது தனியாக ஆராயப்பட வேண்டும். இதனை அப்போது இயக்கங்கள் அறியாமல் இருந்தது வேதனைக்குரியதே. எதிரியின் சூழ்ச்சி வலைக்குள் தமிழ்த் தலைமைகள் வீழ்ந்துவிட்டன. இந்தப் பின்புலத்தில் தமிழ் - முஸ்லிம் உறவு இன்னும் கூர்மையாகப் பார்க்கப்பட வேண்டும்.

இலங்கை அரசாங்கம் தமிழ் தேசத்தின் இருப்பைச் சிதைத்து அழித்துவிட பல்வேறு வழிமுறைகளிலும் முயற்சித்து வந்தது. தமிழ்தேசத்தை நிராயுதபாணியாக்கி தனது ஆயுதபலம் கொண்டு நசுக்கிவிட கடுமையாக பிரயத்தனப்பட்டது. இந்நிலையில் தமிழ்தேசிய விடுதலைப் போராட்டத்தில் இணைக்கப்பட வேண்டிய இணைந்து நின்ற முஸ்லிம் மக்களை அழித்தொழிக்க நினைத்தது பெரும் வரலாற்றுத் தவறு என்றே புரிந்துகொள்ளப்பட வேண்டும். தமிழ் தேசமானது ஒரே தாயத்துக்குள் வாழும் இன்னோர் தனித்துவமான சமூகமாகிய முஸ்லிம் மக்களை உதாசீனப்படுத்தி விட்டு தனது விடுதலையை அடைந்து விட முடியாது. ஏனெனில் முஸ்லிம்கள் தொடர்பான பிரச்சினை என்பது தமிழ்தேசம் தனது விடுதலைக்கான பாதையில் முகங்கொடுத்து தீர்வு கண்டாக வேண்டிய ஓர் அரசியல் பிரச்சினை ஆகும். இவ்வாறு நோக்குவதற்கான / புரிந்துகொள்வதற்கான அரசியல் முதிர்ச்சியை புலிகள் உள்ளிட்ட தமிழ்த்தரப்பு கொண்டிருக்கவில்லை. அரசியல் தூரநோக்கற்ற செயற்பாடுகள் தமிழ் தேசத்தின் விடுதலை அரசியலை இன்றும் பலகாலம் பின்னோக்கியே இழுத்துச் செல்லும். இதற்கு புலிகள் இயக்கமும் பதில் சொல்ல வேண்டும்

2009 மே 18 க்கு பிறகு தமிழ்த்தேச விடுதலைப் போராட்டத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் மாற்றங்கள் அழிவுகள்... யாவும் ஆழமான பரிசீலனைக்குரியவை. மிகுந்த எதிர்பார்ப்புக்களுடன் புறப்பட்ட எமது பயணம் நந்திக்கடற்கரையில் முடிந்துள்ளது. இலட்சக்கணக்கான மக்களின் இழப்புகள் மனிதப் படுகொலையின் உச்சம் பெரும் பின்னடைவுகளை ஏற்படுத்தி உள்ளன. தாம் மட்டுமே விடுதலைப் போராட்டத்தை நடத்தி முடிப்போம் என்று கூறி ஏனைய அமைப்புகளை அழித்து தனியரு அமைப்பாக புலிகள் அமைப்பு வளர்ந்து நின்றது. ஆனால், இறுதிப் போரில் அவர்களால் நின்றுபிடிக்க முடியவில்லை. இயக்கம் முழுமையாக அழிக்கப்பட்டுள்ளது. இயக்கத்தின் முன்னணி உறுப்பினர்கள் பலர் அரசாங்கத்தின் தயவில் உள்ளார்கள். அரசாங்கத்துடன் இணைந்து நின்று செயற்படுகின்றனர். முன்னைய காலங்களில் ஏனைய அமைப்புகளில் இருந்த பலர் அரசாங்கத்துடன் இணைந்து துரோக அரசியலில் ஈடுபட்டனர். இதுபோல் இன்று புலிகளின் பிரதிநிதிகளும் துரோக அரசியலில் ஈடுபடுகின்றனர். தமிழ்த்தேச விடுதலைப் போராட்டம் எந்த வடிவிலும் வெளிப்படாத முன்னெடுக்கப்படாத வகையில் புலி உறுப்பினர்கள் அரசாங்கத்துடன் இணைந்து நின்று முழுமையாகக் கண்காணித்து வருகின்றனர்.

