“என் மனைவி எலிசா மெலிசா ஃபுட்டையும் அவளது மறைவிற்குப் பின் என் அறங்காவலர்களையும் என் பிள்ளைகளுக்குப் பாதுகாவலாக நியமித்தேன். என்னுடைய பாத்திரம், துணிமணிகள், பீங்கான் பொருட்கள், கண்ணாடிப் பொருட்கள், நூல்கள், படங்கள், அச்சுப் பதிப்புகள், ஒயின், மதுபானங்கள், தட்டுமுட்டுப் பொருட்கள் மற்றும் வீட்டுச் சாமான்கள், வண்டிகள், குதிரைகள் என்று எல்லாவற்றையும் (இந்தியத் தொல்பழங்காலச் சின்னங்களை அல்லது என்னுடைய சொத்தின் பகுதியாக உள்ள அவற்றின் வாயிலாகப் பெறப்படும் விளைபயன்களையும் மரபுரிமையாகப் பிற்காலத்து விட்டுச் செல்ல வேண்டிய பொருட்களையும் தவிர்த்து) நான் குறிப்பிட்ட என்னுடைய மனைவிக்குக் கொடுத்தேன்.”

(விருப்ப ஆவணத்திலுள்ள சிறுபகுதி, ராபர்ட் புரூஸ் ஃபுட், 1899)

மறைந்த வரலாற்றைத் தேடி... ...

ஒருவரின் இறுதி விருப்ப ஆவணத்திலும் உரிமைப்பத்திரத்திலும் தொல்பழங்காலச் சின்னங்களைப் பட்டியலிடுவது என்பது வழமைக்கு மாறான ஒன்று. இந்தியாவின் தொன்மை குறித்த பல உலகங்களோடு நெருங்கிய தொடர்புடைய ராபர்ட் புரூஸ் ஃபுட் போன்ற ஆளுமைகளின் வாழ்க்கையில் ஒருவேளை இது இயல்பான ஒன்றாக இருக்கலாம். இந்தியாவின் நிலவியல் மற்றும் தொல்லியல் வரலாற்றுப் பக்கங்களில் ராபர்ட் புரூஸ் ஃபுட்டின் பெயர் முத்திரை பதிக்கப்பட்டுள்ளது. கடந்த நூற்றாண்டில் அவர் செய்த பணிகள் இன்றும் மதிக்கத்தக்கனவாக உள்ளன. அழிவு நிலையில் உள்ள பத்தொன்பதாம் நூற்றாண்டு இதழ்கள் தொடங்கி ஆய்வு அறிக்கை களிலும் முனைவர் பட்ட ஆய்வேடுகளிலும் கட்டுரைகளிலும் அவர் செய்த ஆய்வுகள் இன்று வரை குறிப்பிடப்படுகின்றன. புரூஸ் ஃபுட்டின் நூல்கள், ஆக்கபூர்வமான அறிக்கைகள், வாழ்க்கை வரலாற்றுச் செய்திகள், சிறுகுறிப்புகள், தொன்மைச் சின்னங்கள் குறித்த அடைவுகள், அவரின் கருத்துரைகள், நிலவியலாளர் களோடும் குறிப்பிடத்தக்க ஆளுமைகள் மற்றும் பிற புலமையாளர் களோடும் அவர் மேற்கொண்ட உரையாடல்கள் அவரைப் பத்தொன்பதாம் நூற்றாண்டின் மிக முக்கிய புலமையாள னாக அடையாளப்படுத்துகின்றது.

தான் வாழ்ந்த நிலத்தின் கடந்த காலத்தோடும் நிகழ்காலத்தோடும் ஆழ்ந்த ஈடுபாடு கொண்ட ஃபுட் பன்முக ஆர்வலராகவும் திறமையாளராகவும் விளங்கி தன்னை மிகச்சிறந்த அறிவியலாளனாக ஆக்கிக்கொண்டார். ஒரு புலமையாள னின் ஆர்வத்தை எந்த வகையிலும் கட்டுப்படுத்தாத சூழல் நிலவிய காலத்தைச் சேர்ந்தவர் ஃபுட்(Grayson 1983; Levine 1986; Sangwan1994; Wyse Jackson 2007).. நிலவியல், தொல்லியல், மானுட வியல், தொல்படிமவியல் என்று தான் ஈடுபட்ட எல்லா துறை களிலும் தேர்ந்த வல்லுநராகத் திகழ்ந்தார். இந்தியாவின் பழங்கற் காலப் பண்பாடு குறித்த அவரது நோக்குகளும் ((Foote 1866)) அதைத் தொடர்ந்து தென்னிந்தியா மற்றும் மேற்கிந்தியாவின் வரலாற்றுப் பகுதிகளையும் வரலாற்றுக்கு முற்பட்ட பகுதிகளையும் குறித்த ஆவணப்படுத்தமும் மிகச் செறிவாகத் தொகுக்கப்பட்டுள்ளன (Chakrabarti 1979; Ghosh 1963; Khatri 1962; Pappu 1991-92, 2001, 2004, 2007; Paddayya 2004, 2007; Patil 2004; Sen and Ghosh 1966; Sundara 2004). 

ஃபுட்டின் ஆய்வுவழித் தோன்றல்களான பல தொல்லியலாளர் களால் ((See Chakrabarti 1979; Sundara 2004) மட்டுமன்றி அவருடைய சமகால ஆய்வுலகினராலும் சரியாக அடையாளம் காணப்பட்டுள்ளார். இதனை, ஃபுட்டின் ஆய்வுகள் குறித்து வந்த மதிப்புரைகள், அறிக்கைகள், வாழ்க்கைக் குறிப்புகள், அவரது வெளியீடுகள், வெளிவராத ஆவணங்கள் முதலியவற்றின் வாயிலா கவும் பல நினைவு மலர்கள் (Oldham 1913 : lxv-lxvi; Haydon 1913,J.M.(anon.review)1883: 313)வாயிலாகவும் அறியமுடிகிறது. அவருடைய நிலவியல் ஆய்வுகளைப் புகழ்ந்துரைக்கும் வகையில் ஓல்டாம் (1913) என்பவர் ஃபுட்டின் நினைவுமலரில், “தென்னிந்தியா வின் தொல்பழங்கால மானுட எச்சங்களை மிக ஆர்வமாக ஆராயும் ஆய்வாளர்; ... ...மிக நீண்ட காலமாக இந்த ஆய்வுப்பாரம்பரியத்தில் மிகச் சிறந்த நிபுணராகக் கருதப்படுபவர்.” என்று குறிப்பிட்டுள்ளார். தொல்பழங்கால மானுடச் சின்னங்கள் மீதும் நிலவியல் கூறுகள் மீதும் திறனார்ந்த விவாதங்கள் எழுந்த காலத்தில்தான் ஃபுட் தன்னுடைய பணிகளைச் செய்துவந்தார். அதே காலத்தில் Jacques Boucher de Crevecoueur de Perthes, H.H.Falconer, Joseph Prestwich, Charles Lyell, Thomas Huzxley, Rupert Murchisonமுதலிய பல ஆய்வாளர்கள் மேலை நாட்டில் மிக முக்கியப் பங்கு வகித்து வந்தனர் ((Grayson 1983). ஃபுட்டின் ஆய்வுகளைப் பற்றி விவாதித்துள்ள இந்த ஆய்வாளர்கள் தங்களுடைய கண்டுபிடிப்பு களில் ஃபுட்டின் நோக்கினைக் குறிப்பிட்டுள்ளனர். அவர் தொகுத்த வற்றை அருங்காட்சியகங்களுக்காக விலைக்கு வாங்க இவர்கள் விரும்பியுள்ளனர் (Pappu 2001, manuscript in preparation). இவற்றைக் காணும்போது ஃபுட் உலகளாவியப் புகழ்வாய்ந்தவர் என்பதை அறிய முடிகிறது.

ஃபுட்டின் ஆய்வுகளைத் தாண்டி அவரைப் பற்றிய சில செய்திகள் உள்ளன. 1979இல் ஃபுட்டின் வாழ்க்கைத் தொழில் பற்றி மிகச் சில தகவல்களையே அறிய முடிகிறது என்று சக்ரவர்த்தி குறிப்பிட் டுள்ளார் (1979:13). பின்பு 2007இல் ஃபுட்டினுடைய குடும்பம் குறித்தோ கல்விப்பின்புலம் குறித்தோ எந்தத் தகவல்களையும் அறிய முடியவில்லை என்று பட்டையா (Paddayya)குறிப்பிட்டுள்ளார். ஃபுட்டின் மிக நீண்ட வெற்றிகரமான வாழ்வின் கொள்கைப் படிநிலைகளை மிகச் சுருக்கமாக விளங்கிக் கொள்ள அவர் சார்ந்த மூலச்சான்றுகள் உதவின என்று குறிப்பிடும் ஆய்வாளர்களும் உள்ளனர் (Archer 1969:197-198; Haydon 1913; India Office list 1894:257; Oldham 1913: lxv-lxvi).கிடைக்கின்ற தகவல்களைத் தொகுத்துக் காணும்போது 1834ஆம் ஆண்டு ஃபுட் பிறந்துள்ளார்; 1958 செப்டம்பர் 28ஆம் நாள் முதல் இங்கிலாந்தில் நிலவியற் கழகத்தில் உதவியாளராகப் பணியாற்றியுள்ளார். கட்டுரையாளருக் குக் கிடைத்த தகவலின்படி 1867 ஏப்ரல் மாதம் 3ஆம் நாளன்று (No.2394) லண்டன் நிலவியற் கழகத்தால் தேர்வு செய்யப்பட் டுள்ளார்; ஜான் ஈவான்ஸ் மற்றும் ராபர்ட் எதிரிட்ஜ் ஆகிய இருவருமே மார்ச் 6ஆம் நாளன்று இவருடைய பெயரைப் பரிந்துரை செய்துள் ளனர்.

நிசாம் ஆளுகைக்குட்பட்ட சென்னை மாகாணத்தின் பல பகுதிகளிலும் பம்பாய்ப் பகுதிகளிலும் இவர் பணி யாற்றியுள்ளார். பின்பு வியன்னா கண்காட்சி விவரணத் தொகுப்புப் பணியில் துணைப்பொறுப்பாளராக 1873இல் நியமிக்கப்பட்டார். 1876 ஏப்ரல் மாதத்தில் உயர் அதிகாரியாகவும் 1881 ஜூன் மாதத்தில் மேலாண் அதிகாரியாகவும் பொறுப்பேற்றார். 1884இல் சென்னைப் பல்கலைக் கழக நபராகவும் பொறி யமைப்புக் குழுவில் உறுப்பினராகவும் விளங்கினார். எடின்பர்க் நிலவியற் கழகத்து ஆட்சிப் பொறுப்பில் கடிதத் தொடர்புவழி செயல்பட்டவர். 1885ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நில அளவியல் மேலாளராக பதவிமாற்றம் செய்யப்பட்டார். 1887இல் இயக்குநராகச் செயல்பட்டு 1891 அக்டோபர் மாதத்தில் பணி ஓய்வு பெற்று தமிழ் நாட்டில் ஏற்காட்டுப் பகுதியில் குடியமர்ந்தார். 1912 டிசம்பர் 29அன்று கல்கத்தாவில் உயிர் நீத்தார். இக்கட்டுரை இது குறித்துப் பின்னர் விவாதிக்க உள்ளது. பணி ஓய்விற்குப் பின்பு பரோடாவில் மாநில நிலவியலாளராகவும் பின்பு மைசூரில் மாநில நிலவியல் துறையில் இயக்குநராகவும் (1894) பணியாற்றினார்.

ராபர்ட் புரூஸ் ஃபுட் யார்?

ஃபுட் எழுத்துக்கள் வாயிலாகவும் அவரைக் குறித்து எழுதப்பட்ட எழுத்துக்கள் வாயிலாகவும் அவருடைய ஆளுமையின் ஆழத்தை விளங்கிக்கொள்ளமுடியும். அறிவியலாளராகவும் புலமையாளராக வும் வியப்பையும் பெரு மதிப்பையும் ஏற்படுத்தக் கூடிய மனிதராக இந்தியாவின் கடந்த காலத்தின் முன் நிற்கின்றார் ராபர்ட் புரூஸ் ஃபுட். ஆனால் யார் இந்த ராபர்ட் புரூஸ் ஃபுட்?

பத்தொன்பதாம் நூற்றாண்டு இந்திய நிலவியல் மற்றும் தொல்லியல் துறையில் பணியாற்றியவர்களுக்கிடையிலான தொடர்பினைக் கண்டறிந்து குடிவழி ஆய்வு மேற்கொள்வது அத்துறையின் வரலாற்றை கண்டறிய உதவும் மிகச் சிறந்த வழியாகும். இதற்குச் சிறந்த முன்மாதிரி ஹெச்.ஹெச்.ஃபால்கனேர் (H.H.Falconer). இவரின் உடன்பிறந்தவரின் மகள் கிரேஸ் மெக்கால் பால்கனேருடன் பணியாற்றிய ஜோஸப் ப்ரஸ்ட்விச் என்பவரைப் பின்னாளில் கிரேஸ் மெக்கால் மணந்து கொண்டார். இந்த கிரேஸ் என்பவர்தான் தொல்பழங்கால மானுடச் சின்னங்கள் குறித்த ஆய்வுகளில் முக்கியச் சான்றுகளாகக் கருதப்படக்கூடிய அஞ்சல் தொடர்பு அறிக்கைகளையும் ஆவணங்களையும் பாதுகாத்து வந்தார்.

ராபர்ட் புரூஸ் ஃபுட்டின் குடும்பத்தார் மற்றும் நண்பர்களுடைய ஒத்துழைப்பு அவருடைய ஏராளமான கண்டுபிடிப்புகளிலும் மாபெரும் ஆற்றலிலும் சுய முயற்சியிலும் பிரிக்கமுடியாத அளவிற்குப் பங்களித்துள்ளன. ராபர்ட் புரூஸ் ஃபுட்டின் வாழ்க்கை குறித்தும் பணிகள் குறித்தும் கட்டுரையாளர் மேற்கொண்ட ஆய்வின் பொருட்டு ராபர்ட் புரூஸ் ஃபுட்டின் பெயரனும் ஹென்றி புரூஸ் ஃபுட்டின் மகனுமான டாக்டர். ஜான் புரூஸ் ஃபுட்டைச் சந்திக்க நேர்ந்தது (SCHE/RBF/01/02/03/04). ஃபுட்டின் குடும்பத்தார் கட்டுரையாளரைக் கணிவோடு சந்தித்ததுடன் அரிய ஆவணங் களையும் புகைப்படங்களையும் கொடுத்து உதவினர். பின்னர் திருமதி.ஃபிளாரன்ஸ் அஷ்டோன் என்பவரைச் சந்திக்க நேர்ந்தது. இவரது தாத்தாவின் தாத்தா ரெவ.பீட்டர் பெர்சிவலின் சகோதரர் ஜான் என்பவராவார்.

