I

ஆர்.என். ஜோ டி குரூஸ் எழுதிய ‘ஆழிசூழ் உலகு’ வெளியாகி ஐந்து வருட இடைவெளியில் ‘கொற்கை’ நாவல். இரண்டும் சேர்த்து 2732 பக்கங்கள். குளத்தில் குளித்துப் பழக்கப்பட்டவன் கரைதெரியாத கடலுக்குள் நீந்துவது போன்ற இரண்டு வாரகால வாசிப்பு. யதார்த்தப் பாணியிலான எழுத்துதான் என்றாலும் நாவல் என்னும் வடிவத்திற்குள் நிறுத்திய மீன்பிடித் தொழிலுடன் சம்பந்தப்பட்ட எத்தனையோ விதமான மனிதர்கள், அவர்களைச் சுற்றிப்பற்றிய கதைகள், கால மாற்றங்கள், அரசியல்கள், உறவுச்சிக்கல்கள்... என முறித்துப்போட்ட புளியமரத்தின் சருகுகளும் மாறுகளும் போலக் கிளைபரப்பி நாளங்களைப்போல வளைந்து நெளிந்து செல்லும் ஒவ்வொரு சிறிய சம்பவத்திலும் ஒரு வரலாற்றின் பொறி தெறிக்கிறது. ‘கொற்கை’ யதார்த்தத்தை மீற முயற்சித்துப் பார்க்கிறது. ‘ஆழிசூழ் உலகி’ல் இல்லாத நம்பிக்கை சார்ந்த விஷயங்கள் இதில் அதிகம். இட்டவேலைகளைச் செய்யும் ‘பேயலசு’ என்ற குட்டிப்பிசாசு முதற்கொண்டு தெய்வானையைப் பரத்தியாக்கி முருகப் பெருமானை மச்சினனாக்கத் துடிப்பதுவரை சற்று புராணமயம் புகுந்தாலும் பாண்டியபதியைக் கத்தோலிக்கம் வஞ்சிப்பதிலிருந்து உள்ளடக்கத் தன்மையை உத்தேசித்து, கதை திரும்பவும் யதார்த்தத் தளத்திற்குச் செல்ல வேண்டிய அவசியம் கதைசொல்லிக்குத் தேவைப் படுகிறது. தமிழில் அதிகம் எழுதப்படாத வரலாற்று நாவல்கள் வரிசையிலும் இவற்றை அடக்கலாம்.

எந்தவொரு வரலாற்று நிகழ்வும் இவ்விரு நாவல்களிலும் ஒற்றைத் தன்மையுடன் அணுகப்படவில்லை. பொத்தம்பொதுவில் ஒரு நோக்கத்திற்காக மட்டுமே நாவலில் ஒன்றைக் கூறும்போது அது ஒரு நோக்கம் சார்ந்த செய்தியாக மட்டுமே மாறிப்போகும். உதாரணமாகக் கிறித்தவம் என்பதில் கத்தோலிக்கத்துடன் அவர் சார்ந்த களம் முற்றுப் பெற்றிருக்கலாம். அத்துடன் நின்றுவிடாமல் பங்கு சாமியார் வழி (காகு சாமியார் போன்ற) நிகழும் சீர்திருத்தங்கள், புராட்டஸ்டான்டு மிஷனெரிகள் வழி நிகழும் சீர்திருத்தங்கள் (தரங்கம்பாடியில் சீகன்பால்கு செய்த பணி) என அது பன்முகம் பெறுகிறது. காரணம், இரண்டும் இரண்டு சாதிகள் பற்றியவை என்கிற உணர்வு நாவலாசிரியரை இயக்குகிறது. எனவே கிறித்தவத்தை இதில் பொதுவாக்க முடியாது. கிறித்தவர்களாக மாறிய பிறகும் அம்மை போட்டால் முத்தா ரம்மனுக்குக் கொடைவைப்பது, கிறித்தவத்திற்குள் கள்ளசாமியார்கள் மீது வைக்கும் விமர்சனம் இவையும் இதற்குட்பட்டதுதான். கத்தோலிக்கத்திற்குள் நுட்பமாக நடைபெறும் அசைவுகளை ஊன்றிக் கவனித்ததற்கு உதாரணம் விடுதலை இறையியல். “ஒரு ஆப்பிள பறிச்சி தின்னதுக்காகவா கடவுள் இவுங்கள ஏதேன் தோட்டத்துலயிருந்து வெளிய அனுப்பனும்? சாந்தசொரூபியான கடவுளுக்கு எதுக்கு இவ்ளோ கோவம்? ஆணுக்கு பெண்ணத் தொடுறதுல இன்பம். பெண்ணுக்கு ஆண... பெறகு மரஞ்செடி கொடியையும் பாம்பு பல்லியளயுமா தொட்டுத் தடவி சந்தோசப்பட முடியும்? நீ பிரசவ வேதனப்படுவ. உன் கணவன் உன்னை ஆளவாமிங்குற தெல்லாம் ஒரு மாதிரி பெண்ணடிம மாறிதாம் தெரியுது” (கொற்கை.ப:807).

