அனுபவங்கள் 7

காமிக்ஸ் என்று அறியப்படும் சித்திரக்கதை வடிவம் தமிழ் வாசகர்களுக்குப் புதிதல்ல. சுமார் ஐம்பது ஆண்டுகளாகவே சித்திரக்கதைகள் நிறைந்த நூல்கள் தமிழ்நாட்டில் பல்வேறு வெளியீட்டு நிறுவனங்களால் மாதந்தோறும் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகின்றன. அனைத்துக் கருத்துகளும் ரசனைகளும் காலத்திற்கேற்ப மாறி வருவதைப் போன்றே, அன்றைய காலச் சித்திரக்கதைகளுக்கும் தற்போது வெளியாகி வரும் சித்திரக்கதை நூல்களுக்கும் இடையில் உருவத்திலும் உள்ளடக்கத்திலும் மிகப்பெரும் மாறுதல் இருக்கிறது. சிறுவயதில் நூல்களைப் படிக்கும் ஆர்வம் ஏற்படுவதற்கு இந்த வகைச் சித்திரக்கதைகள் ஒருவிதத்தில் காரணமாக இருந்தன என்று சொல்ல முடியும்.

தற்போதைய சித்திரக்கதைகளும் குழந்தை களை நூல்களை நோக்கி ஈர்ப்பதற்கு உதவக்கூடும். தனி மனிதர்களால் ஒருபோதும் இயலாத சாகசங்களை நிகழ்த்தும் சித்திரக்கதை நாயகர்கள், எதார்த்தத்தில் ஒருபோதும் நிலவாத கதைப்பின்னணி, அன்றாட நிகழ்வுகளின் தளத்திற்கு மேலே எப்போதும் மிதந்து செல்லும் கற்பனைகள் என, குழந்தைகளின் மன உலகத்திற்குள் நுழைவதற்கு இவ்வகைச் சித்திரக்கதைகள் பல உத்திகளைத் தம்வசம் கொண்டிருக்கின் றன என்ற போதிலும், குழந்தைகள் அறியாத உலகத்தைக் காட்சி ரூபமாக முன்வைப்பதற்கான யத்தனமாக கதைக்களத் தையும் கதை மாந்தர்களையும் வரைபடங்களின் மூலமாகக் கண் முன்னால் கொண்டுவந்து நிறுத்துகின்றன என்பதுதான் இவற்றின் தனிச்சிறப்பு.

பள்ளிப்பருவத்தில் சித்திரக்கதை நாவல்களைப் படிப்பதும், அவற்றைப் பற்றிய கற்பனைகளிலும் பேச்சுகளிலும் ஈடுபடு வதும் எல்லாருக்கும் போலவே எனக்கும் உரிய ஒன்றாகத்தான் இருந்தது. பெரும்பாலும் அமெரிக்கச் சரக்குகள்தான் இந்த வகைச் சித்திரக்கதை நாவல்களில் இடம் பெற்றிருந்தன என்பது எங்களுக்குத் தெரிந்திருந்தாலும் அதன் ஆபத்துகளை அறியாத பருவம் அது. அந்த நாட்கள் கடந்து சென்றுவிட்டன. மீண்டும் காமிக்ஸ் எனப்படுவதான சித்திரக்கதைகளை அதே ஆர்வத்துடன் படிக்கும் சந்தர்ப்பம் ஒருபோதும் வாய்க்க வில்லை.

இந்நிலையில், இளம் பருவத்தில் நாங்கள் படித்த காமிக்ஸ் நாவல்களை உருவ ரீதியாக நினைவுபடுத்தக்கூடிய, ஆனால் அதிலிருந்து முற்றிலும் வேறுபடக்கூடிய வரைபட இலக்கிய நூல்கள் சுமார் பத்தாண்டுகளுக்கு முன்பு முதன்முதலில் எங்களுக்கு அறிமுகமாகத் தொடங்கின. இரண்டாம் உலகப் போர்க்காலத்தில் நாஜிப்படையினராலும் பாசிஸ்டுகளாலும் படுகொலை செய்யப்பட்ட எண்ணற்ற அப்பாவி மக்களைப் பற்றிய ஹோலோகாஸ்ட் இலக்கியம் எனப்படுகின்ற நூல்களை நாங்கள் தீவிரமாகப் படித்துக் கொண்டிருந்த தருணம் அது.

