படைப்பாளியின் வாழ்வியலோடு இணையும் எந்தவொரு படைப்பும் உயிர்ப்பைப் பெறுகின்றது. அந்த வகையில் எழுத்தாளர் பாமாவின் வாழ்வோடும் உணர்வோடும் பின்னிப்பிணைந்த படைப்பாக்கங்களின் வெளிப்பாடாகவே ‘கிசும்புக்காரன்’, ‘ஒரு தாத்தாவும் எருமையும்’ முதலிய சிறுகதைத் தொகுதிகள் திகழ் கின்றன. இவற்றில் இடம்பெற்றுள்ள கதைகளில் பாமாவின் வாழ்வியற் பதிவுகளான ‘கருக்கு’, ‘சங்கதி’ போன்ற நாவல்களின் நீட்சியை உணரமுடிகிறது. ஆதலால், இவற்றை அனுபவப் பதிவு களாகவும் சமூக வாழ்வியல் எதார்த்தங்களாகவும் காண முடிகிறது.

இத்தொகுப்புகளில் உள்ள கதைகளில் பொதுவாகச் சமூக ஒடுக்குமுறையின் அவலங்கள், அதற்கு எதிரான மனவெழுச்சிகள், அவை உண்டாக்கும் போராட்டச் சூழல்கள் என்னும் கருத்து நிலைகள் ஒருங்கிணைந்தே கூறப்பட்டுள்ளன. எனினும், அவற்றில் இடம்பெற்றுள்ள கருத்தாடல்களின் அளவைக் கொண்டு பின்வரு மாறு வகைமை செய்யலாம்.

ஆண்டாண்டு காலமாக ஆண்டான் அடிமைச் சமூக வாழ்வில் ஒடுக்கப்பட்டு பற்பல இன்னல்களுக்கு ஆளான மக்களைப் பற்றி இக்கதைகள் பரவலாகப் பேசுகின்றன. இவற்றில் சமூகக் கிளை களான சமயம், பொருளாதாரம், கல்வி போன்ற நடைமுறைகளில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான சுரண்டல்கள் எடுத்தியம்பப்பட் டுள்ளன. சான்றாக, மாட்டின் விலையைவிட சல்லிசாகிப் போன ஒடுக்கப்பட்ட மனித உயிரின் அவலத்தைக் கூறும் ‘பணக்காரி’, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்னும் கொள்கைகளுக்கு அப்பால் வைக்கப்பட்ட ஒடுக்கப்பட்டோரின் வாழ்நிலையைக் கூறும் ‘அண்ணாச்சி’, பணியாட்களாகச் சிறுவர் முதல் முதியவர் வரை ஒடுக்கப்படும் அவலம் கூறும் ‘விடுதலை’ உழைத்து உடைமைகளை உருவாக்கியவனுக்கு ஆட்டின் புழுக்கல் மட்டும் சொந்தமான சோகம் கூறும் ‘நிராசை’ துக்கம் விசாரிக்கச் சென்ற இடத்திலும் விடாமல் துரத்தும் தீண்டாமையைக் கூறும் ‘பரிவு’, கல்வி உயர்வும் பொருளாதார உயர்வும் கூட எட்டிப் பிடிக்க முடியாதச் சாதிய சமூகத்தின் வலிமையைக் கூறும் ‘சவம்’, சமயம் மாறினாலும் சாதியச் சாயல் மாறாத சமூகக் கட்டமைப்பைக் கூறும் ‘வாய்த்த வீரன்’ போன்ற கதைகளைக் குறிப்பிடலாம்.