மேற்கூறிய இதே பார்வையில்தான் போர்த்துக்கீசியர், டச்சுக்காரர்கள், பிறகு வெள்ளையர் ஆட்சி, பாஞ்சாலங்குறிச்சிக்கு உதவியதால் வெள்ளையர் பகை, தேசிய விடுதலைப் போராட்டம், காந்தி, காங்கிரஸ், திருச்செந்தூர் கோயில் நுழைவுப் போராட்டம், பெரியார், சுயமரியாதை இயக்கம், தி.மு.க., இலங்கைப் பிரச்சினை, மலையகத் தமிழர் பிரச்சினை, கச்சத்தீவு, கம்யூனிஸ்ட் கட்சி, இ.எம்.எஸ். மணல் கம்பெனியை நாட்டுடைமையாக்குதல் என விரிந்துகொண்டே செல்கிறது. இவை எல்லாவற்றிற்கும் கடல்சார்ந்த வாழ்வு நடத்தும் மக்களோடு தொடர்பிருக்கிறது. சமகால முக்கியத்துவம் கொண்ட எல்லாச் செய்திகளும் நாவலில் கால உணர்வை வெளிப்படுத்தும் காலம் சார்ந்து உணர்வை வாசகர்களுக்கு உணர்த்தி நிற்கின்றன. அந்த அடையாளங்கள் உணர்த்தும் குறும்புகளின் அலாதி சுவை வாசித்தல் என்னும் போகிற போக்கில் அடங்கிவிடுவதில்லை. தி.மு.க.வின் வருகையும் அதுசார்ந்த ‘மைக்’ அரசியலும் ஒருபுறம் நடக்கும்போதே, அடுத்தவன் மனைவியிடம் களவொழுக்கம் புரிந்துவிட்டு வரும் கழக உடன்பிறப்பு, ‘மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு’ என்று கூறும் வாசகம் நாவலை முடித்துப் புத்தகத்தைக் கீழே வைத்த பிறகும் நம்மைக் கிச்சிலங் காட்டிக் கொண்டே இருக்கிறது.

வ.உ. சிதம்பரனார் மீது வைக்கும் விமர்சனமும் இது போன்றது தான். சில ஆண்டுகள் முன்பு ‘வ.உ.சி. - வாழ்வும் பணியும்’ என்றொரு புத்தகம் ம.சு.பல்கலைக்கழகப் பாடத்ˆˆதிட்டத்தில் இடம்பெற்றிருந்தது. வறட்டுத்தனமான நூல் அது. கிறித்தவ நாடார் ஆதிக்கத்திலுள்ள எமது கல்லூரியில் சமீபகாலமாக வகுப்பிற்கு ஒன்றிரண்டு மீனவ சமுதா யத்தைச் சேர்ந்த மாணவர்கள் தென்படுவதை நான் கவனிப்பதுண்டு. கல்வி இப்போதுதான் அவர்களுக்கு எட்டி இருக்கிறது. வ.உ.சி.யின் கப்பல் கம்பெனி தோல்வி அடைந்தது பற்றி நான் பாடம் நடத்திய போது அவர்களில் ஒரு மாணவன் எழுந்து, “வெள்ளாளன் கப்பல் வச்சா அப்படித்தான் ஆகும். முக்குவன் நடத்தி இருந்தால் தோற்றிருக்குமா?” என்று கேட்டான். நான் இயல்புநிலைக்குத் திரும்ப ரொம்பநேரம் ஆயிற்று. (இதுபோல மாணவர்களிடமிருந்து நான் படித்த பாடங்கள் ஒரு புத்தகம் எழுதும் அளவுக்கு உண்டு.) இதே உரையாடலை ‘ஆழி சூழ் உலகி’லும், கீழ்சாதிக்காரன் செய்த உணவைச் சிறையில் சாப்பிட வ.உ.சி. மறுத்த கதையை ‘கொற்கை’யிலும் வெளிப்படுத்தி இருக்கிறார். சீனிவாச ஐயங்கார் என்னும் பயணச்சீட்டு பரிசோதகர் குறித்து வேல்நாடார் பேசும் இடத்திலும் அல்வாரிஸ் - கோகிலா இடையிலான கள்ளத் தொடர்பு, சிங்கராயரைக் கொஞ்சம் கொஞ்சமாக வீழ்த்தும் மணி அய்யர் ஆகிய இடங்களிலும் சாதியப் பிரச்சினைகளைக் கல்வி வாயிலாக உணருந்தன்மை வெளிப்படுகிறது. மிகவும் பரந்துபட்ட வாசிப்பும் அரசியல் உணர்வும் வாழ்க்கை அனுபவமும் இல்லாத ஒருவரால் இப்படி இரண்டு நாவல்களை எழுதி இருக்கவே முடியாது.