யுத்தம் முடிந்ததும் யுத்தத்திற்கு காரணமான அரசியல் என்பது மறக்கப்பட்டு மக்களின் அவலம் துன்பம் என்பதே பிரச்சினையாக மாற்றப்படுகிறது. மக்களது துயரம் என்பது முக்கியமான பிரச்சினை. இதில் யாருக்கும் மாறுபட்ட கருத்து இருக்க முடியாது. ஆனால் இந்த அவலம் துன்பம் ஏன் நேர்ந்தது என்பது மறக்கப்பட முடியாத விடயம் அல்லவா? யுத்தம் என்பது அரசியலின் தொடர்ச்சியே. தேசிய ஒடுக்குமுறை என்ற அரசியலின் தொடர்ச்சியாகவே இந்த ஆயுதப் போராட்டமானது தோன்றியது. அதன் உச்சக்கட்ட விளைவுகளே இந்த அவலங்களும் துன்பங்களும் ஆகும். இதில் புலிகளின் பாத்திரம் பற்றி பேசுபவர்கள் சிங்கள இனவாத அரசின் பாத்திரம் பற்றியும் பேச வேண்டும். குறிப்பாக யுத்தத்தின் பின்பு அரசு தான் விடுவித்ததாகக் கூறப்படும், மக்கள் தொடர்பாக நடந்து கொண்ட விதம், இன்றுவரை நடந்துகொண்டு வரும் விதம் மறக்க முடியாதவை. இவ்வளவு கால துன்பங்களுக்கும் இழப்புகளுக்கும் ஈடுசெய்யக்கூடிய வகையில் தமிழ் மக்களுக்கான உயர்வான வாழ்வு பற்றி அரசு எந்தவித அக்கறையும் செலுத்துவதாக இல்லை.

போர் முடிவுக்கு வந்து இரண்டு வருடங்கள் ஆயிற்று. ஒவ்வொரு வருடமும் போர் வெற்றித் தினத்தை தேசிய நிகழ்வாக அரசாங்கம் கொண்டாடி வருகிறது. இலங்கைப் படைகள் இன்னொரு நாட்டின் படைகளைப் போரில் தோற்கடிக்கவில்லை. அதிகாரத்தில் இருந்த அரசாங்கங்கள் தேசிய இனப் பிரச்சினைக்கு அரசியல் இணக்கத் தீர்வைக் காணத் தவறியதன் விளைவே வடகிழக்கில் தோன்றிய ஆயுதப் போராட்டம் ஆகும். இந்த ஆயுதப் போராட்டத்தை இறுதிவரை கைவிடாமல் சண்டையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ஒரு இயக்கமே - புலிகள் அமைப்பே - தோற்கடிக்கப்பட்டுள்ளது. அந்த இயக்கத்தின் கட்டுப்பாட்டில் இருந்த பிரதேசங்கள் அரசாங்கப் படைகளின்கீழ் கொண்டுவரப்பட்டிருந்தன. அடிப்படையில் இந்தப் போர் இந்தியா உட்பட பல வெளிநாடுகளின் உதவியுடன் இலங்கை அரசாங்கத்தினால் அதன் சொந்தப் பிரஜைகளில் ஒரு பிரிவினருக்கு எதிராகவே நடத்தி முடிக்கப்பட்டது. இந்த உண்மை தெளிவாக உணரப்பட வேண்டும்.

எந்த அரசும் உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு வந்ததும் அந்த யுத்தத்திற்கு இட்டுச்சென்ற காரணங்களை இனங்கண்டு அவற்றைக் களைவதற்கு முயற்சி செய்யும். இதுவே அரசின் முதன்மை கடமை ஆகும். ஆனால் அந்தக் கடமையை முற்றாகக் கைவிட்டுவிட்டு ஒரு ஆக்கிரமிப்பு படையின் செயற்பாடுகளே சிங்களப் படைகள் மேற்கொண்டு வருகின்றன.

உள்நாட்டு யுத்தத்தில் ஒரு தரப்பானது முற்றாகத் தோற்கடிக்கப்பட்டால் அரசானது படைக்குறைப்பை மேற்கொள்ளும். பெரிய படைமுகாம்களை அகற்றும். மிகவும் அடிப்படையான சட்டம் ஒழுங்கைப் பேண முயற்சிகளை மேற்கொள்ளும். உயர் பாதுகாப்பு வலயங்களை அகற்றும். மக்கள் வதிவிடங்களிலிருந்து முற்றாகப் படைகளை வெளியேற்றும். மக்கள் தமது சொந்த இடங்களுக்கு மீள்குடியேறுவதை ஊக்குவிக்கும். அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்யும். இதுபோன்ற உயரிய பண்புகளை அரசு மேற்கொள்ள வேண்டுமென எதிர்பார்ப்பதில் தவறில்லை.