பெர்சிவலின் குடும்பத்தாரைப் பற்றியும் ஃபுட்டின் குடும்பத்தாரைப் பற்றியும் பல முக்கியத் தகவல்களை ஃபிளாரன்ஸ் கொடுத்தார்(ஷிசிபிணி/றிணிஸி/01/02). கடைசியாக இந்தியாவில் வாழும் நபர்களில் ஒருவரான திரு.டேட் என்பவர் பல்லாண்டுகளாக ஏற்காட்டில் வாழ்ந்து வந்தார். ராபர்ட் புரூஸ் ஃபுட்டினை நினைவு கூர்ந்து பல தகவல்களை இவர் வழங்கினார். இந்தியா மற்றும் ஐரோப்பாவிலுள்ள ஆவணக்காப்பகங்கள் வாயிலாகவும் நூலகங்கள் வாயிலாகவும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுவழி இத்தகவல்கள் உறுதிசெய்யப்பட்டதோடு நிறைவும் செய்யப்பட்டன. தொகுக்கப்பட்ட பெரும்பாலான தகவல்களில் ராபர்ட் புரூஸ் ஃபுட்டின் குடும்ப வரலாற்றையும் குடி வழியினையும் குறித்த செய்திகளை மட்டும் இக்கட்டுரை விவாதிக்கின்றது. புதைந்து கிடக்கும் இந்தியாவின் தொல்பழங்கால வரலாற்றை வெளிக்கொணர வேண்டும் என்கிற அவருடைய வேட்கையி னூடாக குடும்ப வாழ்வின் பல்வேறு இன்பங்களும் இன்னல்களும் பின்னிப் பிணைந்தவாறு உள்ளன.

மூதாதையர்கள்

ராபர்ட் புரூஸ் ஃபுட்டின் தாயார் சோபியா வெல்ஸ் வழியில் இவரின் மூதாதையர்களைத் தேடிச் செல்லும்போது பதினான்காம் நூற்றாண்டைச் சேர்ந்த வில்லியம் விக்ஹாம் (1323-1404) வரை உள்ள குடிவழித் தொடர்ச்சியைக் கண்டடைய முடிகிறது. வில்லியம் விக்ஹாம் ஆங்கிலேய மேல்மன்றத் தலைவராகவும் வின்செஸ்தாரின் தலைமைக் குருவாகவும் விளங்கியவர். சமய மற்றும் சமயச் சார்பற்ற நடவடிக்கைகளில் பல அரசர்களின்கீழ் மிக முக்கிய நபராகத் திகழ்ந் துள்ளார்(ref: www.1911 <http://www.1911> encylopedia.org/ William_of_Wykeham). அவர்தம் வாழ்வில் வின்செஸ்தாருக்காக வும் 1388இல் வின்செஸ்தாரால் உருவாக்கப்பட்ட வின்செஸ்தார் புனித மேரி கல்லூரிக்காகவும் அறக்கட்டளைகளைப் பெற்றார்.

ராபர்ட் புரூஸ் ஃபுட்டின் பிறப்பு, பெற்றோர் மற்றும் உடன்பிறப்புகள்

ராபர்ட் புரூஸ் ஃபுட்டின் தாயார் சோபியா வில்லியம் விக்ஹாமின் வழித்தோன்றலான டயானா ஜிஃபார்டின் மூன்றாம் மகளாவார். இவர் 1826ஆம் ஆண்டு ஜூன் 9ஆம் நாள் ஜோனா ஸ்மித் என்பவரை ஹான்ஸி என்னுமிடத்தில் வைத்து மணந்து கொண்டார். சோபியாவின் சகோதரர் ஜிஃபார்ட் வெல்ஸ், மேரி ஆன் பீட்லூ என்பவரை மணந்து கொண்டார் . விதிவசத்தால் இவர்களின் மகள் எலிசா மெலிசா வெல்ஸை ராபர்ட் புரூஸ் ஃபுட் தனது இரண்டாவது மனைவியாக ஏற்க நேர்ந்தது. அவர்கள் தம் கடைசி மகனுக்கு அவன் தாத்தாவின் பெயரான ஜிஃபார்ட் வெல்ஸின் பெயரையே சூட்டினர். 1862ஆம் ஆண்டு ஜூன் 7ஆம் நாள் நடந்த ஃபுட்டின் திருமணத்தில் அவருடைய தாயார் சோபியா ஒரு சாட்சியாக இருந்துள்ளார். சோபியா 1868இல் இறந்துவிடுகிறார். மக்கள்தொகைக் கணக்கெடுப் பில் இவரைப் பற்றிய தகவல்களோடு இவரது சகோதரி மற்றும் மகனைப் பற்றிய தகவல்களும் குறிக்கப்பட்டுள்ளன.

ஹென்றி வெல்ஸ் என்பவர் ராபர்ட் புரூஸ் ஃபுட்டின் தந்தை வழித் தாத்தா. இவர் 45 ஆண்டுகாலம் வாழ்ந்தவர். மருத்துவராக இருந்த இவர் 1828ஆம் ஆண்டு மார்ச் 11ஆம் நாள் மரணித்தார். ராபர்ட் புரூஸ் ஃபுட்டின் பெயரப் பிள்ளைகளுக்கிடையிலான (ஹென்றி புரூஸ் ஃபுட்டின் பிள்ளைகள் மற்றும் அவரது முதல் மனைவி ஜெனி ஜெஸட்) கடிதம் சுவாரஸ்யமான சான்றாக உள்ளது. ஹால்(Major General H.R.B.Foote) என்பவரிடமிருந்து வந்த கடிதத்தில் பழமை பேணும் கிறித்தவர்களைக் கொண்ட ப்ளைமோத் ப்ரீதெர்ன்(Plymouth Brethern) என்னும் குழுவில் கடந்த ஐந்து ஆண்டு காலமாக டாக்டர்.ஹென்றி வெல்ஸ் ஃபுட் உறுப்பினராக உள்ளார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இக்கூற்று உறுதிப்படுத்தப்படவில்லை யெனினும் ராபர்ட் புரூஸ், ஹென்றி வெல்ஸின் தத்துவத்தை ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் அவரை மறுத்தார் என்றும் அவர்தம் குடும்ப வரலாறு குறிப்பிடுகின்றது.

ராபர்ட் புரூஸ் ஃபுட்டின் தந்தை வில்லியம் ஹென்றி ஃபுட் ஒரு மருத்துவர். இவர், ஸ்டெதஸ் கோப்பைக் கண்டுபிடித்த Rene Theophile Hyacinthe Laennec (1781-1826) என்னும் புகழ்மிக்க அறிவியலாளரிடம் (Roguin 2006) பயிற்சி பெற்றவர் என்று குடும்ப வரலாறு கூறுகின்றது. வில்லியம் ஹென்றி ஃபுட்டின் உயிலில் இவர் தேவன் என்னுமிடத்திலிருந்து வந்தார் எனவும் 1835ஆம் ஆண்டு நவம்பர் 2ஆம் நாளன்று இறந்தார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. தன்னுடைய அனைத்துச் சொத்துக்களையும் தனது மனைவி சோபியாவிற்கு மரபுரிமையாக விட்டுச்சென்றுள் ளார். இதன் மூலம் ராபர்ட் புரூஸ் ஃபுட் ஒரு வயதுக் குழந்தையாக இருக்கும்போதே அவரது தந்தை இறந்துள்ளார் என்பதை அறியமுடிகிறது. உயிலிலுள்ள குறிப்புகள் மூலம் ஹென்றி புட்டின் பிரியப்பட்ட நண்பனான கேப்டன் வில்லியம் விவியனின் பெயரே ராபர்ட் புரூஸ் ஃபுட்டின் சகோதரனுக்கும் பின்பு ஃபுட்டின் மகனுக்கும் சூட்டப்பட்டுள்ளது என அறியமுடிகிறது. இது தன்னுடைய பிரியப்பட்ட நண்பனின் நினைவாக இருக்கலாம்.

1855 செப்டம்பர் 5ஆம் நாளன்று ராபர்ட் புரூஸ் ஃபுட்டின் சகோதரன் ஹென்றி வெல்ஸ் ஃபுட்டிற்கு போர்க்கலங்கள் கொடை யாக அளிக்கப்பட்டதற்கான குறிப்புகள் காணக்கிடைக்கின்றன. ஹென்றி வெல்ஸ், வில்லியம் ஹென்றி ஃபுட்டின் மகன் எனவும் படைக்கல உரிமையாளர் எனவும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளார். இவர் க்ளாஸ்டரில் உள்ள ஷெல்டென்ஹாம் கல்லூரியைச் சேர்ந்தவர் எனவும் லண்டன் ராயல் மருத்துவக் கல்லூரியின் தகுதிச் சான்றிதழ் பெற்றவர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. வில்லியம் ஹென்றி ஃபுட்டின் வழித்தோன்றலான ஹென்றி வெல்ஸ் ஃபுட்டிற்கும் அவருடைய வழித்தோன்றல்களுக்கும் போர்க்கல உரிமை வழங்கப் பட்டுள்ளது. ராபர்ட் புரூஸ் ஃபுட், அவரது சகோதரர்கள் ஹென்றி வெல்ஸ், வில்லியம் ஹென்றி, இன்னொரு வில்லியம் ஹென்றி, வில்லியம் விவியன், மற்றும் மீண்டும் ஒரு வில்லியம் ஹென்றி பின்பு ஒரு மகள் ஆகிய அனைவரும் மேற்கூறப்பட்ட வழித்தோன் றல்களாவர். கொடையாகக் கொடுக்கப்பட்ட படைக்கலன்கள் குறித்து, “சிவந்த இரண்டு பேட்சுகளில் பல புறாக்களை மேலாகக் கொண்டு வெள்ளிய உலோகத்தாலான குறுக்குப்பட்டி அதன் கீழ் அமைந்துள்ளது. மேலும் கேடயச்சின்னம் ஒன்றில் இரண்டு குறுக்குப்பட்டிகளும் வெள்ளிய உலோகத்தாலான பெலிகன் பறவை சிறகு விரித்த வண்ணமும் காணப்படுகின்றது” என்று கூறப்பட் டுள்ளது.

ராபர்ட் புரூஸ் ஃபுட்டின் குடும்பக் கிளையில் சகோதரர் ஜோசப் வழக்குரைஞராகவும் சகோதரி அன்னி திரு.சைமன் என்பவரை மணந்து கொண்டதாகவும் பின்பு அவர்களது வழித்தோன்றல்கள் குறித்தும் அறியமுடிகிறது. ஹென்றி வெல்ஸ் ஃபுட் 1828 மார்ச் 16ஆம் நாள் லண்டனில்(House of Shernad Hurt, NO.41, Beaumont Street, London) பிறந்தவர் என்னும் தகவல் குறிப்பிடப்பட் டாலும் மேற்கூறப்பட்டவர்களைத் தவிர்த்து ஃபுட்டின் மற்ற சகோதரர்களைப் பற்றிய செய்திகள் காணப்படவில்லை. பின்பு ராபர்ட் புரூஸ் தன்னுடைய பிரியமான சகோதரர் ஹால் என்று உயிலில் குறிப்பிட்டுள்ளார். 1851ஆம் ஆண்டு மக்கள் கணக்கெடுப்பு சோபியா வெல்ஸ் ஃபுட்டின் மகன் ஹென்றி வெல்ஸ் ஃபுட் எனவும் இவர் 22 வயதுள்ளவர், மார்லிபோனில் பிறந்தவர் எனவும் குறிப்பிடுகின்றது.

1834 செப்டம்பர் 22ஆம் நாளன்று ராபர்ட் புரூஸ் ஃபுட் இப்புகழ்மிக்க குடும்பத்தில் பிறந்தார். ஷெல்டென்ஹாம் என்னும் இடத்தில் (10, Promenade Terrace, Cheltenham)உள்ள வீட்டில் பிறந்ததாக அவருடைய பிறப்புச் சான்றிதழ் குறிப்பிடுகின்றது. இந்நகரம் இங்கிலாந்தில் க்ளுசெஸ்டார் என்னும் இடத்தில் உள்ளது. ஃபுட் பிறந்த சமயத்தில் இது சுற்றுலாத் தலமாக இருந்தது. இத்தலம் 1820களில் முன்னேற்றம் கண்டது. ராபர்ட் புரூஸ் ஃபுட்டின் இளமைக்காலம் குறித்தும் கல்வி குறித்தும் வேறு இடத்தில் பேசப்பட்டுள்ளது (Pappu nanuscript in prepration). இனி இந்திய வருகை குறித்துக் காணலாம்.

இந்திய வருகையும் குமிழக் குமரிக்கோட்டமும்

1858 செப்டம்பர் 28ஆம் நாள் இந்திய நிலவியற் கழகத்தில் இளம் நிலவியலாளராக (India Office List 1984: 57)ஃபுட் சேர்ந்தார். இந்திய நிலவியல் மற்றும் தொல்லியல் துறையில் மிகப்பெரும் மாற்றத்தை இந்நிகழ்வு ஏற்படுத்தும் என்றோ அது தனக்கு மிகுந்த புகழைப் பெற்றுத்தரும் என்றோ ஃபுட் எதிர்பார்த்திருக்க மாட்டார். ஃபுட் இந்தியா வருவதற்கு ஒரு ஆண்டிற்கு முன்னர் (1857) சென்னை மாகாண நிலஅளவீட்டுப் பணியில் சி.ஏ.ஓல்டாம், டபுள்யூ.கிங், ஹெச்.எஃப். பிளான்ஃபோர்டு ஆகியோருடன் ஹெச்.ஜாகெகான் (C.A.Oldham, W.King, and H.F.Blanford along with H.Geoghegan) நியமிக்கப்பட்டனர். திருச்சிராப்பள்ளி மற்றும் தென்னாற்காட்டுப் பகுதியில் காணப்படும் சீமைச் சுண்ணாம்புப் பாறைகளை ஆய்வு செய்து வழங்கவும் இயன்றால் நிலவியல் மற்றும் தொல்படிமவியல் சார்ந்த தரவுகளைக் கொண்டு கண்டுபிடிக்கப்பட்ட படிவியற் படுகைப் பாறைகளைச் சூழமைக்கவும் திட்டமிடப்பட்டது. 1858இல் ஹெச்.ஜாகெகான் வெப்பு நோயால் இறந்ததும் அவருக்கு மாற்றாக ஃபுட் நியமிக்கப்பட்டார். ஆரம்ப காலத்தில் புரூஸ் ஃபுட் தான் எதிர்பார்த்திராத இந்த இயற்கை அழகினைக் காணும்போது ஏற்பட்ட தடுமாற்றம் அவரைக் கலைத் துறையில் ஈடுபடச்செய்தது. இதன் விளைவு ஓவியமாக வெளிப்பட்டது.

தான் வரைந்த அந்த ஓவியத்திற்கு குமரிமுனைக் காட்சி, குமிழக் குமரிக் கோட்டம் மற்றும் தீவுகள் என்று பெயரிட்டார். இது வடகிழக்கு முனையிலிருந்து 1 1/4 மைல் தொலைவிலுள்ள காட்சி. இவ்வோவியத்தில் 18.09.1860 என்ற காலம் குறிக்கப்பட்டுள்ளது. இது தூரிகை, மை மற்றும் மேற்பூச்சு வண்ண நீர்மம் ஆகியவற்றைக் கொண்டு தீட்டப்பட்டுள்ளது (Archer 1969: 197-198). அவருடைய ஆரம்பகால நிலஅளவைப் பணி (King and Foote1864) தென் தமிழகத்தை அறியவும் கன்னியாகுமரி யைக் காணவும் வாய்ப்பு ஏற்படுத்தியது. எனினும் இப்பகுதியில் நிலவியற் பணிகளைப் பின்னாளிலேயே மேற்கொண்டார் (Foote1883). தன்னுடைய நில அளவைப்பணியில் சிக்கலான கரடு முரடான சூழல்களில் பல இன்னல்களைச் சந்தித்த இவர் தான் வரைந்த அமைதியான கடல் வனப்பைக் காட்டும் இவ்வோவியம் குறித்து மிக விரிவாக எழுதி வெளியிட்டுள்ளார் (Foote1883).