II

‘ஆழிசூழ் உலகி’ன் அடிநாதம் வலிமை வாய்ந்த மரணம். நாவலை வாசிக்கும் இரண்டாவது நிமிடமே கோத்ராபிள்ளையின் மரணம். பிறகு மடுத்தீன் மரணம். மரணம் தொழிற்சார்ந்த வாழ்க்கையிலும் வருகிறது; நோயிலும் வருகிறது. தொடர்ந்து மரணங்கள். சாவுக்குக் காரணம் தெரியவில்லை. பில்லி சூன்யமா? என்னும் குழப்பம். மரணத்தை எப்படி வெல்வது? என்ற ஆதங்கம் ஜோவை ஆழ்த்தினாலும் நாவலின் தளம் புறவயமாக இயக்கம் கொள்வதால் ஆழ்தளத்தில் அவரால் செல்ல முடியவில்லை. மரணத்தைத் தியாகத்தால் வெல்ல முடியும் என்கிறார். மரணமும் இயற்கையான தியாகம்தான். கடலுக்கும் கரைக்கும் இடையிலான மீனவனின் வாழ்க்கை போன்றது தான், வாழ்க்கைக்கும் மரணத்திற்கும் இடையிலான தொடர்பும். உயிரும் உயிரும் மோதும் தொழில்தான் மீன்பிடி வாழ்க்கை. இதில் யார் தோற்றாலும் கிடைப்பது மரணம். பிடித்த மீன் சாகக்கூடாது. செத்தா மற்றமீன் சாப்பிடும். பிறகு ‘கிழவனும் கடலும்’ போல எலும்புக் கூடுதான் கரைவந்து சேரும். எனவே வேட்டையாடிய உயிரை வேட்டையாளனே காப்பாற்றும் நிலை. கரைக்குக் கொண்டு வரப்படும் மீனுடன் ஜோடிமீன்கூட வருவதும். “நம்மள மாதிரி அறிவா அதுக்கு இருக்கும்? சிந்திச்சு பாத்தா அது நெலமையும் பாவந்தான...” என்று மேலும் தொம்மந்திரை பேசுவதும் மரணத்தின் ஆழம் இந்தப் பிரபஞ்சத்திலுள்ள எல்லா உயிர்களுக்கும் விரிந்தது என்னும் உணர்வை வெளிப்படுத்துகிறது. இந்த உணர்விலிருந்து புறத்தோற்றமாகத் தான் சார்ந்த சமூகத்தின் சித்திரங்களை மிகப்பெரிய கடலைப்போன்ற திரைச்சீலையில் தீட்டி இருக்கிறார்.

அமாவாசை இருளில் காற்றாலும் அலையாலும் மரம் உடைக்கப் பட்டுக் கடலுக்குள் தத்தளிக்கிறார்கள் சிலுவை, சூசையார், தொம்மந்திரை, வயதான பெரியவர் கோத்ரா பிள்ளை. அவர்களின் மரண அவலத்தினூடே நாவலின் கதை சொல்லப்படுகிறது. இயற்கையின் மாபெரும் சக்திக்குள் ஒன்றாகிக் கலக்கிறது கோத்ரா பிள்ளையின் மரணம். சாகும்போது அவர்கள் வாழ்ந்த வாழ்க்கை, குற்ற உணர்ச்சி, தவறுகள், உன்னதங்கள் எல்லாமே இயல்பாக அலசப்படுகின்றன. தான் சாகும்போது தோக்களத்தா கிழவியை (மனைவி) நினைத்தவாறு உயிரை விட்டதாக அவளிடம் கூறச்சொல்லும் கோத்ரா பிள்ளையின் பலவீனங்களும் இதில் அடக்கம். இவ்வாறு கதை சொல்லும் வடிவம் ஏற்கனவே எழுதப்பட்டதுதான். மாடியிலிருந்து குதித்துத் தற்கொலை செய்யும் பெண் கீழே விழுவதற்குள் கதை சொல்லும் பாணியிலான புனைவுகளை நாம் வாசித்திருக்கலாம். ஆனால் தொழில் சார்ந்த வாழ்க்கையுடன் இணைத்து ஒரு இனவரைவியலை இந்த வடிவத்திற்குள் நிறுத்தி இருப்பதும் வேரும் கிளையுமாகப் படர்ந்த உறவுமுறையைச் சொல்லி இருப்பதும்தான் ஜோவின் திறமை.