அப்போது, அதே பொருள் குறித்த சில வரைபட நாவல்கள் வெளிவந்திருப்பதாகச் சொன்ன எங்கள் நண்பர் ஒருவர், அவ்வகை நாவல்கள் சிலவற்றை வாசிப்பதற்காக எங்களுக்கு அனுப்பி வைத்தார். அவற்றில் தி மௌஸ் என்னும் வரைபட நாவல் மிகவும் முக்கியமானது. அடுத்தடுத்துப் பல தீவிர அரசியல் நூல்களை மொழிபெயர்த்துக் கொண்டிருந்த அந்த நாட்களில் இந்த நூல் எங்கள்மீது ஏற்படுத்திய தாக்கம் அளவிடமுடியாதது. யூத மதத்தினரின் மீதான நாஜிகளின் இனப்படுகொலையை நேரடியாகவும் நுட்பமாகவும் வரைபடங்களின் மூலமாக முன்வைத்த அந்த நூல், நாங்கள் மொழிபெயர்க்க வேண்டிய நூல்களின் பட்டியலில் இடம் பெற்றது. ஆனால், பல்வேறு வேலைகளுக்கு இடையே அந்த நூலைத் தமிழில் தரவேண்டும் என்ற எங்களது விருப்பம் இன்றுவரை நிறைவேறாமலே போய்விட்டது.

அப்போது தொடங்கி, அவ்வப்போது சில சிறந்த வரைபட நாவல்களை நாங்கள் வாசிப்பது தொடர்ந்து கொண்டிருக் கிறது. இப்படியான ஒரு தருணத்தில்தான் மர்ஜானே சத்ரபி என்னும் ஈரானிய வரைபட நாவலாசிரியர் ஒருவர் எழுதிய “பெர்சிபோலிஸ்: தி ஸ்டோரி ஆப் மை சைல்ட்ஹ§ட்” என்னும் வரைபட நாவல் நண்பர் எம் மூலமாக 2005ஆம் ஆண்டின் தொடக்கத்தில் எங்களுக்குக் கிடைத்தது. அந்த நாவலின் வரைபடங்கள் முழுவதையும் சத்ரபியே வரைந்திருந்தார். பிரெஞ்சு மொழியில் எழுதப்பட்டு ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டிருந்த அந்த நாவல், அதன் உருவத்திலும் உள்ளடக்கத்திலும் அதுவரையிலும் நாங்கள் படித்துவந்த நாவல்கள் அனைத்திலிருந்தும் மிகவும் வித்தியாசமானதாக இருந்தது. கொந்தளிப்புகள் நிறைந்த ஈரான் நாட்டு அரசியல் சூழல்களின் ஊடாக அறுபதுகளின் இறுதியில் பிறந்த ஒரு பெண்ணின் இளம்பருவத்து வாழ்க்கையையும், அந்தப் பெண் நேசித்த மனிதர்களையும், அந்தப் பெண்ணின் குழந்தைப் பருவத்துக் கனவுகளையும் மிகவும் அற்புதமாக, கண்ணெதிரில் கொண்டுவந்து நிறுத்தியது அந்த நாவல்.

மிகைப்படுத்தப்பட்ட கற்பனைகள் சிறிதும் இன்றி, நூலாசிரி யரின் இளம்பருவத்து வாழ்க்கையே வரைபட நாவலாக உருப் பெற்றிருந்தது. முழுக்க முழுக்க ஒரு சிறுமியின் பார்வைக் கோணத்திலிருந்தே நாவலின் கதை சொல்லப்பட்டி ருந்தது. நாவலின் சமகாலத்தன்மை எங்களுக்கு அந்நாவலின் மீது ஓர் அசாதாரணமான ஈர்ப்பை ஏற்படுத்தியது. சிறு வயதினரும் படித்து அனுபவிக்கத்தக்க மொழிநடையில் எழுதப்பட்டிருந் தாலும், இலக்கியத் தன்மையில் தனது தீவிரத்தைச் சிறிதும் விட்டுக்கொடுக்காத ஒரு படைப்பு அது. இதுபோன்ற காரணங் களால், இந்நாவலை உடனடியாகத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட வேண்டும் என்ற ஆர்வம் எனக்கு ஏற்பட்டது.

