அரசு அதிகாரியாக இருந்த காலின் மெக்கன்சி தென்னிந்தியாவின் வரலாற்றை அறிந்துகொள்வதில் மிகுந்த ஆர்வம் காட்டினார் என்பதை அவருடைய சுவடிகள் வழி அறியமுடிகிறது. வரலாற்று விடயங்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் தந்தபோதும் மெக்கன்சியின் உதவியாளர்கள் பல்வேறு விடயங்கள் குறித்த தரவுகளையும் சேகரித்தனர். இதனால் மெக்கன்சி சுவடிகளில் வரலாற்றுச் சுவடிகளோடு பிற வகையான சுவடிகளும் இடம்பெறத் தொடங் கியது. தென்னிந்தியாவின் வரலாறு தொடர்பான விடயங்களை அறிந்துகொள்வதுதான் மெக்கன்சியின் முதன்மையான நோக்கமாக அமைந்திருந்தது. அவருடைய இந்நோக்கம் மெக்கன்சியின் வரலாற்றுச் சுவடிகளை மட்டும் தொகுத்து வெளியிட்டிருக்கும் இந்நூல் வழி முழுமையடைகிறது.

மெக்கன்சி வரலாற்றுச் சுவடிகளில் சமகால வரலாறும் அதற்கு முந்தைய காலப் புராதன வரலாறும் ஒருங்கே இடம்பெற்றுள்ளன. 16ஆம் நூற்றாண்டு முதல் 19ஆம் நூற்றாண்டு காலப்பகுதியில் நிலவிய அரசியல், சமூகம், சமயம் ஆகியவற்றை இச்சுவடிகளின் வாயிலாகத் தெளிவாக அறிந்துகொள்ள முடியும். மெக்கன்சி சுவடிகளில் வரலாற்றுச் சுவடிகளை மட்டும் எடுத்துக்கொண்டு அதனை வகைதொகை செய்து டி.வி.மகாலிங்கம் இரண்டு தொகுதிகளாகப் பதிப்பித்துள்ளார். சென்னைப் பல்கலைக்கழகம் வெளியீடாக 1972ஆம் ஆண்டு முதற்பதிப்பு வெளிவந்தது. இந்நூலின் முதற்தொகுதி 2011ஆம் மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளது. மெக்கன்சியின் வரலாற்றுச் சுவடிகளைத் தொகுத்தளித்துள்ள இந்நூல் தென்னிந்திய வரலாற்றினை அறியும் ஆவணமாக விளங்குகிறது. மெக்கன்சி சுவடிகள் எத்தகைய நிலைகளில் தென்னிந்திய வரலாற்றினைக் கட்டமைத்துள்ளது என்பதை உணரும் வகையில் டி.வி. மகாலிங்கம் எளிய முறையில் இந்நூலில் வகைதொகை செய்துள்ளார். மேலும் ஒவ்வொரு சுவடியை விளக்குமிடத்தும் அந்தச் சுவடி வில்சன், டெய்லர் இருவருடைய அட்டவணைகளில் எங்கு இடம்பெற்றுள்ளது என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.

மெக்கன்சி சுவடிகள் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், மராத்தி முதலிய தென்னிந்திய மொழிகளில் எழுதப்பட்டுள்ளன. தமிழ், மலையாளம் ஆகிய இரு மொழிகளில் வழங்கிய சுவடிகளை மட்டும் முதல் தொகுதியில் டி.வி. மகாலிங்கம் தொகுத்துள்ளார். தெலுங்கு, கன்னட மொழிகளில் வழங்கும் சுவடிகளை இரண்டாம் தொகுப்பில் பேசியுள்ளார். முதல் தொகுப்பாக வெளிவந்த இந்நூல் தமிழ், மலையாளம் சார்ந்த 86 சுவடிகள் குறித்து ஆராய்ந்துள்ளது. சுவடியில் பயன்படுத்தப்பட்டுள்ள தென்னிந்திய மொழிகள் என்பவை அந்த மக்களுக்குரிய செய்திகளை மட்டும் எடுத்துரைப் பதாக அமையவில்லை. மெக்கன்சியின் உதவியாளர்கள் தாங்கள் அறிந்த மொழிகளில் குறிப்புகளை எடுத்துள்ளனரே தவிர மக்களுக் குரிய மொழிகளில் அவற்றைப் பதிவுசெய்யவில்லை என்பதை அறியமுடிகிறது. எடுத்துக்காட்டாக, தெலுங்கு மொழியில் எழுதப்பட்டுள்ள சுவடிகளில் தமிழ்நாட்டு வரலாற்றுக் கூறுகள் இடம்பெறுவதைக் குறிப்பிடலாம்.