ஆனால் இலங்கையில் நடைபெறுவது என்ன? வடகிழக்குப் பிரதேசம் இன்னும் யுத்தப் பிரதேசமாகவே தொடர்கிறது. எங்கும் படைமுகாம்கள், சிவில் நிர்வாகக் கடமைகளில் இராணுவத்தினரின் தலையீடு நேரடியாக உள்ளது. தமிழ்ப் பிரதேசங்களில் சிங்களக் குடியேற்றம். ஆங்காங்கு பௌத்த விகாரைகள் திட்டமிட்ட ரீதியில் அமைக்கப்படுகின்றன.

தமிழ்த் தேசியத்தை முறியடிப்பதற்கான முயற்சிகளே சிறிலங்கா அரசானது டக்ளஸ், பிள்ளையான், கருணா போன்றவர்களை களத்தில் இறக்கி அழிப்பு அரசியலை துரிதப்படுத்தி வருகிறது. இந்தக் கூட்டணியுடன் கே.பி எனும் முன்னாள் புலியையும் இறக்கியுள்ளது. இன்னும் பல முன்னாள் புலிகளையும் இறக்கியுள்ளது.

எமது சமூகம் முப்பது ஆண்டுகளுக்கு மேலான உக்கிரமான ஆயுதப் போராட்டத்தினூடாக வளர்ச்சியடைந்த சமூகம் என்பதற்கான தடங்கல் எதுவுமற்ற சமூகமாக மாற்றுவதில் சிங்கள அரசும் அதற்குத் துணைபோகும் தமிழ் பேசும் சிங்கள பேரினவாதிகளும் கூட்டணி அமைத்துச் செயற்படுவதில் முனைப்பாக உள்ளன.

தமிழ் மக்கள் ஒரு தனியான தேசம் என்ற பரிமாணத்தை அடைந்துள்ளார்கள். எனவே ஒரு தேசத்திற்குரிய பிரிக்க முடியாத அனைத்து உரிமைகளையும் அனுபவிக்கக் கூடிய தெரிவை நாம் கொண்டிருக்கிறோம். ஆகவே தனியான இறைமைமிக்க தேச அரசை அமைப்பது நமது தேவை சார்ந்தது மட்டுமல்ல. கூடவே நம்மிடமிருந்து பிரிக்க முடியாத உரிமையும் கூட. ஆனால் சமூக மட்டத்தில் செல்வாக்குப் பெற்றுள்ள பிற்போக்குச் சிந்தனை களையும் உணர்வுகளையும் புரிந்துகொண்டு அவற்றை மாற்றி அமைக்கும் நிதானமான முறைப்படுத்தப்பட்ட வேலைத்திட்டங் களுக்கு தயாராக வேண்டும். வெறும் உணர்ச்சிகள், ஆவேசங்கள் மட்டும் நமக்கான விடுதலை உணர்வை வளர்க்கப் போதுமானவை அல்ல.

தேசம், தேசியம், தேசியவாதம் மீதான அறிவார்ந்த சிந்தனைத் தேடல் உருவாக்கப்பட வேண்டும். அரசியல் கோட்பாட்டாக்க மரபு, கல்வி, சமூகமயப்பட வேண்டும். இதுவரை நாம் கண்டுள்ள தோல்விகளில் இதுவும் ஒன்றாகும்.

எவ்வாறாயினும் எமது தமிழ்ச் சமூகத்தில் ஆதிக்கம் செலுத்திய சாதியம், ஆணாதிக்கம், பிரதேச வாதம், முஸ்லிம் - சிங்கள மக்கள் மீதான தப்பெண்ணங்கள் மற்றும் வர்க்க வாதம் போன்றவற்றுக்கு சவால் விடும் வேலைத்திட்டங்கள் தீவிரமாக முன்னெடுக்கப் படவில்லை. இந்த ஆதிக்க சித்தாந்தங்கள் எமது போராட்டத்தில் அதிகம் செல்வாக்குச் செலுத்தியுள்ளன. இதன் விளைவுகள்தான் இந்தத் தோல்விகளில் வெளிப்பட்டதாகும்.

இலங்கையில் தேசிய முரண்பாடுகளுக்கும் யுத்தத்திற்கும் காரணமான அம்சங்கள் அப்படியே இருக்க வெறுமனே யுத்தத்தில் புலிகள் இயக்கம் தோற்கடிக்கப்பட்டது மாத்திரம் அரசினால் தீர்வைக் கொண்டுவந்துவிட முடியாது. அப்படி முடியுமானால் சிங்கள தேசமே அதனை முன்வைக்க வேண்டும். இது சாத்தியமா?

Pin It