pic_370_copyஏற்கனவே பல நூல்களை மொழிபெயர்த்த அனு பவம் இருந்தபோதிலும் ஒரு வரைபட நாவலை மொழிபெயர்க்கும் அனுபவம் முற்றிலும் வேறா னது. பொதுவாகவே ஒவ்வொரு மொழி பெயர்ப்புப் பிரதியும் அதற்கேயுரிய சவால்களைக் கொண்டி ருக்கிறது என்பதால், மொழிபெயர்ப்பைப் பொறுத்த வரையில் முன் அனுபவம் இருப்பதாக நம்பி அதில் எளிதாக இறங்கிவிட முடியாது என்பது என் எண்ணம். புதுப்புதுப் பிரதிகள் முன்வைக்கும் சவால்களைப் புதுப்புது உத்திகளோடு எதிர் கொள்வதுதான் சரியானது என்றும், கடந்த கால மொழி பெயர்ப்பு அனுபவங்கள் இதற்கு ஓரளவிற்கே உதவ முடியும் என்றும் நான் நினைக்கிறேன்.

வரைபட நாவலை மொழிபெயர்க்கும் அனுபவம் எனது இந்தக் கருத்தை மேலும் உறுதிப்படுத்தியது. சாதாரணமாக ஒரு பிரதியை மொழிபெயர்க்கும்போது, வருமொழியின் நெளிவு சுழிவுகளுக்கேற்ப நாம் சற்றே மூலப்பிரதியின் வாசகத்தை வளைக்க வேண்டிய நிர்ப்பந்தம் எழக்கூடும். எவ்வளவுதான் துல்லியமான மொழிபெயர்ப்பாக இருந்தாலும் அதற்கும் இந்த நிலைமைதான். ஆகவே, மூலமொழிப் பிரதியில் உள்ள வாசகங்கள் வருமொழியில் சற்றே நீண்டுசெல்லவோ, குறையவோ கூட வாய்ப்பு உண்டு. எனவே, ஒரு மொழி பெயர்ப்பாளர் - அவர் எத்தகைய பிரதியை மொழிபெயர்ப்ப வராக இருந்தாலும் - பிரதியின் நீளம் குறித்த எச்சரிக்கை யுடனே செயல்பட வேண்டியிருக்கும். வரைபட நாவல்களைப் பொறுத்தவரையிலோ, நாவலின் கதை சொல்லியினுடைய வாசகங்களாக வரும் பகுதியாக இருந்தாலும் சரி, கதை மாந்தர்களின் கூற்றுகளாக வரும் பகுதியாக இருந்தாலும் சரி, இந்த எச்சரிக்கையுணர்வு மிகவும் அவசியமாகத் தேவைப்படுகிறது.

கதை சொல்லியின் வாசகத்திற்கான கட்டத்திற்குள் இடம்பெறும் வாசகங்கள் அதே அளவு நீளமுடையவையா கவே மொழிபெயர்ப்பிலும் இருக்க வேண்டும். விவரங்களும் விடுபட்டுவிடக்கூடாது. கதைமாந்தர்களின் கூற்றுகளுக்கான வளையங்களுக் குள் உள்ள மூலமொழி வாசகங்களும் அதே அளவு நீளத்துடனே மொழிபெயர்ப்பிலும் அமையவேண்டும்; இங்கும் விவரங்கள் எவையும் விடுபடக்கூடாது; மேலும் உரையாடலின் உயிர்த்துடிப்பு சற்றும் குறைந்துவிடக் கூடாது; அதே நேரத்தில் அந்த உரையாடல் வாசகங்கள் தொடர்ச்சி யான உரையாடல் போக்கின் இடையில் பொருத்தமாகவும் இயல்பாகவும் அமையவேண்டும். வழக்கமான எழுத்துப் பிரதியை மொழிபெயர்ப்பதிலிருந்து இது முற்றிலும் வேறுபடு கிறது. மொழிபெயர்ப்பாளர் எழுத்துப் பிரதியினூடாக மட்டு மின்றி, வரைபடங்களின் ஊடாகவும், இவ்விரண்டுக்கும் இடையிலான இடைவெளிகளினூடாகவும் செயல்பட வேண்டும் என்பதே இதன் பொருள். மர்ஜானே சத்ரபியின் நாவலை மொழிபெயர்க்கத் தொடங்கும்போதே இவற்றைப் பற்றிய ஒரு புரிதல் எனக்கு ஏற்படத் தொடங்கியது. அந்தப் புரிதல் மொழிபெயர்ப்பு நிறைவடையும்போது முழுமை யடைந்திருந்தது.