‘உடல்’ என்பதன் இயக்கம் இரண்டு விதங்களில் இவரது நாவல்களில் இயக்கம் பெறுகின்றது. முதலாவதாக உழைப்பு சம்பந்தப்பட்டது. இரண்டாவதாக உறவு சம்பந்தப்பட்டது. இரண்டுமே உற்பத்தி சம்பந்தப்பட்டவை. (இந்த உற்பத்தி உறவில் சம்பந்தமில்லாத சாதி, ஆதிக்கம் பெறுவதுதான் ‘கொற்கை’யின் உள்ளடக்கம்.) உடல்மீதான வாழ்வம்சத்தின் முரட்டுத்தனம் கொண்ட உழைப்பாளர் வாழ்க்கையின் மரணமுடிவுகளைப் பதிவு செய்யும் தொடக்கம், வாழும் காலத்தில் அடையும் துடிப்பை இவற்றிலுள்ள பெரும்பாலான பாத்திரங்கள் உணர்த்தி நிற்கின்றன. தென்னைமரத்திலிருந்து விழும் சுந்தரபாண்டியின் மரணம்கூட இங்கு நினைவுகூரத்தக்கது. நாடார்களும் பனைகளிலிருந்து மீனவர்களைப்போலக் கதை பேசிக்கொண்டே தொழில் செய்கிறவர்கள். ‘தினமலர்’ பத்திரிகை தடைசெய்யப்பட்டிருந்த காலத்தில் பனை யிலிருந்து கொண்டு உரத்துப் படித்த கதைகளும் குமரிமண்ணில் நடந்ததுண்டு. துப்பாக்கிச் சூடு நடைபெறும்போது துணியை உயர்த்திக்காட்டி சுடப்பட்டுச் சாவது பற்றி ஜோ எழுதி இருப்பதையும் இந்த உடல்வாழ்வின் முரட்டுத்தனம் என்று சொல்லலாம். இதையும் பனையேறி நாடார்களிடம் கண்டு கொள்ளலாம். நான் ஹைஸ்கூல் படிக்கும்போது எங்களுக்கொரு வரலாற்று ஆசிரியர் அடிக்கடி குறிப்பிட்டுச் சொல்லும் சம்பவம் இந்த இடத்தில் நினைவுக்கு வருகிறது. குமரிமண்ணைத் தாய்த்தமிழகத்துடன் இணைக்கும் போராட்டத்தில் நேசமணி ஈடுபட்டிருந்த காலத்தில் பலர் துப்பாக்கிச் சூட்டிற்கு இரையான சம்பவங்கள் நடைபெற்றன. அவர்களைப் பற்றி ஒருவர் வில்லுப்பாட்டில், “அந்த மங்காடு தேவசகாயமும், கீழ்குளம் செல்லையாவும், மானம் காக்கும் போரில், மார்பில் குண்டடி பட்டனரே” என்று பொதுக் கூட்டங்களில் பாடுவாராம். இதனைப் பாடிவிட்டு அந்த ஆசிரியர், “நாயர்களின் போலீஸ் பட்டாளம் சுடுவதற்காகத் தோக்கை ஏந்தியதும் இவர்கள், ‘இஞ்ச சுடுடா’ என்று வேட்டியை உயர்த்திக் காட்டினார்கள். குண்டுபாய்ந்த இடம் மார்பில் அல்ல; மர்மஸ்தானத்தில்” என்பார்.

அதுபோல வர்மக் கலையிலும் இந்த ஒற்றுமையைக் காணமுடிகிறது. தொம்மந்திரையின் இடது குதிகால் நரம்பில் தூண்டில் ஏறிக் கொழுவு கிறது. உடனே கோத்ராபிள்ளை அவனது கையிலுள்ள சில நரம்புகளைப் பிடித்துவிட ரத்தப்போக்கு நின்றுவிடுகிறது. தொழிலுடன் தொடர்பு கொண்ட இத்தகைய உடல் மீதான எழுத்துக்கள் இயற்கைக்கும் நாகரிகத்திற்கும் இடையிலான முரண்பாட்டைப் பெரிதாக்குகின்றன. நாடார்களைவிட மீனவர்களிடம் இந்த இயற்கைத்தன்மை பெரிதாக உள்ளது. ஜஸ்டின் மரம் கரைபிடிக்கத் தனி ஆளாக வரும்போது பனை மரத்திலிருந்து மருக்கொழுந்தின் ஆட்கள் நாட்டு வெடிகுண்டு வீசுகிறார்கள். அவன் சிறிது பின்வாங்கி நிதானித்திருக் கலாம். ஆனால் அவனது உடல் அவனை உந்தித் தள்ளுகிறது. அவன் நெஞ்சைக் குண்டு பிளக்கிறது. பொதுவாகக் கலவரத்தின்போது பிணம் விழுந்தால் நாடார்கள் விட்டுவிட்டுப் பிறகு பார்க்கலாம் என்று ஓடித் தப்புவார்கள். மீனவர்கள் என்றால் அதை எடுக்கப்போய் கூட இரண்டு பேர்களைப் பலிகொடுப்பார்கள். இந்த இயற்கையான முரட்டுத்தனம் தான் ஜோவின் கைவண்ணத்தில் உடலெழுத்தாக உருமாற்றம் பெற்றிருக்கின்றது.

உறவு சம்பந்தப்பட்ட உடல் எழுத்தில் குறிப்பிட்டுச் சொல்லப் படவேண்டியது உறவைமீறிய வாழ்க்கை குறித்ததாகும். எந்தவிதமான வரைமுறைகள் எதுவுமின்றி உடலும் உடலும் சேரும் தன்மையில் தமிழில் இதுவரை இதுபோன்றதொரு படைப்பு வெளிவந்தது இல்லை. ஜஸ்டின் வழுக்குமரம் ஏறும்போது அவனைக் காதலிக்கும் வசந்தியின் மார்பகங்கள் பூரிக்கின்றன. அவன் வெற்றிபெற்றதும் அவள் அந்தரங்கத்தில் வழவழப்பு ஏற்படுவதை உணர்கிறாள். தன்னால் விரும்பப்படும் ஆணின் மீதான அளவுகடந்த பற்று அவனுடன் உடலு றவு கொள்வதற்குச் சமமானது என்ற வகையில் எழுத்தாக்குகிறார். இதே ஜஸ்டினுக்கும் வசந்தாவின் தகப்பனாருக்கும் வசந்த மாளிகை என்னும் ஒரே பெண்ணுடன் உறவு. தங்கச்சிமுறை வரும் எஸ்கலினோடு கில்பர்ட் கொள்ளும் உறவு. திடமனதில்லாத கில்பர்ட் சாமியார் படிப்பை உதறிவிட்டுக் கப்பல் தொழிலுக்குச் செல்கிறான். சித்தி முறை கொண்ட தன்னை விட இருபது வயது மூத்தவளான ரோசம்மாளோடு வருவேல் கொள்ளும் உறவு. அவன் தகப்பனார் விக்டர் பிள்ளையும் அவளுடன் உறவுகொள்வதை வருவேல் பார்க்கிறான். அவள் கிட்டத் தட்ட அவன் தாய்க்குச் சமமானவள். தூங்கிக்கிடக்கும் நிறைமாத கர்ப்பிணி மேரியைச் சுவரேறிக் குதித்துவந்து புணரும் சூசை. சாராயம் விற்கும் பண்டணத்தாளைப் போடத்துடிக்கும் சப்பாணியார். பிலிப் உடல்மீது மோகங்கொண்டு விளையாடும் சித்திக்காரி, மரியதாஸ் சாமியாருடன் ரென்சி கொள்ளும் உறவு. இவை போன்ற வரைமுறைகள் மீறிச் செல்லும் உடல் சார்ந்த உறவுகள் அனைத்துமே உடல் எழுத்தில் சேர்த்திதான். உடலுக்கு வெளியே உறவுகளற்ற தன்மைதான் புராதன எழுத்தை நோக்கிய பதிவுகளைச் செய்ய முயற்சிக்கின்றன. தரப்படுத்தப்பட்ட அல்லது நாகரிகம் செய்யப்பட்டவைகள் அனைத்துமே ஒழுக்கம் சார்ந்த அதிகார உலகத்தைக் கட்டமைத்துக்கொண்டிருக்கின்றன.

