சமீப காலங்களில் மிகுந்த வீரியத்துடன் பேசப்படுகின்ற ‘தலித்’, ’தலித்தியம்’ சார்பான இலக்கியங்கள் குறித்த விவாதங்கள் ஆய்வாளர்களிடத்தில் மிகுந்த கவனம்பெற்றுள்ள சூழல் உள்ளது. இவருடைய புனைகதைகள் தாழ்த்தப்பட்டோர், ஒடுக்கப்பட் டோர், மலைவாழ்மக்கள், பிற்படுத்தப்பட்டோர் முதலான வகுப்பினைச் சேர்ந்த மக்களின் வாழ்வியல் நிகழ்வுகளைப் பதிவு செய்யும் நோக்கிலேயே படைக்கப்பட்டவை ஆகும். அபிமானி படைப்பாக் கங்களாக சிறுகதைத் தொகுப்புகள் மூன்று வெளிவந்துள்ளன. அவை, நோக்காடு(1993), பனைமுனி(1998), ஊர்ச்சோறு(2003) என்பதாகும். இம்மூன்று தொகுப்புகளில் யதார்த்தமாகப் பதிவுச் செய்யப்பட்டுள்ள கருத்து நிலைப்பாட்டினை முன்வைத்துப் பின்வருமாறு பதிவு செய்யலாம்.

அபிமானியின் மூன்று தொகுப்புகளில் ஒட்டுமொத்தமாக 36 சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. இக்கதைகளை வாசிக்கின்ற போது, தமிழகத்தில் தலித்மக்கள் தென்பகுதிகளில் எத்தகைய கொடுமைகளுக்கு ஆளாகின்றனர் என்பதையும் அக் கொடுமை களுக்கு எதிராக மக்கள் போராடுகிற சூழலையும் புரிந்துகொள்ள முடிகின்றது. அபிமானி இவற்றை யதார்த்தமான முறையில் தனது புனைகதைகளில் பதிவு செய்துள்ளார்.

இவரைத் தமிழ் தலித் சிறுகதைப் படைப்பாளியாக அடையாளப் படுத்திய தொகுப்பு நோக்காடு(1993). இத்தொகுப்பில் நேர்ச்சை எனும் கதையில் நாட்டார் வழிபாடு குறித்து விவரித்துள்ளார். அடுத்ததாக ஒரு பொங்கலும் சில எச்சில் பருக்கைகளும் எனும் கதையில்,”ஒரு சின்னச் சாதிப் பயலுவக் கிட்டத் தோத்திட்டுப் போவுதா? எனு விசனம் எடுப்பவர்கள். இவர்களையெல்லாம் ஏன் விளையாட்டில் சேர்த்தார்கள் என்று கோபப்படத் தோன்றியது சுப்பையனுக்கு. தேள் என்று தெரிந்தும் கையை நீட்டி விட்ட சிறுபிள்ளைத்தனமாய் (1993-20)” என வரும் மேற்குறித்த பதிவு ஆதிக்க சாதியினர் விளையாட்டினைப் பொழுதுபோக்காகப் பார்க்காமல் தன்னுடைய சாதிய ஏற்றத்தாழ்வோடு பார்க்கிற மனநிலை கொண் டிருப்பதை பதிவுச் செய்துள்ளார்.

தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்கள் ஆதிக்க சாதியினரால் எத்தகைய கொடுமைகளுக்கு ஆளாகிறார்கள் என்பதைத் தண்டம் எனும் கதையில் செய்யாத குற்றத்திற்காகத் தண்டனை வழங்கப்படும் நிகழ்வு மிகவும் யதார்த்தமாகப் பதிவு செய்திருக்கிறார். அக்கதையில், “அடியாதிங்க நைய்னா. உங்கப் புள்ளய மாதிரி நாங்க. நீங்களே அடிச்சிக் கொன்னா எங்களுக்கு வேற ஆதரவு யாரு நைய்னா. உங்க கால்ல வுழுந்துக் கும்புடுதேம நைய்னா.(1993-65)“ என வரும் வரிகளின் மூலம் உறவு முறையாகப் பார்க்கப்பட வேண்டிய சக மனிதன் தன்னுடைய சாதி அடையாளத் தால் கொடுமைகளுக்கு ஆட்படுவதையும் அதற்குத் தண்டனை வழங்குவதையும் மிக நுட்பமாகப் பதிவு செய்திருக்கிறார். நோக்காடு எனும் கதை புனைகதைத் தொகுப்பின் இறுதியில் கொடுக்கப் பட்டுள்ளது. இக்கதையில் ”சேஞ் பொம்பளயப் பாரு... ஒரு சக்கிலிச்சிக்கு நம்ம வீட்டுக் கக்கூசு கேகிதாக்கும்” எள வெடுக்க (1993 - 95) எனும் வரிகள் மூலம் தாழ்த்தப்பட்ட சாதியைச் சார்ந்த வர்கள், உயர்சாதி மக்களின் கழிப்பிடத்தை பயன்படுத்தக்கூடாதா? இவர்கள் மலத்தைச் சுத்தம் செய்யும் வேலை மட்டும்தான் செய்ய வேண்டுமா? எனும் கேள்விகளை எழுப்புகிறார் அபிமானி.

நோக்காடு(1993) எனும் தொகுப்பில் எட்டு கதைகளிலும் தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்க்கையை மையமிட்டே கதைகள் எழுதப்பட்டுள்ளன. குறிப்பாக, இக்கதைகளில் கற்பனை கலந்து எழுதாமல் தென் மாவட்டங்களில் உள்ள வழக்காறு மொழிகளின் மூலம் யதார்த்தம் கலந்து பதிவு செய்திருக்கிறார். மேலும், ஒவ்வொரு கதையினை வாசிக்கிறபோது வெறுமனே கதையாக மட்டுமல்லாது கதைக்கு ஒரு நியாமான கருத்தினை முன்வைத்து தீர்வினையும் கொடுத்திருப்பது இத்தொகுப்பிலுள்ள சிறுகதைகளின் சிறப்பாகும்.

அபிமானியின் இரண்டாவது படைப்பு பனைமுனி(1998). இத்தொகுப்பில் பன்னிரெண்டு கதைகள் இடம்பெற்றுள்ளன. இவற்றின் கதைப் போக்கு தாழ்த்தப்பட்ட மக்களின் பண்பாட்டு அடையாளங்களை மீட்டெடுக்கிற நோக்கத்தில் பதிவு செய்யப் பட்டுள்ளது. அதாவது, உடைப்பு எனும் கதையில் சாதிய தலைவரின் சிலை உடைப்பு பற்றி இரண்டு சாதி வகுப்பினருக்கு ஏற்பட்ட மோதலை விவரிக்கிறார். “அதாவது, வம்ப மொதல்ல நாங்க இழுக்கல மச்சான். அவனுவதான் இழுத்தது. நம்ம தலைவரு செலையிலுள்ளக் கைய ராவோடு ராவா ஒடச்சிரக்கானுவ.. ரெண்டாம் சினிமாப் பாரத்திட்டு வந்த நம்ப ஆளுங்க சொன்னப்ப தான் எங்களுக்கு விசியம் தெரியும். விட்டு வைப்பமா நதாங்க அவுனுவளுக்கு அவ்வளவு திமிரா?(1998:22)”. முப்பது சற்று முறைப்பாகவே பேசியது. “நாங்களும் அந்த சாதிதான்ஞ் எங்க தண்ணீ மட்டும் தனியா இனிக்குதோ? அசிங்கமாயில்லியா இது? சொல்லுதாரு பாரும். (1998 : 29)” எனும் கதையில் ஆதிக்க சாதியினர் குடிநீர் அருந்துவதில்கூட சாதியப் பார்வை கொண்டிருப்பதை மிகவும் நுட்பமாக விவரிக்கிறார்.