வாசகங்களின் சுருக்கத்தன்மையைத் தமிழிலும் கொண்டு வர வேண்டும் என்ற தீர்மானத்துடன், மூலநூலின் வடிவத் திற்கு இணையான வடிவத்தையுடைய குறிப்பேடுகளைத் தயாரித்து, மூலநூலின் கட்டங்களுக்கு நேர்விகிதத்தில் பொருந்தக்கூடிய கட்டங்களை வரைந்து, அவற்றுக்குள் மூலநூலின் வளையங்களுக்கு நேர்விகிதத்தில் பொருந்தக்கூடிய வளையங்களை வரைந்தேன். எனது மொழிபெயர்ப்பு வாசகங் களின் எல்லையை இந்தக் கட்டங்களும் வளையங்களுமே தீர்மானித்தன. சற்றும் பிசகாத, சிறிதும் பிசிறுகள் அற்ற துல்லியமான மொழிபெயர்ப்பைச் செய்வது அடுத்த சவாலாக இருந்தது. பிரதியுடனான ஈடுபாடும், புதிய சவாலில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பும் ஓர் அசாத்தியமான ஒழுங்கை எனக்குக் கற்றுத்தந்தன. இவ்வாறாக, சத்ரபியின் “ஈரான்: ஒரு குழந்தைப்பருவத்தின் கதை”-ஐயும் அதன் அடுத்த பகுதியான “ஈரான்: திரும்புதல்”-ஐயும் மொழி பெயர்த்து முடித்தேன்.

நாவலின் மூலப்பிரதி (ஆங்கில நூற்பிரதி) கணினி நிபுணரும் எங்களது நண்பருமான ரவிச்சந்திரன், (பாண்டிச்சேரி பிரெஞ்சு இன்ஸ்டிடியூட்) அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. முதலில் அவர் மூலநூல் பிரதியிலிருந்த வாசகங்களை வரை படங்களிலிருந்து பிரித்தெடுத்தார். இப்போது வாசகங்கள் இல்லாத வரைபடப் பிரதி மட்டும் தயாராகி விட்டது. அந்த வரைபடப் பிரதியில் இடம்பெறவேண்டிய வாசகங்கள் அனைத்துக்கும் எண்கள் கொடுக்கப்பட்டு, எனது மொழி பெயர்ப்பில் உருவான வாசகங்கள் அனைத்தும் அதே எண்களின் வரிசையில் கணினியில் தட்டச்சு செய்யப்பட்டன. அந்த வாசகங்களை, காலியாக உள்ள கட்டங்களிலும் வளையங்க ளிலும் ஏற்றுவது அடுத்த பணியாக இருந்தது. அதையும் முழுமையாக நண்பர் ரவிச்சந்திரன் அவர்களே செய்து முடித்தார். இவ்வாறாக, மூல நூலாசிரியரின் வரைபடங் களைத் தனியாகப் பிரித்தெடுத்து, தமிழ்ப் பதிப்பு ஒன்றைத் தயாரிக்கும் பணி பல மாதங்களுக்குப் பின் முழுமையடைந் தது.