உடல்மீதான சாகசப் பயணத்தில் இவ்விரண்டு நாவல்களும் குறிப் பிடத்தகுந்த இலக்கை நோக்கிச் செல்கின்றன. அது உறவுகளை வென்றெடுத்த உடல் சாம்ராஜியம். உணர்வுகளில் சங்கமிக்கும் இந்த உலகத்தில் எல்லாரும் உறவினர்கள்தான். ஆனால் எந்த உறவையும் அது விலக்கியோ, ஒதுக்கியோ பார்க்க மறுக்கிறது. இந்த நெருக்கம் தான் எழுத்துக்களில் புராதன வளத்தைச் சேர்க்கின்றன. பண்பாடு என்பது இவற்றின்மீது எழுப்பப்படும் கல்லறைகள் அல்லது மனித இழிவுகள் என்று ஆகிறது. அது தரும் குற்றஉணர்ச்சி இவ்வகையான எழுத்துக்களில் துளியும் இல்லை. ஆபாசம் என்ற கூச்சல் இல்லை. அணிவதைவிட அல்லது புனைவதைக் காட்டிலும் பெரிய ஆபாசம் எது? வேட்டையாடும் துடிப்பில் இருக்கும் உடல்கள் மீதான உணர்வுகளுக்கும் நெருக்கங்களுக்கும் மட்டுமே இவ்வகையான எழுத்துக்கள் முக்கியத்துவம் தருகின்றன.

III

வழக்கமான உடலெழுத்தின்மீது ‘கொற்கை’ நாவல் இன்னொரு எல்லையைத் தொடுகிறது. அது சகசாதியினரின் எழுச்சி பற்றியதாகும். நாடார் சாதியினர் தங்கள் மரபார்ந்த தொழிலிலிருந்து விலகி மீன்பிடித்தொழிலில் ஈடுபடுவது குறித்து முதல் நாவலிலேயே பேசுகிறார். பனையேற்றுத்தொழில் இல்லாமல் வரும் ரத்தினசாமியை அரவ ணைத்துக் கடனுக்குக் கருவாடு கொடுத்துத் தொழில்செய்ய வைப்பவர்கள் சமீபகாலங்களாக நாடார்களும் மீன்பிடித்தொழிலில் இறங்குவது கண்டு அதனை ஒரு சம்பவமாக மட்டுமே முதலில் பார்க் கிறார்கள். நாடார்கள் மீன் பிடிக்கப் போனாலும் எலிமூஞ்சு ஆமைக் கும் பஞ்சலாமைக்கும் வித்தியாசம் தெரியாமல் எலிமூஞ்சாமைத் தின்று செத்துப் போகிறார்கள். கடலின் அசைவுகள் கரையில் உள்ளவ னுக்குத் தெரியவில்லை. இடுக்கியது நண்டும் இடுக்கும்; பனையில ‘இடுக்கணும்ணா அது பனையேறியாலத்தான் முடியும்’ என்றொரு வழக்கு எங்கள் பகுதியில் உண்டு. காரணம், தொழில் சார்ந்த நடைமுறைகள் முதலில் புதியவர்களுக்கு அதிகமும் பரிச்சயமில்லாத தாகத்தான் இருக்க முடியும். ஆனால் காலப்போக்கில் மாறுதல்களுக்கு ஏற்பச் செயல்பட்டு, தொழில்நுட்பம் மற்றும் வணிகச் சூழலின் துணைகொண்டு மீனவர்களின் கடல் வாணிபத்தை இவர்கள் கைக்குக் கொண்டுவருவதே ‘கொற்கை’ நாவலின் அடியுறை சாராம்சம்.