வெப்பம் எனும் கதையில் தன்னுடைய சாதி மக்கள் காலில் செருப்பு அணிவதால் ஏற்படும் விளைவைக் குறித்து விவரித்து எழுதியிருக்கிறார் அபிமானி. ஆட்டம் எனும் கதையில் குறவர் இனத்தைச் சேர்ந்தவர்கள் ஆட்டம் ஆடிக்கொண்டிருந்த நிகழ்வில் நடந்த கலவரத்தையும் சாதிய ஏற்றத்தாழ்வையும் நுட்பமாகப் பதிவுச் செய்திருக்கிறார். கதையும் கற்பனையும் கலந்து எழுதிய வரிகள், ” திடீரென கடல் பொங்கியது போல கூட்டத்தில் பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டன. பெரும் புயலில் உத்தரவாதமின்றி சரிந்து விழும் மரம் செடிகளைப் போல கதிகலங்கிப் போனார்கள் சனங்கள். என்ன, எதனால் என்று தீர்மானிக்க முடியாத திணறல், ஆட்டத்தைப் பற்றி இப்போது யாருக்கும் அக்கறை இருப்பதாகத் தெரியவில்லை. பந்தலுக்குள் ஓடியவர்கள் பலவிதமாய் கூச்சிலிட்டார்கள்.”அடிலஞ் வெட்டுலஞ் எவ்வளவுத் திமிரிருந்தா உள்ள வந்து எல்லோராடவும் ஒட்டிக்கிட்டு இருப்பானுவ” அதைத் தொடர்ந்து” வேண்டாம் தொரஞ் போயிருதம் தொர” என்று பலிகடாவின் கெஞ்சல்கள். வலியின் ரோதனயுடன் வெளிப்பட்ட கெஞ்சல்கள்ஞ் கேவுதல்கள்.(1998:57)” இவற்றில் சாதியக் கொடுமையை விவரிக்க கற்பனை கலந்து எழுதியிருக்கிறார்.

மனுஷத்தன்மை ஜிந்தாபாத் எனும் கதையில் மொழி, மனித உணர்வு மதித்தல் போன்ற தன்மைகளைப் பேருந்துப் பயணத்தில் நடந்த கொடுமையை மிக யதார்த்தமான மொழியில் பதிவுச் செய்திருக் கிறார். பனைமுனி கதையில் ஆதிக்க சாதியைச் சார்ந்தவர்கள் தெய்வங்களின் மீது நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள். அதற்கு மாறாக, தாழ்த்தப்பட்ட மக்கள் தெய்வத்தின் மீதான நம்பிக்கையைத் தன்னுடைய நாட்டார் சாமிகளின் மேல் வைத்திருப்பதாகக் கதை அமைந்திருக்கிறது. கிராமப்புறங்களில் நிறுவனப்படுத்தப்பட்ட தெய்வ நம்பிக்கை மறந்து நாட்டார் தெய்வத்தின் மீது நம்பிக்கை கொண்டு வழிபடுவதைக் காட்டுவதாகக் கதை முடிகிறது.

பனைமுனி(1998) எனும் தொகுப்பில் உள்ள கதைகளை வாசிக்கிறபோது தென் மாவட்டப் பகுதிகளில் வாழ்கிற மக்களின் பண்பாடு சார்ந்த அடையாளங்களை நினைவுகொள்ளத் தோன்று கிறது. தென் பகுதிகளில் உள்ள வழக்காறு மொழிகள், பழமொழி, விடுகதை, கதாபாத்திரங்களின் பெயர்கள், ஊரின் பெயர்கள் அப்படியே பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்வியலோடு இரண்டற கலந்த பண்பாடு,கலை, தெய்வ நம்பிக்கை குறித்த கதைகள் மிகுந்த கவனத்திற்குரியன.