இந்தியப் பண்பாடு குறித்த அறிமுகம் : பெர்சிவல் தொடர்பு

ராபர்ட் புரூஸ் ஃபுட்டின் முதல் மனைவி எலிசபெத் ஆன் பெர்சிவல் ஆவார். இவரைக் குறித்து பின்னர் விரிவாக விவாதிக்கப் படவுள்ளது. ஆரம்ப காலத்தில் இந்தியப் பண்பாட்டின் மீதும் வரலாற்றின் மீதும் ஃபுட் கொண்டிருந்த ஈடுபாட்டை அவர்தன் மனைவியைத் தேர்ந்தெடுத்திருப்பதில் புரிந்து கொள்ளலாம். புகழ்மிக்க புலமையாளரும் கல்வியாளரும் கட்டிடக்கலைஞரும் சமயப் பரப்பாளருமாகிய ரெவரென்ட்.பீட்டர் பெர்சிவலின் மகள் எலிசபெத் ஆன் ஆவார். ஃபுட்டின் வாழ்வில் பீட்டர் பெர்சிவலின் பங்கு அளவிட முடியாதது. இத்தகைய சூழலில் பெர்சிவலின் பங்களிப்பினைச் சுருக்கமாகக் கீழே காணலாம். 1824 டிசம்பர் 13ஆம் நாள் இங்கிலாந்தில் ((at Prestwich, Lancashire, England) பெர்சிவல், மேரி ஃப்ளெட்சர் என்பவரை மணந்து கொண்டார். பின்னர் சிறிது நாளில் இலங்கை சென்றுவிட்டார். தன்னுடைய வாழ்வை சமயப் பரப்புநராகத் (வெஸ்லியன் பிரிவு) தொடங்கி ஜாஃப்னாவிலுள்ள சமயப்பணி நிறுவனம் அல்லது கல்லூரி ஒன்றில் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். அவருடைய பங்களிப்பு இன்றும் அங்கு நினைவுகூறப்படுகின்றது.

1826இல் ஜாஃப்னா வெஸ்லியன் ஆங்கிலப்பள்ளிக்கு வந்தார். 1834ஆம் ஆண்டு அதற்கு ஜாஃப்னா மத்தியப் பள்ளி என்று பெயர்மாற்றம் செய்தார். அவரது மனைவி 1834ஆம் ஆண்டு பெண்களுக்காக தங்குதல், உணவு வசதியுடைய பள்ளி ஒன்றைத் தொடங்கிப் புகழ் பெற்றார். இத் தம்பதியினர் பெண்கல்விக்காக இலங்கையில் பெரும்பங்களிப் பினைச் செய்துள்ளனர். மேலும் இப்புலமையோடு அவர் சிறந்த கட்டிடக் கலை வல்லுநராகவும் விளங்கியுள்ளார். 1937இல் புனித பீட்டர் ஆலயத்தினை முதன் முதலாகப் புதுப்பித்தார். அதைப்போல புனித பவுல் என அழைக்கப்பட்ட லூதரன் ஆலயத்தையும் புதுப்பித்தார். பின்பு வெஸ்லியன் பிரிவினரைப் பிரிந்து சென்னைக்கு வந்தார். சென்னைப் பல்கலைக் கழகப் பதிவாளராகவும் மாநிலக் கல்லூரியில் வட்டார இலக்கியத்துறைப் பேராசிரியராகவும் ஆனார். ஆங்கிலேய ஆலயத்தில் சேர்ந்தார். உதகமண்டலத்தில் சமயப் பணியில் அமர்த்தப்பட்டார். மேலும் சில ஆண்டுகளாக சென்னை மிலிட்டரி ஆதரவற்ற பெண்கள் காப்பகத்தில் மதகுருவாகச் செயல்பட்டார்.

குறிப்பிடத்தக்க தமிழ்ப்புலமையாளராகத் திகழ்ந்தார் பீட்டர் பெர்சிவல். முதல்முதலாக விவிலியத் தமிழ்மொழிபெயர்ப்பை வெளியிட்டார். ‘Land of the Veda : India Briefly Described In some of its Aspects, Physical, Social, Intelltectual and Moral’ (Percival 1854)என்னும் அவரது நூல் ஃபுட் இந்தியா வருவதற்குச் சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளியிடப்பட்டது. கான்டர்பரியிலுள்ள (Canterbury) புனித அகஸ்திய மிஷினரி கல்லூரியில் இவர் வழங்கிய கருத்துரைகளை அடிப்படையாகக் கொண்டது இந்நூல். ஃபுட் தான் ஏற்கனவே கொண்டிருந்த பார்வைகளின் ஊக ஆய்வாக ஒரு பகுதி அமைந்திருந்தது. தமிழ்ப் பழமொழிகள் என்னும் புகழ்பெற்ற இவரது நூல் 1842இல் முதன் முதலாக வெளியிடப்பட்டது. 1874இல் இதன் திருந்திய பதிப்பு வெளியானது. ஆங்கில-தெலுங்கு அகராதி (1867), ஆங்கில-தமிழ் அகராதி (1938) மற்றும் அவ்வையார் முதுமொழிகள் ஆகியவை இவரது புகழ்வாய்ந்த தொகுப்புகள் ஆகும். இக்காலத்தில் மக்கள் கல்வித்துறை இயக்குநராக பல வரைபடங்களையும் நூல்களையும் வட்டார மொழிகளில் உருவாக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

தினவர்த்தமானி (Percival 1874) என்னும் தமிழ் இதழைத் தொடங்கிப் புகழ் பெற்றார். இவ்விதழ் Civil and Military Services of Governmentஎன்கிற அமைப்பால் ஒருங்கிணைக்கப் பட்டது. தமிழ் மக்களிடையே சமூக, அரசியல் மற்றும் இலக்கியச் செய்திகளைப் பரப்புவதை நோக்கமாகக் கொண்டது. இவ்விதழ் 1855இல் வெளிக்கொணரப்பட்டது. சிறிது காலத்திற்குப் பின்பு அதே பெயரில் தெலுங்கு இதழ் ஒன்றைத் தொடங்கினார். தினவர்த்தமானி யின் அச்சகம் லிட்டில் போர்னே, லஸ், மைலாப்பூரில் இருந்தது. இங்குதான் பெர்சிவலின் வீடு அமைந்திருந்தது. இந்த இடம் தான் ராபர்ட் புரூஸ் ஃபுட் மற்றும் எலிசபெத் ஆனின் முதல் மகளான எலிசபெத் சோபியா மேரியின் பிறப்பிற்கும் எலிசபெத் ஆனின் இறப்பிற்கும் சான்றுபகர்கின்றது. பெர்சிவல் ஏற்காட்டில் பணி ஓய்வு பெற்றார். இவரது மகன் சாமுவேல் பெர்சிவலின் மரணம் (1881) இவருக்கு மிகப்பெரும் அதிர்ச்சியைத் தந்தது. மகன் இறந்த அடுத்த ஆண்டு (1882) ஜூலை 11ஆம் நாள் ஏற்காட்டில் பெர்சிவல் மரணித்தார்.

இத்தகைய புகழ்வாய்ந்த குடும்பத்தில்தான் ராபர்ட் புரூஸ் ஃபுட் திருமணம் செய்தார். சென்னையில் வாழ்ந்த சிறிய பிரித்தானியக் குழுமத்தினரான இருவரும் இந்தியப் பண்பாடு மற்றும் வரலாறு மீது கொண்ட ஈடுபாட்டின் காரணமாக ஒன்றிணைவது பெரும்பாலும் நேரக்கூடிய ஒன்று. இதனால் புரூஸ் ஃபுட், பெர்சிவலின் தாக்கம் பெற்றதும் பெர்சிவலால் ஈர்க்கப்பெற்றதும் நிகழ்ந்தது. இந்தியர்கள் குறித்த ஆய்வில் இங்கு காணப்படும் மாறுபடுதன்மை குறித்து, ‘இந்தியாவின் பெரும்பகுதியில் வாழும் இந்துக்களின் பண்பு மற்றும் சமூகப் பயன்பாடுகளில் இனம், மொழி, வாழிடம், காலநிலை என குறிப்பிட்ட பகுதிக்கான பொதுமைத்தன்மையாக எதனையும் குறிப்பிட்டுச் சொல்லுவது இயலாதது’ என்று பெர்சிவல் குறிப்பிட் டுள்ளார் (Percival 1874 : preface).

இந்தியாவின் வரலாற்றுக்கு முற்பட்ட மற்றும் வரலாற்றுக் கால மக்களிடத்து காணப்படும் நிலவியல் மற்றும் பகுதிசார் மாறுபாடுகளை விளங்கிக் கொள்வதில் ராபர்ட் புரூஸ் ஃபுட்டிற்கு ஒருவேளை பெர்சிவலின் இச்சிந்தனை தூண்டுகோலாக இருந்திருக்கலாம் (Foote 1916a). தம்முடைய ஈடுபாடுகளில் காணப்படும் பொதுமைத் தன்மை காரணமாக இவ்விருவரும் ஒன்றிணைந்தனர் என்பதை மட்டும் நாம் ஊகித் தறியலாம். இந்த ஈடுபாடே ஃபுட் தனது மனைவியைச் சந்திக்கவும் காரணமாக இருந்தது. 1882 ஜூலை 11ஆம் நாள் ரெவ.பெர்சிவலின் இரண்டாவது மகளான அன்னி ஃப்ளெட்சர், வில்லியம் ஆல்ஃப்ரெட் சைமன் என்பவரை மணந்து கொண்டார். சைமன், ஆல்ப்ரெட் ராட் ஃபோர்ட் சைமன் என்பவரின் மகன் என்றும் வருவாய்த்துறை உதவி இயக்குநர், திருமணமாகாதவர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இருவரும் சென்னையில் வாழ்ந்து வருகின்றனர் எனவும் அதற்கு பீட்டர் பெர்சிவல், ஹெச்.எஸ்.ஸ்மித் மற்றும் ஆலிஸ் பி.சைமன் ஆகியோர் சாட்சியாக இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சைமன் பின்னாளில் சென்னை சிறைச்சாலை மேலதிகாரியாக இருந்தார். இது ஃபுட்டின் எழுத்துக்களிலும் உயிலிலும் பலமுறைச் சுட்டப்பட்டுள்ளது. மேலும், தமிழ்ப் பழமொழிகள் குறித்த அவரது ஆய்விலும் சைமன் குறிப்பிடப்பட்டுள்ளார். புலமையாளர்கள் மத்தியில் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழியில் தேர்ந்த ஃபுட் தன்னுடைய மொழித்திறன் காரணமாக உள்ளூர் கிராமவாசிகளிடம் தான் தேடிச்சென்ற தொல்பழங்கால நினைவுச்சின்னங்கள் மற்றும் இடங்களின் பொருட்டு எளிதில் தொடர்புகொள்ள முடிந்தது. ஃபுட், பெர்சிவல் ஆகிய இருவரும் இனிமையான ஏற்காடு மலைப் பகுதியில் பின்னாளில் பணி ஓய்வு பெற்றுக் குடியமர்ந்தனர். ஃபுட், இப்பகுதியில் தான் குடியமர வேண்டும் என்கிற எண்ணத்திற்கு பீட்டர் பெர்சிவல் காரணமாக இருந்திருக்க வாய்ப்புள்ளது.

எலிசபெத் ஆனின் மறைவிற்குப் பின்பும் பீட்டர் பெர்சிவலின் தொடர்பு நீடித்தது என்பதற்கு இவ்விருவரின் உயிலே சாட்சியாக உள்ளது. Will of Revd.P.Percival 1882; Will of R.B.Foote 1899, Codicil 1908). பீட்டர் பெர்சிவல் தன்னுடைய இறுதி விருப்ப ஆவணத்திலும் உயிலிலும் ராபர்ட் புரூஸ் ஃபுட் மற்றும் வில்லியம் ஆல்ஃப்ரெட் சைமன் ஆகிய தனது இரு மருமகன்களுக்கும் சொத்துக்களுக்கான உரிமப்பத்திரத்தை அளித்துள்ளார் (dated 8th August 1882). பீட்டர் பெர்சிவலின் மரணத்தின்போது ஃபுட் திருநெல்வேலிப் பகுதியின் நில அளவைப் பணியில் இருந்தார் (Foote 1883). பீட்டர் பெர்சிவல் சமய ஆலயங்களில் மதகுருவாக லஸ் பகுதியில் இருந்தது குறித்து தன்னுடைய உயிலில் விளக்கி யுள்ளார். இவற்றுக்கிடையே இந்திய நிலவியற் கழகத்தைச் சேர்ந்த ராபர்ட் புரூஸ் ஃபுட் பெர்சிவலினுடைய விருப்ப ஆவணத்தைச் நிறைவேற்றுபவர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. தான் மரபுரிமையாகக் கொடுக்கும் சொத்துக்களையும் பொருட்களையும் பற்றிக் குறிப்பிடும்போது தான் வாழ்ந்த காலத்தில் ராபர்ட் புரூஸ் ஃபுட்டிற்கு கொடுத்துள்ள சொத்துக்களைப் பற்றியும் கூறியுள்ளார். ஃபுட்டின் முதல் மனைவி (எலிசபெத் ஆன்) வழியிலான தன்னுடைய பெயரப் பிள்ளைக்காக கொடுக்கப்பட்டது. பெர்சிவலின் பெயர்த்தி மேரி ஃப்ளோரா எலிசபெத், ஹென்றி ஆலன் என்பவரை நாகப்பட்டினத்தில் மணந்து கொண்டார். இத்திருமணத் திற்கு ராபர்ட் புரூஸ் சாட்சியாக இருந்துள்ளார். ஃபுட் குழந்தைகளின் ஞானஸ்நானத்தில் பெர்சிவல் மதகுருவாக வழிபாடாற்றியுள்ளார். எனவே, ஃபுட், பெர்சிவல் குடும்பத்தாரோடு கொண்ட தொடர்பு நீடித்தது என்பது புலனாகிறது.

எலிசபெத் ஆன் ஃபுட்டும் கற்கருவி விளக்கப்படங்களும்

ராபர்ட் புரூஸ் பல்லாவரத்தில் புகழ்வாய்ந்த கற்கருவியினைக் கண்டுபிடிப்பதற்கு ஒரு ஆண்டிற்கு முன்பு (1862) ஜூன் 7ஆம் நாள் எலிசபெத் ஆனை மணந்து கொண்டார். திருமணப்பதிவேட்டில் இவர், வில்லியம் ஹென்றி ஃபுட்டின் மகன் எனவும் சென்னையில், நிலவியற் கழகத்தில் நிலவியலாளர் எனவும் இன்னும் மணமாகாதவர் எனவும் குறிக்கப்பட்டுள்ளது. இத்திருமணம் ரெவ.ஏ.எஸ்.சைமன் என்பவரால் சென்னை சாந்தோமில் நடத்தப்பட்டது. இதற்கு ஃபுட்டின் தாயார் சோபியா ஃபுட்டும் இவரது நண்பரும் உடன்பணியாளருமான வில்லியம் கிங்கும் சாட்சியாக இருந்துள்ளனர்.