கோமான் பரதவர்கோன் அறத்திற்காக்கும் கொற்கையம் பெருந்துறை, அதன் தோணிப்பாலம் வெள்ளையரின் கச்சாப் பொருட்களைக் கொண்டு செல்லும் துறைமுகமாக மாற்றம் பெறுகிறது. தல்மெயதா தரகனாகிறான். இந்தியத் துறைமுகங்களிலிருந்து சரக்குகளைச் சேகரித்துக் கொழும்பு துறைமுகத்திற்கு அனுப்புவதே சீற்றனின் கனவு. தண்டவாளங்களின் வருகை, ஸ்டீம் என்ஜின்களின் இயக்கம் இயந்திரங்களை இறக்குமதி செய்கிறது. இயற்கையோடு கலந்து மீன்பிடித் தொழிலைச் சுதந்திரமாக நடத்தியவர்கள் கூலியாட்களாக மாற்றப்படுகிறார்கள். சீற்றன் துரையின் ஆலைக்குக் கூலியாட்களைக் கடற்பகுதியிலிருந்து பிரான்சிஸ் தலமெய்தா இறக்குமதி செய்கிறான். கூலியாட்களின் தொழில்திறமை வெள்ளைக்காரனை ஆச்சரியப்படுத்துகிறது. வரலாற்றுக் கால கொற்கை தொழில் நகரமாக மாறுகிறது. உத்திர கோசமங்கையில் கல்தேர் ஓட்டி வைத்த தீரன், முழங்கு கடல் பணியும் கொற்கை கோமான் பாண்டியபதியின் அதிகாரம் மங்கி கத்தோலிக்கமும், வெள்ளையர்களும் இறங்கி கொழும்பிலிருந்து கடற்கரை மக்களை ஆட்டிப் படைக்கும் காலமாற்றத்திலிருந்து நாவல் ஆரம்பிக்கிறது. தற்காலத்திலிருந்து கொண்டு முற்காலத்தைப் பார்க்கும் உத்தியையே கதைசொல்லி பெரும்பாலும் கடைபிடிக்கிறார். மைக் செட்டின் பயன்பாடு உள்ள காலத்தில் அதன் தேவையே இல்லாமல் கொற்கையில் ஆசிரியர் பாடும் பொடுதகம்பிள்ளையின் சிம்மக்குரலைக் குறிப்பிடும் சிறிய சம்பவத்திலும் உற்பத்திக் கருவி என்பது திமிறியெழும் உட லுக்குக் கட்டுப்பட்டது என்பதையே வலியுறுத்த விரும்புகிறார். உடலுழைப்பென்பது வணிகமாகும் சூழலில் ஆட்டம் பாட்டமாக மாறுகிறது. கொற்கையின் பிரதான முதலாளிகள், தலமெய்தா மற்றும் சலேட்டம்மாள் இவர்களால் உட்காரச் சொல்லும் மரியாதையைக் கூடப் பெறாமல் நிற்கிறார்கள். மேசைக்காரர்களுக்கும் தோணி முதலாளிகளுக்கும் இடையிலான முரண்பாடு கோயில் திருவிழாவில் வெளிப்படுகிறது. இந்தியச் சுதந்திரத்திற்குப் பிறகும் இதேநிலை சிறிய வித்தியாசங்களுடன் தொடர்கிறது. துறைநகர்மயத்தைச் சுதந்திரத்திற்கு முன், சுதந்திரத்திற்குப் பின் என்று நாவல் வெளிப்படுத்துகிறது.

கொற்கை இப்போது கொலைநகரம். சம்பந்தமுடையவர்கள் பார்த்துக்கொண்டிருக்க, சம்பந்தமில்லாத தரகர்களால் அது ஆளப்படுகிறது. உற்பத்திக் கருவிகளின் துணைகொண்டு உடல்கள் பெரிய அளவில் வீழ்த்தப்படுகின்றன. இதில் இன்னொரு சாதியின் தலையீடு தன்னைத் தகவமைத்துக் கொள்கிறது. கருவிகளோடு சாதியும் சேர்ந்து கொள்கிறது.