மெக்கன்சியின் வரலாற்றுச் சுவடிகள் குறித்து மகாலிங்கம் முன்னுரையில் குறிப்பிட்டுள்ள விடயங்கள் மெக்கன்சி சுவடிகள் தொடர்ந்து ஆராய்வதற்கான களத்தைத் தனக்குள் கொண்டு விளங்குவதைச் சுட்டிக்காட்டுகிறது. இத்தகைய தொகுப்பு முயற்சிகள் ஆவணப்படுத்துதலாக அமைந்த போதிலும் தொடர்ச்சி யான ஆய்வுகளுக்குரிய தரவுகளாகவும் விளங்குகிறது. மெக்கன்சி யின் சுவடிகளைத் தொடர் ஆய்வுகளுக்கு உட்படுத்துவதன் மூலம் தென்னிந்தியா பற்றிய இலக்கியம், வரலாறு, பண்பாடு குறித்த முழுமையான புரிதலைப் பெற முடியும்.

மெக்கன்சியின் சுவடிகளைப் பொதுவாக, சரித்திரம், வமிசாவளி, தலபுராணம், கைபீயது (வரலாற்றுச் செய்திகள்), தலச்செய்திகள் என்று பொருண்மை அடிப்படையில் பாகுபடுத்தலாம். இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள மெக்கன்சியின் வரலாற்றுச் சுவடிகள் பொதுவாக அரசியல், இலக்கியம், வரலாறு, சமயம், சமணம் தொடர்பான செய்திகள், கோவில்கள், வாழ்வியல் முறை, சாதியமைப்புகள், சேர, சோழ, பாண்டியர் வரலாறு, நாயக்கர் வரலாறு, பாளையக்காரர்கள், பழங்குடி மக்கள் முதலிய செய்திகளை எடுத்துரைக்கிறது.

மெக்கன்சியின் வரலாற்றுச் சுவடிகள் (தமிழ், மலையாளம்) இவற்றில் காணப்படும் விடயங்களைப் பின்வரும் பிரிவுகளின் கீழ் 86 சுவடிகளையும் டி.வி.மகாலிங்கம் தொகுத்துள்ளார். பிரிவுகளும் எண்ணிக்கையும் பின்வருமாறு:

·           வட்டார நிகழ்வுகள் (தமிழ்)           -     32

·           வட்டார வரலாறு மற்றும் மக்கள் வரலாறு -     26

·           புராண, இதிகாச தலவரலாறு          -     10

·           சமண இலக்கியம்               -     8

·           வட்டார நிகழ்வுகள் (மலபார்)         -     12

{Local Tracks (Tamil) 32, Local History and Biography 26, Puranic and Legendary History (Tamil) 10, Jain Literature (Tamil) 8, Local Tracks (Malabar) 12} 

இந்த வகைப்பாட்டின் மூலம் தமிழ், மலையாளம் சார்ந்த சுவடிகளில் அதிகமாகத் தமிழ் சுவடிகள் இருப்பதை அவதானிக்க முடிகிறது. கிடைக்கின்ற மெக்கன்சி சுவடிகளில் தெலுங்கு மொழியில் எழுதப்பட்டுள்ள சுவடிகளே அதிகமாகக் காணப்படு கின்றன. இத்தொகுப்பின் முன்னுரையில் மெக்கன்சி வரலாற்றுச் சுவடிகளில் காணப்படும் மிக முக்கியமான கூறுகளை மகாலிங்கம் விளக்கியுள்ளார். மேலும் இத்தொகுப்பில் இடம்பெறாத இரண்டாம் தொகுதியில் இடம்பெற்றுள்ள தெலுங்கு, கன்னடம் மொழிகளில் எழுதப்பட்ட சுவடிகளைக் குறித்தும் விவரித்துள்ளார்.

