தமிழ்ப் பதிப்புலகில் மாறுபட்ட சிந்தனைத் தளத்தில் இயங்கும் விடியல் பதிப்பகம் கிடைத்தற்கரிய பல்வேறு பிறமொழி நூல்களைத் தமிழில் மொழி பெயர்த்துத் தந்துள்ளது. இதன் நிறுவனர் சிவா என்னும் சிவஞானம். இடதுசாரி கருத்து நிலைக் கருத்தோடு செயல்பட்டவர். சிறந்த பதிப்பாளராக அடையாளப்படுத்தப் படும் இவர் தனது ஐம்பத்தாறாவது வயதில் 30.07.2012 அன்று கோவையில் மறைந்தார். அவருக்கான நினைவஞ்சலி நிகழ்வு மாற்றுவெளி ஆய்விதழ் சார்பில் 10.08.2012 அன்று மாலை ஐந்து மணியளவில் சென்னைப் பத்திரிகையாளர் மன்றத்தில் நடைப்பெற்றது. தமிழ் இலக்கிய உலகில் சிவாவின் இழப்பு மிகச் சாதாரணமானதல்ல. இடதுசாரி கருத்து நிலை சார்ந்த, குறிப்பாக மார்க்சியம் சார்ந்த (புனைவு,கோட்பாடு,வரலாறு) புத்தகங்களை வெளியிட்டு, தமிழில் மிகப்பெரிய தேடுதலுக்கான வழியை உருவாக்கித் தந்தவர் என்பதோடல்லாமல் வணிகக் குழுமம் ஆக்ரமித்திருந்த பதிப்புலகை வேறு ஒரு தளத்திற்கு எடுத்துச் சென்று, அப்பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர் தோழர் விடியல் சிவா என்ற தன் கருத்தைப் பதிவுச்செய்து வருகைப்புரிந்தோர் அனைவருக்கும் வரவேற்புரை நல்கி, நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார் மாற்றுவெளி ஆய்விதழின் சிறப்பாசிரியர் வீ.அரசு அவர்கள்.

அவரைத் தொடர்ந்து தோழர் நடராஜன் பேசுகையில் தற்காலத் தில் மக்களின் வாழ்க்கையில் தேவை அதிகமாக இருப்பதால் அவர்கள் அதிருப்தியுடன் இருக்கின்றனர். எனவே போராட்டங்களும் அதிகம். ஆனால் இவற்றை முன்னெடுத்துச் செல்வதற்கு அமைப்புகள் ஏதும் முன்வருவதில்லை.ஆனால்தான் சார்ந்த இயக்கத்தின்மூலம் அதை சாத்தியப்படுத்தியவர் தோழர் சிவா என்று குறிப்பிட்டார்.

கவிஞர் இன்குலாப் அவர்கள் பதிப்பு / நூல்களை வெளியிடுவதில் ஒருவகை அரசியல் விடியல் சிவா அவர்களிடம் இருந்தது. அந்த அரசியல் ஒரு வரையறைக்குள் நின்று விடாது, அது பரந்துபட்ட, ஜனநாயக குணமுடையதாக, மக்களின் தேவை கருதியதாக இருந்தது என்று கூறி, அவர் விட்டுச் சென்ற பணியைத் தொடர்ந்து செய்வதே நாம் அவருக்குச் செய்யும் மரியாதை என்றார். அடுத்துப் பேசிய ஆய்வாளர் வ.கீதா மக்களுக்கு அவ்வப்போது தேவைப்படும் விடயங்களைப் பற்றிய பதிப்புகளை(காட்டாக ‘மரண தண்டனை’ பற்றி) உடனடியாக வெளியிடுவதில் தோழர் விடியல் சிவா அதிக கவனம் செலுத்தினாரென்றும் மிகப்பரவலான ஜனநாயக அடித்தளத்திற்கான அறிவு வேலைகளை முன்னெடுத்துச் செல்வதில் மிக முக்கியப் பங்காற்றியவர் என்றும் குறிப்பிட்டார். மேற்கொண்டு பதிப்புலகிற்கு வருவோர் அவரைப் போன்ற திறந்த மனதுடன் செயல்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

பப்பாசி செயலாளர் சண்முகம் அவர்கள் பேசுகையில் கடந்த பத்தாண்டுகளில் தமிழகத்தில் வித்தியாசமான நூல்களை அறிமுகப்படுத்தியதோடு, பதிப்பைத் தொழிலாகச் செய்யாமல் தொண்டாகச் செய்தவர் தோழர் சிவா என்று கூறினார். பதிப்புத்துறையில் விடியல் சிவாவோடு பல ஆண்டுகள் இணைந்து பணியாற்றியவர் அலைகள் பதிப்பகம் சிவம் . அவர் பேசும் போது மிகத் திறமை வாய்ந்த தோழர் சிவா அவர்கள் பதிப்பில் கவனம் செலுத்திய அளவிற்கு தன் உடலை கவனித்துக் கொள்வதிலும் குடும்ப உறவுகள் மீதும் எவ்வித அக்கறையும் கொள்ளவில்லை. அதனால்தான் இன்று அவரை இழந்து விட்டோம் என்று தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். அதோடு அவர்களுக்கிடையில் நிலவிய சகோதர உறவைக் குறிப்பிட்டு, தோழர் சிவா வெளிக்கொணர விரும்பிய ‘மாவோ’ தொகுப்புகளின் பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளது, கண்டிப்பாக, அதைச் சிறப்பாக வெளியிடுவோம் என்று உறுதி அளித்தார்.

என்னைவிட வயதில் சிறியவர் என்றாலும் தோழர் சிவாவின் வாழ்க்கை வீணாகப் போய்விடவில்லை, அது பலருக்கு வழிகாட்டியாக அமைந்துள்ளது என்று எழுத்தாளர் கோவை ஞானி குறிப்பிட்டார். பேராசிரியர் அ.மார்க்ஸ் அவர்கள் ஏறக்குறைய தன்னுடைய பத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் வெளியிட்டுள்ளது விடியல் பதிப்பகம் என்பதில் பெருமை அடைவதாகக் கூறி, தாங்கள் ஒன்றிணைந்து பணியாற்றிய அனுபவங்கள் பலவற்றைப் பேசினார். பத்திரிகை ஆசிரியர் கவிதாசரண் அவர்கள் மிகச்சிறந்த /அதிக பக்கமுள்ள /யாருக்கும் கிடைக்காத நூல்கள் பலவற்றைத் தேடித் தந்துள்ளது விடியல் பதிப்பகம் என்று குறிப்பிட்டார். மொழி பெயர்ப்பாளர் கண்ணன், எம். தன் பேச்சில் கடுமையான உழைப் பிற்குப் பின்னாலுள்ள விடியல் சிவாவின் எளிமையான குணங் களைக் குறிப்பிட்டார்.

தோழர் சிவாவின் வாழ்வில் நடந்த சில முக்கிய நிகழ்வுகளைக் குறிப்பிட்டு, விடியல் பதிப்பகத்தில் வெளியான புத்தகங்கள் வெளிவந்ததற்கான சூழல்களை விளக்கினார் தோழர் கோவை ஈஸ்வரன் அவர்கள். மேலும் தலித் முரசு ஆசிரியர் புனித பாண்டியன், மயிலை பாலு போன்றோரும் இக்கூட்டத்தில் தோழர் விடியல் சிவா பற்றிய தங்களது நினைவுகளைப் பகிர்ந்து கொண்டனர்.

Pin It