இடையில், தமிழ் வாசகங்களை ஓர் ஓவியரிடம் கொடுத்து, வளையங்களிலும் கட்டங்களிலும் அவரது கைப்பட அவற்றைக் கையெழுத்துப் பாணியில் எழுதிப் பார்க்கவும் முயற்சியை மேற்கொண்டோம். ஆனால், அந்த முயற்சி வெற்றி பெறவில்லை. ஆங்கிலப் பிரதியில் வரைபடங்களின் மத்தியில் எவ்வகை எழுத்துகள் எவ்வகைப் பாணியில் வெளிப்படுத்தப் பட்டிருந்தனவோ, அவ்வகை எழுத்துகளைத் தமிழிலும் கண்ட றிந்து, அதே பாணியில் வரைபடங்களோடு இயல்பாக இணைக்கின்ற மிகச்சிறந்த, மிகக் கடினமான பணியை ரவிச்சந்திரன் அவர்கள் செய்துமுடித்தார். இல்லையெனில் ஆங்கிலப் பிரதிக்கு நிகரான செய்நேர்த்தியோடு இந்நூல் தமிழில் வெளிவந்திருக்கவே முடியாது.

குறைகாணவே முடியாத சிறந்த பதிப்பு என்று இதற்கு அர்த்தமில்லை. மூலநூலின் வடிவ அளவுக்கு இணையான வடிவ அளவில் வெளியிடப்பட்டிருந்தால், படங்களும் வாசகங்களும் இன்னும் தெளிவாக இருந்திருக்கும் என்பது உண்மையே. சற்றே கூடுதலான வாசகங்களைக் கொண்ட நாவலின் இரண்டாவது பகுதியில் இதை நன்றாகவே உணர முடிந்தபோது சிறிது வருத்தமாகத்தான் இருந்தது.  மேலும், இரண்டாவது பகுதியின் அட்டையில் “ஈரான்: திரும்புதல்” என்னும் தலைப்பு கவனத்தில் கொள்ளப்படாமல் “ஈரான்: திரும்பும் காலம்” என்னும் (நாங்கள் சற்றும் யோசித்திராத) தலைப்பு இடம் பெற்று விட்டது.  எந்த நூல் தயாரிப்பாக இருந்தாலும், அதன் அட்டைத் தயாரிப்பு உள்ளிட்ட இறுதிக் கட்ட வேலைகள் நிறைவடையும் வரையிலும் அதனைக் கண்காணிப்பதற்கான வாய்ப்பு மொழிபெயர்ப் பாளர்களுக்கு அளிக்கப்படுவது எவ்வளவு முக்கியமானது என்பதை மிகுந்த வலியோடு உணரவைத்த விஷயம் இது.

வெளியாகி ஆறு ஆண்டுகளாகியும் தமிழ் வாசக உலகத்தில் உரிய கவனிப்பைப் பெறாமல் போன இந்த நூல்களுக்குப் புதிய புத்தகம் பேசுது பத்திரிகையில் ஓராண்டுக்கு முன்பு நாவலா சிரியர் சி.ஆர். ரவீந்திரன் ஒரு விரிவான மதிப்புரையை எழுதி யிருந்தது மட்டும்தான் தமிழ்ச் சூழலில் இந்நூல்கள் மீதான ஒரே எதிர்வினையாகும்.

சிறந்த இலக்கியவாதியாக மதிக்கப்படுபவரும், இந்த நூல் வெளியான ஓரிரு வருடத்திற்குள் அமெரிக்காவிற்கு எழுத்தா ளர் மாநாட்டிற்காகச் சென்று வந்தவருமான ஒரு படைப்பாளி, இந்த நூலின் இரு பகுதிகளும் தமிழில் ஏற்கனவே வெளிவந் திருப்பதை அறியாமல், மூலநூலையும் வாசிக்காமல், அந்த எழுத்தாளர் மாநாட்டில் வெளியிடப்பட்ட இந்த நூலின் ஆங்கிலப்பிரதிக்கான அறிமுகத்தை வழங்கும் துண்டுப் பிரசு ரத்தை மட்டும் படித்துவிட்டு, தமிழ்ச் சிறுபத்திரிகை உலகில் இந்நூலை அறிமுகப்படுத்தியது விசித்திரம்தான்.

Pin It