பல்லாவரத்திலும் அத்திரப்பாக்கத்தைச் சுற்றிலும் தான் கண்டெடுத்த குறிப்பிடத்தக்க கண்டுபிடிப்புகளை அடிப்படையாகக் கொண்டு ஃபுட் மிக முக்கியமான முதல் ஆய்வுக்கட்டுரையை வெளியிட்டார் (Foote 1866). 1864 பிப்ரவரி 26ஆம் நாள் அரச நிறுவனத்தில் தான் பேசிய கருத்துரையை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது இக்கட்டுரை. கற்கருவிகளின் பல வரைபடங்கள் இவ்வுரையின் துணைச்சேர்க்கையாக அமைந்தன. The Geologist என்னும் இதழில் வெளிவந்த கட்டுரையில் கற்கருவிகளைப் பற்றிய தன்னுடை அறிவுப்போதாமையை வெளிப் படையாக ஒப்புக்கொண்டுள்ளார். இது The Geologist no.35,37ஆகிய இதழ்களில் எஸ்.ஜே.மெக்காய், எஃப்.ஜி.எஸ், எஃப்.எஸ்.ஏ ஆகியோர் எழுதிய கட்டுரைகளில் இச்செய்தி குறிப்பிடப்பட் டுள்ளது. பின்பு 1861இல் வெளியான ‘Cheap Popular Scientific Diagrams’ என்னும் நூலில் பாறைப்படுகையினின்று கண்டெடுக்கப் பட்ட சிக்கி முக்கிக் கல்லாலான கருவி ஒன்றின் படத்திற்கான (No.VI) விளக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. “என்னுடைய கண்டுபிடிப்பு மெய்யான கற்கருவி என்பது குறித்து எந்த தயக்கமுமில்லை. எனவே இதை என்னுடைய நண்பரும் உடன் பணியாளருமான வில்லியம் கிங்கிற்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிடுவதிலும் என்னுடைய குடும்ப உறுப்பினர்கள் பலரிடத்துக் காண்பிப்பதிலும் மனநிறைவு அடைகிறேன்.” (Foote 1866:2-3)என்று குறிப்பிட்டுள்ளார்.

பல ஆண்டுகள் கழித்து தான் எழுதிய அக்கட்டுரையைக் குறித்து எழுதும்போது தன்னுடைய நன்றியைத் தெரிவிக்கும் வகையில் “என்னுடைய கட்டுரைக்கான 27 ஒளிப்படத் தகடுகளில் பெரும்பான்மை என்னுடைய மனைவியால் வரையப் பட்டது. அவை செம்மையற்று வரையப்பட்டிருந்தாலும் அக் கருவிகளின் தத்ரூப வடிவமாக இருந்தன.” (Foote 1916a:109) என்றார். இத்தகைய பரபரப்புகளுக்கிடையே ஒரு துயரம் நேர்ந்தது. கல்லீரல் பகுதியில் ஏற்பட்ட கட்டியின் காரணமாக 1870 ஜூன் 30இல் எலிசபெத் ஆன் சென்னையில் மரணித்தார். புனித ஜார்ஜ் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டார். ஏழு வயதுடைய ஹென்றி புரூஸ், ஐந்து வயதுடைய எலிசபெத் சோபிய மேரி, மூன்று வயதுடைய விவியன் மற்றும் பிறந்து சில மாதங்களே ஆன வயலெட் ஆன் ஆகிய நான்கு குழந்தைகளை விட்டுப் பிரிந்தார். சென்னை மாகாணத்து தென்பகுதியின் உள்ளார்ந்த பகுதிகளின் நில அளவைப்பணிக்கிடையே ராபர்ட் புரூஸ் ஃபுட் மனைவியை விட்டுப் பிரிந்து நான்கு குழந்தைகளோடு தனிமையாக்கப்பட்டார். இத்தகைய ஒரு இன்னலைக் குறித்தோ அல்லது தன் குழந்தைகளை வளர்ப்பதில் நேர்ந்த இடர்ப்பாடுகளைக் குறித்தோ தான் எழுதிய வளமான தன்வரலாற்றில் பெரிதாக எதுவும் எழுதவில்லை. எனினும் 1870இல் வெளியான சிறிய குறிப்பு ஒன்றில் காணப்படு கிறது. எலிசபெத் ஆன் மற்றும் ராபர்ட் புரூஸ் ஃபுட்டின் குழந்தைகள் ஃபுட்டின் மறைக்கப்பட்ட வாழ்க்கையில் பெரும் பங்களிப்புச் செய்துள்ளனர். அவை குறித்துப் பின்னர் விவாதிக்கலாம்.

பல்லாவரம், அத்திரப்பாக்கம், பில்லா சர்கம் பகுதிகளில் ஹென்றி புரூஸ் ஃபுட்

1863ஆம் ஆண்டு ராபர்ட் புரூஸ் ஃபுட்டின் வாழ்வில் குறிப்பிடத் தக்க ஆண்டாக உள்ளது. 1863 மே 30ஆம் நாளில்தான் பல்லாவரம் பகுதியில் ஒரு பழைய கற்காலக் கருவி ஒன்றைக் கண்டெடுத்தார். இந்த மகிழ்ச்சியான நிகழ்வு (Foote 1866) தனக்குப் பிடித்ததும் மூத்த மகனுமான ஹென்றி புரூஸ் ஃபுட் பிறந்த சில நாட்களிலேயே நடந்தது. ஹென்றியின் பிறப்புச் சான்றிதழின்படி அவர் ராபர்ட் புரூஸ் ஃபுட் மற்றும் எலிசபெத் ஆனிற்கு மகனாக 1863ஆம் ஆண்டு ஏப்ரல் 22ஆம் நாள் பிறந்தார். மே 24இல் ஞானஸ்நானம் பெற்றார். இவர் லஸ்ஸின் ஹோப் வில்லாவில் பிறந்தார். ஃபுட் இந்திய நிலவியற் கழகத்தின் உதவி நிலவியலாளர் எனக் குறிப்பிடப்பட் டுள்ளார். ஹென்றியின் ஞானஸ்நானம் குடும்பத்திற்குள்ளாகவே நடத்தப்பெற்றது. குழந்தையின் தாத்தாவான பீட்டர் பெர்சிவலே வழிபாடு செய்யும் குருவாகச் செயல்பட்டார். அதே ஆண்டு செப்டம்பர் 28ஆம் நாள் ஃபுட்டும் கிங்கும் அத்திரப்பாக்கத்தில் கருவிகள் சிலவற்றைக் கண்டெடுத்தனர். இந்தியத் தொல்லியலின் பாதையை மாற்றியதோடு மட்டுமன்றி, மேற்கில் மானுடத் தொல்பழஞ்சின்னங்கள் குறித்த விவாதங்களில் முக்கிய அங்கம் வகித்த அவரது கண்டுபிடிப்புகளுக்கிடையே ஹென்றி பிறந்தார். ஆந்திரப்பிரதேசத்தில் உள்ள பிரசித்த பெற்ற குகை கொண்ட பில்லா சர்கத்தில் அகழ்வாய்ந்ததோடு நிலஅளவைப் பணியும் செய்தார்.

தான் பெற்ற பிள்ளைகளில் ராபர்ட் புரூஸ் ஃபுட் தன்னுடைய மூத்த மகனான ஹென்றியிடம் மிகுந்த அன்பு கொண்டவராக இருந்தார். தொல்லியல் துறையில் கொண்டிருந்த ஈடுபாட்டின் காரணமாக இருவருக்கிடையே நெருக்கமான உறவு ஏற்பட்டது என்பதை அவரின் உயிலின் மூலம் அறியமுடிகிறது. ஹென்றி புரூஸ் புகழார்ந்த வாழ்க்கை வாழ்ந்தவர். 1880 அக்டோபர் 1ஆம் நாள் பீரங்கிப் பயிற்சிப்படை நிறுவனத்தில் மாணவப் பயிற்சிப் படைஞராகவும் 1882 அக்டோபர் 1ஆம் நாள் துணை முதன்மை யராகவும் 1891 அக்டோபர் 12ஆம் நாள் படைத்துறைத் தலைவ ராகவும், பின்பு படைத்துறை அதிகாரி (1900, ஏப்ரல் 1) மற்றும் படைத்துறை அணுக்க முதல்வராக விளங்கினார். 1893ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்திய பீரங்கிப்படைத் துறைக்கு மாற்றம் செய்யப் பட்டார். 1904 ஜனவரி 6ஆம் நாள் முதல் இஷாப்பூர் சுழற்துப்பாக்கி நிறுவனத்தின் (மேற்கு வங்காளம்) உயர் அதிகாரியாக ஆனார். 1904 மார்ச் 30இல் (நைனிடால்) பீரங்கிப்படை கண்காணிப்புத் துறை உதவி இயக்குநராகவும் 1917 அக்டோபர் 11இல் இந்திய பீரங்கிப் படைத்துறையில் இணை அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டார். 1919 செப்டம்பர் 7ஆம் நாள் இந்திய ஓய்வூதியத்தோடு பணி ஓய்வு பெற்றார். 1932 ஜூன் 8ஆம் நாள் ஃபார்ன்ஹாம் காமனில் மரணமுற்றார்.

ஆந்திர பிரதேசத்தில் பில்லா சர்கம் குகைகளில் மேற்கொண்ட பணியின் பொருட்டு(Foote 1884a, 1884b, Murty 2004) தொல்லியலாளர்களிடையே ஏற்கனவே அறியப்பெற்றவர் ஹென்றி புரூஸ் ஃபுட். தன்னுடைய விடுப்புக் காலத்தில் ஹென்றி, ராபர்ட் புரூஸ் ஃபுட்டுடன் இணைந்து பணியாற்றுவார். சென்னை ஆளுநர் கிராண்ட் டஃப்பின் அறிவுறுத்தலின்படி பில்லாசர்கம் குகைகளை ஆராயவும் கேப்டன் நியூவோல்ட் பணியில் உறுதுணையாக இருக்கும்படியும் ஃபுட், ஹென்றியைக் கேட்டுக்கொண்டார். ஃபுட்டும் ஹென்றியும் கர்நூல்(Kurnool) பகுதி வரை ஆய்வு செய்தனர். ஆனால் பில்லா சர்கம் பகுதி குறித்த ஆய்வுமுடிவு தவறாக நிரூபிக்கப்பட்டது. எனவே எர்ரா சரி கபியில்(Yerra Zari Gabbi) மட்டும் அவரால் வேலை செய்ய முடிந்தது. ஆனால் எந்த வெற்றியும் காணமுடியவில்லை(Foote 1884, 1916a: 191).. தந்தையும் மகனும் பின்னாளில் பில்லா சர்கத்தை மிகச் சரியாகக் கண்டறிந்தனர் (Foote 1916a : 191).

1884இல் புரூஸ் ஃபுட் வேறு பணியின் பொருட்டு அழைக்கப்பட்டார். அப்பணியைத் தொடர்வதில் சென்னை ஆளுநர் கிராண்ட் டஃப் காட்டிய ஆர்வத்தின் காரணமாக ஃபுட்டின் மகன் ஹென்றியிடம் அப்பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. பீரங்கிப் படைப்பிரிவின் முதன்மையரான ஹென்றி புரூஸ் தற்காலிகமாக தந்தை விட்டுச் சென்ற பில்லா சர்கம் அகழ்வாய்வுப் பணியில் ஈடுபட்டார். ஹென்றி ஏற்கனவே இப்பணியில் சில வாரங்கள் தன்னுடைய தந்தையோடு கழித்துள்ளார். இது குறித்து ஃபுட் எழுதும் போது, ‘தன்னுடைய ஆய்வுத் தேடலிலும் பல குகை அகழ்வாய்வு களிலும் அருந்துணையாக இருந்து உதவியுள்ளார் ; அதன் மூலம் இந்நாட்டைப் பற்றிய அறிவைப் பெற்றதோடு தான் மேற்கொண்ட ஆய்வுப் பணியில் துணைநிற்கும் மக்களைப் பற்றிய அறிவையும் பெற்றார்’ (Foote 1884b : 200) என்று ஹென்றியைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.

மார்ச் முதல் மே வரை ஹென்றி பர்கேட்டரி குகை மற்றும் சாத்தெட்ரால் குகை அகழ்வாய்வினைத் தொடங்கிப் பணி செய்தார். அவருடைய கண்டுபிடிப்புகளைக் குறித்து அனைவரும் அறிவர் (Foote 1884b) ஆவணப்படுத்தலில் துல்லியமும் தெளிவும் எந்த அளவிற்கு முக்கியத்துவம் பெற்றது என்பதை ஃபுட் தன்னுடைய எழுத்துக்களினூடே பல இடங்களில் சுட்டியுள்ளார். மேலும், ஆய்வுப் போக்கு இல்லாத அகழ்வாய்வுகளையும் தெளிவற்ற ஆவணப்படுத்தத்தையும் ஃபுட் பெரும்பாலும் விமர்சித்துள்ளார்(Foote 1916a). எனவே தன்னுடைய மகனுடைய பணியின் பொருட்டு மிகவும் பெருமிதம் அடைந்தார். ஆய்வு எந்த நிலையில் உள்ளது என்று மீள்பார்வை செய்ய மே மாதத்தில் குகைகளுக்குச் சென்றார். அதில் தான் பெற்ற மனநிறைவினைக் குறிப்பிடும்போது, ‘திரு. ஹென்றி ஃபுட் தன்னுடைய அனைத்து அகழ்வாய்வாளர்களையும் மிகச் செறிவாக ஒருங்கிணைத்தார். எனவே அப்பணி செறிவாகவும் பாதுகாப்பாகவும் நடந்தேறியது’(Foote 1884b : 208) என்று குறிப்பிட்டுள்ளார்.

தன் எழுத்துக்களில் தன்னுடைய மகனைச் சிறப்பித்துக் கூறத் தவறவில்லை. இதனை ‘ஹென்றி தன்னை நம்பி ஒப்படைத்த மிகக்கடினமான வேலையை மிகத் திறமையான முறையில் முடித்துக் காட்டியுள்ளார். அவருடைய திறமை கருதி திரு.கிராண் டஃப்பிடம் தான் செய்த பரிந்துரைக்கேற்ப ஹென்றி நிறைவாகச் செயல்பட்டுள்ளார். அவருடைய பணி குழுவினராலும் அங்கீகரிக்கப்பட்டது’ (Foote 1884b : 208) என்றார்.ஹென்றி புரூஸ் ஃபுட் பின்னாளில் ஜெனி எலிசபெத் ஜெசட் என்பவரை மணந்து கொண்டார். இவர்களின் முதல் குழந்தையின் பிறப்புச் சான்றிதழில் இவர் பெயர் வேரா வயலெட் ஜெனி என்றும் 1899 மார்ச் 3ஆம் நாள் டம்டம் நகரில் திமால் என்னும் இடத்தில் பிறந்ததாகவும் அக்காலத்தில், டம்டம் நகரில் பீரங்கிப்படைத் துறையின் கேப்டனாக ஹென்றி இருந்ததாகவும் குறிப்பிடப்பட் டுள்ளது. வங்காளத்தில் டம்டம் நகரில் 1904 டிசம்பர் 5ஆம் நாள் ஹென்றி ஃபுட்டிற்கு ‘பாப்’ என்கிற ஹென்றி ராபர்ட் போர்மேன் ஃபுட் பிறந்தான். இம்மகன் பிறந்த பொழுது ஹென்றி ஃபுட் வங்காளத்தில் படைத்துறைப் பணித்தலைவராக இருந்தார்.