அபிமானியின் மூன்றாவது சிறுகதை தொகுப்பு ஊர்ச்சோறு (2003). இத்தொகுப்பில் 16 கதைகள் இடம்பெற்றுள்ளன.புற்று எனும் கதையில் தாழ்த்தப்பட்ட மக்கள் தங்களுடைய காலில் செருப்பு அணிந்துகொள்ள ஏற்பட்ட கொடுமைகளைக் கதையாகப் பதிவுச்செய்துள்ளார். இதற்கு முன்பு வெப்பம்(பனைமுனி) எனும் கதையில் பதிவு செய்திருந்தார். “எச்சரிக்கையாகச் செருப்புக்களைக் கழற்றிக் கைகளில் எடுத்து மறைத்துக் கொண்டுதான் பேசினார் கந்தசாமி. கடையைக் கடந்ததும் மீண்டும் தன் பாதங்களில் மாட்டிக்கொண்டு விரைவாக நடந்தார் கந்தசாமி. இன்னும் எத்தனைப்பேர் எதிர்ப்படுவார்களோ, இன்னும் எத்தனைத் தடவை செருப்புக்களைக் கழற்றவேண்டுமோ?(2003:5)” என்னும் கேள்வி எழுப்புகிறார். தாழ்த்தப்பட்ட வகுப்பினைச் சேர்ந்தவர்கள் உயர் சாதியினருக்குச் சமமானவர்கள் என்பதனை நிறுவுவதற்கு மட்டம் எனும் கதையை எழுதியிருக்கிறார். இவற்றில் தன்னுடைய கை வைத்தியம் மூலம் உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்கிற பாகுபாடு இன்றி மருத்துவம் செய்து வாழ்ந்தவளாகச் செல்லம் காட்டப்படுகிறாள்.

ஊர்ச்சோறு எனும் கதையில் “என்ன வேல பாக்கித நீ”! முட்டாத்தனமான வேலஞ் ஊர்ச்சோத்தத் திங்கத அளவுக்கு எம்புள்ள ஒண்ணும் விதியத்துப் போயிரல... இந்த மாதிரி இனி என்னிக்கும் பண்ணாத, தெரிஞ்சிதா?(2003:22)” மாசாணம் ஊரில் வேலை பார்த்துவிட்டு வீடுகளில் சோறு எடுத்து சாப்பிடும் குடும்பத்தை சார்ந்தவன். அவன் உயர்சாதி வகுப்பைச் சார்ந்த குழந்தைக்குச் சோறு ஊட்டியது தவறு என மூக்கம்மாள் திட்டுகிறாள்.

வேட்டி எனும் தலைப்பில் உள்ள கதையில் தன்னுடைய பள்ளி பருவத்தில் படிக்க முடியாமல் வேலை செய்து குடும்பத்தைப் பாதுகாக்கவேண்டிய பொறுப்பு கொண்ட பாத்திரமாகச் சேகர் படைக்கப்பட்டுள்ளான். இக்கதையில் தன்னுடைய பள்ளி பருவத்தையும் வறுமையும் இரண்டினையும் சேர்த்து விவரிக்கிறார்.

தேர் எனும் கதை திருவிழாக் காலங்களில் ஊருக்குள் தேர் இழுப்பதில் தாழ்த்தப்பட்ட சாதிக்கும் ஆதிக்க சாதிக்கும் இடையே நடைபெறும் மோதல்களை மையமாகக் கொண்டது. ”இல்லிங்க அய்யா..நாங்க மட்டும் தனியா நின்னுத் தேரிழுக்கறது எங்க எண்ணமில்லஞ் எல்லோருடனும் ஒண்ணா மண்ணா நின்னு இழுக்கறதுதான எங்க ஆசஞ் அதானச் சரி. கோயிலுக்குள்ளத் தேரு வந்து நின்னாலும் சரி, நிக்காட்டியும் சரி எங்களுக்கு அதப் பத்திக் கவல இல்லிங்க.(2003:49)” என்று கதையில் காலனி பகுதிக்கும் ஊருக்கும் இடையே நடைபெறும் மோதலை மையமாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது.