எங்கள் பகுதியில் செருப்பு தைக்கும் தொழிலை அதிகம் செய்பவர்கள் மீனவர்கள். முன்பு ‘செம்மான்’ என்றொரு சாதியினர் இந்தத் தொழிலைச் செய்து வந்ததாகக் கேட்டிருக்கிறோமே தவிர இளந்தலைமுறையினரில் யாருக்கும் அவர்களைத் தெரியாது. சிறுவயதில் பள்ளிக்கூடத்தில் விளையாடி நரங்கி வீடுவந்து சேரும்போது அழுக்குப்படிந்த நிக்கரைக் காட்டி, “அந்த செம்மான் தோலைக் கழற்றிபோடக் கூடாதா?” என்று பெற்றோர் சத்தம் போடுவார்கள். ‘செம்மான் தோல்’ என்பது பனையேறும்போது உரசுவதைத் தடுக்க நெஞ்சில் அணியும் தோலால் செய்யப்பட்ட பாதுகாப்புக் கவசம். நான் கல்லூரியில் பயிலும்போது நாவலாசிரியர் ஐசக் அருமைராசன் தலைமையில் நடைபெற்ற ஒரு கவியரங்கத்தில் அவரோடு கவிதை வாசிக்கச் சென்றிருந்தேன். ஐசக் அருமைராசன் கவிதை படிக்கும்போது, “செருப்புவார் அறும்போது செம்மானை நினைப்போம்; செம்-மானை நினைப்போம்” என்று சிலேடை வைத்தார். நின்று நிறுத்தி இரண்டு தடவை வாசித்த பிறகும் அவர் எதிர்பார்த்த கரவொலி கிடைக்கவில்லை. “செருப்பின் வார் அறும்போது தைப்பதற்காகச் செம்மான் நினைவுக்கு வருவான். அதுபோலச் செருப்படி விழும்போதும் செம்-மானைப் போன்றவள் நினைவுக்கு வருவாள்” என்று அதற்கு உரைநடையில் விளக்கம் கொடுத்தும் பார்த்தார். பார்வையாளர்களிடம் எந்தப் பிரதிபலனும் தென்படவில்லை. வெறுத்துப்போய் வந்து உட்கார்ந்தார். கவியரங்கம் முடிந்தபிறகு ‘செம்மான்’ என்றால் யாரென்று அவரிடம் கேட்டேன். “செருப்பு தைக்கும் சாதி என்று தெரியாதா டேய்?” என்று எரிந்து விழுந்தார். “செம்மைப்படுத்துவதால் ‘செம்மான்’ என்று அழைக்கப்படுகிறார்களோ?” என்று கேட்டேன். “என்ன மண்ணாங் கட்டியோ?” என்று எழும்பிப் போய்விட்டார். கைதட்டல் கிடைக்காவிட் டால் கோபம் வராதாக்கும்? எப்படியோ சாதிவாரியான கணக்கெடுப் பின்போது நமக்குத் தெரியாத சாதிகள் எத்தனை வெளிப்படுமோ?

மீனவர்கள் செருப்பு தைப்பதை இப்போதும் காணமுடிகிறது. நாவலில் ஓரிடத்தில் மரணக்குழி வெட்டும் தொழில் செய்யும் ‘குடிமகன்’ என்னும் மீனவ தலித் குறித்து ஜோ எழுதுவது போன்ற ஒரு பிரிவினராகவும் இருக்கலாம். ஒரு காலத்தில் சிறியதாகக் கடை வைத்திருந்த அவர்களை இன்று கடைமுதலாளிகளாகக் காண முடிவ தில்லை. செருப்புக் கடை முதலாளிகளாக நாடார்கள் இருப்பார் களென்றால், ஒரு ஓரமாக உட்கார்ந்து அவர்கள் செருப்பு தைத்துக் கொண்டிருப்பார்கள். அதிலும் ‘பாட்டா’ போன்ற மிகப்பெரிய ஷோரூம்களின் வருகைக்குப் பிறகு சிறிய கடைகளைக் காணமுடிய வில்லை. எம்.ஜி.ஆர். கொண்டு வந்த இலவச செருப்புத் திட்டத்தின்கீழ் கும்பலாக ஆங்காங்கே உட்கார்ந்து ஆண்களும் பெண்களுமாகச் செருப்பு தைத்துக்கொண்டிருப்பதை இப்போதும் பார்க்கலாம். அது போல ‘கப்பள்ளி’ என்ற சாதியைச் சேர்ந்த ஒருவர் நடத்தும் அலக்கு கம்பெனியைத் தெரியும். உள்ளே துணி அலக்குபவன் வண்ணான்.

மேற்கூறிய சிறிய அலகில் சொல்லப்பட்ட விஷயம்தான் நாவலில் விரிவாகப் பேசப்படுகிறது. பல்வேறு கிளைசம்பவங்களும் அத்துடன் சேர்ந்துகொள்கின்றன. முதலில் குமரி அம்மனை மீனவர்கள் இழந்தார் கள். பிறகு கத்தோலிக்கத்தால் மாந்திரீகம் செயல் இழந்தது. மீன் சின்னம் பொறித்த சிதம்பரம் கோயில் உயர்சாதியினர் வசமாகியது. கல்வி வருகையும் கால மாற்றமும் பாண்டியபதியைப் பறித்தது. அடிமைப்படுத்தப்பட்ட சாதிகளில் ஒன்று நிலைமையைப் புரிந்து கொண்டு முன்னேறும்போது இதில் எதையுமே வாய்ப்பாகப் பயன்படுத்தத் தெரியாத கடலின் மக்கள் சொந்தமண்ணில் அடிமைகளா யினர். கடந்துசெல்லும் ஒவ்வொரு காலமும் வரலாறும் அவர்கள் மீது ஏறி இறங்கிப் பயணப்பட்டுக் கொண்டே இருக்கிறது.