· · ·

மெக்கன்சியின் வரலாற்றுச் சுவடிகளை ஆய்வுநிலையில் ஆராயவும் மறுவாசிப்புக்குட்படுத்தவும் என்று அடுத்தக் கட்டத்திற்குக் கொண்டு செல்ல இத்தொகுப்பு பயன்படும். இத்தொகுப்பில் ஒவ்வொரு சுவடியைக் குறித்தும் சுருக்கத்தினைத் தருவதோடு சுவடிகளில் காணப்படும் விடயங்களை உட்தலைப்புகளாகப் பிரித்துக் கொண்டு அளித்துள்ள முறைமை அச்சுவடி குறித்த எளிதான புரிதலை ஏற்படுத்துகிறது. இத் தொகுப்பில் நூல்கள் பற்றிய குறிப்புகளில் மிக அதிக மாகப் பதிப்பிக்கப்பட்ட நூல்களுக்கு விவரணங்கள் தரவில்லை. எடுத்துக்காட்டாக, கலிங்கத்துப்பரணி, மூவருலா, தொண்டை மண்டல சதகம் முதலிய வற்றைக் குறிப்பிடலாம். சில நூல்களுக்கு மேலான விளக்கங்கள் தரப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக, ‘தமிழ் பெருமாள் சரித்திரா’ சுவடியை விளக்குமிடத்தில் இக்கதை பல்வேறு நிலைகளில் வழங்குவதாகவும் நூலாகப் பதிப்பிக்கும் போது இந்நூலின் பெயர் ‘தமிழ் அறியும் பெருமாள் கதை’ என்று மாறியதையும் இந்நூல் உரைநடையில் அமைந்துள்ள விவரத்தையும் இறுதி யில் 50 வெண்பாக்களோடு நூல் முடியும் இடத்தில் அந்த வெண்பாக்களுக்கான விளக்கங்கள் தரப்பட் டுள்ளன என்று குறிப்பிடுகிறது.

மெக்கன்சி சுவடிகளில் பழங்குடி மக்களின் சடங்குகள், நம்பிக்கைகள், வாழ்வியல் முறை போன் றவை விளக்கப்பட்டுள்ளன. இவற்றை இன்றையச் சூழலோடு பொருத்திப் பார்த்துப் பழங்குடி மக்களின் வாழ்வியல் முறை அமைப்புகளில் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளனவா என்பதையெல்லாம் ஆராய இந்தத் தரவுகள் ஆதாரமாக விளங்குகின்றன. எடுத்துக் காட்டாக, குறும்பர், வில்லியர், இருளர், ஏனாத்தியர், குறவர், இலம்பாடி, பட்டணவர், செம்படவர், குன்னுவார் போன்ற பழங்குடி மக்களின் வாழிடம், வரலாறு, வாழ்வியல்முறை, சடங்குகள், நம்பிக்கைகள், நீதிமுறை, பண்பாட்டுச் செயல்கள் ஆகியவை தொகுத்தளிக்கப்பட்டுள்ளன. சில சுவடிகளில் பழங்குடி மக்களான குன்னுவர் இனத்தைச் சேர்ந்த கொங்கு வேளாளரின் சடங்குகள், பழக்க வழக்கங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. மலையர், வேடர், கைகோளர், கோமட்டிகள், ரௌத்திர்கள் முதலிய பழங்குடி மக்கள் குறித்த விவரணங்களும் ஆற்காடு பகுதியில் வாழும் பழங்குடி மக்களின் விகிதமும் குறிப்பிடப்பட்டுள்ளன.