ஆதிக்க வர்க்கமும் அதிகார வர்க்கமும் தம்மை ஒடுக்கும்போது அதற்கு எதிராகப் படைபலத்தையோ, பணபலத்தையோ பயன்படுத்த இயலாத சூழலில் ஒடுக்கப்படும் மக்கள் கொச்சையாகக் கருதப்படும் வார்த்தைகளையும் கிண்டல் பேச்சுகளையும் காறித் துப்புதலையும் ஆயுதமாகப் பயன்படுத்துவதற்கான தேவைகளைப் பாமா பல கதை களில் படம் பிடித்துக் காட்டியுள்ளார். சான்றாக, சமூக ஒடுக்கு முறைகளைப் பகடி செய்யும் பச்சையம்மாளைப் பற்றிய ‘மொளகாப் பொடி’, ஒடுக்குமுறைகளுக்கு எதிராக வசவு வார்த்தைகளை வாளாக ஏந்திய மாயாண்டிப் பெரியவரைப் பற்றிய ‘ஒரு தாத்தாவும் எருமையும்’, ஒடுக்குமுறைகளுக்கு எதிராகக் கொந்தளிக்கும் நொர நாட்டிய் பிடிச்சவன் பற்றிய ‘கிசும்புக்காரன்’, ஒடுக்குமுறையில் வெற்றி கண்ட ஆதிக்க மற்றும் அதிகார வர்க்க நிலைகளைக் காறித் துப்பிய பெண்மன நிலையைப் பற்றிய ‘எகத்தாளம்’ தன்னுடைய கிறுக்குத்தனத்தை அதிகார வர்க்கத்துக்கு எதிரான ஆயுதமாகப் பயன்படுத்திய சமூக அறிவாளி பற்றிய ‘மேய்ச்சல் நிலம்’ போன்ற கதைகளைக் குறிப்பிடலாம்.

ஒடுக்கப்பட்டவரிலும் ஒடுக்கப்பட்டவளாகப் பெண் வாழ்நிலை இச்சமூகத்தில் கட்டுண்டு கிடப்பதையும் அதனைத் தகர்த்தெறிவதற் கான உந்துதல்களையும் வெளிப்படுத்தும் கதைகள் இத்தொகுப்பு களில் இடம்பெற்றுள்ளன. சான்றாக, கல்வி உரிமை மறுக்கப்பட்டு பாலியல் வன்கொடுமைக்காளாகிக் கொலை செய்யப்பட்ட சிறுமியைப் பற்றிய ‘தாவணி’, அடிமைத்தனம் ஒன்றைத் தவிர வேறெதற்கும் பயன்தராத தன் தாலியை விற்கும் நாயகியைப் பற்றிய ‘பொன்னுத்தாயி’, பெண்ணடிமை அவலத்திற்கெதிராக அரிவாள் ஏந்தும் பெண் பற்றிய ‘ரத்த’, பெண் சிசுக் கொலையின் வேதனை பற்றிய ‘கதறல்’ போன்ற கதைகளைக் குறிப்பிடலாம்.

சாதிய ஒடுக்குதலுக்கும் சமூகத் தாழ்வுகளுக்கும் மாற்றாகச் சமநிலையும் சுயமரியாதையும் கொண்ட வாழ்க்கைச் சூழல்களை அடைவதற்கு இளைஞர்களின் பங்களிப்பை படைப்பாளர் பல கதைகளில் முதன்மைபடுத்தி உள்ளார். இவற்றை இளையோர்வழி சொரணையுள்ள வாழ்நிலைகளை அடைவதற்கான உந்துதலாகவும் கொள்ள இயலும். இதற்குச் சான்றாக, தந்தையின் அடிமை வாழ்வின் பலனை உணர்த்தும் மகன் பற்றிய ‘பொங்கல்’, கடந்தகால சாதிய ஒடுக்குமுறைகளைச் சாடும் எழுச்சியுடைய இளைஞர்கள் பற்றிய ‘அந்தக்காலம்’, இளைஞர்களின் உந்துதலால் அடிமை நிலை உணர்ந்த முதியவள் பற்றிய ‘குதர்க்கம்’ போன்ற கதைகளைக் குறிப்பிடலாம்.