1942இல் விக்டோரியா க்ராஸ் என்னும் விருதினைப் பெற்றார். மேற்கு ஆப்பிரிக்கப் பாலைவனத்தில் ஏழாவது இயங்கும் பீரங்கிப்படை வகுப்பணியின் ஆணை அதிகாரியாக ரோமெல் படையை மிக வீரமாக எதிர்த்தமைக்காக இவ்விருதினைப் பெற்றார் (Foote H.R.B. Obituary, 1993) முதல் மனைவியின் இறப்பிற்குப் பின்பு ஹென்றி புரூஸ் 1911ஆம் ஆண்டு ஏப்ரல் 26ஆம் நாள் லண்டனில் லாங்ஹாமில் உள்ள ஆல் சோல்ஸ் ஆலயத்தில் பிரான்சிஸ் கிரேஸ் ஸ்லேட்டர் (1876-1955) என்பவரை மணந்து கொண்டார். 1919 இல் ஹென்றி புரூஸ் பணி ஓய்வு பெற்று 1920களில் பிரித்தானிய டைனார்டு பகுதியில் தகுந்த வசதியோடு வாழ்ந்தார். பின்பு இங்கிலாந்திற்குத் திரும்பி ஃபான்ஹாம் காமனில் வாழ்ந்து 1932இல் மரணமுற்றார். ஹென்றி மற்றும் பிரான்சிஸ் ஃபுட்டிற்கு டாக்டர். ஜான் புரூஸ் ஃபுட் (b. 1918, M.A, M.D, F.R.C Path, ordained 1979) என்கிற மகனும் கல்விப்புலத்தில் புகழ்மிக்க வாழ்வை மேற்கொண்ட மார்கரெட் சிபெல்லா என்கிற மகளும் இருந்தனர்.

இரண்டு சிவந்த சுடுமண் பொம்மைகளும் எலிசபெத் சோபியா மேரி ஃபுட்டும்

ராபர்ட் புரூஸ் ஃபுட்டிற்கும் எலிசபெத் ஆனிற்கும் பிறந்த இரண்டாவது குழந்தை எலிசபெத் சோபியா மேரி (லில்லி) ஆவார். இவர் 1865 டிசம்பர் 28ஆம் நாள் சென்னை லஸ், லிட்டில் போர்னேவில் பிறந்தார். 1866 ஜனவரி 21இல் சாந்தோமில் ஞானஸ்நானம் செய்யப்பெற்றார். இக்காலத்தில் சென்னை மாகாணத்தில் ஃபுட் குடும்பத்தினர் வாழ்ந்து வந்தனர் ; சென்னை மற்றும் தென்னாற்காட்டுப் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட செவ்வண்ண இரும்புக் களிமண்ணாலான கருவிகள் குறித்த ஆய்வுகளை வெளியிடும் பணியில் ராபர்ட் புரூஸ் ஃபுட் ஈடுபட்டிருந்தார். எலிசபெத், ஹெர்பர்ட் டபுள்யூ. லீமிங் என்பவரை 1890 ஆகஸ்டு 12 அன்று ஏற்காட்டில் மணந்து கொண்டார். லீமிங், ஏற்காடு ஷெவ்ராய் குன்றுகளில் உள்ள ஸ்காட்ஸ்ஃபோர்த் எஸ்டேட்டின் காப்பித்தோட்ட முதலாளி. இத்திருமணம் ராபர்ட் புரூஸ் ஃபுட் இந்திய நிலவியற் கழகத்திலிருந்து பணி ஓய்வு பெறுவதற்கு ஒரு ஆண்டிற்கு முன்பு நடைபெற்றது. பிரான்ஸெஸ்கா ஹெச்.வில்சன் தன்னுடைய கட்டுரையில் (1888: 42) ஏற்காட்டில் உள்ள ராபர்ட் புரூஸ் வீடு மிக அழகானது என்று குறிப்பிட்டுள்ளார். தன்னுடைய மாமனார் ரெவ.பீட்டர் பெர்சிவலின் வழித்தோன்றலாக ஃபுட் ஏற்கனவே இக்குன்றில் அமைந்திருந்த வீட்டினை முயன்று பெற்றுவிட்டார்.

ஹெர்பர்ட் டபிள்யூ.லீமிங் தன்னுடைய ஈடுபாட்டின் காரணமாக முலாவில் (சேலம்)கண்டுபிடித்த கண்டுபிடிப்புகளை ஃபுட் சிறப்பாக எடுத்துக்காட்டியுள்ளார்; மேலும், இவரைத் தன்னுடைய மருமகன் என்றும் குறிப்பிட்டுள்ளார் (Foote 1916a: 62, 1916b: 10).சுவர் ஒன்றை எழுப்பும் பொருட்டு நீள்வரிப்பள்ளம் ஒன்றைத் தோண்டிய பொழுது இரண்டு சிவப்பு சுடுமண் பொம்மைகளை லீமிங் கண்டெடுத்தார். அவை கால்கள் இன்றி உருளை வடிவ நிலைகோளில் ((stand) நிற்க வைக்கப்பட்டிருந்தன. காண்பதற்கு நிமிர்ந்து தாங்கும் சிறிய குடுவை ((Little upright vases) போல இருந்தது. அவற்றின் அளவு 5 3/8 அங்குலம்; அவை நினைவுச் சின்ன வரிசை எண் 1924ளீ மற்றும் 1924றீ என்று 21, 22 மற்றும் 23ஆம் அச்சுப் பதிப்பில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. அவ்வுருவங்கள் அழகிலி என்று கூறுவதற்கில்லாமல் ஆனால் அலங்காரமற்றுக் காணப் பட்டன. எனினும் அவற்றின் தனித்துவமான சிகை அலங்காரத் திற்காக அவற்றின் முக்கியத்துவத்தை ஃபுட் உணர்ந்து செயல் பட்டார். அவற்றின் தலைப்பகுதி சுற்றிலும் மயிர்ச்சுருளும் மேல்பகுதியில் சீப்பும் அணியப்பட்டிருந்தது (Foote, 1916a: 62,1916b: 10). உறங்கும்போது கலைந்துவிடாமலிருக்க அச்சுருளைப் பெண்கள் பயன்படுத்தியிருக்கக்கூடும் என ஊகித்தறிய முடிகிறது. கழுத்தணிகள் குறித்தும் இவை விளக்கின.

ஷெவ்ராய் குன்றுகளைச் சேர்ந்த எம்.எஸ்.ஹைட், இ.கிங் ஹார்மன், எஃப்.டி.ஷார்ட், ஆர்.எஃப்.கேரி, தர்ஸ்டன் ஷார்ட் ஆகியோரும் பிற பண்ணை முதலாளிகளும் பழஞ்சின்னங்களையும் சூழிடங்களையும் தேடுவதில் ஆர்வம்காட்டி கண்டெடுத்தவற்றை ஃபுட்டிற்கு அனுப்பியுள்ளனர். 1890 களுக்குப் பிறகு தொகுக்கப்பட்டவற்றில் பெரும்பாலானவை (Foote 1916a, b) இவையே. இதன் காரணமாக சேலம் மாவட்டத்தில் பெரும்பாலான புதிய கற்கால மற்றும் இரும்புக்கால பழஞ்சின்னங்களை ஆவணப்படுத்த முடிந்தது. அவரது மகளின் திருமணத்திற்குப் பின்பும் பணி ஓய்வுக்குப் பின்பும் பெரும்பாலான பழஞ்சின்னங்கள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கு எதிர்மாறாக அதே பகுதியில் முற்காலத்தில் தான் செய்த ஆய்வில் பழஞ்சின்னங்களையோ சூழிடங்களையோ அவரால் அடையாளம் காணமுடியவில்லை (King and Foote 1864எனவே மகளின் திருமண உறவு (லீமிங்) பெருந்துணை புரிந்துள்ளது என்பதை உணரமுடிகிறது. ஹெச்.டபுள்யூ. லீமிங் மரணத்திற்குப் பின்பு எலிசபெத் சோபியா மேரி தேயிலைத் தோட்ட முதலாளி வால்டர் செர்ரி என்பவரை மணந்து கொண்டார். இவர்களுக்குக் குழந்தைகள் இல்லை. 

தொல்பழங்காலத் தொல்லியல் உலக மாநாடும் விவியன் பெர்சிவல் ஃபுட்டும்

ராபர்ட் புரூஸ் ஃபுட் மற்றும் எலிசபெத் ஆனின் இரண்டாவது மகன் விவியன் பெர்சிவல் 1867 நவம்பர் 30இல் சாம்வூட் என்னும் இடத்தில்(Charmwood, Streatham Common, Surrey) பிறந்தார். 1868 ஜனவரி 25இல் இவருக்கு ஞானஸ்நானம் செய்யப்பட்டது. தொல்பழங்காலத் தொல்லியல் மாநாடு 1868ஆம் ஆண்டு ஆகஸ்டு 20-28 வரை நார்விச் என்னும் இடத்தில் நடைபெறவிருந்தது. ஆகஸ்டு 25இல் ஐந்தாவது அவையில் ஃபுட்டின் ஆய்வுக்கட்டுரை வழங்கப்பட இருந்தது (Foote 1869). இந்தியாவின் சார்பாக மாநாட்டின் செயற்குழுவில் ஒருவராகவும் ஒருங்கிணைப்புக் குழுவில் கடிதத்தொடர்பு கொள்ளும் தொலைத்தொடர்பு உறுப்பின ராகவும் ஃபுட் இருந்தார்.

விவியன் பெர்சிவல் பிறந்த சமயத்தில் ஃபுட் சாம்வூட்டில் தெரியவில்லை. மாநாட்டின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு காணும்போது இச்சமயத்தில் ஃபுட் இங்கிலாந்தில் இருந்திருப்பார் என அறியமுடிகிறது. புலமையாளர் களோடும் பார்வையாளர்களோடும் கொண்ட ஊடாட்டத்தில் அவர் காண்பித்த பழஞ்சின்னங்கள் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன ((Foote 1916a: 110). எனவே இவர் அச்சமயத்தில் இங்கிலாந்தில் மாநாட்டில்தான் இருந்தார் என்பதைத் தெளிவுபடுத்துகின்றது. இச்சமயத்தில் பிறந்த குழந்தை ஃபுட்டின் குடும்பத்திற்கு துன்பத்தையே விளைவித்தது. விவியன் பெர்சிவல் ஃபுட் குடும்பத் திற்கு மிகுந்த மனக்கசப்பைக் கொடுத்தவனாக இருந்தான். இவனுடைய சகோதரன் ஹென்றி புரூஸ் விவியனுக்கு பெருமளவு கொடுத்துள்ளான் என்பதைக் குடும்பச் சான்றுகள் மூலம் அறியமுடிகிறது.

வெள்ளிய நீலமணிக்கல்லும் வயலெட் ஆனி ஃபுட்டும்

ராபர்ட் புரூஸ் ஃபுட் மற்றும் எலிசபெத் ஆனின் கடைசி குழந்தை வயலெட் ஆனி (1870-1958) 1870இல் பெல்லாரி பகுதியில் தாரோஜி என்னும் இடத்தில் அமைக்கப்பட்டிருந்த மிகப்பெரும் வெடிக் கோட்டைப் பகுதியில் உள்ள பங்களாவில் பிறந்தார். மே 5ஆம் நாள் அவருடைய தாத்தா (பீட்டர் பெர்சிவல்) ஞானஸ்நானம் செய்து வத்தார். இப்பெண் மிகவும் நோய்வாய்ப்பட்டபோது இவர் சாந்தோமில் இருந்தார். வயலெட் ஆனி பிறந்த சில மாதங்களில் அவரது தாயார் இறந்துவிடுகிறார். அதன் பின்பு அக்குழந்தையை பீட்டர் பெர்சிவல் குடும்பத்தார் பராமரித்து வந்ததாக குடும்பத்தினர் குறிப்பிட்டுள்ளனர். ஃபுட் தன்னுடைய ஒரு ஆய்வுக்கட்டுரையில் பெல்லாரி அருகில் கிடைத்த கண்டுபிடிப்புகளைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார் (Foote 1873a);எனவே, இப்பகுதியில் நிலஅளவைப் பணி மேற்கொண்டிருந்தபோது இவள் பிறந்திருக்கக் கூடும்.

ஃபுட்டின் மஹாராட்டா (மஹாராஷ்டிரா) பகுதி குறித்த நிலவியல் ஆய்வுக்குறிப்புகள் மிகவும் பிற்காலத்தது (1876). ஆனால் 1885 ஏப்ரல் 23ஆம் நாள் தாரோஜி பகுதியில் தொல்பழங்காலத்தைச் சேர்ந்த நீள்வட்ட வடிவ கல் ஒன்றைக் கண்டறிந்ததாகக் குறிப்பிட் டுள்ளார் (Foote 1916b : 35).ஃபுட்டின் எழுத்துக்களில் வயலெட் ஆனி தென்பட்டார்; ஃபுட்டின் துறைசார்ந்த ஈடுபாட்டில் பங்குகொண்டார். பரோடாவில் கண்டெடுத்த பழஞ்சின்னங்களைப் பற்றி ஃபுட் குறிப்பிடும்போது 1892 பிப்ரவரி 19ஆம் நாள் பரோடா அருகில் வஹோரியா தாலுக்கா வயரா பகுதியில் தானும் தன்னுடைய மகள் செல்வி.வயலெட் ஆனியும் பழஞ்சின்னங்களைச் சேகரித்தோம் என்றார். 1891ஆம் ஆண்டு பரோடாவில் அரசாங்க நிலவியலாளராக நியமிக்கப்பட்ட பின்பு குடும்பத்தினர் அனைவரும் இப்பகுதிக்கு இடம்பெயர்ந்தனர் என்கிற குறிப்பிலிருந்து இது தெளிவாகின்றது. இக்காலத்தில் தந்தையும் மகளும் சேகரித்த பழஞ்சின்னங்களில் (No.3049-3057) புதிய கற்காலப் பொருட்களும் இருந்தன.

எருதின் தலை உருவம், சுத்தி, பந்து, நீலமணிக்கல் மற்றும் அகேட்டாலான உள்ளீடற்ற கல், சீவல் துணுக்கு, மூடி, கலன்களின் வாய்ப்பகுதி, லிங்க உருவம், வழவழப்பான அம்மிக்குழவி போன்ற கல் முதலிய பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. ஃபுட்டின் மகள் கூரிய செதுக்கப்பட்ட திண்ணிய பசிய நிற குளோரைட் கொடுவரிப்பாறைத் துணுக்கு No.3049 ஒன்றைக் கண்டறிந்தார். அது கொம்புகளற்ற எருதின் தலையை ஒத்த உருவமாக இருந்தது (Foote 1916a: 145, 1916b:196-197) மேலும், வயலெட் ஆனி ஃபுட் பரோடா பகுதியில் சந்தாகாலின் தென்கிழக்குப் பகுதியிலுள்ள கூமா ஆற்றின் படுகையில் நீலமணிக்கல்லாலான சீவல் துணுக்கு, கண்ணாடிச் சரவிளக்கு, வெள்ளிய சீவல் துணுக்கு மற்றும் அகேட்டாலான உள்ளீடற்ற கல் (Nos.3059-3064) ஆகியவற்றைக் கண்டெடுத் துள்ளார். சாலி தாலுக்காவைச் சேர்ந்த கூமா ஆற்றின் தென்கரையில் வயலெட் ஆனி ஃபுட், மிகு நேர்த்தியான உள்ளீடற்ற நீலமணிக்கல், வெள்ளிய கண்ணாடி போன்ற பாறை (nos.3058), (Foote 1916a :145, 1916b: 196-197) முதலியவற்றைக் கண்டெடுத்தார். 1893 ஜனவரி 26ஆம் நாள் புனித ட்ரினிடி ஆலயத்தில் (ஏற்காடு) வயலெட் ஆனி ஃபுட், காட்லாப் லெச்லர் என்பவரை மணந்து கொண்டார். இவர் ஷெவ்ராய் குன்றிலுள்ள ப்ரூக்ளின் எஸ்டேட் பகுதியில் மதிப்புமிக்க குடும்பத்தைச் சேர்ந்தவர்.