“மறவர் சாதி கைபீது” சுவடி மறவர் இனத்தின் உட்பிரிவுகளும் மணமுறைகளும் விதவை மறுமணம் மறவருடைய திருமண சடங்குகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கிறது. கட்டுத்தாலி, சிக்குக்கழித்த கல்யாணம் போன்ற சடங்குகள் மறவர் இனத்தில் நடைபெறும் முறையை விவரிக்கிறது. தமிழ்ச் சமூகத்தில் ஒவ்வொரு சாதிகளுக்குமான மணமுறை குறித்த விளக்கங்களும் தாலி குறித்தான கருத்தாடல்களும் மெக்கன்சி சுவடிகளில் வெளிப்பட்டுள்ளன.

மக்களின் குடிகளையும் இனங்களையும் ஆராய்வதற்குரிய தரவுகளாக இச்சுவடிகள் அமைந்துள்ளன. குன்னுவர் என்ற இனத்தைச் சார்ந்த மக்களின் வரலாற்றை விளக்கிச் செல்வதோடு அவர்களுக்கு அப்பெயர் வரக் காரணம் என்ன என்பதையும் சுவடிகள் குறிப்பிட்டுள்ளன.

குறும்பர்கள் தொண்டை மண்டல பூர்வீக குடிகளாக இருந்தனர் என்ற குறிப்பினை மெக்கன்சியின் குறும்பர்களைப் பற்றிய சுவடிகளான சன்னியாசி குறும்பர் சரித்திரம், படுவூர் பாண்டுக்குழி வரலாறு போன்றவற்றில் இடம்பெற்றுள்ள குறிப்புகளின் வழி அறியமுடிகிறது. இந்நிலையில் டி.வி.மாகலிங்கம் குறும்பர்கள் கருநாடகத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர்கள் திராவிட நாட்டில் தொண்டை மண்டலம் வரை தமது ஆட்சியை நடத்தி வந்தார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். இது குறித்த மேலாய்வுகளுக்கு இச்சுவடிகள் மூலத்தரவுகளாக அமைகின்றன.

இந்தச் சுவடிகளிலிருந்து பழங்குடி மக்களின் அந்தக் கால வாழ்வியல் முறையை அறிய முடியும். இந்தத் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு அவற்றை இன்றையச் சூழலோடு ஒப்பிட்டு ஆராயவும் பழங்குடி மக்களின் வாழ்வியலில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளனவா என்பதை அறியவும் இத்தகைய ஆய்வுகள் அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்லும்.

···

நூல்கள் குறித்த சுவடிகளை விளக்குமிடத்து அது நூல்வடிவம் பெற்ற வரலாற்றையும் இத்தொகுப்பு எடுத்துரைக்கிறது. கொங்கு தேச ராஜாக்கள் சரித்திரம் சுவடி - கொங்கு நாடான கோயம்புத்தூர் பகுதியை ஆட்சி செய்த மன்னர்களின் பரம்பரை வரலாற்றைத் தெரிவிக்கிறது. கொங்கு தேச ராஜாக்கள் குறித்து இரண்டு சுவடிகள் (சுவடி எண்:32,42) இடம்பெற்றுள்ளன.