IV

கப்பல் கட்டுதலும், தோணி விடுதலும் பழந்தமிழர் தொழில். மீன்பிடித்தலும் முத்துக்குளித்தலும் இதன் தொடர்ச்சிகள். குறுகல்கள் என்றும் சொல்லலாம். முந்தைய வரலாற்றின் தொன்மையையும் பெருமையையும் நிலைநிறுத்தச் சங்கப்பாடல்களை நாவலில் எடுத் தாண்டிருப்பது ஒரு உத்தியாகத் தென்பட்டாலும் கூடவே பண்டித தன்மையையும் வெளிப்படுத்துகிறது. நாஞ்சில் நாடனிடம் கூட இப்பழந்தமிழ்த் தோய்வு தெரிந்தாலும் இலக்கியப் படைப்புக்களைக் காட்டிலும் அவர் கட்டுரைகளில் அதிகம் வெளிப்படுத்துவதால் பிரச்சினை இல்லை. ‘கொற்கை’ இன்னும் சற்று இறுக்கம் கொண்டிருந் தால் நன்றாக இருக்கும் போலத் தோன்றுகிறது. பெரிய சைசில் இருபதுதான் சிறப்பு என்பது நாடார்களிடமிருந்து மீனவர்கள் கற்றுக் கொண்ட தவறான பாடம். நாடார் பெண்கள் கழுத்தில் நாய்த்தொடல் போலத் தாலியைத் தொங்கவிடுவதைப் பார்த்து மீனவப் பெண்களும் அதுபோலக் காசுவந்ததும் அணியத் தொடங்கிவிட்டார்கள். ஜோடி குரூஸுக்கு கூட இந்தப் பிரக்ஞை ஒருவேளை பொன்னீலன் வழியாக வந்திருக்கக் கூடும். பெரிய சாமானம் வைத்திருப்பவன்தான் பெண்ணைத் திருப்திபடுத்த முடியும் என்பது போன்ற மாயை இது. ஆனால் ‘நானோ டெக்னாலஜி’ என்று விஞ்ஞான உலகம் ஒருபுறம் இயங்கிக்கொண்டி ருப்பதையும் படைப்பாளிகள் பார்த்துத் தெரிந்து கொள்வது முக்கியம். அகண்ட காலத்தைக் கூற அதிகம் பக்கங்கள் தேவை இல்லை. வைக்கம் முகமது பஷீர், தமிழில் நகுலன் ஆகியோர் இதற்கான உதாரணங்கள்.

நாவலில் சில இடங்களில் வரும் விவரணைகள் தவிர்க்கப்பட வேண்டியவைகளாகத் தோன்றுகிறது. சூரைமீனிலிருந்து மாசி தயாரிப் பதும் காகுசாமியார் பற்றிக் கூறும்போது திருக்குறள் பிரயோகமும் (‘வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன்’ குறள்’) ‘ஓங்கல்வ காந்தி மாதிரி சாதுவ’ (காந்தி சாதுவா?) என்பதும், ‘கொற்கை’ நாவலில் வரும் ‘பாரதியின் புதுமைப் பெண்’ (ப: 799) போன்றவையும் உதாரணங்கள். சூசை - சுந்தரி மற்றும் ரேனால்டு - ரேவதி ஆகியோரின் சினிமாத்தன மான உரையாடல்களும் இதில் அடங்கும். இதற்கு மாற்றாக, ‘கரி எழுத்தாளர் சங்கம்’ போன்ற சிறு விஷயங்களை அதிகம் பயன்படுத்து வது நாவலின் விகாசத்தை அதிகப்படுத்தும்.

இரண்டு நாவல்களிலுமே உட்கதையாக வரும் பல்வேறு கிளைக் கதைகளில் என்னை அதிகம் பாதித்தவை ‘ஆழிசூழ் உலகி’ல் வரும் ஜஸ்டின் - வசந்தா கதையும், ‘கொற்கையில்’ மதலேனா கதையுமாகும். ஒரு பெண்ணின் ஆத்மார்த்தமான நேசம் ஆணினால் ஏமாற்றப்படும் போது அதற்கான எதிர்வினை எத்தனை குரூரமாக இருக்கும் என்பதை நெஞ்சு வெடித்துக் கிடக்கும்போது மண்ணள்ளிப்போட்டுக் காட்டுகிறாள் வசந்தா. அதுபோலப் பெண்ணின் இஷ்டமில்லாமல் வளர்ந்த அவளுக்குத் தரும் பாலியல் இம்சையுடன் அவளைச் சந்தேகப்படும் குடிகாரக் கணவனை நாற்காலியில் கட்டிப்போட்டு அவன் கண்முன்னால் தற்கொலை செய்துகொள்ளும் தாயில்லாமல் பெண் மதலேனாவின் முடிவும் இரக்கம் கொள்ள வைக்கிறது. இவ்விரு கதைகளும் நெஞ்சை விட்டு எத்தனை காலமானாலும் சுலபத்தில் ஒன்றும் நீங்கிவிடாது.

‘ஆழிசூழ் உலகில்’ ஓரிடத்தில் கடலில் மீன்பிடிக்கும்போது பசியை மறக்க மீனவர்கள் வெற்றிலை போடும் செய்தி பேசப்படுகின்றது. இந்த நாவல்களை எழுதிய ஜோ டி குரூஸ் அத்தன்மையிலான எழுத்தாளர். இவ்விரு நாவல்களுக்கும் நான் செய்யும் விமர்சனம் ஒருவேளை கரையில் இருப்பவன் பசியை உருவாக்க வெற்றிலை போடுவதைப்போல இருக்கலாம். எனினும் யதார்த்த எழுத்துமுறையை மீறி இனியொரு நாவலை அவர் படைக்க வேண்டும் என்பதே எனது விருப்பம்.

(கட்டுரையாளர் குமரிமாவட்டம், மார்த்தாண்டத்தைச் சேர்ந்தவர். விளவங்கோடு வட்டார மொழியில் எழுதும் படைப்பாளர். ‘கயம்’ எனும் சிறுகதைத் தொகுதி அண்மையில் வெளிவந்துள்ளது.)

Pin It