குடும்ப ஆர்வமாக தொல்லியல் : எலிசா மெலிசா வெல்ஸ்

முன்னர் குறிப்பிட்டது போல 1870இல் ஃபுட்டின் முதல் மனைவி எலிசபெத் ஆன் மரணித்தார். 1873இல் சென்னை மற்றும் வடஆற்காடு பகுதிகளுக்குரிய நிலவியல் அறிக்கைகளை முடிப்பதில் ஃபுட் தீவிரமாக ஈடுபட்டிருந்தார் (Foote 1873b). 1872-73 ஆகிய ஆண்டுகளில் வியன்னா கண்காட்சிக்கான ஏற்பாடுகளில் தீவிரமாகச் செயல்பட்டார். இந்திய நிலவியற் கழகத்தின் சார்பாக காட்சிப் படுத்தப்படும் பெரும்பான்மை கனிமங்களுக்கும் புதைபடிவங் களுக்கும் ஃபுட் பொறுப்பாளராக இருந்தார். ஃபுட் தன்னுடைய சேகரிப்புகளிலிருந்த தென்னிந்தியக் கற்களையும் காட்சிப்படுத் தினார். அவை மிகுந்த அளவில் ஈர்க்கப்பெற்றன. தன்னுடைய மீள்வருகைக்கு முன் 1874 செப்டம்பர் 22ஆம் நாள் ஃபுட் தன்னுடைய தாய் வழி உறவான எலிசா மெலிசா வெல்ஸ்ஸை மணந்துகொண்டார் (at Fittleworth, Sussex England).

ஃபுட்டினுடைய தாயாரான சோபியாவின் சகோதரர் ஜிஃபார்ட் வெல்ஸின் மகளே எலிசா மெலிசா. இத்திருமண உறவு ஃபுட்டின் மரணம் வரைத் தொடர்ந்தது. எலிசா, ஃபுட்டின் வாழ்வில் மிகப்பெரும் பங்காற்றியுள்ளார். சென்னை மயிலாப்பூர் லஸ் பகுதியில் உள்ள லிட்டில் போர்னே விற்கு இவர் வந்தார். ஃபுட்டின் முதல் மனைவியின் குழந்தைகளை மட்டுமல்லாது தன்னுடைய நான்கு குழந்தைகளையும் பராமரித்தார். ஃபுட்டின் பணிகளில் எலிசா காண்பித்த ஈடுபாடு குறித்துப் பல இடங்களில் கூறப்பட்டுள்ளது. பெல்லாரி பகுதி ஆய்வின்போது துங்கபத்திரை நதியின் இடதுபுறக் கரை, ஹம்பாசாகரின் எதிர்ப்புறம் அமைந்த நகரில் புதிய கற்காலத்தைச் சேர்ந்த ஈமக்காட்டினை ஃபுட் கண்டடைந்தார். தன்னோடு இருந்த தனது மனைவி எலிசாவிடம் இந்தக் கண்டுபிடிப்பினைக் கூறினார். மிக நுட்பமாக ஆராய்ந்து யானை வடிவ தாழி (No.2886/7) (Foote 1916a: 185) ஒன்றை ஃபுட் கண்டெடுத்தார்.

வேட்டைக்காக காலை தொடங்கி மறுநாள் காலை வரை நேரத்தை நாம் செலவிட்ட போதும் ஃபுட் மற்றும் அவரது மனைவியால் மறைந்த விலங்குகளின் தலைகளைச் சரியாக இடம் குறிப்பிட்டுக் காணமுடியவில்லை (Foote 1916a: 185).ராபர்ட் புரூஸ் ஃபுட் மற்றும் எலிசா மெலிசாவின் முதல் குழந்தை மெலிசா வெல்ஸ் ஃபுட் 1875 அக்டோபர் 5ஆம் நாள் லிட்டில் போர்னே(லஸ்)யில் பிறந்தார். நவம்பர் 7ஆம் நாள் சாந்தோமில் ஞானஸ்நானம் செய்யப் பெற்றார். ஆனால், 1876 நவம்பர் 1இல் அக்குழந்தை இறந்தது. 1877 மார்ச் 11இல் மேரி ஆக்னஸ் பென்க்ராஃப் பிறந்தார். லிட்டில் போர்னேயில் உள்ள குடும்ப வீட்டில் பிறந்து பின்பு ஏற்காட்டில் புனித ட்ரினிடி ஆலயத்தில் ஞானஸ்நானம் செய்யப்பெற்றார். இச்சமயத்தில் ரெவ.பீட்டர் பெர்சிவல் ஏற்காட்டில் பணி ஓய்வு பெற்றிருப்பார் எனவும் இவருடைய பார்வையின் கீழ் இந்த ஞானஸ்நான நிகழ்வுகள் நடத்தப் பெற்றிருக்கும் எனவும் ஊகிக்க முடிகிறது. மேரி ஆக்னஸ், சார்லஸ் எக்லஸ் நிக்ஸன் ப்ரீஸ்ட்லி (a Lt.Col. in the Indian Army and Acting Military Police, Burma) என்பவரை மணந்து கொண்டார். 1878.

<http://www.geocities.com/atheus>,2960/kgf/1905.html).ஹெலன் ஸோ ஃபுட், நெவிலி ஹாரிஸன் என்பவரை மணந்து கொண்டார். ஃபுட்டின் கடைசி மகனான ஜிஃபார்ட் வெல்ஸ் புரூஸ் (1885-1954) சிலோனில் இரப்பர் தோட்ட முதலாளியாக இருந்தார்; மணமுடிக்கவில்லை.

தொல்பழங்கால நினைவுச்சின்னங்களும் அவற்றின் விளை பயன்களும் : இறுதி விருப்ப ஆவணம் மற்றும் உரிமப்பத்திரம்

ராபர்ட் புரூஸ் ஃபுட்டாகிய நான் ஐரோப்பாவில் பிரித்தானியத்தைச் சேர்ந்தவர். பிரித்தானிய இந்தியாவின் சென்னை மாகாணத்தில் வாழ்ந்து வரும் நான் அறிவிக்கும் என்னுடைய இறுதி விருப்ப ஆவணமும் உரிமப்பத்திரமும்” (விருப்ப ஆவணத்தின் சிறுபகுதி, 1899, பிற்சேர்க்கை, 1908) என்று தொடங்கியுள்ளார். ஃபுட்டினுடைய இறுதி விருப்ப ஆவணமும் உரிமப்பத்திரமும் அவருடைய ஆளுமை குறித்த பல செய்திகளைத் தருகின்றன. உயர்வாக எடுத்துக்காட்டப்பட்ட இந்த எழுத்துக்களினூடே ஒவ்வொருவர் பெயரும் உறவும் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன; விருப்பங்களும் வெறுப்புகளும் வெளிப்பட்டுள்ளன; குடும்ப வாழ்வில் எதிர்கொண்ட வேறுபட்ட உணர்வுகள் காண்பிக்கப்பட் டுள்ளன. சொத்துக்களின் விவரங்களும் கையிருப்பு மற்றும் பங்கீடும் குழந்தைகள் மற்றும் பிற உறவினர்களிடமிருந்து திரும்பப் பெற வேண்டிய கடன்தொகை பற்றிய குறிப்புகளும் மிகத் தெளிவாகக் குறிக்கப்பட்டுள்ளன. இவையாவும் ராபர்ட் புரூஸ் ஃபுட் ஒரு எதார்த்த மனிதன் என்பதைக் காண்பிக்கின்றன.

ராபர்ட் புரூஸ் ஃபுட் 1912 டிசம்பர் 29ஆம் நாள் கல்கத்தா மாகாண மருத்துவமனையில் மரணித்தார் என்பதை உயிலின் முதற்பக்கத்தின் ஓரத்தில் வேறு ஒருவர் கையெழுத்தில் எழுதப்பட்டவை தெரிவிக் கின்றன. லண்டன் காமன்வெல்த் அலுவலகத்திலிருந்து ஹெச்.ஆர்.பி.ஃபுட் (பெயரன்)க்கு 1962 டிசம்பரில் (Ref.R.2354/62) எழுதப்பட்ட ஒரு கடிதத்தில் ‘ராபர்ட் புரூஸ் ஃபுட் கல்கத்தாவில் 1913 ஜனவரி 3இல் எரிக்கப்பட்டார்’ என்னும் குறிப்பு உள்ளது. ஃபுட்டின் உயிலை அவரது மகன் ஹென்றி புரூஸ் ஃபுட் (விருப்ப ஆவண நிறைவேற்றப் பொறுப்பாளர்களில் ஒருவர்) மெய்ப்பித்துப் பதிவு செய்தார். 1913 ஜூன் 10 அன்று பதிவு செய்யப்பட்டு 27 அன்று வெளியிடப்பட்டது. இது ஜெ.ஹெச்.ஹெகல் என்னும் பதிவாளரைக் கொண்டு வங்காளத்தின் போர்ட் வில்லியம் என்கிற இடத்தில் உள்ள உயர்நீதி மன்றத்தில் பதிவாக்கப்பட்டது.

ஆனால் சில ஆண்டுகளுக்கு முன்பாகவே (1899 பிப்ரவரி 2) இந்த இறுதி விருப்ப ஆவணம் வழக்குரைஞர் டி.ரோலண்சன் மற்றும் சென்னை பக்கிங்ஹாம் விடுதியின் மேலாளர் ஜெ.எஸ்.ஹென்றிக்ஸ் ஆகிய இருவர் முன்னிலையில் எழுதப்பட்டது. சென்னை லாங்டன் விடுதியில் இருக்கும்பொழுது (1908 பிப்ரவரி 26) விருப்ப ஆவணத்தின் பிற்சேர்க்கை உருவாக்கப்பட்டது. இதில் ஏற்காட்டைச் சேர்ந்த சிசிலி பெர்த்தா கிட் எனும் முதிர்கன்னி ஒருவரும் சென்னை பொதுப்பணித்துறைக் கணக்குகளைக் கண்காணிக்கும் உதவி மேற்பார்வையாளர் ஆர்தர் நெவிலி ஜான் ஹாரிஸன் என்பவரும் சாட்சியாக இருந்துள்ளனர். 1912 டிசம்பர் 16 அன்று, திரும்பப் பெற வேண்டிய கடன் ஆணைப்பத்திரம் பற்றிய செய்திகள் ஆவணப் பிற்சேர்க்கையாக உருவாக்கப்பட்டு நிரூபணப்படுத்திப் பதிவும் செய்யப்பட்டது. உயிலில் குறிப்பிடும் இந்நாட்கள் சில முக்கியத் தகவல்களைத் தெரிவிக்கின்றன.

விருப்ப ஆவண நிறைவேற்றப் பொறுப்பாளர்களில் ஒருவர் ஃபுட்டின் மகனான ஹென்றி புரூஸ் ஃபுட். இக்காலத்தில் பீரங்கிப்படைத் துறையின் தலைவராக ஹென்றி விளங்கினார். சென்னையில் பெருஞ்செல்வ வணிகரான ஆல்ஃப்ரெட் பெர்சிவல் சைமன்ஸ் மற்றும் லண்டன் நகரைச் சேர்ந்த போர்க்கல உரிமை யாளரான ஹவார்டு ஸ்காட் ஆகிய இருவரும் மற்ற இரண்டு அறங்காவலர்களும் நிறைவேற்றப் பொறுப்பாளர்களுமாவர். ஃபுட் இங்கிலாந்திலுள்ள தன்னுடைய சொத்துக்களையும் அதன் விளைபயன்களையும் இங்கிலாந்தில் வாழும் தன்னுடைய அறங்காவலர்களின் பொறுப்பில் ஒப்படைத்திருந்தார். விருப்ப ஆவண நிறைவேற்றத்தின் போது பிரித்தானிய இந்தியாவில் ஃபுட்டிற்கு இருந்த சொத்துக்களும் அவற்றின் விளைபயன்களும் இங்கு வாழும் அறங்காவலர்களின் பொறுப்பில் ஒப்படைக்கப் பட்டன. விருப்ப ஆவணத்தின் ஓரத்தில் உள்ள சிறு குறிப்பு அவருடைய இறப்புக்காலத்தில் அவர் கொண்டிருந்த சொத்துக்களின் மதிப்பு ரூபாய்.38076-12-3 (ரூபாய்-அனா-பைசா) எனவும் எஞ்சியுள்ள தொகை ரூபாய்.37014-11-11 எனவும் குறிப்பிடுகின்றது. அறங்காவலர்களுக்குரிய குறிப்புக்களில், “தன்னுடைய குழந்தை களுக்குப் பொறுப்பாளராக தன்னுடைய மனைவி எலிசா மெலிசா ஃபுட்டையும் அவரது மறைவிற்குப் பின் தன்னுடைய அறங் காவலர்களையும் நியமித்துள்ளேன்” என்று குறிப்பிட்டுள்ளார். இறுதி விருப்ப ஆவணத்தை எழுதும் காலத்தில் அவரது கடைசி மகன் ஜிஃபார்டுக்கு பதினான்கு வயதிருக்கும். ஆனால் ஃபுட் மறைவின் போது அவருடைய பிள்ளைகள் குழந்தைப் பருவத்தைத் தாண்டி யிருந்தனர்.

ஃபுட் குறிப்பிட்ட ஒன்றைத் தவிர்த்து தன்னுடைய எல்லா சொத்துக்களையும் தன் மனைவியிடம் ஒப்படைத்தார். 1899இல் எழுதப்பட்ட உயிலில் அவருடைய சொத்துக்களின் பங்கீட்டில் இந்தியத் தொல்பழஞ்சின்னங்களின சேகரிப்புகளையும் அவருடைய சொத்தின் ஒரு பகுதியாகக் கருதப்படும் அவற்றின் விளைபயன் களையும் மிகக் கவனமாகத் தவிர்த்துள்ளமை அச்சின்னங்கள் குறித்து அவர் எதிர்காலத் திட்டம் ஒன்றை வைத்திருந்தார் என்பதைத் தெரிவிக்கின்றது. நார்விச்சில் தொல்பழங்காலத் தொல்லியல் குறித்த உலக மாநாடு (1868) நடைபெற்ற காலத்தில் சுவீடன் நாட்டுத் தொல்லியலாளர் பேராசிரியர்.நில்சன், புரூஸ் ஃபுட்டின் சேகரிப்புகளால் ஈர்க்கப்பெற்று அவற்றுள் சிலவற்றை (artifacts No.2204-9) வாங்க வேண்டும் என்று விரும்பினார். ஆனால் ஃபுட் அதை நிராகரித்துவிட்டார். ஆனால் அதே ஆண்டு தான் சேகரித்த கருவிகளில் பெரும்பகுதியை ஜான் ஈவான்ஸ் மூலம் சார்லஸ் லைல், ஜான் லப்பாக், கலோனல் லேன்-ஃபாக்ஸ்(Pitt-Rivers) சி.விக்ஹாம் ஃப்ளவர் மற்றும் ஜேம்ஸ் வயர் ஆகியோருக்கு வழங்கியுள்ளார் (Foote 1916a: 109-110).