நாயக்கர், பாளையக்காரர் வரலாறுகள் மெக்கன்சி சுவடிகளில் விரிவான பதிவுகளைப் பெற்றுள்ளன. இத்தொகுப்பில் நாயக்க இலக்கியங்கள், தமிழில் எழுதப்பட்ட இலக்கியங்கள் என்று வகைமை செய்து தரப்பட்டுள்ளன. இவ்வாறு சமண இலக்கியங்கள் குறித்த சுவடிகள் சமணர்களின் புலமை செயல்பாட்டினை ஆய்வுசெய்வதற்குரிய மூலங்களாக அமைகின்றன. சமண இலக்கியங்கள் என்ற பகுதியில் இடம்பெறும் செய்திகளோடு சமணக் கோயில்கள் போன்றவற்றை வட்டார நிகழ்வுகள், வட்டார வரலாறு பகுதியில் விவரிக்கப்பட்டுள்ளன. சமணம் தொடர்பான முழுமையான புரிதலைச் சமண இலக்கியம் என்ற பகுதியை மட்டும் கொண்டு அறியமுடியாது. மெக்கன்சியின் பிற சுவடிகளிலும் சமணம் தொடர்பான செய்திகள் இடம்பெற்றுள்ளன. அதனையும் ஒருங்கே வைத்து ஆராயும் நிலையில் சமணம் என்ற பகுதி முழுமையடையும்.

இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள சுவடி எண்:12 பிரிவு 2இல் சமண சமயம் சென்னை மயிலாப்பூரில் நிலைகொண்ட வரலாற்றினையும் 5 சமணக் கோவில்கள் இங்குக் கட்டப்பட்டிருந்தது என்றும் சோழர் காலத்தில் அவை சிவலிங்க ஆலயங்களாக உருப்பெற்றன என்றும் இச்சுவடி எடுத்துரைக்கிறது. சுவடி எண்: 14 பிரிவு 4இல் திருஞானசம்பந்தர் காலத்தில் கூன் பாண்டியன் மதுரையில் 8000 சமணர்களைக் கழுவேற்றம் செய்த புராதன வரலாற்றினைக் குறித்தும் மெக்கன்சி சுவடிகள் எடுத்துரைத்துள்ளன. மெக்கன்சி சுவடிகளின் வாயிலாகத் தென்னிந்தியாவில் சமண சமயம் காழ்கொண்ட வரலாற்றை அறிந்து கொண்ட அளவிற்குப் பௌத்தம் குறித்த செய்திகளை அறியமுடியவில்லை.

இந்தியப் பண்பாட்டின் வரலாற்றுச் சின்னங்களாகவும் கலாச்சாரத்தின் மையப்புள்ளியாகவும் கோவில்கள் திகழ்கின்றன. மெக்கன்சி சுவடிகளில் சைவம், வைணவம், சமணம் ஆகிய மூன்று சமயங்களின் கோயில்களைக் குறித்த விவரணங்கள் இடம் பெற்றுள்ளன. சில கோயில்கள் புனித ஸ்தலங்களாக விளங்கியதை அறியமுடிகிறது. சான்றாக, ஸ்ரீரங்கம், காஞ்சி, சிதம்பரம், திருவண்ணாமலை, திருவாரூர், ஸ்ரீசைலம், பழனி, சுசீந்தரம், கன்னியாகுமரி ஆகிய கோயில்கள் பற்றிய சுவடிகளில் காணலாம். சில சைவக் கோயில்களில் சைவ நாயன்மார்களான ஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர் முதலான கடவுள் அடியார்களையும் வணங்கி யுள்ளனர் என்பதையும் எடுத்துரைக்கிறது. இன்றைக்கும் நாயன்மார்களுக்காக அறுபத்து மூவர் விழா எடுக்கப்பட்டு வருவதை இதன் தொடர்ச்சியாக இனங்காணமுடியும்.

பிற சமயங்களின் மீது சமயப் பொதுமையைக் காட்டாமல் காழ்ப்புணர்ச்சி கொண்டு அதிகார செல்வாக்குச் செலுத்தியதன் காரணமாக ஏற்பட்டுள்ள விளைவுகளை இச்சுவடிகள் பதிவு செய்துள்ளன. சான்றாக, திண்டுக்கல்லை ஆட்சிசெய்த சக்கர ராயர் என்ற உள்ளூர் அதிகாரி சைவக் கோவிலை வைணவக் கோவிலாக மாற்றம் செய்துள்ளார். “கதிரேசுவர” என்ற பெயரில் வழங்கும் சிவன் கோவிலைக் “கதிர் நரசிம்ம பெருமாள்” என்ற வைணவக் கோவிலாக உருமாற்றியுள்ளார். இதுபோல எட்டு சைவக் கோவில்களை மாற்றியுள்ளனர் என்ற விவரத்தை இத்தொகுப்பில் சுவடி எண்:7 பிரிவு 3இல் இடம்பெற்றுள்ள சுவடி எடுத்துரைக்கிறது.