ஒடுக்குமுறையாவது, மனவெழுச்சிக்குக் களமாகவும், போராட் டத்துக்கு வித்தாகவும் அமைகிறது. இவ்விணைப்பை வெளிக்காட் டும் வகையில் தொடக்க நிலை சாதி எதிர்ப்புப் போராட்டத்தைப் பற்றி கூறும் ‘ஏப்ளா... எழுத...’ சுரண்டலுக்கு எதிராகத் திரட்டப்பட வேண்டிய உழைக்கும் வர்க்கத்தினரது ஒற்றுமையின் தேவையைக் குறியீடாகக் கூறும் ‘வலியும் வழியும்’ போன்ற கதைகளும் இவற்றில் இடம் பெற்றுள்ளன.

அறக்கோட்பாடுகளுக்கும் சமூக வாழ்வின் எதார்த்த நிலைகளுக் கும் இடையேயான முரண்பாடுகளைப் படம் பிடித்துக் காட்டும் வெனயம், அதென்னா நாயம்? போன்ற கதைகளும் இத்தொகுதி களில் இடம்பெற்றுள்ளன. வழிவழியாகச் சாதியம் நிலைபெற பிஞ்சு மனதில் நஞ்சைக் கலப்பது போல பிள்ளைகளிடத்தே சாதிய உணர்வூட்டும் சமூக அவலங்களைக் குறிப்பிடும் ‘எளக்காரம்’, ‘தீர்ப்பு’ முதலான கதைகளும் இடம்பெற்றுள்ளன.

இவை தவிர, மனித வாழ்வை விட மிருக வாழ்வு மேம் பட்டதெனக் கூறும் ‘இச்சி மரத்து கொரங்கு’, செயற்கை வாழ்வின் கிளைக் கம்பிகளைத் தகர்க்கத் துடிக்கும் சிறுவனின் மனவெழுச்சி யைக் கூறம் ‘தகர்ப்பு’, தாய்மையின் சிறப்பைக் கூறும் ‘அம்மா’, களவின் திறன் பற்றிக் கூறும் ‘களவு’, வாழ்வைத் தத்துவப் போக்கில் அணுகும் ‘அந்த இடம்’ போன்ற கதைகளும் இத்தொகுதிகளில் இடம்பெற்றுள்ளன.

மேற்கண்ட பொருண்மைகளைத் தவிர படைப்பாளியின் திறனை உணர்த்தும் பல கூறுகள் கதைகளின் ஊடே பரவிக் கிடக்கின்றன. அவற்றை பேச்சுவழக்கில் அமைந்த நடைபோக்கு, இடத்திற்கேற்ற மக்கள் வழக்காறுகள், பொருளுக்கேற்ற நாட்டார் பாடல்கள், வாழ்வியலோடு இணைந்த வருணனைகள் என வரிசைபடுத்திக் கொண்டே போகலாம். மேலும், கதைகளின் உள்ளே மக்களின் மூடநம்பிக்கைகளைக் கூறுமிடத்து உடனே அவற்றை மறுக்கும் பாத்திரங்களை அமைத்தல், தன்னுணர்வுகளை வெளிக்காட்டும் வகையில் அடக்குமுறைகளுக்கு எதிராகக் குரல் கொடுக்கும் தலைமை மாந்தர்களை அமைத்தல் போன்றவற்றைப் படைப்பாளி யின் சிறப்பாகக் குறிப்பிட முடியும். கதையின் அனுபவத் தன்மையால் இவற்றில் கற்பனையைவிட இயல்புத் தன்மைகளே மிகுந்கு காணப்படுகின்றன.

(கட்டுரையாளர் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கியத்துறையின் முனைவர் பட்ட ஆய்வாளர். “கிறித்தவ சமயம் - தமிழ் அச்சுப் பண்பாடு ஆகியவற்றின் உறவு” குறித்து ஆய்வு செய்து வருகிறார்.)

Pin It