பின்னாளில் இவருடைய சேகரிப்புகள் ப்ளாக் மோர் அருங்காட்சியகத்தில் காணப்பட்டன (Stevens 1870). வியன்னாவில் நடைபெற்ற உலகக் கண்காட்சியில் (1873) பேராசிரியர்.ஹாக்ஸ்டெட்டர் (Prof.Hochstetter) மற்றும் சில ஜெர்மன் ஆய்வாளர்கள் ஃபுட்டின் சேகரிப்புகளில் சில பழஞ்சின்னங்களை விலைக்கு வாங்க விரும்பினர். ஆனால் இந்நினைவுச் சின்னங்கள் இந்தியாவில் எஞ்சியிருக்கப்பட வேண்டும் என்று தான் விரும்பியதாகக் கூறித் தவிர்த்து விட்டார். அவை பிற்காலத்தில் இந்திய நிலவியற் கழகத்திற்கு வழங்கப் பட்டன. பின்பு கொல்கத்தா அருங்காட்சியகத்திற்கு இடமாற்றப் பட்டன. ஆனால் உட் மேசன் காலத்திற்குப் பின்பு பெரும்பாலான இச்சேகரிப்புகள் தவிர்க்கப்பட்டன (Foote 1916a: 110).1887இல் ஃபுட் நிலவியற் கழகத்தில் இயக்குநராக இருந்த காலத்தில் மட்டுமே இவை பேணப்பட்டன. நிலவியற் கழகத்தில் இயக்குநாக இருக்கும்போது இதனை ஒரு வாய்ப்பாகக் கொண்டு சமீபத்திய கண்டுபிடிப்புகளைக் கொடுத்துவிட்டு வியன்னா காட்சியகத்தில் உள்ள பழம்பொருட்களைப் பெற்றுக்கொண்டார். 1908இல் விருப்ப ஆவணப் பிற்சேர்க்கை எழுதப்பட்ட காலத்தில் ஃபுட் ஏற்கனவே தன்னுடைய சேகரிப்புகளை சென்னை அருங்காட்சியகத்திற்கு விற்றுவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். 1904இல் எட்கர் தர்ஸ்டன் (Centenary Souvenir) மேலாளராக இருந்த போது ரூபாய். 33000க்கு அவற்றை விற்றுள்ளார் (Devasahayam 2004: 111).

தன்னுடைய சேகரிப்புகளைத் தவிர்த்து என்னுடைய பாத்திரம், துணிமணிகள், பீங்கான் பொருட்கள், கண்ணாடிப் பொருட்கள், நூல்கள், படங்கள், அச்சுப் பதிப்புகள், ஒயின், மதுபானங்கள், தட்டுமுட்டுப் பொருட்கள் மற்றும் வீட்டுச் சாமான்கள், வண்டிகள், குதிரைகள் என்று எல்லாவற்றையும் தன்னுடைய மனைவிக்குக் கொடுத்துள்ளார். தன்னுடைய நோயின் பொருட்டு தன் மனைவிக்கு ஒரு மாதத்தில் இருநூறு பவுன்டு தொகையினைக் கொடுத்துள்ளார். இலண்டன் இராணுவ மற்றும் கப்பற்துறைக் கூட்டுறவுச் சங்கத்தில் தன்னுடைய பங்கீடுகளையும் (Share no.54661) தன் மனைவிக்கே மரபுரிமையாகக் கொடுத்துள்ளார்.

விருப்ப ஆவணத்தில் தனிப்பட்ட முறையில் குடும்ப உறுப்பினர் ஒவ்வொருவருக்கும் கொடுக்க வேண்டிய சொத்துக்களைப் பற்றியும் ஃபுட் குறிப்பிட்டுள்ளார். தன்னுடைய பெண்மக்களான மேரி ஆக்னஸ் பென்கிராப்ட் ப்ரிஸ்ட்லி, கான்ஸ்டன்ஸ் ரூபி ஃபுட் மற்றும் ஹெலன் ஸோ ஃபுட், மருமகள்களான ஜெனி எலிசபெத் (ஹென்றி புரூஸின் மனைவி), மருமகன்கள் ஆகியோருக்கும் அதைப்போல தன்னுடைய விருப்ப ஆவண நிறைவேற்றப் பொறுப்பாளர்களுக்கும் கொடுக்க வேண்டிய தொகையினைக் கணக்கீடு செய்து குறிப்பிட்டுள்ளார். ஃபுட் தன்னுடைய மூத்த மகன் ஹென்றி புரூஸ் மீது மிகுந்த அன்புடையவராக இருந்தார் என்பதற்கு அவருடைய உயில் சான்றாக உள்ளது.

தன்னுடைய விருப்பத்திற்குரிய சகோதரன் ‘ஹால்’ நினைவாக ஜார்ஜ் மூர் என்பரால் பெறப்பட்ட வெள்ளி கைக்கடிகாரத்தை No.13177 ஹென்றி புரூஸ்காக கொடுத்தார். மேலும் தங்கத்தாலான எழுதுகோற்பெட்டி, சங்கிலியுடன் கூடிய கடிகாரம் முதலிய பரிசாகப் பெறப்பட்ட பொருட்களையும் ஹென்றிக்குக் கொடுத்தார். அதுபோலவே, அவருடைய கடைசி மகன் ஜிஃபார்டு வெல்ஸ் புரூஸ் ஃபுட்டிற்கு அவருடைய தாயார் தன் நிச்சயத்தின் போது தனக்குக் கொடுத்த தங்கப் பதக்கம், பெயரெழுத்து பொறிக் கப்பட்ட சிவப்புக் கல் மோதிரம், தனது அத்தை ஹென்றிட்டா ரோஜர் தனக்குக் கொடுத்த செதுக்கு வேலைப்பாடுடைய சிவந்த சூதுபவளத்தாலான மோதிரம், தந்தையின் பழைய ஒப்பனைப் பெட்டியோடு கூடிய பொருட்கள், மற்றும் தனது துப்பாக்கி ஆகிய அனைத்தையும் கொடுத்தார். தன்னுடைய முதல் மனைவியின் திருமண மோதிரம், தங்கம் மற்றும் அகேட்டினாலான சட்டைப் பொத்தான்கள், தங்கம் மற்றும் நீல வண்ணப் பூச்சுடைய சட்டைப் பொத்தான்கள், மணிக்கட்டில் அணியும் தங்கச் சங்கிலி ஆகியவை இரண்டு மனைவியின் பெண்மக்களுக்கு மரபுரிமையாக வழங்கப்பட்டது.

தன்னுடைய சொத்துக்களையும் பணங்களையும் எவ்வாறு பேணுவது என்பது குறித்தும் தன்னுடைய ஈமச் சடங்கிற்கு கொடுக்க வேண்டிய பணம், பேணிக்கையாளர்களுக்கு கொடுக்க வேண்டியது மற்றும் கடன் தொகை முதலிய செய்திகளை உயிலில் மிக விரிவாக அறங்காவலர்களுக்குத் தெரிவித்துள்ளார். ஃபுட் தன்னுடைய முதல் மனைவியான எலிசபெத் ஆனை மணந்து கொள்ளும்போது தன் மனைவிக்குக் கிடைத்த ரூ.20000ஐ இவர்களின் பிள்ளைகளான ஹென்றி புரூஸ், லிஸ்ஸா சோபியா மேரி லீமிங், விவியன் பெர்சிவல், மற்றும் வயலெட் ஆனி லெச்லர் ஆகிய நால்வருக்கும் சமமாகப் பிரித்துக் கொடுக்கும்படிக் குறிப்பிட்டுள்ளார். விவியனைப் பற்றிக் கூறும்போது, ‘தன்னுடைய கடமையின் காரணமாக என் உயிலின் மூலம் இவை கொடுக்கப்படுகின்றன’ என்று கூறியுள்ளார். ஃபுட்டின் இத்தகைய கசப்பான மனநிலைக்குக் காரணம் பின்னர் தெளிவிக்கப் படும். தன்னுடைய மைத்துனன் வில்லியம் ஆல்ப்ரட் சைமன்ஸ் வழி எடுக்கப்பட்ட காப்பீடு அவர் ஃபுட்டிற்குக் கடன்பட்டுள்ளார் என்பதைத் தெரிவிக்கின்றது. தனது இரண்டாவது மனைவியான எலிசா மெலிசாவின் வாழ்நாளில் கொடுக்கப்பட வேண்டிய தொகையினையின் விவரமும் வாடகை மற்றும் ஏற்காட்டில் தன்னுடைய வீட்டைப் (Ivy Cottage) பின்னாளில் விற்கும் தருவாயில் செய்ய வேண்டியவைகளையும் மிக விரிவாகக் குறிப்பிட்டுள்ளார். இருப்புப் பணத்தை முதலீடு செய்ய அல்லது சட்டப்படி பேண அறங்காவலர்களுக்கு உரிமையளிக்கப்பட்டது.

1908 பிப்ரவரி 26இல் சென்னை லாங்டன் விடுதியில் இருக்கும்போது எழுதப்பட்ட விருப்ப ஆவணப் பிற்சேர்க்கைப் பகுதியில் ஃபுட் தன்னுடைய மனைவி வழிப்பெற்ற ரூபாய். 20000ஐ எவ்வாறு பங்கிட வேண்டும் என்று மீண்டும் குறிப்பிட்டுள்ளார். இப்பணம் எலிசபெத் ஆனின் தந்தை பீட்டர் பெர்சிவலின் சகோதரர் டேனியல் பெர்சிவலிடமிருந்து கிடைத்தது. இது பீட்டர் பெர்சிவல் மற்றும் அவருடைய சகோதரர் டேனியல் பெர்சிவல் ஆகியோரின் விருப்ப ஆவணத்தின் மூலம் நிரூபணமாகியுள்ளது. இப்பணத்தை எலிசபெத் ஆனின் பிள்ளைகளுக்குச் சமமாகப் பங்கிட்டுக் கொடுக்க வேண்டும் என்றும் அதற்குமுன் அவர்கள் (பிள்ளைகள்) தன்னிடமிருந்து வாங்கிய கடனைப் பெற்றுக்கொண்டு பணம் வழங்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். தன்னுடைய பிள்ளைகளுக்குத் தான் கடனாகக் கொடுத்த பணத்தையும் அவர்கள் அன்றைய நாள் வரை திருப்பிக் கொடுத்த பணத்தையும் கட்ட வேண்டிய எஞ்சிய தொகையையும் குறித்த கணக்கு விவரங்கள் மிகவும் சுவாரஸ்யமானவை. தன்னுடைய வீடு விற்கப்படும் சமயத்தில் பெறப்படும் தொகையை எவ்வாறு பங்கீடு செய்ய வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார். பல ஆண்டுகளாக தன்னுடைய மகன் விவியனின் கெட்ட நடத்தை காரணமாகத் தனக்கு ஏற்பட்ட மனக்கசப்பையும் கோபத்தையும் அவன்மீது தனக்கிருந்த நல்லெண்ணத்தை இழக்கச் செய்தது என்கிறார் ஃபுட். சென்னை பாரி அன் கோ நிறுவனம், டெக்கான் சுகர் மற்றும் அக்பர் கம்பெனியின் கடனீட்டுப் பத்திரம், சென்னை வங்கி ஸ்பென்சர் அன் கோ லிமிடெட் மற்றும் மைசூர் கோலார் தங்கச் சுரங்கம் ஆகியவற்றில் தனக்கிருந்த பங்கீடு குறித்து தன்னுடைய இறுதி விருப்ப ஆவணத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஃபுட் என்கிற ஆளுமையின் பன்முகங்களைப் படம்பிடித்துக் காட்டுகிற வலிமையான சான்றாக அவரது இறுதி விருப்ப ஆவணம் உள்ளது. அவரது நிதியாளுகைத் திறன்; முதலீடு, பங்கீடு, கடனீடு ஆகியவற்றில் செலுத்தும் கவனம்; பிள்ளைகளுக்கு அளித்த கடன்தொகை, அவற்றிற்கான வட்டித் தொகை குறித்த பதிவுகள் முதலிய பிறவும் வியாபார நுட்ப அறிவைக் காட்டுகிறது. அவரது சேகரிப்புகளில் தொல்பழஞ்சின்னங்கள் பின்னாளில் விற்கப்பட் டாலும் அவரது விருப்ப ஆவணத்தின் மூலம் தொல்பழஞ் சின்னங்களின் விற்பனை குறித்த எதிர்பார்ப்பு தெளிவாகின்றது. ஃபுட்டின் வீடு, அது அமைந்திருக்கும் இயற்கைச் சூழல் (Wilson 1888: 42) வீட்டில் உள்ள சிறந்த ஒயின்களின் இருப்பு, மரச் சாமான்கள், துணிமணிகள், வண்டிகள், குதிரைகள் மற்றும் துப்பாக்கிகள் ஆகியவை அவர் தனது துறையில் எதிர்கொண்ட கடினமான வாழ்க்கைக்கு முரணாக உள்ளன. தனது இரண்டாவது மகன் விவியன் மீது ஏற்பட்ட மனக்கசப்பு, தனது மூத்த மகன் ஹென்றி மற்றும் கடைசி மகன் ஜிஃபார்டு வெல்ஸ் மீது கொண் டிருந்த மிகுந்த அன்பு இதனுள் மிகத் தெளிவாக விளக்கப்பட் டுள்ளது. சொத்துக்களைப் பிரித்துக் கொடுப்பதில் தான் மேற் கொண்ட நடிவடிக்கைகளும் தனது மாமனார் பீட்டர் பெர்சிவலுக்குத் தான் செய்து கொடுத்திருந்த சத்தியங்களை நினைவில் கொண் டிருந்ததும் என்று பலவும் இந்த விருப்ப ஆவணத்தின் மூலம் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

ஃபுட் தனது இறுதி விருப்ப ஆவணத்தை எழுதத் தொடங்கிய காலம்(1899) முதல் அதன் பிற்சேர்க்கை (1908) மற்றும் அவருடைய மரண காலம் (1912) வரை சென்னை அருங்காட்சியகத்திற்காக நினைவுச்சின்னங்கள் குறித்த அடைவுகளைத் தயாரித்து முடிப்பதில் மிகத் தீவிரமாகச் செயல்பட்டார் (Foote 1916a,b). மற்ற ஆய்வாளர்களின் (Centenary Souvenir 1951; Paddayya 2007)குறிப்பின்படி இந்த அடைவின் முதல் பதிப்பு 1901இல் வெளியானது. ராபர்ட் புரூஸ் ஃபுட்டின் இதழ் (SCHE/RBF/02) ஒன்றில் தான் வெளியிட இருந்த தொகுப்புகளின் இயல்கள் குறித்த மேலோட்டமான குறிப்புகள் வெளியிடப்பட்டன. இது அக் கட்டுரையின் பொருண்மை இல்லையென்றாலும் அதனுள் ஃபுட் தனது திட்டங்களையும் நோக்குகளையும் மற்ற ஆய்வுகளின் குறிப்புகளையும் மேலோட்டமான குறிப்புகளையும் வரைபடங் களையும் சுருக்கமாக வெளியிட்டுள்ளார்.