மாமல்லபுரத்தின் சிற்பக்கலை குறித்து இத்தொகுப்பில் சுவடி எண்: 29 பிரிவு 6இல் இடம்பெற்றுள்ள சுவடி எடுத்துரைக்கிறது. கோவர்த்தன கிரி, ஒற்றைக்கல்லாலான கோவில்கள், பஞ்சபாண்டவ ரதங்கள், கடற்கரையோரம் அமைந்துள்ள கோவில் கடலுக்குள் மூழ்கி வரும் விவரணங்கள் ஆகிய அனைத்தையும் இச்சுவடி விரிவாகப் பதிவுசெய்துள்ளது.

···

மலையாளச் சுவடிகளில் மலபார், நம்பூதிரி பிராமணர்களின் பழக்கவழக்கங்களும் சடங்குகளும் விவரிக்கப்பட்டுள்ளன. முஸ்லீம் மக்கள் கேரள நாட்டில் நிலைகொண்ட வரலாற்றினை அறிந்து கொள்ள இச்சுவடிகள் ஆதாரமாக உள்ளன. கேரள நாட்டில் சாதியமைப்புகள் செயல்படும் விதம் குறித்துத் தெளிவாக இச்சுவடிகள் எடுத்துரைக்கின்றன. நாயர் சமூகம் நான்கு உட்பிரிவுகளைக் கொண்டு விளங்குவதாகவும் குறிப்பிடுகிறது. ஆனால் இவையெல்லாம் செவிவழிச் செய்திகளின் அடிப்படையில் விவரிக்கப்பட்ட விடயங்கள் என்று சுவடிகள் எடுத்துரைப்பதையும் இங்கு இணைத்தெண்ணத்தக்கது.

-           தென்னிந்திய வரலாற்றினைக் கட்டமைப் பதற்குப் பதினெட்டாம் நூற்றாண்டில் தொகுக் கப்பட்ட மெக்கன்சி சுவடிகளில் காணப்படும் விடயங்களை அறிந்துகொள்வது அவசியமா கிறது. அதற்கான பிரதியாக இந்நூல் அமை கிறது.

-           சாதிய அடுக்குகள் தமிழகத்தில் எத்தகைய நிலைப்பாட்டிலிருந்துள்ளன என்பதைப் புரிந்து கொள்ளவும் அது தொடர்பான ஆய்வுகளுக்கும் பயன்படும் வகையில் இச்சுவடிகள் அமைந் துள்ளன.

-           பழங்குடிகள் குறித்த ஆய்வுகள் பலநிலைகளில் முன்னெடுக்கப்பட்டுவரும் சூழலில் தமிழகப் பழங்குடி மக்கள் குறித்த அடிப்படையான செய்திகளைக் கொண்டு விளங்கும் இச்சுவடிகளைக் கொண்டு அவர்களின் இன்றையச் சூழலோடு அவற்றை ஒப்பிட்டு ஆராயலாம்.

-           பழங்குடி மக்கள் வாழ்ந்த பகுதிகளைப் பற்றி விரிவாக இச்சுவடிகள் குறிப்பிடுகின்றன. பொதுவாகச் செங்கற்பட்டு, ஆற்காடு, பழவேற்காடு பகுதிகளில் வாழும் பழங்குடிகள் குறித்த பதிவுகளே அதிகமாகக் காணப்படுகின்றன.

-           மெக்கன்சி சுவடிகளில் அதிகமான முக்கியத்துவம் கொடுத்து எழுதப்பட்டுள்ளதாகக் குறும்பர் இனத்தைக் குறிப்பிடலாம்.

Pin It