மீசைக்காரன் கதையில் “எலேஞ் காலம் போற போக்கப் பாருங்கலே. சின்னசாதிப் பய எல்லாம் நம்மளக் கெனக்கா எடுப்ப மீசய முறுக்கிகிட்டு அலயுரத” (2003:153) எனும் வரிகள் தாழ்த்தப் பட்ட சாதியைச் சேர்ந்தவர்கள் மீசை வைத்துக்கொள்ளக்கூடாது என நினைக்கும் ஆதிக்க சாதியினரின் மனநிலையைப் பதிவு செய்கின் றது. இதற்குப் பதிலாக, ”நீங்களெல்லாம் மீச வச்ச ஆம்பளைங்க தானுங்களே... நீங்கப் பெரிய சூரப் புலிகளாயிருந்தா அந்தப் புள்ளையக் காப்பாத்தியிருக்க வேண்டியதுதானே? எம்புள்ளயச் சாவடிச்சிட்டிங்களே... நீங்க நல்லாயிரப்பீங்களா? எம்பாவம் ஒங்களுக்கு புடிக்காதா?” (2003 :161) என்று மனோகரனின் அம்மாகாரி கேள்வி கேட்கிறாள். பதில் சொல்ல முடியாமல் நிற்கின்றனர்.

 ஊர்ச்சோறு(2003) எனும் கதைத் தொகுப்பினை வாசிக்கிறபோது தாழ்த்தப்பட்ட சாதி சேர்ந்தவர்களுக்குச் சமூகத்தில் ஏற்படுகிற கொடுமைகளின் பதிவாக இருக்கிறது. மேலும் வறுமை, தீண்டாமை, தான் வாழ்கிற மண்சார்ந்த வாழ்க்கை நிகழ்வுகள் என அனைத்து நிலைகளிலும் பதிவு செய்திருக்கிறார். இதுமட்டுல்லாது தாழ்த்தப்பட்டவர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள், ஆதிக்க சாதியினர் சார்ந்த பெயர்களே கதாபாத்திரங்களாக விளங்குகின்றது.

தலித் படைப்பாளியாக அடையாளப்படுத்திக்கொள்ளும் யாரும் தன் படைப்பாக்கங்களில் ஒருசில கருத்துகளைத் தவிர்த்து எழுது வார்கள். ஆனால் எழுத்தாளர் அபிமானி தன்னுடைய எழுத்துகளில் அத்தகைய சமரசங்களை மேற்கொள்ளாதவர். அவரது எழுத்துகள் தாழ்த்தப்பட்ட தலித் மக்களின் போராட்டங்களுக்கு ஆதரவு குரலாகவும் ஆதிக்க சாதியினருக்கு எதிர்க்குரலாகவும் விளங்குகிறது என்றால் அது மிகையல்ல. அபிமானி தான் கொண்டுள்ள கொள்கை, கோட்பாடு மட்டுமல்லாது களப்பணியிலும் தனித்தன்மைக் கொண் டவர் என்பதற்கு இவருடைய படைப்புகளே சாட்சியாக அமைகிறது.

சிறுகதைத் தொகுதிகள்

நோக்காடு (தமிழ் தலித் சிறுகதைகள்) , தாமரைச்செல்வி பதிப்பகம், சென்னை.டிசம்பர்1993

பனைமுனி(சிறுகதைகள்) , காலக்குறி பதிப்பகம், சென்னை. டிசம்பர் 1998.

ஊர்ச்சோறு (சிறுகதை தொகுப்பு) , காவ்யா பதிப்பகம், சென்னை. டிசம்பர் 2003.

(கட்டுரையாளர் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கியத்துறையின் முனைவர் பட்ட ஆய்வாளர்.“தமிழ் அற இலக்கியப் பதிப்பு வரலாறு” குறித்து ஆய்வு செய்து வருகிறார்.)

Pin It