குடும்பம் - தனிமை வாழ்வின் களைப்பு

நிலவியலாளர்கள் களஆய்வினை மேம்படுத்த வேண்டும் என்றும் மேல் ஆய்வுகளை நடத்த வேண்டும் என்றும் நெருக்குகிற காலகட்டத்தில் தான் (Sangwan 1993) ராபர்ட் புரூஸ் இந்திய நிலவியற் கழகத்தில் இணைந்தார். எதார்த்தத்தில் இவ்வாய்வு மிகக்கடினமான ஒன்று என்பதை ஃபுட் உணர்ந்தார். ஒரு நிலவிய லாளராக மிக உள்ளார்ந்த பகுதிகளில் வெகுநாட்கள் தங்க வேண்டியிருப்பது அவசியம். அக்காலகட்டத்தில் தற்கால ஆய்வு ரீதியாக நூலகங்களிலிருந்து நூல்களைப் படிக்க வேண்டியிருந்தாலும் அவற்றைப் பயன்படுத்த முடியாமல் போகும் (Foote 1882: 326) என்கிறார். இத்தகைய சூழலில் ஒரு நிலவியலாளரின் நிலை மிகவும் துன்பகரமானதாக இருக்கும். மேலும் காலநிலையால் ஏற்படும் இன்னல்கள், நோய்கள், காட்டு விலங்குகளின் அபாயம் என்று பலவற்றை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். எனினும் வரை படங்கள் தயாரிப்பதிலும் பொருளாதார நிலவியல் ஆவணப் படுத்தத்திலும் அறிவியல் ஆய்வு முடிகளைக் கொடுப்பதிலும் இருந்த நெருக்கடியினைச் சமன் செய்வதில் ஃபுட் ஆற்றல் மிக்கவராக இருந்தார்.

காலைப் பொழுதுகளில் ஆறு முதல் எட்டு மணிக்கூறுகள் 15 முதல் 25 மைல்கள் வரை வெப்பத்தாக்குதலினூடே காலார நடந்திருக்கின்றேன் (Foote 1882: 326) என்கிறார். நண்பகற் பொழுதுகளை வரைபடங்கள் தயாரிப்பதிலும் அன்றைய தின வேலைகளைப் பற்றி எழுதவும் செலவிட்டுள்ளார். வரலாற்றுக்கு முற்பட்ட மற்றும் வரலாற்றுக்காலச் சூழிடங்களை வரைபட மாக்குவதிலும் ஆவணப்படுத்துவதிலும் ஆராய்வதிலும் தன்னுடைய அறிவியலறிவைப் பயன்படுத்தியுள்ளார். பெரும்பாலான காலங் களில் இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய வளர்ச்சியின் மையத் திலிருந்து தான் விலகியிருந்தாலும் காலனிய நிலவியல் மற்றும் தொல்லியல் வரலாற்றில் ஃபுட் மிகச் செறிவான நிலையினை அடைவதையே நோக்கமாகக் கொண்டிருந்தார் (Foote 1882, 1916a) ஃபுட் இத்தகைய புலமைத்துவத்தோடு மிகச்சிறந்த குடும்பத்தின னாகவும் இருந்தார்.

இந்தியாவின் தொல்பழங்கால வரலாற்றில் அவர் கொண்டிருந்த மிகுந்த ஈடுபாட்டிற்கு பக்கபலமாக அவரது குடும்பத்தினரும் விளங்கினர். ஃபுட்டினுடைய ஆர்வமிக்க ஆய்வு களிலும் ஆவணப்படுத்தத்திலும் பழஞ்சின்னங்கள் சேகரிப்பிலும் அவரது மனைவிகள், குழந்தைகள், குடும்ப அங்கத்தினர்கள் மற்றும் நண்பர்கள் மிகவும் உதவியாக இருந்துள்ளனர். தமிழ் மற்றும் தெலுங்கு கல்வியிலும் இந்தியப் பண்பாடு குறித்த ஆய்விலும் புலமைத்துவமிக்க ரெவ.பீட்டர் பெர்சிவலின் தாக்கம் ஒரு இளம் ஆய்வாளனான ஃபுட்டை மிகவும் பாதித்தது. அது இந்தியாவின் பழமை குறித்த ஆய்வுகளிலும் ஆய்வுவட்டங்களோடும் ஈடுபட வைத்தது. தன்னுடைய மாமனார் பீட்டர் பெர்சிவலோடு கொண்ட ஆழமான உறவு கடைசிவரை நீடித்த போதும் தனது முதல் மனைவி எலிசபெத் ஆனின் மரணம் எங்கும் நேரடியாகப் பேசப்படவில்லை.

பில்லா சர்கத்தில் அகழ்வாய்வு மேற்கொள்ள சரியான நபராக தன்னுடைய மூத்த மகனைத் (ஹென்றி புரூஸ்) தேர்ந்தெடுக்க முடிவு செய்தது ஹென்றியின் மீது அவர் கொண்டிருந்த ஆழமான நம்பிக்கையைப் புலப்படுத்துகின்றது. தொல்லியல் ஆய்வுகளில் தேர்ந்த புலமையாளர்கள் இருந்தபோதிலும் ஹென்றி புரூஸை இந்த ஆய்வினை மேற்கொள்ளச் செய்யும் படி கூறிய முடிவுக்கு சென்னை ஆளுநர் கிராண்ட் டஃப் இசைந்தது ஹென்றி மீது அவருக்கிருந்த பெருமதிப்பையும் நம்பிக்கையையும் காட்டுகிறது. தன்னுடைய மகள் வழி வந்த மண உறவுகள் பழஞ்சின்னங்கள் மற்றும் சூழமை விடங்கள் பற்றிய செய்திகளைத் திரட்டுவதில் பெரும்பங்களிப்பு செய்தன. மைசூர் மற்றும் தமிழ்நாட்டில் ஷெவ்ராய் குன்றுகளில் கண்டெடுத்த கண்டுபிடிப்புகள் மூலம் இது தெளிவாகின்றது.

ஃபுட்டின் முதல் மனைவி எலிசபெத் ஆன் 1866இல் ஃபுட் படித்த ஆய்வரங்கக் கட்டுரைக்காக கற்கருவிகளின் படங்களை வரைந்து கொடுத்தார். இது இந்தியத் தொல்பழங்கால மானுடச் சின்னங்கள் குறித்து ஆராயும் சமகால ஆய்வாளர்களால் குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வரைபடங்கள் ஃபுட் கண்டெடுத்த பலவகை கருவிகளுக்குச் சான்றாக இன்றளவும் உள்ளன. ஃபுட்டினுடைய இரண்டாவது மனைவி எலிசா மெலிசா ஃபுட் பெரும்பாலான களஆய்வு களின்போது உடனிருந்தும் அதன் முக்கியத்துவத்தை உணர்ந்தும் செயல்பட்டவர். பரோடா பகுதியில் நீலமணிக் கற்கள் முதல் புதிய கற்கால கருவிகள் வரை பல கைவினைப் பொருட்களை அவருடைய மகள் வயலெட் ஆன் சேகரித்தார். ஃபுட்டினுடைய மகன் விவியன் பல மனக்கசப்புகளை உண்டாக்கினாலும் அன்பும் அரவணைப்பும் மிக்க குடும்ப உறவுகளால் அவர் சூழப்பட்டிருந்தார். இந்தியாவின் பழமையைப் படம் பிடித்துக்காட்டும் தன்னுடைய ஆய்வுகளில் தம்மால் இயன்ற பங்களிப்பினை இவர்கள் செய்துள்ளனர். இந்தியாவின் பழங்கால நிலவியல் மற்றும் தொல்லியலைப் புரிந்து கொள்வதற்காக ஃபுட் மேற்கொண்ட அயராத தேடுதல் முயற்சி களில் அவருடைய குடும்பம் குறித்தும் அறியப்பட்டது.

ஃபுட்டினுடைய ஆய்வுகளில் அவருடைய குடும்பத்தினரின் ஈடுபாடு இருந்தாலும் அவர் பெரும்பாலும் தனிமையில் கழிந்துள்ளார் என்பதை அறியமுடிகிறது. 1882க்குப் பின்பு அவர் நிலவியலாளராக மிகுந்த தனிமையை அனுபவித்துள்ளார் (Foote1882). ஃபுட்டுடன் வில்லியம் கிங் உடன்சேர்ந்து பணியாற்றிய போதிலும், ‘பல மாதங்களாக ஒரு வெள்ளை முகத்தைக்கூடக் காணாமல் அந்நிய மண்ணில் தனிமையான வாழ்வைக் கழிப்பது மிகப் பெருந்துன்பம்’ (Foote 1882: 325) என்கிறார். ‘மனைவி, குடும்பம் மற்றும் நண்பர்கள் தனது பண்பாடு ஆகியவற்றை விட்டு இருக்கும் இப்பிரிவு தற்காலிகமானது என்றாலும் கூட... ... ’ (Foote 1882: 326) என்று குறிப்பிட்டுள்ளார்.

ராபர்ட் புரூஸ் ஃபுட்டின் சொத்துக்களைப் பற்றிய ஆவணங்கள் வழி சுருக்கமாக மேற்கொள்ளப்பட்ட குடிவழி ஆய்வு பல பரிமாணங்களில் வியப்பை ஏற்படுத்துகிறது. ஃபுட்டினுடைய குடும்ப வரலாறு, அவருடைய பணிகளில் அவர்களுக்கிருந்த தொடர்பு, கூட்டுழைப்பு ஆகியவற்றின் முக்கியத்துவம் குறித்து விளக்கமளிப்பதாகவும் பல இடைவெளிகளை இட்டு நிரப்பு வதாகவும் இவ்வாய்வு அமைந்துள்ளது. அறிவு சார் பல்துறையில் ஃபுட் செய்த பங்களிப்பு, அவருடைய கண்டுபிடிப்புகள், பழஞ் சின்ன சேகரிப்புகள் முதலிய பல பணிகளில் அவர் மேற்கொண்ட முயற்சி மற்றும் தளராத ஊக்கத்திற்கு அவருடைய குடும்பத்தினரும் நண்பர்களும் உறுதுணையாக இருந்துள்ளனர். ராபர்ட் புரூஸ் ஃபுட் போன்ற மிகப் பெரும் ஆளுமையை ஆராயும்போது சுய(குடும்ப) வாழ்க்கை மற்றும் ஆய்வு வாழ்க்கையிடையே நுட்பமான உள்விளைவுகளைக்காணமுடிகிறது.இதுபலசிக்கல்களைத்தெளிவுபடுத்த உதவும். இந்த அடிப்படையிலேயே இத்தகைய மிகப் பெரும் ஆளுமை குறித்த உண்மையான சுய வரலாற்றை உருவாக்க முடியும்.

Notes

1. Certificate of Fellowship of the Geological Society, London, Courtesy, Geological Society, London.

2. Correspondence between ‘Hal’ (Major-General Henry Robert Bowerman Foote) to Vera Violet Jeanie dated 18th June, 1964, Church Cottage, Sidlesham Susse, Sidlesham 231 (unpublished letter).

3. The National Archives, Public Record Office, Catalogue Reference:Prob 11/1853. Image Reference: 415.

4. Letter from College of Arms, Queen Victoria Street, London, E.C.4, (J.R.B.Walker, M.V.O., M.C.), dated 1st September, 1863, to Miss. Foote.

5. Record No. 4987. Registry of Births, Dr. Williams Library, London. (courtesy, Mrs. Florence Ashton).

6. San Thome’ Marriage Vol. 43, Folio 198.

7. Will of Revd. Peter Percival. Courtesy, Mrs. Florence Ashton.

8. Madras BMD 1878 &1879 Film # 0521866 Vol. 59 1878, and LDS Film #0521867 Vol. 60 - 1879.

9. San Thome’: Marriage Vol. 43, Folio 118.

10.St. Thome’ (St.Thomas)’ Birth Records: Vol. 44, Folio 99.

11.Jeannie Elizabeth was the eldest daughter of Frederick Bowerman Jessett, FRCS, England and Fanny E.O. at St. Peters, Eaton Square on 22nd February 1893. They were married by Rev. Thomas Hardy, Vicar of Firth, assisted by Revd. J. Armitage, Army Chaplain.

12.Certified Copy of an entry in an Army Register Book of Births deposited in the General Register Office, Somerset House, London, App. No. S.R. 53654/ 30 and Baptisms. Vol. 74, Fol. 79. Bengal; Secretary of state for India Register of Baptisms at Dum Dum, 1899.

13.Major-General H.R.B. Foote, ‘Bob’ VC, went on to become a well known name in England, even being featured in the popular Television Serial ‘This is Your Life’, owing to his distinguished career. In 1942, he was Commanding Officer of the 7th Royal Tank Regiment posted in the Western Desert Africa, facing Rommel’s forces. His extreme bravery in the course of this famous battle, earned him the Victoria Cross (Obituary, Daily Telegraph, 25th November 1993) in 1942, and this reads, ‘ …His name was a byword for bravery and leadership throughout the brigade’. He held various posts including Director-General of Fighting Vehicles at the Ministry of Supply, Director of the Royal Armoured Corps at the War Office. After retirement he was military advisor to Leyland. He was awarded the DSO in 1942 and appointed CB in 1952, and was also chairman of the Tank Museum at Bovington. He married Anita Flint Howard on December 28th 1944, at the Church of St. Thomas-onthe Bourne, Farham. He is listed as the son of the late Lieutenant- Colonel, H.B. Foote, R.A, and Mrs. Foote, while his wife is noted as the daughter of the late Carey Howard and Mrs. Howard of California, USA (The Times, Monday, Jan 01, 1945, pg.7, Issue 50029, col. B. (The Times, Digital Archive, 1785-1985). Anita Flint Howard died in 1970, and he married Mrs. Audrey Mary Ashwell in 1981. He died on 22nd November, of bronchopneumonia and a stroke, 1993, at Southlands Hospital, Shoreham by Sea. They had no children. (Certified Copy COL529465), General Register Office

14.Oriental and India Office Library. Batch: MO70501 Dates: 1559-1875, Source: 416757, Call No. 918252, Type:Film.

15.Madras BMD 1878 & 1879 Film # 0521866;Vol.59 1878, and LDS Film #0521867 Vol. 60 – 1879.

16.Will of Robert Bruce Foote. Affidavit of Due Execution of Codicil Filed, proved on 16th December 1912, Issued on 27th June, 1913.

(தொல்லியல் துறை ஆய்வாளரான சாந்தி பப்பு, வரலாற்றுக்கு முந்தைய கால தமிழகம் குறித்த ஆய்வினை நிகழ்த்தியவர். Man and Environment xxxiii (1) இதழில் வெளிவந்த கட்டுரையின் மொழிபெயர்ப்பே இக்கட்டுரை.

மொழிபெயர்ப்பாளர் மு.நஜ்மா, சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கியத் துறையில் “தமிழர் வரலாறெழுதியல்: சங்க இலக்கியம் ‍ குடிகள்” என்னும் பொருண்மையில் ஆய்வு செய்து வருகிறார்.)

Pin It